Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் -நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் -நிலாந்தன்

written by adminJune 11, 2023
maruthankeni.jpg?fit=900%2C600&ssl=1

புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல்நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது. அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்; மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்; நாகரீகமாகவும்செய்கின்றார்கள். எதுவாயினும் , தமிழ்மக்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் இல்லை. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்தபின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழ்மக்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது என்பது ஆக்கிரமிப்பு மனோநிலைதான்.

மருதங்கேணியிலும் அதுதான் நடந்தது. அதன்விளைவாக நடந்த கைது நடவடிக்கைகள் தமிழ்த்தேசியமக்கள்முன்னணியை அச்சுறுத்தும் நோக்கிலானவை. அண்மை மாதங்களாக முன்னணி அரசுபடைகளோடும் போலீசாரோடும் நேரடியாக முட்டுப்படும் போராட்டக்களங்களைத் திறந்து வருகின்றது. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அரசபடைகளும் காவல்துறையும் ,முன்னணிக்கு அதன் வரையறைகளை உணர்த்தும் நோக்கத்தோடு மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம்.

அக்கட்சியை அச்சுறுத்தி அதன் செயற்பாட்டாளர்களை தற்காலிகமாகவேனும் உள்ளே தள்ளுவதன் மூலம்அக்கட்சியை தொடர்ந்து போராட விடாமல்தடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். இது ஏற்கனவே சிறீதரனுக்கும் நடந்தது ,. அவருடைய இரண்டு உதவியாளர்கள் பயங்கரவாதத்தடைச்சட்ட்தின் கீழ் பிடிபட்டு பல மாதங்கள்சிறையில் இருந்தவர்கள்.

கடந்த 14 ஆண்டுகளாக ஆயுதமோதல்கள் இல்லை. எனினும் தமிழரசியல் அதிகம் ராணுவமயப்பட்டே காணப்படுகிறது. தமிழ்மக்கள் எந்தஒரு போராட்டத்தை முன்னெடுத்தாலும் அரசபடைகளுக்கும் புலனாய்வுத்துறைக்கும் , திணைக்களங்களுக்கும், பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கும். அவ்வாறு அரசபடைகளோடு மோதி அல்லது முரண்பட்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுப்படுவதற்கு சாதாரணஜனங்கள் அச்சப்படும் ஒரு சூழல்தான் இப்பொழுதும் உண்டு.

அண்மையில் தையிட்டியில் விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கஜேந்திரன் தனிஒருவராக புதர்களின் மத்தியில் தரையில் உறங்கும் காட்சி அவருடைய ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டது. அவர் ஒரு நாடாளுமன்றஉறுப்பினர். இருபதாயிரத்துக்கும் குறையாதவாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர். அவர் ஏன் அங்கே தனியாக நிலத்தில் உறங்கவேண்டும்? அவருக்கு வாக்களித்த மக்களும் அந்தகட்சியின் ஆதரவாளர்களும்எங்கே?

அது உயர்பாதுகாப்புவலையத்தை அண்மித்த பகுதி. அங்கே சென்று போராடினால் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உண்டு. அவ்வாறு போராடிய கட்சிக்காரர்களை பலாலி போலீஸ் கைது செய்து பின் விடுவித்தது. சட்டத்தரணிகளையும் விட்டுவைக்கவில்லை. போராடப்போனால் கைதுசெய்யப்படலாம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதே போலீசின் நோக்கம்.

மருதங்கேணிச் சம்பவத்திலும் ஒரு புலனாய்வாளர் தன்னைத் தடுக்க முயன்ற கஜேந்திரக்குமாரைத் தட்டிவிட்டுத் தப்பியோடுகிறார். அவரை இரண்டு கட்சிக்காரர்கள்தான் துரத்திக்கொண்டு போகிறார்கள். ஏனைய பொதுமக்கள் குறிப்பாக , சந்திப்பில் கலந்து கொண்ட விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவரைத் துரத்திக்கொண்டு போகத் துணியவில்லை.

