Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை உயிரோடு புதைத்து கொன்றுவிட்டு நாடகமாடிய சாமியார் - துப்பு துலக்க உதவிய அந்த 'பழைய' யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,TWITTER/PRIMEVIDEO

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜெய்தீப் வசந்த்
  • பதவி,பிபிசி குஜராத்திக்காக
  • 25 நிமிடங்களுக்கு முன்னர்

ஷக்ரே கலீலி… பெங்களூரில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த பெண். இவரின் தாத்தா சர் மிர்சா இஸ்மாயில், 1926- 41 வரை மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர்.

அவர் தனது பேத்திக்கு, இந்திய அயலக பணியில் (ஐஎஃப்எஸ்) உயரதிகாரியாக பணியாற்றி வந்த அக்பர் கலீலியை மணம் செய்து வைத்தார்.

அக்பர் -ஷக்ரே தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், தனக்கு ஓர் மகன் பிறக்க வேண்டும் என்ற ஆவல் ஷக்ரே மனத்தில் மேலோங்கி இருந்தது.

சுவாமியின் வருகை

அந்த நேரத்தில் தான் முரளி மனோகர் மிஸ்ரா என்ற நபர் ஷக்ரேவின் வாழ்வில் வந்தார்.

 

அந்த நபர், தன் இளம் வயதிலேயே மரணத்தை வென்றவர் என்ற பெயர் எடுத்ததால், சுவாமி ஷ்ரத்தானந்த் என்று அழைக்கப்பட்டார். இவரது வருகை, அக்பர் - ஷக்ரேவின் மணவாழ்க்கை முறிவுக்கு காரணமாக அமைந்தது. இருவரும் விவகாரத்து பெற்றனர்.

ஆனால் சுவாமி ஷ்ரத்தானந்த் உடனான ஷக்ரேவின் காதல் உறவு தொடர்வதில் மதம் ஒரு தடையாக இருந்தது. அத்துடன் அவர் நில, புலங்களுடன் மிகவும் வசதியாக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தார். ஆனால் ஷ்ரத்தானந்த் செல்வங்களின் மீது பேராசை கொண்டவர் என்று சிலர் கருதினர். அந்த பேராசையே ஷக்ரேவின் வாழ்க்கை துரதிருஷ்டமாக முடிவதற்கு காரணமாக அமைந்தது.

ஷக்ரேவின் வாழ்வில் நேர்ந்த கொடூரமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, ஓடிடி தளமான அமேசான் பிரைம் “Dancing on the Grave” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் வெளியிடப்படுவதற்கு தடைவிதிக்க கோரி, ஷ்ரத்தானந்த் நீதிமன்ற கதவுகளை தட்டினார். மேலும் அவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அன்பைத் தேடி

சுவாமி ஷ்ரத்தானந்த் என்று அழைக்கப்படும் முரளி மனோகர் மிஸ்ரா, ஷக்ரே கலீலியை பிரச்சனைகள் சூழ்திருந்தபோது அவரது வாழ்வில் நுழைந்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையேயான குடும்ப வாழ்க்கையில் எல்லாம் சரியாக தான் போய் கொண்டிருந்ததாக தெரிந்தது. ஆனால் போக போக எல்லாமே மாறியது.

ஷக்ரேவின் மகளான ஷபாவின் கூற்றுப்படி, அவரது குடும்பம், சுவாமி ஷ்ரத்தானந்தை 1983 இல் முதன்முதலில் சந்தித்தது. ராம்பூர் நவாப் குடும்பத்தினர் டெல்லியில் வசித்து வந்த பெல்ஹாம் இல்லத்தில் தான் இந்த சந்திப்பு முதன்முதலில் நிகழ்ந்தது. அப்போது அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ஷக்ரே குடும்பத்தினர், ஷ்ரத்தானந்துக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பினர்.

