Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்' - விஜய் தன் அரசியல் பாதையை தெளிவுபடுத்துகிறாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நடிகர் விஜய்

பட மூலாதாரம்,THALAPATHY VIJAY MAKKAL IYAKKHAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பொன்மனச்செல்வன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 31 மே 2023
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளது, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்றது.

விஜய் விழா மேடையில் பேசும்போது “என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது, “நிறைய இசை வெளியீட்டு விழா மேடைகளில் நான் பேசியுள்ளேன். ஆனால், இந்த மாதிரியான மேடைகளில் நான் பேசியதில்லை.

ஏதோ, மனதில் புதிய பொறுப்புணர்ச்சி வந்ததுபோல் இருக்கிறது. வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாகிய உங்களை (மாணவர்கள்) சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ‘உன்னில் என்னை காண்கிறேன்’ என்பதைப் போல, எனக்கு என்னுடைய பள்ளிப் பருவ காலங்கள்தான் வந்து செல்கின்றன. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் மட்டுமே. என்னுடைய கனவு சினிமாதான்,” என்று கூறினார்.

   

மேலும், “சமீபத்தில் நான் ஒரு படத்தில் சில வசனங்களைக் கேட்டேன். அதில், காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். ரூபாய் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது,” என அசுரன் படத்தில் இடம் பெற்றிருந்த வசனத்தைக் கூறினார்.

அம்பேத்கர், பெரியாரை படிக்கச் சொன்ன விஜய்

இதையடுத்து, “முழுமையான கல்வி என்பது நாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கற்றுக் கொண்டதை மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ, அதுதான். நீங்கள் கற்றதில் இருந்து எஞ்சியிருப்பது என்பது உங்களுடைய குணம் மற்றும் உங்களின் சிந்திக்கும் திறன்.

நீங்கள் தற்போது பெற்றோரை விட்டு உயர் கல்விக்குச் செல்லும் இடத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை சுய ஒழுக்கத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது தகவல் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் இருப்பதில் எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்பதை நீங்கள்தான் ஆராய வேண்டும். உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி படிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய்

பட மூலாதாரம்,THALAPATHY VIJAY MAKKAL IYAKKHAM

அதோடு, அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கூறிய நடிகர் விஜய், “நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான்,” என்று கூறினார்.

நடிகர் விஜய், “ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்.

ஏனென்றால், நீங்கள்தான் அடுத்த முதல் தலைமுறை வாக்காளர்கள். இந்த பொதுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் பேசி, ஊக்கமளித்து அவர்களும் வெற்றியடையச் செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம்,” எனக் கூறினார்.

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,ACTOR VIJAY

விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன.

விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன.

ரசிகர்கள் மன்றங்களாக இருந்தபோதே, மக்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள், விஜய்யின் ஆதரவுடன் அதை இன்னும் வீரியமாக செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுக்க மாவட்டம் வாரியாக வெவ்வேறு அணிகளும் செயல்படுகின்றன. அதன் காரணமாகவே, முன்னைக் காட்டிலும் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பங்களிப்புகள் அதிகரித்திருக்கின்றன.

அதோடு, விஜயின் ஒப்புதலோடு விலையில்லா விருந்தகம், பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும் பால், முட்டை, ரொட்டி வழங்குதல், குருதியகம், விழியகம் போன்ற செயலிகள் என ஒவ்வொன்றும் மக்களுக்கு பயன்படும் நோக்கில் தீவிரவமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழிடம் பேசியபோது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி N ஆனந்து தெரிவித்தார்.

 

நடிகர் விஜயின் தற்போதைய அரசியல் முன்னெடுப்புகளுக்கான அஸ்திவாரம் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது.

விஜய் தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக மாறத் தொடங்கிய நேரத்தில் ரசிகர் மன்றங்கள் தமிழ்நாடு முழுக்கத் தொடங்கப்பட்டன.

அதன்பிறகு, சினிமாவை போலவே, தன் மகனை அரசியலிலும் வெற்றிபெற்றவராக மாற்றிவிட வேண்டும் எனும் ஆசையில் அந்த மன்றங்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக்கினார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

அதன் தொடர்ச்சியாக, 2009ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2011ம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் ஏற்பட்ட பிரச்னை பட வெளியீட்டில் பூதாகரமானது. அரசியல் தலையீடுகளும் அதிகரிக்க படம் திரைக்கே வரமுடியாது எனும் நிலை ஏற்பட்டது. முதல்முறையாக பெரும் சிக்கலை சந்தித்த விஜய், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் காவலன் பிரச்னையை சுமூகமாக்கி திரைக்கு கொண்டு வந்தார். படம் வெளியாகிவிட்டாலும், காவலன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் அவரை வெகுவாக யோசிக்க வைத்தாக சொல்லப்படுகிறது.