அது ஒரு தமிழ்யதார்த்தம். அரசபடைகள் மற்றும் போலீஸ், புலனாய்வுத்துறை போன்றவற்றோடு நேரடியாக மோத சாதாரண தமிழ்மக்கள் பயப்படுகிறார்கள். ஏன்அதிகம் போவான், நினைவு நாட்களின்போது எல்லா ஆலயமணிகளையும் அடிக்குமாறு கேட்கப்படுகிறது. ஆனால் எல்லா கோவில்களிலும்  மணி அடிக்கப்படுவதில்லை. எல்லாவீடுகளிலும் வெளிப்படையாக ஒரு சுட்டிகூட ஏற்றப்படுவதில்லை. கட்சிஅலுவலகங்களில் மட்டுந்தான் வெளிப்படையாக நினைவுச்சுடர் ஏற்றப்படும். சாதாரண ஜனங்கள் அவ்வாறு ஒரு சுட்டியை ஏற்றுவதற்குக்கூட  பயப்படும்ஒருநிலை.

அந்த அச்சத்தைப்போக்குவதென்றால் மக்களைத் திரளாக்க வேண்டும். உதிரியாக இருக்கும்வரைதான் அச்சமிருக்கும். ஆனால் பெரிய திரளாகக்கூடினால் எத்தனை பேரைத்தூக்குவது? போராட்டம் என்றாலே சட்ட மறுப்புத்தான். சிறைகளை நிரப்புவதுதான். பொதுமக்கள் அதிகமாகக் குவியும்போது எல்லாரையும் தூக்கி உள்ளே போட முடியாது. உதிரியாகப் போராடும் போதுதான் தனித்தனியாகத் தூக்கி உள்ளே போடலாம். திரளாகக்குவிந்தால் முழுச்சமூகத்தையும் உள்ளேதூக்கிப் போடமுடியாது. உதிரிகளாக இருக்கும்வரை மக்கள்பயப்படுவார்கள். திரண்டால் அதுதான் பலம். திரட்சிதான் பயத்தைப் போக்கும். தைரியத்தை உருவாக்கும். எனவே மக்கள் எந்தளவுக்கு எந்தளவு தங்களுடைய சௌகரிய வலையத்தை விட்டு வெளியே வருகிறார்களோ அந்தளவுக்கு அந்தளவு போராட்டம் மக்கள்மயப்படும். ஆனால்தமிழ்க்கட்சிகளிடம் அதற்குரிய பொருத்தமான வேலைத்திட்டங்கள் இல்லை. அவ்வாறான ஒரு பின்னணியில்தான் நாடாளுமன்றஉறுப்பினர்கள் தனியாக அரசுதரப்புடன் முட்டுப்பட வேண்டிவருகிறது.

மக்கள்முன்னணி அந்தப்பயத்தை உடைத்துக்கொண்டு போராட முயற்சிக்கின்றது. அதில் தனிமனிதசாகசம் இருக்கலாம். எனினும், அக்கட்சிக்கு ஒரு தட்டுத்தட்டி அடக்கவேண்டும் என்று அரசாங்கம் சிந்தித்ததன் விளைவே மேற்படி கைது நடவடிக்கை. எல்லா விதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ்அரசியலை அண்மை மாதங்களாக நொதிக்கச் செய்வது முன்னணிதான்.

அதேசமயம் ,மருதங்கேணிச்சம்பவத்தின் பின்னணியில் அக்கட்சியின் அரசியல் எதிரிகளும் கட்சியின் தூய்மைவாத நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்தவர்களும் பின்வரும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்…

அதுஒரு நாடகம் ,முன்னணி வேண்டுமென்று முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது அதன்மூலம் ,தன்னுடைய ஆதரவுத்தளத்தைப் பலப்படுத்த முயற்சிக்கின்றது என்பது ஒருபகுதியினரின் விமர்சனம்.

இன்னொரு பகுதியினர் முன்னணியைப் பலப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்கம் மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார்கள்.

இந்தியாவை எதிர்க்கும் ஒரு கட்சியை பலப்படுத்தினால் தமிழ்மக்கள் மத்தியில்இந்திய எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தலாம். அதனால் அரசாங்கத்தின் வேலை இலகுவாக்கப்பட்டு விடும். இரண்டாவதாக இதனது தூய்மைவாத நடவடிக்கைகளால் ஏனைய கட்சிகளோடு இணைய மறக்கும் முன்னணியானது தமிழ் ஐக்கியத்துக்கு ஏதோஒரு விதத்தில் தடையாகக் காணப்படுகின்றது. எனவே அக்கட்சியை பலப்படுத்தினால் அது தமிழ்த்திரட்சியைப் பலவீனப்படுத்தும் என்று அரசாங்கம் சிந்திப்பதாக ஒரு விளக்கம்.