அப்போது நில உச்சவரம்பு சட்டம் அமலில் இருந்ததால், ஷக்ரேவுக்கு சொந்தமாக இருந்த அசையா சொத்துகளில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அந்தச் சட்டத்தின் காரணமாக, ராம்பூர் நவாப் குடும்பத்தினரும் சட்ட சிக்கலை சந்தித்தனர். அந்த வழக்கில் அவர்களுக்கு ஷ்ரத்தானந்த் தம்மால் ஆன உதவிகளை செய்தார். அதன் மூலம் இரண்டு குடும்பத்தினர் மத்தியிலும் அவர் நற்பெயரை சம்பாதித்தார். அதன் பயனாக, பெங்களூரில் இருந்த ஷக்ரேவின் குடும்பத்துடன் வந்திருக்கும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,TWITTER/PRIMEVIDEO

அந்த தருணத்தில் ஷபாவின் தந்தையும், ஷக்ரேவின் கணவருமான அக்பர் இரானில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஷக்ரேவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த ஷ்ரத்தானந்த் ஒரு கட்டத்தில் ஷக்ரேவின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில் அங்கேயே தங்கினார். ஷக்ரேவின் மகளான ஷபா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சுவாமியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டனர்.

இரான் - இராக் போரும், திசை திரும்பிய ஷக்ரேவின் வாழ்க்கையும்

இதனிடையே, 1979 இல் இரானில் அரசியல் நிலவரம் மோசமானது. ஷாவின் தலைமையிலான ஆட்சி 1980 இல் தூக்கியெறியப்பட்டது. அத்துடன் இரான் -இராக் போரும் துவங்கியது.

அந்த நேரத்தில், இரானுக்கான இந்தியாவின் தூதராக அக்பர் கலீலியை நியமிக்க அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி முடிவெடுத்தார். அக்பர் ஷியா பிரிவு முஸ்லிமாக இருந்தது இந்திராவின் அந்த முடிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

வெளிநாடுகளில் பணிபுரியும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள், தாங்கள் வேலை செய்யும் நாட்டிற்கு தங்களது குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால், 1980களில் இரானில் போர் நடைபெற்று வந்ததால், அப்போது தமது குடும்பத்தினரை இரானுக்கு அழைத்து வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேரிலாம் என்று கருதிய அக்பர், அவர்கள் பெங்களூரிலேயே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்.

அதேசமயம் போரின் காரணமாக, தமது பணியில் அவர் தீவிரமாக இருக்க வேண்டியதானது. அதன் காரணமாக பெங்களூரி்ல் இருந்த தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் ஓய்வாக பேசக்கூட அவருக்கு நேரம் இல்லாமல் போனது. இதுவே ஷக்ரேவுக்கும் - ஷ்ரத்தானந்த் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

ஷ்ரத்தானந்த் -ஷக்ரே திருமணம்

இந்த விஷயம் அக்பருக்கு தெரிய வர, அவருக்கும், ஷக்ரேவுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக 1985 அக்டோபரில் அக்பர் - ஷக்ரே இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அத்துடன் திருமணத்தின்போது அக்பர் குடும்பத்தினர் தமக்கு சீதனமாக அளித்த நகைகள் அனைத்தையும் ஷக்ரே அப்போது திருப்பி அளித்தார்.

இந்த முடிவு அவரின் மகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள், அடுத்த ஆறு மாதத்தில் அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. 1986 ஏப்ரல் மாதம், ஷ்ரத்தானந்தை ஷக்ரே திருமணம் செய்து கொண்டார். அப்போது, திறமைமிக்க ஐஎஃப்எஸ் அதிகாரியாக இருந்த அக்பரின் ஆளுமையை, சராசரி மனிதனாக இருந்த ஷ்ரத்தானந்தின் ஆளுமையோடு அவர்களின் குடும்பத்தினர் சிலர் ஒப்பிட்டு பேசினர்.

ஷக்ரேவுக்கு பிறந்த ஆண் குழந்தை

ஷக்ரே தன்னை திருமணம் செய்து கொள்வதாக 1986 இல் கூறியதற்கு முன், தங்களுக்குள் தகாத உறவு எதுவும் இருந்ததில்லை என்று கூறிய ஷ்ரத்தானந்த், சிறப்பு திருமண பதிவு சட்டத்தின்கீழ் தங்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், குடும்ப சொத்து பிரச்னையில் உதவுவதுடன், தமது அமானுஷ்ய சக்தியை பயன்படுத்தி ஆண் மகன் பிறக்கவும் செய்வதாக ஷக்ரேவுக்கு அவர் சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

