Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்லாந்தில் களை கட்டும் கஞ்சா விற்பனை: ஜொலிக்கும் விற்பனை நிலையங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தாய்லாந்து, கஞ்சா, போதைப்பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

38 நிமிடங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: இந்தியாவில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடுக்கு சட்டவிரோத தடை உள்ளது)

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில், வெளிநாட்டினர் மிக அதிக அளவில் பயன்படுத்தும் சுகும்விட் சாலையில் காண்போரைக் கவரும் வகையில் இந்த கஞ்சா விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்த நிலையில், கஞ்சா இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் சாக்லேட் வடிவில் போதை தரும் கஞ்சா உணவுகள் என பலவித தயாரிப்புக்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.

பாங்காக்கில் பிபிசி அலுவலகத்திலிருந்து கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்றால் 40-க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனைய நிலையங்கள் அமைந்துள்ளன.

 

இந்த விற்பனை நிலையங்களில் கஞ்சா இலைகள், விதை, தண்டுப்பகுதி, மற்றும் பூக்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பல வகையான தயாரிப்புக்கள் விற்கப்படுகின்றன.

இந்த இடத்திலிருந்து எதிர்திசையில் உள்ள காவோ சான் சாலையில் ப்ளான்டோபியா என்ற பெயரில் அமைந்துள்ள விற்பனையகத்தில், ஏராளமான வாடிக்கையாளர்கள் வெளிவிடும் புகையின் பின்னணியில் கஞ்சா தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கஞ்சா மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்யும் இணையதளமான வீட், தாய்லாந்து முழுவதும் 4 ஆயிரம் விற்பனை நிலையங்கள் மூலம் ஏராளமான கஞ்சா தயாரிப்புக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இதே தாய்லாந்து நாட்டில் கடந்த ஜூன் மாதத்துக்கு முன்பு கஞ்சா வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், அதை உற்பத்தி செய்தால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது. போதைப் பொருள் தொடர்பான பிற குற்றங்களுக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மாற்றம் என்பது கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது.

இது எதிர்பாராத மாற்றம் என்றாலும், இது தான் தாய்லாந்து என்றும் கஞ்சாவுக்கான அனுமதியளிக்கப்படாமல் இருந்திருந்தால் இது போன்ற மாற்றம் ஏற்பட்டிருக்காது என்றும் சொல்கிறார் கிட்டி சொபாகா. இவர் கஞ்சா குறித்த அறிவுரைகளை அளிப்பதற்கென்றே எலிவேட்டட் எஸ்டேட் என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார்.

இந்த அமைப்பு புதிய சட்டங்கள் இயற்றப்படுவது குறித்து நாடாளுமன்ற குழுவுக்கு உதவும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது குறித்து நீண்ட காலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிட்டி சொபாகாவை போன்றவர்கள் எதிர்பார்த்த மாற்றம் இது அல்ல.

கஞ்சாவை தாராளமயமாக்கல் குறித்து தெளிவான சட்டங்கள் தேவை என்றும், கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்துதலில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பது குறித்து நிறைய குழப்பங்கள் இருப்பதால் பெரும்பாலானோர் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர் என்றும் கூறுகிறார் சொபாகா.

கஞ்சாவைப் பயன்படுத்துவது அனைவருக்குமான உரிமை என்றாலும், இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. கஞ்சா விற்பனை நிலையங்கள் முறையான அனுமதி பெறவேண்டுமென்ற போதிலும், எல்லா விற்பனை நிலையங்களும் அந்த அனுமதியைப் பெற்றிருக்கின்றன எனக்கூற முடியாது. அதே போல் கஞ்சா விற்பனை நிலையங்கள், விற்பனை செய்யப்படும் தயாரிப்புக்களின் தரம், அவற்றின் அளவு, அவற்றை வாங்குபவரின் தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றைப் பதிவு செய்யவேண்டும்.

