Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

main-qimg-fd0e71e23c4c8587a71f159068463383

 

தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார்.

இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை!

1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் முதலாவதின் பெயர் 'கடைசிச் சொத்து' என்பதாகும். இது திருகோணமலை/மட்டக்களப்பில் இருந்து மணலாற்றில் வந்து தரையிறங்கிய வாள்வெட்டு காயத்துடனான கைக்குழந்தை கொண்ட தாயொருவர், தன்னிடம் படகோட்டி கேட்ட பணத்தை தரமுடியாதலால் தனது 'கடைசிச் சொத்தான' தாலியை கழட்டி கொடுத்ததை இவர் நேரிலே கண்ட அனுபவத்தை இள பேரரையன்(Lt. Col.) அம்மா எ அன்பு என்னும் கட்டளையாளரின் நேரடி வேண்டுகோளிற்கு இணங்க அதனையும் அதனோடான அன்றைய போரியல் வாழ்வையும் இணைத்து தனது முதற் புத்தகமாக எழுதினார்.

இவர் எழுதிய முதலாவது நூலின் பெயர் 'மணலாறு' என்பதாகும். இது மணலாறு என்னும் ஊர் பற்றிய நூலாகும். அதன் கொழுவி:

மணலாறு - நூலகம்

இவர் ஒரு பொதுமகனாக இருந்தாலும் நேரடியாக சமர்க்களத்திற்குச் சென்றெழுத இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது - புலிகளின் தலைமையால்(இவ்வாறு சென்ற பொதுமகன் இவர் மட்டுமேயென நானறிகிறேன்). அதனால் அந்த சமர்க்கள அனுபவத்தினோடே உண்மையாக நடந்தேறியவற்றை எழுத்துக்களில் வெளிக்கொணந்தவர், புலிகளின் அனுமதியினோடே! சமர்க்களத்தில் நடந்த ஒவ்வொரு விதயத்தையும் எழுதினார், சிங்களம் எப்படி நகர்கின்றது அதற்கு புலிகளின் இகல்-நகர்வுகள்(counter-moves) என்னென்ன என்றெல்லாம் அச்சொட்டாக தனது புத்தகத்தில் குறித்தெழுதினார். இதனால் தணிக்கையின்போது சிக்கல்களைச் சந்தித்தார். ஆனாலும் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு அனுமதி கிடைத்து விழாவிற்காக காத்திருந்த போது தமிழீழ தேசிய பேரழிவான 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நடந்தேறியது. அது மட்டும் நடக்கவில்லையென்றால் இன்று பல புத்தகங்கள் எமக்கு கிடைத்திருக்கும்.

இவர் புலிகளின் குரல் வானொலியில் 'களத்தில் சில நிமிடங்கள்' என்னும் முன்னரங்க நிலைகளில் நிற்கும் போராளிகளை நேரடியாச் சந்தித்து தான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் தலைவரின் எண்ணத்திற்கிணங்க முன்னணி காவலரண்களில் நிற்கும் போராளிகளையும் அவர்களோடு தொடர்புடைய சில விதயங்களையும் அப்படியே நிகழ்படமெடுத்து அதனை ஒரு கவிதையோடு இணைத்து ''காட்சியும் கானமும்'' என்னும் நிகழ்சியினை புலிகளின் குரலில் வழங்கினார். இந்நிகழ்சிகள் 1995 ஆம் ஆண்டு காலத்தில் நடந்ததேறியவையாகும்.

இவருடைய மூத்த மகளும் இளைய பிள்ளையும் போராளிகளாவர். அவர்களில் மூத்த மகள் எழுத்தாளராகவும் கவியரங்குகள் செய்பவராகவும் இருந்தார். மணலாறு விஜயன் அவர்கள் மிக வேகமாக எழுதிச் செல்லும் போது நடுவில் ஏற்படும் சிறு பிழைகளையெல்லாம் இவருடைய மகள் திருத்தி எழுதிக் கொடுப்பார். அதைக் கொண்டுபோய்த்தான் இவர் நிகழ்ச்சித் தொகுப்புகள் செய்வார்.