காவலனுக்குப் பிறகான காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார் விஜய். அந்தவகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். அவர்தம் குடும்பத்தினரையும் வரவழைத்து அன்பு பகிர்ந்தார். இது அவர்களின் உற்சாகத்தை இன்னும் கூட்ட மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

அதனால்தான், 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் ஆதரவுக் கொடுத்ததும், வெற்றிக்குப் பிறகு 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று சொன்ன சம்பவங்களும் நடந்தேறின.

விஜய் நடித்த துப்பாக்கிப் படமும் சர்ச்சையை சந்தித்தது. படத்தில் சிறுபான்மையினரை இழிவு செய்திருப்பதாக சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து, படத்தை தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையையும் முன் வைத்தன. ஆனால், அவற்றை எல்லாம் மீறி துப்பாக்கி திரைப்படம் வசூல் சாதனைப் படைத்ததாக கூறப்பட்டது.

கோடநாடு சென்று காத்திருந்த விஜயை புறக்கணித்த ஜெயலலிதா

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,ACTOR VIJAY

விஜய் நடிப்பில் ’தலைவா’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாரானது. ரசிகர்களின் மன நிலையினை உணர்ந்திருந்த விஜய், தலைவா படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. அதற்காக மீனம்பாக்கம் அருகே பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் குறுக்கிட்டது அரசியல்.

படத்தை வெளியிட முடியாது என போர்க்கொடிகள் உயர, விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். விஜய்க்கு நேர்ந்த இந்த அவமானத்தை அவரது ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்ததாகவே கருதினர்.

 

’தலைவா’ திரைப்படத்தின் பிரச்னை தலைப்பில் இடம்பெற்றிருந்த 'Time to Lead' எனும் வாசகத்தை நீக்கியதும் முடிவுக்கு வந்தது. தலைப்பில் இருந்த அந்த வாசகம் நீக்கப்பட்டாலும், இதுதான் தலைவனாக சரியான நேரம், அரசியலுக்கு வா தலைவா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசியல் நுழைவுக்கு அது சரியான நேரமில்லை என அந்த நேரத்தில்தான் முடிவெடுத்ததாக விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

'கத்தி' பட வெளியீட்டில் பிரச்னை

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,ACTOR VIJAY

’தலைவா’ பட நேரத்தில் அரசியல் வருகையை தள்ளி வைத்தாரே தவிர, அந்த எண்ணத்தில் இருந்து விஜய் பின்வாங்கவில்லை. திரைப்படங்களின் கதைக்களங்கள் மூலமும், திரையைத் தாண்டிய நற்பணிகள் மூலமும் தனது சர்கார் கனவுக்கு உரம் போட்டுக் கொண்டேயிருந்தார்.

விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகள், நடவடிக்கைகள் எதிரொலியாக அவரது ஒவ்வொரு படமும் பெரும் தடைகளைத்தாண்டியே வெளியாக நேரிட்டது. அந்த வரிசையில், சிக்கிய அடுத்தப் படம் 'கத்தி'.

 

’கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவை முன்னிறுத்தி, இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியாக விடமாட்டோம் என சில அமைப்புகள் பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்தன. அதை எல்லாம் தாண்டியே கத்தி திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளையும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தையும் விமர்சிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

'மெர்சல்' படத்தால் நாடு முழுக்க கவனம் பெற்ற விஜய்

விஜய் அரசியல் பிரவேசமா?

மெர்சல் பிரச்னை இந்திய அளவில் டிரெண்டிங்கானது தனிக்கதை. படத்தில் புறா சம்பந்தபட்ட காட்சி ஒன்றிற்கு ஆட்சேபனை தெரிவித்து, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கடைசி நேரம் வரை படம் வெளியாகுமா? என்பதே கேள்விக்குறியானது.

மெர்சல் வெளியீட்டுக்கு முன்பிருந்த பிரச்னை, ரிலீசுக்குப் பின்பு வேறு வடிவமானது. படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் மருத்துவத் துறைக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்திய முழுமையும் பேசுபொருளானது மெர்சல்.

 

பாஜகவினர் தொடர்ந்து மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினர். சில தினங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் பிரச்னை ஒருவழியாய் ஓய, எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்.