கஞ்சா பயன்படுத்துதல் குறித்து நிறைய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மேம்போக்காகவே அமல்படுத்தப்படுகின்றன. கஞ்சாவைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எந்த தயாரிப்பிலும், டெட்ராஹைட்ரோகன்னாபினோல் என்ற போதை வஸ்து 0.2 சதவிகிதத்தில் மட்டும் தான் இருக்கவேண்டும்.

அதே போல், இந்த குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான போதையுடன் கூடிய தயாரிப்புக்களை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது என்பதுடன் 20 வயதுக்குக் கீழ் இருக்கும் நபர்களுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், இரண்டு சக்கர வாகனத்தில் டெலிவரிக்காகச் செல்லும் விற்பனையாளர் யாருக்கு அப்பொருளை டெலிவரி செய்கிறார் என்பது யாருக்குத் தெரியும்?

தாய்லாந்து, கஞ்சா, போதைப்பொருள்

பட மூலாதாரம்,LULU LUO/BBC

சில உணவகங்களில் கஞ்சா டீ, கஞ்சா ஐஸ் கிரீம் என கஞ்சாவுடன் கூடிய உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. சில கடைகளில் கஞ்சா விதைகளை தண்ணீரில் காய்ச்சியும் விற்பனை செய்கின்றனர். தாய்லாந்தில் இது போல பல வடிவங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டாலும், எது சட்டப்பூர்வமானது, எது சட்டவிரோதமானது என போலீசாருக்கே தெரியவில்லை.

தற்போதைய கஞ்சாவின் புதிய ஆதிக்கம் என்பது ஒரு அரசியல் சார்ந்த விபத்து என கருதலாம். தாய்லாந்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் அனுடின் சார்ன்விராகுல் என்பவர், கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கப் போவதாக தமது 2019-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார்.

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வது ஏழை விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதால், அவருடைய அறிவிப்புக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. தற்போதைய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் அனுடின், தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, கஞ்சா மீதான தடையை நீக்க அதிக முன்னுரிமை அளித்தார்.

இந்நிலையில், கஞ்சாவைப் பயன்படுத்துவது குறித்த சட்டங்களை எழுதுவதற்கு முன்பே அதற்கு எதிரான தடையை நாடாளுமன்றம் அகற்றியது. அதன் பின் கஞ்சா விற்பனை குறித்த கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கு இடையே சிக்கி இன்னும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளன. இதற்கிடையே, இம்மாதம் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

அதற்குள் அந்த புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே உள்ளன. போதிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் கஞ்சாவுக்கு அனுமதியளித்தது மிகவும் ஆபத்தானது என ஏற்கெனவே எச்சரித்து வரும் எதிர்க்கட்சிகள், தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் மீண்டும் கஞ்சாவுக்கான அனுமதியை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

அதனால் தாராளமாக கஞ்சா விற்பனை செய்யும் தொழிலின் எதிர்காலத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இதற்கிடையே, பல்கலைக்கழக மாணவியான 21 வயது துட்கா, சுமார் 24 லட்சம் ரூபாய் முதலீட்டில் கடந்த ஆண்டு ஒரு கஞ்சா விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். அவருடைய விற்பனை நிலையத்தில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா பூக்கள் 16 வகையான தரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை ரூ. 820 முதல் ரூ. 6,500 வரையிலான விலைகளில் விற்பனையாகின்றன. எதிர்காலம் என்னவாகும் என்றே தெரியாத நிலையில், அருகில் உள்ள விற்பனையாளர்களின் போட்டிகளுக்கு இடையே, இத்தொழிலில் பெரிய அளவில் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்கிறார் அவர்.

இதற்கிடையே, சந்தையில் அதிக அளவு கஞ்சா குவிந்து கிடப்பதால் அதன் விலை மிகவும் குறைந்துள்ளதாக சொபாகா சொல்கிறார்.

சட்டவிரோதமாக ஏரளமான கஞ்சா தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்படி இறக்குமதி செய்யப்படும் கஞ்சா பொருட்களுக்குத் தேவையான வெப்பநிலையைப் பராமரிப்பது கூட செலவு மிகுந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதனால் உள்ளூர் தட்பவெப்பநிலையைத் தாங்கக்கூடிய கஞ்சா ரகங்களை உருவாக்குவதும் அவசியமாகிறது.

