Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டையர்களை பிரித்து தனித்தனியே வளர்த்தாலும் ஒரே குணாதிசயங்கள் இருக்குமா? ஆய்வில் காத்திருந்த ஆச்சர்யம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரட்டையர்களை பிரித்த ஆராய்ச்சியாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மெலிசா ஹோகன்பூம்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 18 ஜூன் 2023, 05:11 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவை சேர்ந்த கேத்தி செக்லருக்கு அப்போது 16 வயது. அன்றைய தினம், அவரது தோழி சொன்ன ஒரு விஷயம் தன் வாழ்வை எப்படி புரட்டிப்போட்டுவிட்டது என்பதை கேத்தி நினைவு கூர்ந்தார். அதுபற்றிப் பேசும்போது அவரது குரல் லேசாக தழுதழுத்தது.

தனக்குத் தெரிந்த லோரி பிரிட்ஸ்ல் என்ற பெண்ணின் உருவத் தோற்றம் தனது உருவத்தை ஒத்திருப்பதாக கேத்தியிடம் அவரது தோழி ஒருத்தி கூறியுள்ளார். உடனே 'அவர் தத்தெடுக்கப்பட்டவரா?' என்று தோழியிடம் கேட்ட கேத்தி, தன்னைப் போன்றே அவரும் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை அறிந்தார்.

கூடவே லோரியின் பிறந்த நாளை தெரிந்து கொண்ட கேத்தி, அவரது பிறந்த நாளும், தன்னுடைய பிறந்த தினமும் ஒன்றாக இருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

உடனே சிறுமிகள் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர். அப்போது அவர்கள் இரட்டை சகோதரிகள் என்பதை உணர்ந்தனர். செக்லர் தனது இரட்டை சகோதரியை முதன்முறையாகச் சந்தித்தபோது கண்ணீர் சிந்தியதை நினைவுகூர்ந்தார்.

   
மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,BBC/KATHY SECKLER

இந்த வியக்கத்தக்க சந்திப்பில், “அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்ததைக் கண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் ஆரத் தழுவிக் கொண்டோம்,” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் செக்லர்.

“தத்தெடுக்கப்பட்ட குழந்தையாக இருந்ததால், நான் எப்போதும் வித்தியாசமாகவும், தனிமையாகவும் உணர்ந்து வந்துள்ளேன். எனக்கொரு சகோதரி, தோழி இருக்கிறாள் என்பதை அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் அவர்.

இரட்டை சகோதரிகளின் ஒரே மாதிரியான இயல்புகள்

செக்லர், லோரி இருவரும் புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். நடனம் மற்றும் ஓவியக் கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். இசையிலும் அவர்கள் இருவருக்கும் விருப்பம் இருந்தது.

செக்லரை நேரில் கண்டபோது அது கனவா அல்லது நிஜமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதாக கூறிய லோரி, “செக்லரை கண்டபோது, கண்ணாடியில் என்னை நானே பார்த்தது போலவே உணர்ந்தேன்,” என்று வியப்புடன் கூறினார்.

சிறுமிகள் இருவரும் சுமார் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில்தான் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பொதுவான குடும்ப நண்பர்களும் இருந்தனர்.

சிறு வயதில் தாங்கள் இரட்டையர்கள் என்பதை அறியாமல் வளர்ந்திருந்தாலும், அவர்களின் பெற்றோருக்கு அந்த இரட்டையர்களைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தது. ஆனால் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படி அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.

மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,BBC/KATHY SECKLER

லூயிஸ் வைஸ் சர்வீசஸ் (Louise Wise Services) நிறுவனம்

செக்லரும், லோரியும் சர்ச்சைக்குரிய ஆய்வின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளனர் என்பது சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. 1960களில் லூயிஸ் வைஸ் சர்வீசஸ் எனும் நிறுவனம், நியூயார்க்கில் மிகவும் பிரபலமான தத்தெடுப்பு நிறுவனமாக விளங்கியது.

அந்தக் காலகட்டத்தில் பிரபல மனநல மருத்துவராக இருந்த டாக்டர் பீட்டர் பி.நியூபவர், நியூயார்க்கின் குழந்தை மேம்பாட்டு மையத்தின் யூத பாதுகாவலர் வாரியத்தின் இயக்குநராகவும் இருந்தார். ஒன்றாகப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள், தனித்தனியாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு சூழல்களில் வளரும்போது அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் அடையாளங்கள் எப்படி வரையறுக்கப்படுகின்றன என்பதை ஆராய்வதற்காக, “இரட்டையர்களின் இயற்கை மற்றும் வளர்ப்பு” எனும் ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் 10 இரட்டையர்கள் மற்றும் ஒன்றாகப் பிறந்த மூன்று குழந்தைகள் (Triplets), டாக்டர் வயோலா பெர்னார்ட் வகுத்த கொள்கையின் கீழ் வேண்டுமென்றே பிரிக்கப்பட்டு, லூயிஸ் வைஸ் சர்வீசஸ் மூலம் தத்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்டனர்.

