Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு உண்மையிலேயே பறிபோகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு உண்மையிலேயே பறிபோகிறதா?

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,இரா.சிவா
  • பதவி,பிபிசி தமிழ்
  • 15 மார்ச் 2023, 02:55 GMT

'தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது', 'வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது' போன்ற குரல்களை அண்மைக்காலமாக அதிகம் கேட்க முடிகிறது. அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், வட இந்தியர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் பல தொழில்கள் முடங்கிவிடும் என்கின்றனர். வட இந்திய தொழிலாளிகள் உண்மையிலேயே தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்களா?

வட இந்தியர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன் தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பின்னணி குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறுகிறது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) வெளியிட்ட செய்திக்குறிப்பு. இதில், 27.74 லட்சம் பேர் ஆண்கள், 7.13 லட்சம் பேர் பெண்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்திருக்கும் என நம்பப்படுகிறது.

உத்தர பிரதேசம், ஒரிசா, பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அசாம் போன்ற சில வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுகின்றனர்.

 

தமிழ்நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவகங்கள், காவலாளி, துணி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில வேலைகளில் மட்டுமே காணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை இன்று ஏறக்குறைய அனைத்து வேலைகளிலும் பார்க்க முடிகிறது. அதேபோல சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே காணப்பட்ட அவர்கள் இன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர்.

இப்படியான சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேலைகளில் இருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும், வட இந்தியர்களால் தமிழர்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறதா என்ற கேள்வியும் இயல்பாக எழுவதாக மாநிலத்தில் உள்ளவர்களில் சிலர் குரல் கொடுக்கின்றனர்.

எனவே, தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணி செய்யும் துறைகளில் உண்மை நிலவரம் என்ன என்பதை பிபிசி தமிழ் அறிய முயன்றது.

தமிழ்நாட்டில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளனர் என்பது குறித்து அரசிடமோ அரசுசார அமைப்புகளிடமோ எந்தவித துல்லிய தரவுகளும் இல்லை. எனவே அந்தந்த துறை சார்ந்த சங்கங்கள், தொழிலாளர் அமைப்பினர் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை - ஹோட்டல்கள்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டுமே பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளனர். இன்று சென்னையில் அனைத்து வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டாலும், ஹோட்டல் துறையில் சற்று கூடுதலாக உள்ளனர். சாதாரண சிறிய உணவகங்கள், நடுத்தர உணவகங்கள், உயர்தர உணவகங்கள், வெளிநாட்டு உணவுகளுக்கான உணவகங்கள் என சுமார் 7 ஆயிரம் உணவகங்கள் சென்னையில் உள்ளன.

ஹோட்டல் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு எடுக்க என்ன காரணம், இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதா என சென்னை உணவகங்களின் சங்கத்தலைவர் எம்.ரவியிடம் கேட்டோம்.

’’சென்னையை பொறுத்தவரை உணவகங்களில் 55 சதவிகிதம் புலம்பெயர் தொழிலாளர்களே வேலை செய்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், நம்முடைய ஆட்கள் ஹோட்டல் வேலையை விரும்புவதில்லை. இன்றைக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பவர்கள்கூட படித்து முடித்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும், கப்பலில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு சிலர்தான் தமிழ்நாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர்களும் நட்சத்திர ஹோட்டல்களுக்குத்தான் செல்கிறார்களேயொழிய, நடுத்தர ஹோட்டல்களுக்கு வருவதில்லை. வேலைக்கு ஆட்கள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தால் கூட எந்த அழைப்பும் வருவதில்லை. ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்பவர்கள் கூட ஹோட்டல் வேலைக்கு வர விரும்புவதில்லை. எனவே ஹோட்டல் துறையைப் பொறுத்தமட்டில் வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்று சொல்ல முடியாது’’ என்கிறார் எம்.ரவி.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

எம்.ரவி, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தலைவர்

புலம்பெயர் தொழிலாளிகளுக்கு குறைவான ஊதியம் வழங்கினால் போதும் என்ற காரணத்தால்தான் அதிகம் பணியமர்த்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்ட போது, ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதையும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

பெரிய உணவகங்களோடு ஒப்பிடும் போது சிறிய உணவகங்களில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கும். அதேபோல, சமைப்பவரோடு ஒப்பிடும்போது பாத்திரம், மேஜை சுத்தம் செய்பவர்களுக்கு குறைவாக இருக்கும். சம்பள வேறுபாடு இப்படித்தான் இருக்குமேயொழிய தமிழ்த்தொழிலாளி, வட இந்திய தொழிலாளி என்று வேறுபாடு பார்த்து கொடுக்கப்படுவதில்லை. அப்படி உங்களால் கொடுக்கவும் முடியாது, ஏனெனில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. எனவே நீங்கள் குறைவாக, பாரபட்சமாக கொடுக்கிறீர்கள் என்று நினைத்தால் அவர்கள் அடுத்த ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்று விடுவார்கள்’’ என்கிறார் எம்.ரவி.