அவரின் வாக்குப்படியே இருவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை நீண்ட காலம் வாழ முடியாமல் போனது. ஷக்ரே- ஷ்ரத்தானந்த் திருமணத்தை ஏற்றுகொள்ள முடியாத அவரது மகள்கள், ஷக்ரேவை விட்டு பிரிந்து வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த அவர்களின் தந்தை அக்பர் அலீலியுடன் இணைந்தனர். அத்துடன் குடும்ப சொத்தில் தங்களுக்கு பங்கு வேண்டும் எனக் கேட்டு, தன் தாய்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். ஷக்ரேவிடம் அன்பு பாராட்டி வந்த மகள் ஷபாவும் மாடலிங் துறையில் பணிதேடி மும்பைக்கு சென்றார். மகள்கள் அனைவரும் தம்மைவிட்டு சென்றதால் ஷக்ரே தனித்து விடப்பட்டார். அந்த தனிமை சூழல் ஷ்ரத்தானந்த் உடனான அவரின் நெருக்கத்தை அதிகரித்தது. ஷக்ரேவின் வாழ்வில் ஷ்ரத்தானந்த் முழு ஆளுமை செலுத்த தொடங்கினார்.

பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,NSTAGRAM/CSSLATHA.OFFICIAL

‘எஸ்’ என்ற பேரில் தொடங்கப்பட்ட நிதி நிறுவனம்

ஷக்ரேவுக்கு சொந்த இடத்தில் ‘எஸ்’ என்ற பெயரில் ஷ்ரத்தானந்த் பெரிய பங்களாவை கட்டினார். அத்துடன் ‘எஸ்’ என்ற பெயரில் நிதி நிறுவனத்தையும்  அவர் தொடங்கினார். ஷ்ரத்தானந்த் -ஷக்ரே இருவரின் பெயரிலும் கூட்டு வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கர் வசதி தொடங்கப்பட்டது. அத்துடன் தமது சொத்துகளை சட்டப்பூர்வமாக உரிமை கோரும் அதிகாரத்தையும் ( பவர் ஆஃப் அட்டர்னி)  ஷ்ரத்தானந்துக்கு அளித்தார் ஷக்ரே.

ஏற்கனவே சிங்கப்பூரில் படித்த தன் மகள் ஷபா, மும்பையில் பணியாற்றி வந்த மாடலிங்  தொழிலில் இருந்து விடுபட்டு லண்டனில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றும் ஷக்ரே விரும்பினார்.   தாயும், மகளும் அவ்வப்போது தொலைபேசியில்  தொடர்பு கொண்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து வந்தனர். இறுதியாக 1991 ஏப்ரல் 19 ஆம் தேதி, இருவரும் தொலைபேசியில் பேசியிருந்தனர். அந்த நிலையில் மே மாதத்திற்கு பிறகு ஷக்ரே திடீரென காணாமல் போனார்.

பெங்களூரு போலீசை திறமையாக சமாளித்த சுவாமி

தன் தாயிடம் இருந்து வந்து கொண்டிருந்த தொலைபேசி அழைப்புகள் திடீரென வராமல் போனதால் ஏமாற்றம் அடைந்த ஷபா, தன் அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அவருடைய அழைப்பை எடுத்த ஷ்ரத்தானந்த், ஷக்ரே குறித்து பதற்றத்துடன் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த ஷபா, உடனே மும்பையில் இருந்து பெங்களூரு விரைந்தார். 

தன் அம்மாவின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் குறித்து ஷ்ரத்தானந்தாவிடம் கேட்டபோது, ஷக்ரே கர்ப்பமாக இருப்பதாகவும்,  நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆனால், அந்த மருத்துவமனையை ஷபா தொடர்பு கொண்டபோது ஷக்ரே அங்கு இல்லை என்பது  உறுதியானது. அதன்பின்,  வருமான வரி தொடர்பான வழக்கு, சொத்து பிரச்னை போன்ற  காரணங்களால் மனம் நொந்த அவர், இவற்றில் இருந்து விடுபடுவதற்காக லண்டன் சென்றுள்ளதாக  ஷ்ரத்தானந்த் கூறினார். இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் மீது ஷபாவுக்கு சந்தேகம் வலுத்தது.