பழமையான பாரம்பரியத்தின் படி பார்த்தால், தாய்லாந்தும், கஞ்சாவும் பிண்ணிப்பிணைந்திருந்தது என்பது தெரியவரும்.

தற்போதைய பெரும்பாலான தாய்லாந்து மக்கள், அனைத்து வகையான போதைப் பொருட்களும் சமூகக் கேடான விஷயம் என்ற பார்வையில் பிறந்து வளர்ந்ததால் தற்போதைய பெரும் மாற்றம் என்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது. இருப்பினும் போதைப் பொருட்களை அவ்வாறு கருதுவது அண்மைக்காலங்களில் ஏற்பட்ட ஒரு பழக்கமாகவே கருதப்படுகிறது.

1970-ம் ஆண்டு வரை தாய்லாந்து நாட்டின் மலைப்பகுதிகளில் கஞ்சா வளர்ப்பு என்பது பிரதான தொழிலாகவே இருந்தது. தங்க முக்கோணம் என அழைக்கப்படும் எல்லைப்பகுதியில் உலகில் அதிக அளவிலான ஓப்பியம் வளர்க்கப்பட்ட நிலையில், வடகிழக்கு தாய்லாந்தில் கஞ்சா என்பது ஒரு மூலிகையாக, சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருளாகவே இருந்து வந்தது.

1960-களில் வியட்நாம் போரின் போது ஓய்வெடுக்க வந்த அமெரிக்க ராணுவத்தினர் தாய் ஸ்டிக் என்ற கஞ்சா பூ மொட்டுக்களால் செறிவூட்டப்பட்ட சிறிய மூங்கில் குச்சி சுருட்டுகளைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவற்றை அமெரிக்க ராணுவத்தினர் பெருமளவில் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அத்துடன் தங்க முக்கோணப் பகுதியில் தயாரிக்கப்பட்ட ஹெராயின் என்ற போதைப் பொருட்களையும் அதிக அளவில் எடுத்துச் சென்றனர். இதன் மூலம் பெருமளவிலான போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வியட்நாம் போருக்குப் பின்னர் போதைப் பொருள் தயாரிப்பைக் குறைக்க தாய்லாந்தை அமெரிக்கா நிர்பந்தித்தது. இதையடுத்து 1979-ம் ஆண்டு முதல் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது போன்ற செயல்கள் குற்றச் செயல்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றிற்கு மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.

சுதந்திரமான மனநிலையுடன் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பாலுறவில் ஈடுபடுவது போன்ற இளைஞர்களின் மனப்போக்கைக் கண்டிக்கும் வகையில் 1960களில் பழமைவாதிகள் கட்டுப்பாடுகள் விதித்த காலத்தின் தொடர்ச்சியாக இந்த கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

இக்காலகட்டத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இது போன்ற சுதந்திர மனப்போக்குள்ள நபர்களை அனுமதிக்கவே அரசுகள் அஞ்சின. இது போன்ற இளைஞர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் அந்த அரசுகள் கவனத்துடன் இருந்தன.

சொல்லப்போனால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் நீண்ட முடியுடன் ஒருவர் வந்திறங்கினால், ஒன்று, அவர் நேராக முடிதிருத்தகத்துக்குச் சென்று தமது தலைமுடியை வெட்டவேண்டும் அல்லது மீண்டும் விமானத்தில் திரும்பச் செல்லவேண்டும் என்ற நிலை காணப்பட்டது. இதே போல் மலேசியாவுக்கு இப்படி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் அவர்களது பாஸ்போர்ட்டிலேயே அவர் பொறுப்பற்றவர் என முத்திரை குத்தி திருப்பி அனுப்பப்படும் நிலையும் காணப்பட்டது.