சிவகாசி - பட்டாசு உற்பத்தி, அச்சகங்கள், பேக்கேஜிங் துறை

தமிழ்நாட்டின் கந்தக பூமி என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி, அச்சகங்கள், பேக்கேஜிங் ஆகியவை பிரதான தொழில்கள். மேற்கண்ட தொழில்களில் சுமார் 5 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தத் தொழில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே பணிபுரிந்த நிலையில், இன்று பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில்தான் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு உற்பத்தி அளவும், ஆள் பற்றாக்குறையும் ஒரு சேர அதிகரித்ததே காரணம் என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கமான டான்ஃபாமா-வின் தலைவர் கணேசன்.

‘’பட்டாசு ஆலைக்குள் வட இந்திய தொழிலாளிகளை நாங்கள் நேரடியாக பணியமர்த்துவதில்லை. ஏனென்றால் வெடிமருந்துகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஏதாவது தவறு நடக்க வாய்ப்புள்ளதால் ஆலைக்குள் நாங்கள் அவர்களை தவிர்த்து விடுகிறோம். மற்றபடி, பொருட்களை ஏற்றி இறக்குவது, பேக்கேஜிங் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிவகாசியைப் பொறுத்தவரை சமீபத்திய சில ஆண்டுகளில் பட்டாசு, அச்சகங்கள், பேக்கேஜிங் என மூன்று துறைகளிலுமே உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே அதற்கேற்ப மனிதவளம் தேவைப்படுகிறது. அது தமிழ்நாட்டில் கிடைக்காத போது வெளியே இருந்துதான் தொழிலாளர்களை அழைத்துவர வேண்டியுள்ளது’’ என்கிறார் கணேசன்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

கணேசன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர்

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்ட போது, ‘’வட இந்திய தொழிலாளியால் இவருக்கு வேலை பறிபோனது என்று ஒருவரை கூட நீங்கள் சிவகாசியில் காட்ட முடியாது. இன்று கூலி வேலைக்கு வரும் தமிழ் ஆட்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு காரணம், நம் ஆட்கள் படித்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டனர். எனவே ஆட்கள் கிடைக்காத வேலைகளில்தான் வட இந்திய தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். சிவகாசியில் கணக்கு எழுதுதல், கணிணி தொடர்பான வேலைகளில் தமிழ் ஆட்கள்தான் இருக்கின்றனர், அதில் ஒரு வட இந்தியர் கூட கிடையாது’’ என்கிறார் கணேசன்.

குறைவான கூலி, அதிக வேலை நேரம் என்ற குற்றச்சாட்டை மறுத்த கணேசன், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு ரூ. 420 முதல் 450 ரூபாய்வரை ஒரே அளவில்தான் சம்பளம் வழங்கப்படுவதாகவும், கூடுதல் நேரம் வேலை பார்க்கும் தமிழ் மற்றும் வட இந்திய தொழிலாளிகளுக்கு அதற்கான சம்பளம் தனியாக வழங்கப்படுவதாகவும் கூறுகிறார்.

தூத்துக்குடி - உப்பு உற்பத்தி

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் முத்து நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முக்கிய தொழில். இங்கு உற்பத்தியாகும் உப்பு, பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி கம்போடியா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டொன்றுக்கு 20 லட்சம் டன்னுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உப்பளங்களிலும் கணிசமான அளவு புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்துவருகின்றனர். உப்பளங்கள் மட்டுமின்றி உலர் உப்பு ஆலைகளிலும் அவர்களைப் பார்க்க முடிகிறது.

உப்பு உற்பத்தி தொழிலில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த என்ன காரணம் என உப்பு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் தனபாலனிடம் கேட்டோம்.

