Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கழிப்பறை குறைபாடு, ஆசிரியர் பற்றாக்குறை" - மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுமா பள்ளிக்கல்வித்துறை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பள்ளிகள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

”இந்திய அரசமைப்பு சட்டம் சொல்லக்கூடிய சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தும், நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையிலேயே அத்தகைய சமமான வாய்ப்பு இருக்கிறதா?”

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வரும் புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் பயனாகத் தற்போது அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்வதற்காக மட்டும் 60,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுள்ளதாக, மே 2ஆம் தேதி அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பள்ளிக்கல்வித்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக நடக்கும் நிகழ்வு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொடக்கப்பள்ளிகளில் மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளிலுமே மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கைகள் வரும் புதிய கல்வியாண்டில் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் முயற்சிக்குப் பலன் கிடைக்க துவங்கியுள்ள அதே வேளையில், அரசு பள்ளிகளை நம்பி தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் நினைத்த அளவிற்கு பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

அதேநேரம், “பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்னமும் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களே பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உள்ளனர்.

இப்படி அரசு பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்யாமல், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் பிரசாரம் செய்யப்பட்டு வருவது அர்த்தமற்றதாக இருக்கிறது” என்ற குற்றச்சாட்டை கல்வியாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வழக்கமாக, கோடை விடுமுறைக்குப் பின்னர்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மிக முன்னதாகவே தொடங்கிவிட்டது.

முன்னதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 53 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளைப் போலவே அரசு பள்ளிகளிலும் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் ஏப்ரல் 17ஆம் தேதி, புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, `அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்` என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணிக்காக, `இல்லம் தேடிக் கல்வி` தன்னார்வலர்களும் பயன்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், “இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் இருக்கும் தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் ஆர்வத்துடன் பங்களிப்பாற்ற வேண்டுமெனவும், தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களை அணுகி, அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க முயல வேண்டுமெனவும்,” தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளில் கல்வி - பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

பள்ளிகள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

உமாராணி

”நானும் எனது கணவரும் படிக்கவில்லை. எங்களுக்கு கையெழுத்து கூட போடத் தெரியாது. என்னுடைய குழந்தைகளை நான் அரசுப் பள்ளிகளில் சேர்த்தபோது, அவர்கள் கையெழுத்து போடவும், எழுத படிக்கவும் மட்டும் கற்றுகொண்டால் போதும் என்ற எண்ணத்தில்தான் சேர்த்தேன். ஆனால் இன்று அவர்கள் மிகப்பெரிய தனியார் பள்ளிகளில் படித்தது போன்று சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்,” என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த உமாராணி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நாங்கள் திருவாரூர் பகுதியில் வசிக்கிறோம். எங்களுக்குப் பெரிதாக பொருளாதார வசதி கிடையாது. தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. எனவேதான் எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்த்தேன். அரசுப் பள்ளியில் சேர்த்ததால், அவர்களது படிப்பின் மீது முதலில் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் எங்கள் குழந்தைகள் மிக நன்றாகவே படித்தனர்.

எனக்கு மூன்று குழந்தைகள். அதில் இருவர் இப்போது படித்து முடித்து கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். கல்லூரிகளில் மற்ற மாணவர்களை விடவும் அவர்கள் மிகச் சிறப்பாகவே செயல்படுவதாக பேராசியர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் பள்ளிப் படிப்பிற்கு நான் எந்தச் செலவும் செய்யவில்லை. சில படித்த பெற்றோர்கள் செய்வது போல், அவர்களை நாங்கள் பெரிதாக படிப்பில் வழிநடத்தவும் இல்லை. ஆனாலும் அவர்களுக்குச் சிறப்பான கல்வி கிடைத்ததற்கு அரசுப் பள்ளியும் அதன் ஆசிரியர்களுமே காரணம்,” என்று தெரிவித்தார்.

ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெற்றோரான மஞ்சு கூறுகையில், “ தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த எனது மகனை, இரண்டாம் வகுப்பிற்காக அரசு பள்ளிக்கு மாற்றினேன். எங்கள் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியின் பாடத் திட்டங்களும் ஆசிரியர்களின் வழிநடத்தல்களும் நன்றாகவே உள்ளன. ஆனால் அங்கு போதிய கழிப்பறை வசதிகளும், கட்டட வசதிகளும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

பள்ளிகள் என்றாலே அரசுப் பள்ளிகள்தான்

அரசுப் பள்ளிகள்
 
படக்குறிப்பு,

பிரின்ஸ் கஜேந்திரன்

”நாட்டில் பள்ளிகள் என்றாலே அது அரசுப் பள்ளிகளாகத்தான் இருக்க வேண்டும். மிகவும் வளர்ச்சி பெற்ற உலக நாடுகளில்கூட அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர். கன்னியமிக்க குழந்தை பருவம் என்பது அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் கிடைக்கும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரன்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “இடைப்பட்ட காலங்களில் தனியார் பள்ளிகளின் விளம்பரங்களினாலும், போலி கௌரவத்திற்காகவும் பலரும் தனியார் பள்ளிகளை நாடினர். ஆனால் தற்போது தனியார் பள்ளிகளுக்குச் சென்றால் அங்கு மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும், அரசுப் பள்ளிகளுக்குச் சென்றால்தான் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அதனால் மீண்டும் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வர தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் நம்பிக்கையைக் காக்கும் அளவுக்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறதா?

கட்டடங்களும், ஏசி வகுப்பறைகளும் தேவையில்லை. இங்கு அடிப்படை தேவையே தூய்மையான, செயல்படக்கூடிய வகையில் இருக்கும் கழிப்பறைகள்தான். அதுவே இங்கு பெரும்பாலான பள்ளிகளில் இல்லை.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் நாப்கின்களையும் அதை முறையாக அப்புறப்படுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

கழிப்பறை வசதியும் தூய்மை பணியாளர்களும் இல்லை

பள்ளிகள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

தியாகராஜன்

பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை என்பதை பிபிசியிடம் பேசிய அரசு ஆசிரியர்களும் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பேசிய தமிழக அரசு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தியாகராஜன், "எனக்குத் தெரிந்த வரையில் நீண்ட நாட்களுக்குப் பின் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மிகப் பெரியளவில் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏனெனில் அரசுப் பள்ளிகளில் மிகப் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுவது கழிப்பறை வசதிதான். அப்படியே கழிப்பறைகள் இருந்தாலும் அதை முறையாக தினசரி சுத்தப்படுவதற்கு தூய்மை பணியாளர்கள் இருப்பதில்லை. எனவே முதலில் கழிப்பறை வசதிகளையும், அதற்கு தூய்மை பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

அரசு பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இடையே இருக்கும் மிகப்பெரும் வித்தியாசமாக நான் இதை பார்க்கிறேன். அதேபோல் அனைத்து பள்ளிகளிலுமே ஒரு நல்ல விளையாட்டு மைதானங்களும், பி.டி ஆசிரியரும் இருக்க வேண்டும். அது மாணவர்களை மேலும் உற்சாகத்துடன் இயங்க வைக்கும்.

மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுப்பதற்காக அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுமே எங்களால் முடிந்தளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில், அரசும் போதிய கவனம் செலுத்தினால் அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படும்,” என்று கூறுகிறார்.

பாடத் திட்டத்தின் தரம்

பள்ளிகள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

“சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டத்தின் தரம் பெரிதும் மேம்பட்டிருக்கிறது. சமீபத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள்கூட, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையான தரத்தைக் கொண்டுள்ளது,” என்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பாடத்திட்டங்களில் இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க வரும் எத்தனையோ பெற்றோர்கள், உள்ளே வந்து பார்த்த பின்பு கழிப்பறை வசதிகள் குறைபாட்டால் சேர்க்காமல் சென்றிருகின்றனர். எனவே இத்தகைய பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களைப் போன்ற ஆசிரியர்கள் சிலர், தங்களின் சொந்த முயற்சியால் தாங்கள் வேலை செய்யும் பள்ளியில் பல வசதிகளை ஏற்படுத்துவதற்கு முயன்று வருகிறோம்.

ஆனால் அதேநேரம் பல வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்று, வெவ்வேறு அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் அத்தகைய வாய்ப்புகள் அரசுப் பள்ளிகளில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதேபோல் சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற கலை திருவிழாக்கள்கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது என் கருத்து,” என்று கூறுகிறார் ஆசிரியர் ஆனந்த்.

நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு ஏன் கவனம் செலுத்துவதில்லை?

பள்ளிகள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த மார்ச் மாதம் வெளியான பட்ஜெட் அறிவிப்பில், பள்ளிக் கல்வி துறைக்காக மட்டும் 40,290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் "40,290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இங்கு போதுமானதாக இருக்காது, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு இங்கே ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது,” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அரசுப் பள்ளிகள் வலிமையாக இயங்குவதற்குப் பெரும் பலமாக இருப்பவர்கள் சிறந்த ஆசிரியர்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த ஊதியத்தில்.

ஒரு பள்ளிக்கு நிரந்தர ஆசியர்களை நியமித்தால்தானே அவர்களுக்குரிய பொறுப்புகளை அளிக்க முடியும். மிகவும் குறைந்த ஊதியம் அளிப்பதால் அவர்களது வாழ்வாதாரமும் சிறப்பாக இல்லை. அரசுப் பள்ளிகளுக்காக உழைக்கும் ஆசிரியர்களை, நிரந்தரமாக நியமிப்பதில் அரசுக்கு எது தடையாக இருக்கிறது?” என்று கேள்வியெழுப்புகிறார் பிரின்ஸ் கஜேந்திரன்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரனின் கருத்தை, பல அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஆதரிக்கின்றனர். அரசை நம்பி வரும் பெற்றோர்கள் மற்றும், அரசுப் பள்ளிகளுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் இருக்குமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சரின் விளக்கம் என்ன?

பள்ளிகள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இதுகுறித்து அரசின் கருத்தைக் கேட்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.

பிபிசி தமிழுக்கு பதிலளித்த அவர், ”எதிர்காலத் திட்டமிடலோடுதான் இந்தப் பரப்புரை பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் `பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை` தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 784 கோடி மதிப்பீட்டில் 5351 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிக்காக இத்திட்டத்தைத் அவர் தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 2834 சுகாதார வளாகங்கள், 1729 சமையலறைக் கூடங்கள், 639 குடிநீர் குழாய்கள், 139 சுற்றுச்சுவர் பணிகளுக்காக ரூ.263 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கிவிட்டுத்தான் மிகுந்த நம்பிக்கையோடு ‘அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேருங்கள்’ என அழைப்பு விடுத்தோம். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் பெற்றுள்ளார்கள் என்பதை வெற்றியாகக் கருதுகிறோம்.

அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் அனைத்து மாணவர்களையும் தொடர்ந்து தக்க வைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு அதிலும் வெற்றி பெறுவோம்,” என்று தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் இருப்பது போன்ற விளையாட்டு மைதான வசதி அரசுப் பள்ளிகளில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் மைதான கட்டமைப்பை முற்றிலும் அறிந்தவர்கள் இதுபோன்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் தெரிவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். மைதானங்களை மேம்படுத்தவும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளுக்காக அவற்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் விளையாட்டில் உலகளவில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிரமாகச் செயலாற்றி வருகின்றோம். `ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் (Sports School Of Excellence) ரூ.9 கோடியில் ஏற்படுத்தப்படும்` என்றும், `அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படும் எனவும், விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்” எனவும் கடந்த மானியக் கோரிக்கையில் கூட அறிவித்துள்ளோம். அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

அதேபோல், அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர்,

"ஆசிரியர்கள்தான் பள்ளி எனும் தேரின் அச்சாணி என்பதை நன்கு உணர்ந்துள்ளோம். கடந்த அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,849 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். தனது பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி ஆசிரியர்களுக்கான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி(Tablet) வழங்கப்படும். ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என ஆசிரியர்களின் நலன்காக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர்” என்று தெரிவித்தார்.

அதேபோல், “6 முதல் 8ஆம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று எனும் வீதத்தில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

14,019 காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை, பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109,91,52,000/- நிதி ஒப்பளிப்பு வழங்க ஆணை வெளியிடப்பட்டது.

இவை அல்லாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதன்படி 10430 ஆசிரியர்களை விரைந்து தேர்வு செய்யவும் பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவும் பணியாற்றுகிறோம்” என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c4nk824mkw2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.