 அந்த நிலையில், மும்பையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து, ஷக்ரேவின் பாஸ்போர்ட் ஷபாவின் கையில் சிக்கியது. அதன் மூலம் தன் தாய் வெளிநாட்டு செல்லவில்லை என்பதை  தெளிவுப்படுத்தி கொண்ட ஷபா, ஷக்ரே காணாமல் போய்விட்டதாக, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் 1991 ஜூலையில் புகார் அளித்தார்.

 அந்த புகாரின் பேரில் போலீசார் ஷ்ரத்தானந்தாவை தொடர் விசாரணைக்கு உட்படுத்தினர்.  அத்துடன் அவரை ரகசியமாக கண்காணிக்கவும் செய்தனர். ஆனால், போலீஸ் விசாரணைக்கு எல்லாம் அசராத சுவாமி,  ஷக்ரே காணாமல் தான் போய்விட்டார் என்று சொன்னதையே திரும்பத் திரும்ப கூறி வந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இப்படியே அவர் போலீசாரை சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை  இழந்த போலீசார் வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் அதை அத்துடன் முடித்து விடலாம் என்று முடிவெடுத்தனர். 

ஆனால் போலீசாரின் இந்த முடிவை விரும்பாத ஷபா, காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து தாயை காணாமல் தவிக்கும் தமது வருத்தத்தை தெரிவித்தார். அதையடுத்து அவ்வழக்கு பெங்களூரில் இருந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஷக்ரே கொலை வழக்கின் தீர்ப்பில் (பக்கம் 3,4) இந்த விவரங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.

பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,TWITTER/INDIATODAY

மத்திய குற்றப்பிரிவு போலீசாரையும் சமாளித்த சுவாமி

ஷக்ரே திவான் பராம்பரியத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் காணாமல் போன சம்பவம், பெங்களூரில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரபரப்பு செய்தியானது.

அந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்ட வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியான அஸ்மதுல்லா, ஷ்ரத்தானந்த் மற்றும் ஷக்ரே வசித்துவந்த பங்களாவில் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளை செய்து வந்த ராஜு, அவரின் மனைவி ஜோசபின் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.

“நாங்கள் பங்களாவுக்கு வேலைக்கு சென்றபோது அங்கு முற்றத்தில் துளசி செடியை நட்டு வைத்து அதை நன்கு பராமரிக்கும்படி ஷ்ரத்தானந்த் கூறினார். அத்துடன் அதை அவர் தினமும் வணங்கியும் வந்தார்.

எங்கள் கிராமத்தில்,  பிராமணர்கள் தங்களது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அவர்களின் நினைவாக வீட்டு முற்றத்தில் துளசி செடியை வளர்த்து அதற்கு தினமும் பால் ஊற்றி வணங்குவார்கள். அந்த வழக்கத்தை ஷ்ரத்தானந்த் பின்பற்றியதால் ஷக்ரே இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது” என்று போலீசார் விசாரணையில் ஜோசபின் கூறினார்.

அத்துடன்,போலீஸ் விசாரணையின்போது ஜோசபின் கூறிய மற்றொரு தகவல் ஷக்ரேவின் மகள் ஷபா உள்ளிட்டோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

“ பங்களாவின் முற்றத்தில் தமது நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவதை ஷ்ரத்தானந்த் வழக்கமாக வைத்திருந்தார். அந்த பார்ட்டியில்  பங்கேற்பவர்கள் ஆனந்த கூத்தாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பங்களாவின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த துளசி மாடத்திற்கு அடியில் ஷக்ரே புதைக்கப்பட்டிருக்கலாம்”என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஜோசபின்  போலீசாரிடம் கூறினார். 

வழக்கில் முக்கிய திருப்பமாக கருதப்பட்ட ஜோசபின் இந்த தகவல், ‘டான்ஸிங் ஆன் தி கிரேவ்’ என்ற தலைப்பில் பரபரப்பு செய்தியானது.

பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,TWITTER/PRIMEVIDEO

ஷக்ரேவை அடக்கம் செய்த ஷ்ரத்தானந்த் வாங்கிய பெட்டி

ஆனால், ஷக்ரே காணாமல் போனதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று அவர்கள் திணறிக் கொண்டிருந்தபோது, தலைமை காவலரான மகாதேவ், ஒரு யோசனையை விசாரணை அதிகாரியிடம் கூறினார். அது அதர பழசான யோசனையாக இருந்தாலும் அதை போலீசார் செயல்படுத்தினர்.