‘’தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் பெரிய அளவில் ஆள்பற்றாக்குறை உள்ளது. முன்பிருந்த அளவுக்கு தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து வேலை செய்கிறோம். உப்பளங்களைவிட உலர் உப்பு ஆலைகளிலேயே அதிகம் வட இந்தியத் தொழிலாளிகள் உள்ளனர். ஏனெனில் அங்குதான் கூலித்தொழிலாளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள்’’ என்கிறார் தனபாலன்.

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார் அவர்.

மேலும், "அடுத்த தலைமுறையினர் நன்கு படித்து வேறு வேலைகளுக்கு செல்கின்றனர் அப்போது ஏற்படும் வெற்றிடத்தை வட இந்திய தொழிலாளர்கள் தற்போது நிரப்பிக்கொண்டுள்ளனர்’’ என்கிறார் தனபாலன்.

திருப்பூர் - நூற்பாலை, பின்னலாடை தொழில்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் நூற்பாலை மற்றும் பின்னலாடை தொழில்கள் பிரதானமானவை. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த புலம்பெயர் தொழிலாளிகளில் கால்வாசிக்கும் அதிகமானோர் திருப்பூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ளனர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும் போது புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை என்பது திருப்பூருக்குப் புதிதல்ல. முந்தைய தலைமுறையில் புலம்பெயர் தொழிலாளியாக வந்து இன்று முதலாளிகளாக மாறியுள்ள பலர் திருப்பூர் பகுதிகளில் உள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், அவர்கள் இல்லையென்றால் திருப்பூரே முடங்கிவிடும் எனச் சொல்லப்படுவதும் உண்டு.

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறதா என திருப்பூர் பகுதியில் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத்திடம் கேட்டோம்.

’’வட இந்தியர்கள் வருகையால் தமிழர்கள் வேலை பறிபோகிறது என்று சொல்ல முடியாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. வட இந்தியர் வருகை காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதிக வேலை வாய்ப்புகள் இருந்த போது அது பிரச்னையாக தெரியவில்லை. ஆனால், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை குறைப்பு, கொரோனா பொதுமுடக்கம், நூல் விலை உயர்வு, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் காரணமாக மொத்தமாகவே திருப்பூரில் இன்று உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி குறைந்துவிட்டதால் சற்று குறைவான ஊதியத்திற்கு யார் வேலை செய்வார்கள் என்று பார்த்து வட இந்திய தொழிலாளர்களுக்கு இங்கிருக்கும் முதலாளிகள் வேலை கொடுக்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

சம்பத், சிஐடியூ தொழிற்சங்கம்

மற்றொன்று, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இது போன்ற வேலைக்கு வர விரும்புவதில்லை. சமீபத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது. அங்கு வந்திருந்த பெரும்பாலான நிறுவனங்கள் 10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் 25 ஆயிரம்வரை மட்டுமே சம்பளம் வழங்கக்கூடியவை. அந்த முகாமில் 30,000 பேர்வரை கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் யாருமே பின்னலாடை நிறுவனங்களுக்கு வேலை தேடி வருவதில்லை. காரணம், நம்முடைய ஆட்களுக்கு கண்ணியமான சம்பளம், வாழ்க்கைத்தரம் குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் மனநிலையுடன் ஒப்பிடும் போது வட இந்திய தொழிலாளர்களுக்கு 'அந்த எதிர்பார்ப்பு' சற்று குறைவாக உள்ளது. காரணம், அந்தக் குறைவே அவர்களுக்கு நிறைவாக தெரிகிறது. அதை நம்முடைய முதலாளிகள் சாதகமாக்கிக் கொள்கின்றனர்’’ என்கிறார் சம்பத்.

திருப்பூரில் தமிழ்த்தொழிலாளிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு இடையே ஊதிய வேறுபாடு இருப்பதாக சம்பத் கூறுகிறார்.

‘’தமிழ்த்தொழிலாளிக்கு 450 முதல் 500 ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், வட இந்திய தொழிலாளிகளுக்கு 300 ரூபாய்தான் சம்பளம் வழங்குகின்றனர். நிறுவனங்களைப் பொறுத்து இதில் ஏற்ற இறக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி என்றால் பணத்தை நேரடியாக ஏஜென்ட்டிடம் கொடுத்து விடுவார்கள். அந்த மாதிரியான நேரத்தில் இன்னும் குறைவான பணமே வட இந்திய தொழிலாளி கைக்குச் செல்லும்’’ என்கிறார் சம்பத்.

