Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? - நிலாந்தன்

spacer.png
 
 

மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது. இது பதினாலாவது மே18. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது? அல்லது எங்கே தேங்கி நிற்கிறது?

மே 18ஐத் தமிழ்த்தரப்பு எவ்வாறு அனுஷ்டிக்கிறது என்பதிலிருந்தே ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். அது ஒரு தேசிய துக்க தினம் என்று தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் சில பகுதிகளைத் தவிர ஏனைய தமிழ்ப் பகுதிகளில் வாழ்க்கை வழமைபோல இயங்கியது. பாடசாலைகள் இயங்கின. அலுவலகங்கள் இயங்கின. பாடசாலைகளில் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன: வெளிக்களப்பயிற்சி நிலையப் பரீட்சைகள் நடந்தன.

ஒரு தொகுதி மக்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி போய்க்கொண்டிருக்க, எனையவர்கள் தமது அன்றாடத் தொழில்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே கஞ்சி காய்ச்சி கொடுக்கப்பட்டது. கஞ்சி காய்ச்சும் நிலையங்களைக் கடந்து போனவர்கள் ஆங்காங்கே கஞ்சியை வாங்கி குடித்தார்கள். பின்னர் வீட்டுக்குச் சென்று வழமையான மதிய உணவை அருந்தினார்கள். அதாவது சித்திரைக் கஞ்சியை குடிப்பதுபோல விரதமிருந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு விரத உணவாக அருந்தியவர்கள் எத்தனை பேர்?

மே 18க்கு முதல் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அந்த நாளை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும் கடைகளை மூடுமாறும் பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு விடுத்தது. ஒரு தேசிய துக்க தினத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று அதற்கு முதல் நாட்தான் ஒரு கட்சி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்றால் நிலைமை எப்படியிருக்கிறது?

ஒரு தேசிய துக்க தினத்தன்று,தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் துக்கத்தை அனுஷ்டிக்க, பெரும்பகுதியினர் தமது வழமையான அன்றாடச் சோலிகளுக்குள் மூழ்கிக்கிடந்தார்கள். அப்படியென்றால் அதை ஒரு தேசிய துக்கதினம் என்று அழைக்கலாமா?

கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்காலில் மொத்தம் 2000க்கும் குறையாதவர்கள் கூடினார்கள் என்று ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களும் அப்படித்தான் கூறுகிறார்கள். பொதுக் கட்டமைப்பினர் கிட்டத்தட்ட 4,000பேர் வரை கூடினதாக கூறுகிறார்கள். தாங்கள் மொத்தம் 1500 தீப்பந்தங்களை நட்டு வைத்ததாகவும்,ஆனால் அதைவிட அதிகமான தொகையினர் அங்கு கூடியிருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மக்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி வருவதற்கு பொதுவான  ஏற்பாடுகள் எவையும் இருக்கவில்லை. நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்பானது நினைவு கூர்தலுக்கான பொது இடத்தை நிர்வகிப்பதற்கும் அப்பால் மக்களைத்  திரட்டும் வேலைகளை செய்யவில்லை. அக்கட்டமைப்பில் சில கத்தோலிக்க மதகுருக்களும் செயற்பாட்டாளர்களும் உண்டு. ஓர் அங்லிகன் மதகுரு கட்டமைப்பை வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும்,பரந்துபட்டதாகவும் மாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். திருகோணமலையைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் அவ்வாறு கேட்டிருக்கிறார். பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும் கேட்டிருக்கிறார்கள். அதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு மெய்நிகர் சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்துவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

spacer.png

இந்த விவகாரத்தை நான் மே 18க்கு முன்னரே எழுத யோசித்தேன். ஆனால்  இருக்கின்ற அமைப்பைக்  குழப்பக்கூடாது என்பதோடு, துக்கத்தை அனுஷ்டிக்கப்போகும் மக்கள் மனதில் சலிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும் அவ்வாறு எழுதுவதைத் தவிர்த்தேன். பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க மதகுருவோடும் நான் உரையாடினேன். அவர் அதனை ஜனநாயக மயப்படுத்த வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டினார். பரந்துபட்ட அளவில் அதை விஸ்தரிக்கும் பொழுது அதற்குள் யார் யார் வருவார்கள் என்ற பயம் உண்டு என்று சொன்னார். எனினும், இப்போதுள்ள பொதுக் கட்டமைப்பு வெளிப்படைத் தன்மையற்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பை மட்டுமல்ல நினைவு கூர்தலுக்காக ஏற்கனவே உள்ள பொதுக்கட்டமைப்புகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அக்கட்டமைப்புகளின் பின்னணி குறித்தும், அதை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பதை குறித்தும் அக்கட்சிக்கு சந்தேகம் இருப்பதாக தெரிகிறது.

தமிழரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை அதிகம் புனையும் ஒரு கட்சி அது. ஆனாலும், தமிழ் அரசியலில் இப்பொழுது யார் யாரோடு நிற்கிறார்கள்? யாருக்கு யார் காசு கொடுக்கிறார்கள்? யாரை யார் ரிமோட் பண்ணுகிறார்கள்? என்று சந்தேகப்படும் அளவுக்கு குழப்பமான ஒரு நிலைமை அதிகரித்து வருகிகிறது என்பது உண்மைதான்.

கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி ரொட்ரிகோ மைதானத்தில் நடந்த  முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை, மாவட்ட மக்கள் அமைப்பு என்ற புதிய அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ளது. அந்நிகழ்வுக்கு ஆட்களைத் திரட்டியது படைப் புலனாய்வுத் துறைக்கு நெருக்கமானவர்கள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. அதுபோல வவுனியா நகரசபை மைதானத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வை வன்னித்தமிழர் ஒன்றியம் என்ற புதிய அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ளது. அதற்கு வவுனியா விகாராதிபதி நிதியுதவி செய்திருக்கிறார். அதாவது தமிழ் அரசியல் பரப்பில் ஒரு மையம் இல்லாத காரணத்தால் ஒரு பலமான திரட்சி இல்லாத காரணத்தால், யார் எதைச் செய்கிறார்கள்? யாரை யார் இயக்குகிறார்கள்? என்பவற்றைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பமான ஒரு நிலைமை உருவாகி வருகிறதா?

தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உடைக்க வேண்டும் குழப்ப வேண்டும் என்று திட்டமிட்டு பல்வேறு வகைப்பட்ட தரப்புக்களும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் செயற்படுவதாகத் தெரிகிறது.

ஓர் ஆபிரிக்க பழமொழி உண்டு “ஆமை மதில் மேல் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு யாரோ உதவியிருக்கிறார்கள் என்று பொருள்”. தமிழரசியலில் இப்பொழுது பல ஆமைகள் மதில் மேல் இருக்கின்றன. ஏன் கூரை மேலும் இருக்கின்றன. அந்த ஆமைகளை யார் அங்கே தூக்கி வைத்தது என்ற கேள்வி உண்டு. சில ஆமைகள் ஒரே சமயத்தில் இரு வேறு தரப்புக்களிடம் சம்பளம் வாங்கி வருவதாக பரவலாகச் சந்தேகங்கள் உண்டு.

இது சந்தேகம்தான். இந்த இடத்தில் இதைப்பற்றிக் கதைக்க வேண்டும். ஏனென்றால்,நவீன தமிழ் அரசியலில் ஏற்பட்ட ஒரு கூட்டுப் பேரழிவை நினைவு கூர்ந்து முடித்திருக்கும் இக்காலகட்டத்தில் பேசவில்லை என்றால் பிறகு எப்பொழுதும் அதைப்பற்றிப் பேச முடியாது.

தமிழ்மக்களின் தேசத்திரட்சி சிதறிப்போனதன் பின்னணியில்தான் இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சந்தேகங்களுக்கு இரண்டு தரப்புகள் பொறுப்பு.

ஒன்று,வெளியில் இருந்து தமிழ் அரசியலை ரிமோட் கொன்ட்ரோல் செய்ய முடியும் என்று நம்பும் புலம்பெயர்ந்த தரப்புகள். இரண்டாவது,தமிழ் மக்களின் தேசத் திரட்சியை சிதறடிப்பதன்மூலம் அரசியல் ரீதியாக தமிழ்மக்களை முழுமையாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள். மூன்றாவது தமிழ்க் கட்சிகள்.

spacer.png

இதில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புகள் நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் உதவிகளைச் செய்கின்றார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே அந்த உதவிகள் தமிழரசியற் பரப்பில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. ஒர் இனப்படுகொலைக்குப் பின் தப்பியிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் தாயகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செயற்பாட்டாளர்களே உண்டு. அவர்களையும் ரிமோட் செய்ய முற்பட்டால்,அது அவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வேட்டைப் பற்களுக்குள் சிக்கவைத்துவிடும் என்பது முதலாவது பயம். இரண்டாவது பயம்,வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளுக்காக செயற்படுகின்றவர்கள் ஒரு கட்டத்தில் தாமாகச் செயற்பட முடியாத பொம்மலாட்டப் பொம்மைகளாக மாறிவிடுவார்கள். பொம்மைகளால் தேசத்தைத் திரட்ட முடியாது. ஆமைகளாலும் தேசத்தைத் திரட்ட முடியாது.