 

மெர்சல் பிரச்னைக்குப் பின்னர் மீண்டும் தீவிரமாக தனது மக்கள் இயக்கப் பணிகளை முன்னெடுத்து வரும் விஜய், அதன் உட்கட்டமைப்பையும் கிட்டத்தட்ட ஒரு அரசியல் கட்சிக்கு நிகராய் மகளிரணி, மாணவரணி தொடங்கி கிளைக் கழகங்கள் வரை திட்டமிட்டு வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கருதும் விஜய், அரசியல் நுழைவிற்கு இதுவே சரியான நேரம் என்று அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ள மக்கள் இயக்கத்தினரை முடுக்கிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

"ரஜினி, கமலை எதிர்த்து அரசியல் செய்ய விஜய் விரும்பவில்லை"

அதுமட்டுமின்றி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட தடைகள், சர்ச்சைகளுக்குப் பிறகு விஜய்க்கு இந்திய அளவில் ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. அதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டால் சரியாக இருக்கும் என சில மூத்த அரசியல்வாதிகள் அவருக்கு ஆலோசனை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அரசியலில் கால் பதிக்கும் பணிகளில் விஜய் முழுவீச்சில் இறங்கியிருந்த நேரத்தில்தான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் அரசியலில் இறங்கினர். திரைத்துறைத் தாண்டி தனிப்பட்ட முறையிலும் அவர்கள் இருவருடனும் நட்பு பாராட்டும் விஜய்க்கு அவர்களை வெளிப்படையாய் எதிர்த்து அரசியல் செய்வதில் விருப்பம் இல்லை என்று அவரது மக்கள் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

கல்வி சார்ந்த பணிகளை மக்கள் இயக்கத்தினர் முன்னெடுக்கும்போது அவர்களை பாராட்டும் விஜய் தானும் பெருமளவில் மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமின்றி, நீட் தேர்வு பிரச்னையில் தற்கொலை செய்துகொண்ட அனிதா குடும்பத்தினரை சந்தித்தது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களைச் சந்திக்க ரகசியமாகச் சென்று ஆறுதல் சொன்னது என மற்ற நடிகர்களில் இருந்து வித்தியாசமாக தெரிவதால் ரசிகர்கள் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பரவத் தொடங்கியிருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவிக்கிறார்.

"மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது"

"விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து களத்தில் நிற்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு அரசியல் தலைவராக உருவெடுக்க முடியும். ₹1000, ₹2000-க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் எல்லா ரசிகர்களும் ஓட்டுப் போடுவார்கள், முதலமைச்சராகிவிடலாம் என்ற கனவுடன் அரசியலுக்கு வந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது" என்கிறார் திரை விமர்சகர் பரத்.

 

"தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, கூகுள் செய்து கண்டுபிடித்த பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்குவது எல்லாம் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே உதவும். சமீபத்தில் நடந்த மக்கள் பிரச்னைகள் எதற்கும் எந்தவிதமான கருத்தையும் விஜய் தெரிவிக்கவில்லை. தன் படங்களில் விளையாட்டு வீராங்கனைகளை, சிங்கப்பெண்கள் என போற்றும் அவர், உண்மையில் மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னை விஸ்வரூபமெடுத்து இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் கூட கருத்து தெரிவிக்கவில்லையே?. அதுபோலவேதான், கள்ளச்சாராய உயிரிழப்புகள், செங்கோல் விவகாரம் என எதுவொன்றுக்கும் குரல் கொடுக்காமல், புஸ்ஸி ஆனந்தை வைத்து கட்சி நடத்திவிடமுடியாது எனும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பரத் குறிப்பிடுகிறார்.

விஜய் அரசியல் பிரவேசமா?

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

 

இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்பதால் விஜய்க்கு எதிரான விமர்சனங்களை தவிர்க்க முடியாது என சொல்லும் புஸ்ஸி ஆனந்து, "விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு 5 ஆண்டுகளுக்கு முன்பே பலப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்தவொரு தெருவிலும் எங்கள் இயக்கத்தின் ஒரு ஆள் கட்டாயம் இருப்பார். அவர்கள் மூலமாக மக்கள் பணிகள் வீச்சுடன் நடைபெறுகிறது" எனவும் குறிப்பிடுகிறார்.

ஆனால், அரசியலுக்கு வருவாரா என்பதை விஜய்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நாங்கள் அவர் சொல்லும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c4nple9449eo

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230617-222107.jpg

IMG-20230617-222037.jpg

இன்டைக்கு முழுவதும் சானல்காரருக்கு ஒரே உருட்டுதான் போங்கோ ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் என்ன பேசினார் என்பதே பெரும்பாலான தமிழக ஊடகங்களில் இன்றைய முக்கியச் செய்தியாக இருந்தது. மாணவர்கள் மத்தியில் விஜய் ஆற்றிய உரை தவிர, மாணவ மாணவிகள் சிலரும் தங்களது கருத்துக்களை மேடையில் பகிர்ந்துகொண்டனர், அவற்றில் சிலவற்றையும், சில நெகிழ்ச்சியான தருணங்களையும் இந்தக் காணொளியில் பார்க்கலாம்...

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.