டெல்டா - விவசாய மற்றும் பண்ணை வேலைகள்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் விவசாய வேலைகளிலும் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எண்ணிக்கை அளவில் குறைவுதான் என்றாலும் இனிவரும் காலங்களில் இது அதிகரித்து, உள்ளூர் மக்களின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த மாதவன்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

மாதவன்

‘’தற்போது நிறைய ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வயல் வேலைகளில் வட இந்தியர்களை ஈடுபடுத்துகின்றனர். நம் ஆட்களுக்கு ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 6,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். ஆனால், வட இந்திய ஆட்கள் 3,000 ரூபாய்க்கு அந்த வேலையை செய்து கொடுக்கின்றனர். அதேபோல நம் ஆட்களுக்கு மதிய நேரத்தில் உணவு, டீ போன்றவை வழங்கப்படும். ஆனால், அவர்கள் அதை எதையும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, ரேஷன் அரிசியை மட்டும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இயந்திரங்கள் வந்த பிறகு டெல்டா பகுதியில் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இப்படியான சூழலில் வட இந்தியர்களை விவசாய வேலையில் அமர்த்தினால் இன்னும் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது’’ என்கிறார் மாதவன்

கட்டுமானத்துறை

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளிகள் அதிகம் பணி செய்யும் துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று. கிராமப்புறங்களில் சாதாரண கட்டுமான வேலை தொடங்கி சென்னை மாதிரியான பெருநகரங்களில் மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகள்வரை அனைத்துவித பணிகளிலும் இவர்களைக் காண முடிகிறது.

கட்டுமான பணிகளில் அதிகப்படியான புலம்பெயர் தொழிலாளிகளை பணியமர்த்த என்ன காரணம், இதனால் தமிழ்த்தொழிலாளிகள் வேலை பறிபோகிறதா என்று கட்டுமான ஒப்பந்ததாரர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.

’’தமிழ்நாட்டில் கட்டுமான துறையைப் பொறுத்தவரை திட்ட வடிவமைப்பு, மேற்பார்வை போன்ற வேலைகளில்தான் நம் ஆட்கள் இருக்கிறார்கள். மற்றபடி, செங்கல் வரிசை வைப்பது, சாந்து குழைப்பது, பூச்சு, தளம் போடுவது போன்ற வேலைகளுக்கு வட இந்திய தொழிலாளிகளைத்தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அந்த வேலையைச் செய்யும் நம் ஆட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதற்கு காரணம், இன்று எல்லோருமே படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

படித்த யாரும் கட்டுமான வேலைக்கு வருவதில்லை. எனவே புதிதாக இந்த வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வேலை உடல் உழைப்பு சார்ந்தது என்பதால் 45 வயதுக்கு மேல் வேலை பார்ப்பது கடினம். எனவே ஏற்கனவே இருக்கும் தமிழ்த்தொழிலாளிகளும் இந்தத் துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகின்றனர். எனவே கட்டுமான வேலை நடக்க வேண்டுமென்றால் வட இந்திய தொழிலாளிகளைத்தான் நாம் ஈடுபடுத்தியாக வேண்டும்’’ என்கிறார் ஸ்ரீதர்.

ஆனால், கட்டுமானத்துறையில் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையால் தமிழ்த்தொழிலாளர்களுக்கு வேறு வகையில் நெருக்கடி ஏற்படுவதாகக் கூறுகிறார் கொத்தனாராக பணியாற்றிவரும் அலெக்ஸாண்டர்.

‘’இன்று தமிழ் ஆட்கள் வேலைக்கு கிடைப்பதில்லை என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், வட இந்திய தொழிலாளிகள் வருகைக்குப் பிறகு ஏற்கெனவே இந்த வேலையைச் செய்துவரும் தமிழ் ஆட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான ஒப்பந்தம் பேசும் இடங்களில் சம்பளம் மற்றும் வேலை நேரம் தொடர்பாக வட இந்திய தொழிலாளர்களோடு எங்களை ஒப்பிடுகின்றனர். நாம் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் சில இடங்களில் ஒப்பந்தம் கிடைக்காமலும் போகிறது. அவர்கள் இங்கு வேலை தேடி வந்தவர்கள், அதனால் அவர்களுக்கு வேறு வேலை இருக்காது. எனவே கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியும். ஆனால், நாம் இங்கு வாழ்கிறவர்கள். நாம் எப்படி அவர்களைப் போல கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியும். அவர்கள் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்க தயாராக உள்ளனர், அந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது நமக்கு எப்படி கட்டுபடியாகும்’’ என்கிறார் அலெக்ஸாண்டர்.

https://www.bbc.com/tamil/articles/ck7zmv2k4ppo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.