இந்த தத்தெடுப்பின் முக்கிய நிபந்தனையாக, இரட்டைக் குழந்தைகள் வளரும் வீடுகளுக்கு வருடத்திற்கு நான்கு முறை நேரில் சென்றுவர ஆய்வுக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு அவர்கள் இரட்டையர்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோன்று அவர்களைத் தத்தெடுத்த பெற்றோர்களுக்கும் முக்கியமான இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, ஆய்வின்போது, ஆராய்ச்சிக் குழுவினருக்குத் தேவைப்படும் விதத்தில் குழந்தைகளிடம் பரிசோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த ஆய்வுப் பணிகள் படமாக்கப்படும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது.

மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் குழுவுடன் இணைந்து, லூயிஸ் வைஸ் சர்வீசஸ் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, 1960 மற்றும் 1969க்கு இடையே பிரிக்கப்பட்ட ஓர் இரட்டையர் ஜோடி தான் செக்லர் மற்றும் லோரி.

“நாங்கள் சகோதரிகளாக ஒன்றாக வளரும் வாய்ப்பை இழந்துவிட்டோம். இந்த ஏமாற்றம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர்கள் செய்தது (லூயிஸ் வைஸ் சர்வீசஸ்) மிகவும் அதிர்ச்சியூட்டும் செயல்,” என்று பிபிசி ஆவணப்பட பேட்டியில் வருத்தத்துடன் கூறியிருந்தார் செக்லர்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

“கடந்த 1960களில் இருந்து லூயிஸ் வைஸ் சர்வீசஸ் நிறுவனத்தால் தத்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தாங்கள் இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று நினைப்பதற்கு உரிமை உள்ளது,” என்கிறார் மரபியல் நிபுணரும், 'Deliberately Divided' என்ற நூலின் ஆசிரியருமான நான்சி செகல்.

நியூயார்க்கில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் இரட்டைக் குழந்தைகள் குறித்த ஆய்வு பற்றியும், அதில் யாரெல்லாம் ஈடுபட்டனர் என்பது குறித்தும் ஆராயும் பணியில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டுள்ளார் செகல்.

கடந்த 1980இல் மூன்று இளைஞர்களுக்கு அவர்களின் 19வது வயதில், தாங்கள் ஒன்றாகப் பிறந்தவர்கள் என்ற ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த தகவல் தற்செயலாகத் தெரிய வந்தது. அப்போதுதான் ஆராய்ச்சிகளுக்காக சில இரட்டை குழந்தைகள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் வளர்க்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,BBC/KATHY SECKLER

இரட்டையர்களை பிரித்ததை நியாயப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்

மரபியல் மற்றும் நாம் வாழும் சூழலுக்கு இடையே உள்ள சிக்கலான தொடர்பு பற்றிய ஒரு தனித்துவமான புரிதலை இரட்டையர்கள் அளிக்கின்றனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வெவ்வேறு குடும்பங்களில் பிரிந்து வளரும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் தங்களின் மரபணுக்களை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர்; அவர்களின் சூழலை அல்ல என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கைக்கும், வளர்ப்புக்கும் இடையேயான தொடர்பு மிகவும் சிக்கலானதாக கண்டறியப்பட்டாலும், புத்திசாலித்தனம், உயரம், உடல் எடை போன்ற இரட்டையர்களிடம் காணப்படும் எந்தவொரு பொதுவான தன்மைகளும் முக்கியமான மரபணு தாக்கங்களைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஆனால், லூயிஸ் வைஸ் சர்வீசஸ் தத்தெடுப்பு நிறுவனத்தின் மனநல ஆலோசகரான வயோலா பெர்னார்ட், இரட்டைக் குழந்தைகளைப் பிரித்த தனது குழுவின் செயலை நியாயப்படுத்தினார். இரட்டை குழந்தைகள் தங்களது பெற்றோரின் பாசத்தை பெறுவதற்காக ஒரே வீட்டில் போட்டி போட்டு கொண்டு வளர்வதை விட, அவர்கள் தனித்தனியாக வளர்வது, அவர்களின் சொந்த அடையாளத்தை வளர்த்துக் கொள்ள உதவும் என்று பெர்னார்ட் கூறினார்.