தாய்லாந்து, கஞ்சா, போதைப்பொருள்

பட மூலாதாரம்,LULU LUO/BBC

இதற்கிடையே, தாய்லாந்தில் 1976-ம் ஆண்டு சுதந்திரமான செயல்பாடுகளை அனுமதிக்கக் கோரி தம்மசாத் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அந்நாட்டு அரசு துப்பாக்கி சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று குவித்து அப்போராட்டத்தைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில் லாவோஸ், கம்போடியா, வியட்நாம் நாடுகளில் கம்யூனிச ஆட்சி அமைந்தது போல் தாய்லாந்திலும் அமைந்து விடுமோ என பழமைவாதிகள் அஞ்சினர்.

இதற்கிடையே, மலைவாழ் மக்கள் ஓப்பியம், கஞ்சா போன்ற தாவரங்களை விளைவிப்பதிலிருந்து தடுக்கும் விதமாக காஃபி போன்ற வணிகப் பயிர்களை வளர்க்க மானியங்களுடன் ஊக்குவிக்கப்பட்டனர்.

1990களுக்குப் பின்னர் போர்ச்சூழலில் சிக்கித் தவித்த மியான்மர் நாட்டிலிருந்து மலிவான மெதம்ஃபெட்டாமைன் என்ற போதைப் பொருள் தாராளமாக தாய்லாந்து நாட்டுக்குள் கடத்திவரப்பட்டது. இதனால் ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையான நிலையில், அதற்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையின் போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக அல்லது விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட 1,400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது தாய்லாந்து நாட்டின் சிறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கர கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறையில் இருந்த முக்கால்வாசி கைதிகள் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறைக்கு வந்தவர்களாகவே இருந்தனர்.

அதன் பின்னர் தாய்லாந்து அதிகாரிகள் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு கஞ்சா பயன்படுவதை அறிந்து, அதன் மூலம் மருத்துவ சுற்றுலாவைப் பெருக்க முடியும் என சிந்திக்கத் தொடங்கினர். இதன் விளைவாக போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது மென்மையான போக்கை அதிகாரிகள் கடைபிடித்தனர்.

தாய்லாந்து, கஞ்சா, போதைப்பொருள்

பட மூலாதாரம்,LULU LUO /BBC

தாய்லாந்தில் கஞ்சாவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதில், டாம் க்ரூஸோபான் என்ற தொழில் அதிபர் பெரும் பங்காற்றினார். அவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற கஞ்சா விற்பனையகத்தின் கிளை ஒன்றை பாங்காக்கில் திறந்து, அதன் மூலம் உள்ளூரில் பயிரிடப்பட்ட கஞ்சாவை பல வித தயாரிப்புக்களாக மாற்றி விற்பனை செய்கிறார். இதற்காக கவர்ச்சிகரமான விற்பனை நிலையத்தையும் அவர் திறந்திருக்கிறார்.

காலம் காலமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த தயக்கத்தைப் போக்கி, கஞ்சாவைப் பயன்படுத்துவதால் யாரையும் காவல் துறை கைது செய்யாது என்றும், கஞ்சாவைப் பயன்படுத்த ஒவ்வொருவருக்கும் சட்டப்படி உரிமை உள்ளது என்றும் வாடிக்கையாளர்களுக்குப் புரியவைத்து அவரது தயாரிப்புக்களை அவர் விற்பனை செய்கிறார். ஆனால் அவரது விற்பனை நிலையத்துக்குள் கஞ்சா புகைப்பதற்கு அவர் யாரையும் அனுமதிப்பதில்லை.

எதிர்காலத்தில் கஞ்சா விற்பனை என்பது பலநூறு கோடி ரூபாய் தொழிலாக மாறும் என்ற நம்பிக்கை கொண்ட அவர், இருப்பினும் கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார். இல்லாவிட்டால் பொன்முட்டை இடும் வாத்தை ஒரே நேரத்தில் அறுத்துக் கொல்வதைப் போல வாடிக்கையாளர்களை அழிக்கும் ஆபத்து இருப்பதையும் அவர் புரிந்துகொண்டுள்ளார்.