இவைதவிர , இக்காலப்பகுதியில் ஒரு பேப்பர்கட்டிங் முன்னணியின் அரசியல்எதிரிகளால் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டம் ஒன்றில் அது தொடர்பாக டெலோ இயக்கமும் குமார்பொன்னம்பலமும் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒரு செய்திக்குறிப்பு.

குமார்பொன்னம்பலம் புலிகள்இயக்கம் தடை செய்யப்பட்டமையை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார். முன்னணியை விமர்சிக்கும் தரப்புகள் குமார்பொன்னம்பலத்தின் விசுவாசத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு மேற்படி பேப்பர்கட்டிங்கைப் பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த 14 ஆண்டுகால தமிழ்அரசியலில் விகாரமாக மேலெழுந்துவரும் ஒரு போக்கு இது. தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சூழ்ச்சிக்கோட்பாடுகளை உருவாக்குவது. முன்பு மொட்டைக்கடிதம் இருந்தது. இப்பொழுது புனைபெயரில் முகநூல் கணக்கு உள்ளது. தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக்கூறும் சுதந்திரத்தையும் துணிச்சலையும் சமூகவலைத்தளங்கள் அதிகப்படுத்தியுள்ளன. அதனால் யானை பார்த்த குருடர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து சமூகவலைத்தளங்களில் தமதுஅரசியல் எதிரிகளின்மீது அவதூறை அள்ளி வீசுகிறார்கள். குமார்பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட பேப்பர்கட்டிங்கை பரவலாக்குவதும் அதே சீரழிந்த விமர்சனப் பண்பாட்டின்ஒரு வெளிப்பாடுதான்.

ஆனால் அந்த விமர்சனப் பண்பாட்டை வளர்த்தெடுத்ததில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணிக்கும் பெரியபங்கு உண்டு. தமது அரசியல் எதிரிகளை இனத் துரோகிகளாக உருவகிப்பதன் மூலம் அவர்களின் ஆளுமையை சிதைக்கும் ஒரு அரசியல் விமர்சனப் பண்பாட்டை அக்கட்சிதான் அதிகமதிகம் முன்னெடுத்து வருகின்றது. யாராவது தமக்கு எதிராக எழுதினால் ’சோறு முக்கியம்’ ‘அவர்களுக்குப் பசிக்குந்தானே’ என்றெல்லாம் எழுதுவது அந்தகட்சிக்காரர்கள்தான். அரசியல் விமர்சகர்களை சில ஆயிரம் ரூபாய்க்கு கட்டுரை எழுதுபவர்கள்; யுடியூப்பில் உழைப்பவர்கள் என்று எழுதுவதும் அந்தக் கட்சிக்காரர்கள்தான். தமிழ் அரசியலில் விமர்சனத்தை அவதூறாக மாற்றியதில் அக்கட்சிக்குப் பெரிய பங்குண்டு. இப்பொழுது அதேவிதமான அவதூறு அவர்கள் மீதும் அள்ளிவீசப்படுகிறது.

குமார்பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட அந்த பேப்பர்கட்டிங்கில் இருப்பது உண்மையா பொய்யா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிலவேளை ,அச்செய்தி உண்மையாக இருந்தாலும் ,அதைமட்டும்வைத்து குமார்பொன்னம்பலத்தை மதிப்பிடமுடியாது. அவருடைய வாழ்க்கையை முழுமையாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த பேப்பர் கட்டிங்கில் காணப்படும் செய்தி உண்மையாக இருந்தால் அது அவருடைய ஒரு காலகட்ட அரசியல் நிலைப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் பிறகு ஒருகாலம் அவருடைய வேறொரு அரசியல் நிலைப்பாட்டுக்காகவே அவர் கொல்லப்பட்டார். அந்தநேரத்தில்அவர்தனது கொழும்புமைய வாழ்க்கையை , தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கும் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால் அவர்தன் உயிரை பாதுகாத்து இருந்திருக்கலாம். ஒரு மூத்தவாக்காளர் கூறினார்’ ஜி.ஜி.பொன்னம்பலம் பெற்றெடுத்த ஒரு செல்வநாயகந்தான் குமார்பொன்னம்பலம்’ என்று.