 

பெற்றோரிடம் மறைக்கப்பட்ட உண்மை

ஆனால், “இதுபோன்ற குழந்தை வளர்ப்பு முறை எதுவும் இல்லை ”எனக் கூறும் செகல், ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இரட்டை குழந்தைகள் பிரிக்கப்பட்டதில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்.

குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோரிடம், அவர்கள் இரட்டையர்கள் அல்லது ஒரே நேரத்தில் மூன்று பேரில் ஒருவராக பிறந்தவர்கள் என்ற உண்மை தெரிவிக்கப்படாமல் இருந்தது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார் அவர். குழந்தைகள் வளர்ச்சி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக மட்டுமே அவர்களின் பெற்றோர் இருந்தனர். இந்த ஆய்வின் நடைமுறைகளை அவர்கள் ஏற்காமல் இருந்திருந்தாலோ,, ஆராய்ச்சியாளர்கள் தங்களின் வீட்டுக்கு அவ்வப்போது வர வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தாலோ குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கப்படாமல் போயிருக்கலாம்” என்கிறார் செகல்.

புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமை தொடர்பான பல்வேறு சோதனைகளுக்கு இரட்டையர்கள் உட்படுத்தப்பட்டனர். அந்த சோதனைகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் தனது வீட்டுக்கு வந்தபோது தமக்கு நேர்ந்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார் செக்லர். “ எனது தாய் ஓர் மனநல நிபுணர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்பதால், இந்த ஆய்வுகளுக்கு அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அவை இரட்டை குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆய்வு என்ற உண்மையை அவர்கள் சொல்லவில்லை” என்று பரிதாபமாக கூறினார் .

மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,BBC/KATHY SECKLER

தத்தெடுக்கும் பெற்றோருக்கான தகுதிகள்

இந்த ஆய்வில் ஈடுபட்ட தமது அனுபவத்தை பகிர்ந்தார் முதுநிலை பட்டதாரி மாணவரான லாரன்ஸ் பெர்ல்மேன். இரட்டையர்களை நேரில் பார்வையிட்டு, அவர்களைப் பரிசோதித்து அதன் முடிவுகளை ஆவணப்படுத்துவது தான் அவரது வேலை. “பிரிந்து வளரும் இரட்டையர்கள், உடல் அளவில் மட்டுமின்றி, முழு ஆளுமையிலும் எப்படி ஒத்துப்போக கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை கண்டு வியந்ததாக கூறும் லாரன்ஸ், இவர்களுக்குள் மரபணு ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் வலுவானது என்று தமக்கு புரிந்தது” என்கிறார் அவர் வியப்புடன்.

சூடான அல்லது குளிர்ந்த உணவு வகைகளுடன் சேர்த்து உண்ணப்படும், தக்காளியில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றின் மீது (Ketchup) சொல்லி வைத்தாற்போல் ஓர் இளம் இரட்டை ஜோடியில் இருவருக்கும் ஆர்வம் இருந்ததை இரட்டையர்கள் குறித்த தனது வியப்பிற்கு உதாரணமாக கூறுகிறார் அவர்.

பெற்றோரின் வயது, அவர்களின் கல்வி, சமூகப் பொருளாதார நிலை, மதம் மற்றும் அவர்களின் பிற குழந்தைகள் போன்ற பல முக்கிய காரணிகளின் அடிப்படையில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர் என்கிறார் பெர்ல்மேன்.

சிக்கலை சந்தித்த ஆய்வு

இரட்டையர்களை வைத்து நடத்தப்பட்டு வந்த இந்த ஆய்வு பின்னாளில் சிக்கலை சந்தித்தது. இந்த ஆய்வில் பின்பற்றப்பட்ட நெறிமுறைகள் குறித்து 1970களில் பரவலாக கவலைகள் எழுந்தன. இதுகுறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மருத்துவ நெறிமுறை நிபுணருமான ஆர்தர் கேப்லன் கூறியபோது, “விஞ்ஞான ஆராய்ச்சிகளில் நெறிமுறை மீறல்கள் பொதுவாக இருந்த காலகட்டத்தில் இரட்டையர்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது” என்று அவர் கூறினார்.

“இன்னும் சொல்லப்போனால், நெறிமுறைகள் அற்ற ஆராய்ச்சிக்கு இது சிறந்த உதாரணம்” என்றும் கேப்லன் தெரிவித்தார்.

“சம்பந்தப்பட்டவர்களின் திருமண பந்தம் சீர்குலைவதுடன், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே மனஸ்தாபம் போன்ற எதிர்மறை விளைவுகளை இந்த விபரீத ஆராய்ச்சி ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்த அவர், இது அடிப்படை உரிமை மீறல்” எனவும் சாடினார்.

அறிவியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி அடிப்படையில் குறைபாடுடையது என்கிறார் பெர்ல்மேன். குழந்தைகளைப் பற்றி அவர்கள் சேகரித்த தரவுகள் குழப்பம் நிறைந்தவை என்றும், ஆய்வுகள் சரியாக ஒழுங்கு படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

அத்துடன், இரட்டையர்கள் குறித்த ஆய்வு தொடர்பாக நியூபவர் மற்றும் அவரது குழுவினரால் விஞ்ஞானபூர்வமாக எந்த ஆவணங்களும் வெளியிடப்படவில்லை. “இந்த ஆய்வை அறிவியல் கண்ணோட்டத்தில் சரியாக கையாள்வதற்கான புரிதல் உண்மையில் அவர்களுக்கு இல்லை. இதன் விளைவாக அவர்கள் வழக்குகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்" என்கிறார் பெர்ல்மேன்.

மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இரட்டையர்கள்

அத்துடன் இந்த ஆய்வு சகோதர இரட்டையர்கள் (Fraternal Twins) குறித்து கருத்தில் கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தத்தெடுப்பு நிறுவனத்தால் இந்த வகை இரட்டையர்களும் வெவ்வேறு குடும்பங்களில் வளர்க்கப்பட்டனர்.

இந்த வகை இரட்டையர்களில் ஒருவரான அலிசன் காண்டர், இரட்டையர்கள் குறித்த ஆவணப்படங்கள் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, தனது சகோதர இரட்டையரான மைக்கேல் மோர்ட்காஃப்பை சமீபத்தில் கண்டறிந்தார். அத்துடன் மரபியல் பரிசோதனையின் மூலம் அவர் தன்னுடன் பிறந்தவர்தான் என்பதை காண்டர் உறுதிப்படுத்தி கொண்டார்.

ஆனால், “அந்த சோதனையின் முடிவுகள் உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் எழுந்த அந்த கணத்தில் என் உடல் நடுங்கியது” என்று தனது உடன்பிறப்பை உறுதி செய்ய முயன்ற அந்த தருணத்தை உணர்ச்சி பொங்க விவரித்தார் காண்டர்.

அதன்பின், “நாங்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு அதிகமாக அறிந்து கொண்டோமோ அந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகுவதிலும், உணர்வுபூர்வமாகவும் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதை உணர்ந்தோம்” என்று கூறினார் அவர்.

ஆனால், கணைய புற்றுநோய்க்கு ஆளாகியிருந்த மோர்ட்காஃப் சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார்.

அதாவது சகோதர இரட்டையர்களான கான்டரும், மோர்ட்காஃப்பும் தங்களது வாழ்நாளில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஒன்றாக வாழ்ந்திருந்தனர்.

“சகோதர இரட்டையர்கள் பற்றி இந்த ஆய்வு கருத்தில் கொண்டதாக தெரியாதபோது, லூயிஸ் வைஸ் நிறுவனம் எங்களை பிரித்து வைத்து எங்கள் வாழ்க்கையில் விளையாடியது ஏன்?” என்று ஆதங்கப்படுகிறார் காண்டர்.

காண்டர் சொல்வதைப் போல், இந்த ஆய்வு எல்லாம் சும்மாவா? இதுதொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகள் என்னவாகின? இவை பற்றியெல்லாம் எல்லாம் அறியாத பிற இரட்டையர்கள் இந்த ஆய்வை இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது ஏன்?

91 வயதிலும் அசராத ஆய்வாளர்

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காணும் நோக்கில், பெர்ல்மேனும், செகலும் 2004இல் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது, நியூயார்க் நகரில் மேடிசன் குடியிருப்பில் வசித்து வந்த 91 வயதான நியூபவரை சந்திக்க இருவரும் ஒன்றாக சென்றனர்.

“அப்போதும்கூட அறிவியல்பூர்வமற்ற இந்த ஆராய்ச்சிக்காக நியூபவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. இது வயோலா பெர்னார்டின் யோசனை எனக் கூறி, தனது குழுவின் ஆராய்ச்சியை அவர் நியாயப்படுத்தினார்.

இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், அதற்காக தார்மீகரீதியான பொறுப்பை அவர் ஏற்பார் என்றும் எங்களுக்கு அப்போது தோன்றவில்லை. ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் சில குடும்பங்களை அவர்கள் சுரண்டி வந்துள்ளனர்,” என்பது மட்டும் புரிந்தது என்று கூறினார் பெர்ல்மேன்.

மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூடப்பட்ட லூயிஸ் வைஸ் சர்வீசஸ்

ஒரு காலத்தில் அமெரிக்காவில் பிரபலமான லூயிஸ் வைஸ் சர்வீசஸ் தத்தெடுப்பு நிறுவனம் 2004இல் மூடப்பட்டது. அதன் தத்தெடுப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அனைத்து ஆவணங்களும் பதிவுகளும் ஸ்பென்ஸ் -சாபின் என்ற மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் ஆய்வு தொடர்பான அனைத்து கட்டுப்பாடும் யூத குடும்பம் மற்றும் குழந்தைகள் சேவை வாரியத்தின் வசம் சென்றது. நியூபவரின் ஆராய்ச்சிக்கான எந்தவொரு பொறுப்பையும் இந்த வாரியம் கடுமையாக மறுத்தது.

“ரகசிய சட்டங்கள் மற்றும் இந்த ஆய்வுப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள தகவல்களின் தனிப்பட்ட தன்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இதில் தாங்கள் குறைவான அணுகலை கொண்டுள்ளோம்” என்று வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

செக்லர் மற்றும் லோரி இரட்டையர்களின் அனுமதியுடன் அவர்களது சிறு வயதில் படமாக்கப்பட்ட காட்சிகளை பெற மெலிசா ஹோகன்பூம் முயன்றார். ஆனால், அந்த படங்களை இரட்டையர்கள் தாங்களே கோர வேண்டும் என்றும், அவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் வேறு யாருக்கும் பகிர படக் கூடாது எனவும் வாரியம் நிபந்தனை விதித்தது.

தங்களின் கடந்த காலத்தை நினைவூட்டும் இந்த ஆவணங்களால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அந்த முயற்சியைத் தொடர விரும்பவில்லை என்று இரட்டை சகோதரிகள் தெரிவித்தனர்.

சீல் செய்யப்பட்ட தரவுகள்

தற்போதைய நிலையில், இரட்டைக் குழந்தைகள் தொடர்பான ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் சீலிடப்பட்டு, யேல் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சீலை 2065ஆம் ஆண்டு வரை யாரும் திறக்க முடியாதபடியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரட்டைக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களைப் பற்றி அனைத்து தகவல்களும் யேல் பல்கலைக்கழகத்தில் ரகசியமாக வைத்துப் பாதுகாக்கும் இந்த ஏற்பாட்டை 1990இல் நியூபவர் செய்து வைத்திருந்தார்.

ஆராய்ச்சிகள் தொடர்பான பதிவுகளை ஏன் சீல் வைக்க வேண்டும்? ஆராய்ச்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை மறைப்பதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் ஆர்தர் கேப்லன்.

 

தற்கொலை, மன அழுத்தம்

இரட்டையர்களின் அடையாளங்களில் மரபணுக்கள் மற்றும் சுற்றுப்புறத்தின் பங்கு என்ன என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றிருக்கலாம். ஆனால் இதில் ஈடுபடுத்தப்பட்ட இரட்டையர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் பல்வேறு எதிர்மறை தாக்கங்களை இந்த ஆய்வு ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிய முடிகிறது.

இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்றாக பிறந்த மூன்று சகோதரர்கள், தாங்கள் யார் என்பதையும், தங்களுக்குள்ளான உறவுமுறை என்ன என்பதையும் அறிய நேர்ந்தபோது அவர்கள் மனநலப் பிரச்னைகளுக்கு ஆளானார்கள். அவர்களில் ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டார். அவர்களைப் பெற்றெடுத்த தாய்க்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதேபோன்று ஆய்வுக்காக பிரிக்கப்பட்ட மற்றோர் இளம் இரட்டையர் ஜோடியை சேர்ந்த ஒரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. அவர்களை ஈன்ற தாயும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

அத்துடன் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பலர் கோபம், சோகம் மற்றும் மனவருத்தத்தை அனுபவித்திருக்கிறார்கள். இது வளர்ப்பு பெற்றோருடனான அவர்களது உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரட்டையர் ஜோடிகளுக்கு இடையிலான நல்லுறவையும் பாதிக்கும்படி இந்த ஆய்வுகள் இருந்தன.

“நாங்கள் இரட்டையர்கள்தான். ஆனால் சகோதரிகள் இல்லை. காரணம் நாங்கள் ஒன்றாக வளரவில்லை. நாங்கள் ஒன்றாக வளர்ந்திருக்க வேண்டிய காலத்திற்கு இனி எங்களால் திரும்பிச் செல்ல இயலாது. இதை எண்ணும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது,” என்கிறார் செக்லர்.

https://www.bbc.com/tamil/articles/cxed7yl8jglo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.