இதற்கிடையே, தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு வெளியில் கஞ்சாவைப் பற்றிய விவாதங்கள் எங்கும் நடப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கஞ்சா பயன்படுத்துவது குறித்துப் பேசிய 32 வயது தெரு வியாபாரி ஒருவர், அது தவறான பழக்கம் என்றும், இப்போதும் அது தமக்கும் தேவையில்லாத போதைப் பொருள் தான் என்றும், சிறு வயதுடையவர்கள் மற்றும் ஏற்கனவே அந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மட்டுமே தற்போது கஞ்சாவைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார். வாடகை கார் ஓட்டும் நடுத்தரவயதுடைய ஒருவர், கஞ்சாவை அனுமதித்ததன் மூலம் தனக்கு எந்த லாபமும் இல்லை, எந்த இழப்பும் இல்லை என்றும், அது எந்த வகையிலும் தம்மை பாதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

அதே நேரம், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானால் உடல்நலத்துக்கு அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்தும் பல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் மெத்தம்ஃபெட்டாமைன் என்ற போதை மாத்திரைப் பழக்கத்தை கஞ்சாவின் அறிமுகம் குறைத்து வருவதாகவும் பலர் கருதுகின்றனர்.

மேலும், கஞ்சாவை அதிகமாக வெளிநாட்டவர்கள் தான் வாங்குவதாகவும், அதை வாங்குவதில் தாய்லாந்து மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் மத்திய பாங்காக் நகரில் உள்ள விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சாவை அனுமதிக்கும் அரசின் முடிவுக்கு, தாய்லாந்தில் ஏற்கெனவே வழக்கமாக அதைப் பயன்படுத்திவந்தவர்கள் தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தாய்லாந்து, கஞ்சா, போதைப்பொருள்

பட மூலாதாரம்,LULU LUO /BBC

எப்போதும் போதைப் பொருட்களைப் பயன்படுத்திவரும் அமண்டா என்ற பெண், தற்போது காவல் துறைக்கு அஞ்சாமல் தமது வீட்டிலேயே கஞ்சாவை வளர்க்க முடியும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். அவரது வீட்டில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி 7 கஞ்சா செடிகளை அவர் வளர்த்து வருகிறார். அவரது படுக்கை அறையிலும் கஞ்சா செடி வளர்வதால் செல்லப் பிராணியான பூனையைக் கூட அந்த அறைக்குள் அவர் தற்போது அனுமதிப்பதில்லை.

தொடக்கத்தில் கஞ்சா செடி வளர்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது என்றும், அதில் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது என்றும் கூறும் அவர், அந்தச் செடி வளர்வதற்குத் தேவையான தட்பவெப்பநிலையை ஏற்படுத்துவதற்காக பெரும் சிரமங்களை அனுபவித்ததாகவும் தெரிவிக்கிறார். தற்போது கஞ்சா பயன்பாடு சட்டப்படி அனுமதிக்கப்படுவதால் ஏராளமான பண்ணைகள் உருவாகியுள்ளதாகவும், விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அமண்டா, இது தமக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.

இந்நிலையில், கஞ்சாவை சட்டவிரோதமாக்குவதோ, மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தமுடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கும் நடவடிக்கை மேற்கொண்டாலோ., அது எந்த விதத்திலும் நடைமுறையில் சாத்தியமாக போவதில்லை என்றே பெரும்பாலான விற்பனையாளர்கள் கருதுகின்றனர். கஞ்சாவிற்கு அனுமதியளித்து 9 மாதங்கள் கடந்த பின், அதன் மோகத்திலிருந்து அதனை பயன்படுத்துபவர்களை வெளியில் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல என கருதப்படும் நிலையில், ஒரு வேளை கஞ்சாவுக்கு மீண்டும் தடை அல்லது கட்டுப்பாடு விதித்தால் பல நூறு கோடி ரூபாய் புழங்கும் கஞ்சா தொழில் என்ன ஆகும் என்பதை யாரும் யூகிக்கமுடியாது.

https://www.bbc.com/tamil/articles/cqez709492jo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.