பொம்மைகளும் ஆமைகளும் தமிழரசியல் பரப்பில் அதிகரித்துவரக் காரணம் அரங்கில் உள்ள தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான். எல்லாருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ஒரு தேசத்திரட்சியைக் கட்டியெழுப்பத் தவறிய அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு.தமிழ்மக்கள் மத்தியில் ஒரு தேசத்திரட்சியை கட்டியெழுப்பும் மக்கள் இயக்கமும் கிடையாது; குடிமக்கள் சமூகமும் கிடையாது; கட்சிக் கூட்டுக்களும் கிடையாது. அதனால் கடந்த 14ஆண்டுகளாக தமிழ் மக்கள் அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறிக்கொண்டே போகிறார்கள்.

தமிழ் இளையோர் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இது, முள்ளிவாய்க்காலில் கடைசிக்கட்டத்தில் எந்த வழியால் தப்பிச் செல்வது என்று சிந்தித்ததைப்போல இருக்கிறது என்று ஒரு செயற்பாட்டாளர் துக்கப்பட்டார்.

சிங்களபௌத்த மயமாக்கல்;நிலப்பறிப்பு;பயங்கரவாத தடைச் சட்டத்தை புதுப்பிப்பது;தமிழ்மக்கள் மத்தியில் குழந்தைப்பேறு குறைந்துவருவது; இளையோர் நாட்டை விட்டு வெளியேறத் துடிப்பது…போன்றவற்றின் பின்னணியில்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட யாருமே இல்லை. ஆம், யாருமே இல்லை.

அந்த வெற்றிடத்தில்தான் கடந்த 14ஆண்டுகளாக,ஒரு பேரிழப்பை அனுஷ்டிப்பதற்காக பரந்துபட்ட அளவிலான,வெளிப்படைத்தன்மைமிக்க ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கமுடியாத மக்களாகத் தமிழ்மக்கள் காணப்படுகிறார்கள்.

மன்னாரில் இந்துக்கள் கட்டிய வளைவு உடைக்கப்பட்ட பின் அது தொடர்பில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான உரையாடலை தொடக்கி வைப்பதற்கு ஒரு சிவில் சமூகம்கூட தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது. வடக்கு கிழக்கு இணைப்பு அதிகம் சோதனைக்குள்ளாகி வரும் இக்காலகட்டத்தில் அதுதொடர்பில் வெளிப்படையான உரையாடலைத் தொடங்கி,கிழக்கில் இருக்கக்கூடிய சந்தேகங்களை நீக்குவதற்கு யார் முயற்சிக்கிறார்கள்? சாதி ரீதியாக பிற்படுத்தப்படும் மக்களின் அச்சங்களைப் போக்குவதற்குரிய தமிழ்த்தேசிய வேலைத் திட்டம் யாரிடம் உண்டு?

தமிழ்மக்களை வெளித்தரப்புகள் பிரிக்கப் பார்க்கின்றன,வெளித்தரப்புகள் ஆமைகளையும் பொம்மைகளையும் சம்பளம் கொடுத்து இயக்குகின்றன என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. பதிலாக தேசத்திரட்சியை உறுதிப்படுத்த வேண்டும்;பலப்படுத்த வேண்டும்.அதைச் செய்யத் தவறிய அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு விகிதளவுக்கு எதிரிக்கு சேவகம் செய்திருக்கின்றன.

தமிழ் மக்கள் வடக்கு கிழக்காய்;கட்சியாய் ; பொதுக் கட்டமைப்பாய்; சாதியாய் சமயமாய் சிதறிக்கொண்டே போகிறார்கள். இது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள முற்படும் சக்திகளுக்கே அதிகம் வாய்ப்பானது.தமிழ் மக்களைக் கூறு போடுவதற்கு ஆமைகளும் பொம்மைகளும் தேவையில்லை. தமிழ்க் கட்சிகளே போதும் என்பதுதான் கடந்த 14 ஆண்டுகால அனுபவம்

https://www.nillanthan.com/6095/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.