அதன்படி, ஷக்ரேவின் வீட்டில்  வேலை செய்துவந்த  ராஜுவை, தலைமை காவலர் மாகதேவ், பெங்களூரு பிரிகேட் சாலையில் உள்ள பிரபல மது கூடத்துக்கு அழைத்து சென்றார்.

 அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய பின், அவரிடம் ஷக்ரே காணாமல் போனது குறித்து மகாதேவ் விசாரிக்க தொடங்கினார்.

“ஷக்ரேவின் பங்களாவுக்கு பின்புறம் ஓர் படுக்கை அறை உள்ளது. அதற்கு முன்புறம்  நிலத்தில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பும் வசதி உள்ளது” என்று ராஜு கூறினார்.

அத்துடன், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் நகர்த்த வசதியாக, சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெரிய பெட்டி ஒன்று சிவாஜி நகரில் இருந்து பங்களாவுக்கு கொண்டு வரப்பட்டது” என்று போலீசிடம் அவர் கூறினார்.

“வழக்கமாக ஷக்ரே மேடம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் எழுந்து விடுவார். ஆனால் குறிப்பிட்ட அந்த  நாளில் அவர் படுக்கையைவிட்டு எழவில்லை. அத்துடன், தமது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,  அவரை பார்ப்பதற்காக அவர் ஒரு முறை ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தேன்” என்று ராஜு போலீசிடம் தெரிவித்தார். 

வீட்டு  வேலைக்காரரிடம் இருந்து வழக்கிற்கு தேவையான பல்வேறு தகவல்களை எப்படி வாங்கினோம் என்பது குறித்து, அப்போது  பிபிசி ஹிந்தி செய்தியாளராக பெங்களூரில் பணிபுரிந்த இம்ரான் குரேஷியிடம் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷ்ரத்தானந்த்

இப்படி, ஷக்ரேவை ஷ்ரத்தானந்த் ஏதேனும் செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும்,  அவர் காணாமல் போனது குறித்த புதிருக்கான விடையை ஷ்ரத்தானந்த் இடம்  இருந்து பெறுவது போலீசாருக்கு சவாலாகவே இருந்தது. ஏனெனில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையையும் அவர் அமைதியாக கையாண்டு வந்தார். ஆனால், ஒரு நாள் நள்ளிரவு ஷ்ரத்தானந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு சற்று அதிர்ந்த அவர், இனிமேல் போலீசிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்தாரோ என்னவோ… தான் செய்த குற்றத்தை அப்போது அவர் ஒப்புக் கொண்டார்.

விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, ஷக்ரே, ஷ்ரதானந்தை ஒரு வேலைக்காரனை போல் நடத்தி வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷ்ரத்தானந்த்,  1991 மே மாதம் 28 ஆம் தேதி ஷக்ரேவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

உயிரோடு புதைக்கப்பட்ட ஷக்ரே

ஷ்ரத்தானந்த் தமது மனைவிக்கு தினமும் தேநீர் தயாரித்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் ஷக்ரேவின் கதையை முடிப்பதற்காக குறிக்கப்பட்ட அந்த நாளில், அவருக்கு தரப்பட்ட தேநீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்த ஷ்ரத்தானந்த், படுக்கையில் மயங்கி கிடந்த ஷக்ரேவை, அப்படியே தான் வாங்கி வைத்திருந்த பெரிய பெட்டியில் வைத்து மூடினார்.

 பின்னர் படுக்கை அறையின் பின்புற சுவர் உடைக்கப்பட்டு,  அதன் அருகே ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில், பெட்டியை வைத்து மூடி, அதன்மேல் டைல்ஸ் போடப்பட்டது. இவ்வாறாக, தமது மனைவியான ஷக்ரேவை ஷ்ரத்தானந்த் உயிரோடு புதைத்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

உடனே சம்பவ இடத்துக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர் தமது மனைவி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தை தோண்டிய போலீசார் அங்கு புதைக்கப்பட்டிருந்த பெட்டியை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது, திவான் பரம்பரையைச் சேர்ந்த செல்வச் சீமாட்டியாக வாழ்ந்துவந்த ஷக்ரே எலும்புக்கூடாக கிடந்ததை கண்டு அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷக்ரே காணாமல் போனதாக, அவளின் மகள் ஷபா  1991 இல் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை விசாரித்த போலீசார், அவர் உயிரோடு புதைக்கப்பட்டு கொல்லப்பட்டதை 1994 இல் உறுதி செய்தனர். அதற்கான தடயவியல் ஆதாரங்களும் சேகரிப்பட்டன. பங்களாவில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் ஷக்ரே உடையது தான் என்பது டிஎன்ஏ சோதனை மூலமும் உறுதி செய்யப்பட்டது.