தமிழ் அரசியலில் சட்டச்செயற்பாட்டாளர்கள் என்று பார்த்தால் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒருசதம் கூட வாங்காமல் வழக்காடியவர் என்றுபார்த்தால் ,குமார்பொன்னம்பலத்தின் வாழ்வுபெரியது. மனிதர்களை அவர்களுடைய தொகுக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளால்தான் நிறுக்கலாம். ஒரு மனிதருடைய ஒருகாலகட்ட நிலைப்பாட்டை மட்டும் வைத்து நிறுக்கமுடியாது. எதிலும் ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான பார்வை அவசியம். தமிழ் அரசியலில் ஒருவர் தனது துறைசார்ந்து அதிகமாகத் தொண்டு செய்தாரா அல்லது தொழில் செய்தாரா என்று பார்க்க வேண்டும். இது குமார்பொன்னம்பலத்துக்கும் பொருந்தும். முன்னணியால் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

எனினும் , சரிக்கும் பிழைக்கும்அப்பால் முன்னணி தமிழ்அரசியலைநொதிக்கச் செய்கின்றது. இது அக்கட்சியின் ஆதரவுத்தளத்தை பலப்படுத்தும். முன்னணி பயப்படாமல் போராடுகிறது. அந்த முன்னுதாரணத்தை பின்பற்றி மக்கள் திரளக்கூடாது என்று சிந்தித்தே அரசாங்கம் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் மீது கைவைத்தது. அதன்மூலம் தமிழ்அரசியல்செயற்பாட்டாளர்கள் அரசபடைகளோடும் புலனாய்வுத்துறையோடும் காவல்துறையோடும் முட்டுப்படுவதில் உள்ளவரையறைகளை ஆபத்தைஉணர்த்துவதேஅரசாங்கத்தின்நோக்கம்.

மேற்படி கைது நடவடிக்கைகளின் மூலம் ரணில், சிங்களபௌத்தஉணர்வுகளைத் திருப்திபடுத்தலாம். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் உழைக்கின்றார். தாமரைமொட்டின் ஆதரவோடு அவர்களமிறங்கினால், தமிழ்வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்று அவர் அஞ்சக்கூடும். எனவே முழுக்கமுழுக்க சிங்களமக்களின் வாக்குகளில் தங்கியிருப்பது என்று முடிவெடுத்தால் தமிழ் அரசியல்வாதிகளில் கைவைக்கவேண்டும். மேலும் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் பொழுது சிங்களமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கொதிப்பைத் திசை திருப்பவும்மேற்படி கைது நடவடிக்கைகள் அவருக்கு உதவும்.
 

 

https://globaltamilnews.net/2023/191769/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியத்தலைவரால் மமனிதர் பட்டம் கொடுத்து கெளவிக்கப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது யாரரென்றால். புலிகளை அழித்ததற்கு பாராளுமன்றத்திலே நன்றி சொன்ன சம்பந்தன்ஈபுலிகள் இனவழிப்புச்செய்தார்கள் என்ற சுமத்திரன் அவர்களின் கருத்துக்களுக்கு ஆமாம் என்று தலையாட்டும் சுமத்திரன் போன்றோர் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல.  அதனை ஒரு பெரிய விடயமாக்கி இந்தக்கட்டுரையில் எழுதி  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வஞ்சகப் புகழ்ச்சி செய்யும் நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்குளுக்கும்தான். வாரவாரம் எல்லோரும் ஒற்றுமையாகப் போராடுங்கள் எழுதுவதோடு மட்டும் இவர்கள் பங்களிப்பு நின்று விடுகிறது. பேராடுபவர்களையும் தனியோட்டம் ஓடுகிறார்கள் என்று நக்கலடித்து எழுதுவது. துணிந்தவன் சாதிப்பான் பயந்தவன் வாதிப்பான். முன்னணி இவர்கள் விமர்சனங்களை ஒதுக்கி விட்டு தனித்துப் போராடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.