கதறி அழுத ஷ்ரத்தானந்த்

“ஷக்ரே என்னை ராஜ் என்று தான் செல்லமாக அழைப்பாள்.  அவள் மிகவும் நல்லவள். நாங்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தோம். அவள் உயிரோடு இருந்திருந்தால் இன்றும் நாங்கள் ஒன்றாக தான் இருந்திருப்போம். தனது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்  கிடைக்காத மகிழ்ச்சி என்னுடன் வாழ்ந்தபோது கிடைத்ததாக அவள் கூறுவாள். இஸ்லாமிய முறைப்படி, அவளின் உடல் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இங்கு புதைக்கப்பட்டது.நான் தவறு செய்துவிட்டேன். என்னையும் இங்கேயே புதைத்து விடுங்கள்”  என்று ஷக்ரேவின்  உடலை தோண்டி எடுத்தபோது,  ஷ்ரத்தானந்த் உணர்ச்சி பொங்க போலீசாரிடம் கதறி அழுதார்.

பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆயுள் தண்டனை

1994  மார்ச் 30 ஆம் தேதி, பெங்களூரில், எண் 81, ரிச்மண்ட் சாலையில் இருந்த ஷக்ரேவின் வீட்டு வளாகத்தில் இருந்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதையடுத்து ஷ்ரத்தானந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கொடூர கொலை புரிந்த குற்றத்துக்காக ஷ்ரத்தானந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை  கர்நாடகா உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஷ்ரத்தானந்த்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால், அதேசமயம்  சாகும்வரை அவர் சிறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பில்  தெரிவித்திருந்தது. அதையடுத்து அவர், தம்மை விடுதலை செய்ய கோரி கருணை மனு செய்துள்ளார். 

இதனிடையே, சிறைவாசம் மரண தண்டனையை விட மோசமானது என்று  கூறி வந்த ஷ்ரத்தானந்த், தான் சிறையில் ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவித்து வருவதாகவும்,  கடந்த மூன்று தசாப்தங்களாக சிறையில் தான் விரும்பியது சாப்பிடவோ, நிம்மதியாக தூங்கவோ முடியவில்லை என்று வருந்தி வந்தார்.

தான் வெளியே செல்வதற்கு ஒரு நாள் கூட பரோல் கிடைக்கவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றும் ஷ்ரத்தானந்த் ஆதங்கபட்டுள்ளார்.

 

இந்த நிலையில், அவர் பெங்களூரு சிறையில் இருந்து  மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு தான் தமது சுயவிருப்பத்தின் பேரில் அவர், ‘Dancing on the Grave’ ஆவணப்படத்திற்கு விரிவான நேர்காணல் அளித்தார்.

சுவாமி ஷ்ரத்தானந்த் எனும் முரளி மனோகர் மிஸ்ரா, மத்தியப்  பிரதேச மாநிலம் சாகரில் பிறந்தார். சிறுவயதில்  அவருக்கு தீவிரமான நோய் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முடிந்தவரை முயன்றாலும், நோயின் தாக்கம் காரணமாக அவர் நீ்ண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியாது என்று கருதப்பட்டது. அப்போது ஆரிய சமாஜத்தை சேர்ந்த சுவாமி ஷ்ரத்தானந்த் என்ற குரு, இந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, தன்னைத் தானே ஷ்ரத்தானந்த் என்று  பெயர் சூட்டி கொள்வான் என்று ஆசி வழங்கினார்.

அவரது வாய்சொல்லின்படி முரளி மனோகர் மிர்ஸா, பெரியவனாக வளர்ந்து ஷ்ரத்தானந்த் என்று பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தீட்சை வழங்கிய குரு யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.

https://www.bbc.com/tamil/articles/c8vylp9pqn6o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.