 


இவர் எழுதிய இன்றுமுள்ள போரிலக்கியங்கள்:

  1. மணலாறு
    • இதுதான் இவர் எழுதிய முதலாவது நூலாகும். இது மணலாற்றுக் கோட்டம் பற்றிய நூலாகும்.
  2. இதயபூமி 1
    • இது தமிழீழ நடைமுறையரசினால் பெயர்சூட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது படை நடவடிக்கையின் வரலாற்றைக் கொண்ட நூலாகும். இந்நடவடிக்கையானது தமிழீழத்தின் இதயபூமி என்று விரித்துரைக்கப்படும் 'மணலாற்றில்' அமைந்திருந்த மண்கிண்டிமலை படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான படை நடவடிக்கையாகும்.
  3. மௌனப் புதைகுழிக்குள்-1
    • இப்புத்தகம் பன்னாட்டளவில் பேசப்படும் ஒரு புத்தகமாகும். இப்புத்தகமானது தென் தமிழீழத்தில் சிங்களப் படைவெறியர்களாலும் அவர்களுக்கு துணைபுரிந்த சோனகர்களின் 'ஊர்காவல்படை' யினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஆவணப்படுத்திய புத்தகமாகும்.
  4. வணங்கா மண்
    • இதுவே இவர் எழுதிய முதலாவது போரிலக்கியமாகும். இப்புத்தகமானது இந்தியா & சிறீலங்காப் படைகளுடனான சண்டைகளின் போது மணலாற்றுக் கோட்டத்தில் மாவீரரானோர் மற்றும் அவர்களோடு நின்று களமாடியோர் பற்றியதுமான புத்தகம்.

 


இனி, இவர் எழுதி அழிந்துபட்ட போரிலக்கியங்கள் பற்றி பார்ப்போம்.

இவர் எழுதி அழிந்துபட்ட போரிலக்கியங்கள்:

  1. வன்னிச் சமர்க்களம்
    • இது தமிழீழ வரலாற்றில் மிகவும் முதன்மை வாய்ந்த புத்தகமாகும். ஜெயசிக்குறுயில் இருந்து ஓயாத அலைகள் மூன்றின் ஐந்து கட்டங்களையும் தாண்டி தென்மராட்சியிலிருந்து புலிகள் வெளியேறும் வரையிலான அத்துணை சமர்களங்களினதும் அச்சொட்டான முழு விரிப்பினைக் கொண்ட புத்தகம்! இது 900 சொச்சம் பக்கங்களைக் கொண்டது ஆகும்.
  2. போரும் வாழ்வும்
    • போராளிகளை பொதுமக்கள் தம் சிறகுகளினுள் வைத்து எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதை பற்றிய புத்தகம் இது.
  3. திகிலும் திரிலும்
    • இது ஆனையிறவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்துப் போரளிகளினது பயணப் பட்டறிவுகள் பற்றிய புத்தகமாகும். இப்புத்தகம் எழுதிய போது அவரும் போராளிகளோடே பயணம் செய்தார். அப்போது தன்னால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு செல்லும்படி கூறிய ஒரு தேசப்பாற்றாளர் இவராவார். இப்புத்தகத்தில் பிரதேசவாதத்தை இவர் விதைத்தார் என்றும் இவர்மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  4. கிழக்குப் போர்முனை
    • தென் தமிழீழச் சமர்க்களங்கள் பற்றியவை.
  5. களத்தில் சில நிமிடங்கள் 
    • முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் (Forward Defence Lines) நிற்கும் போராளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பட்டறிவுகளை எழுத்தில் கொண்டுவந்த நூல் இதுவாகும்.
  6. மௌனப் புதைகுழிக்குள் பாகம்-2
    • சோனகர்களாலும் சிங்களவர்களாலும் தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டு- அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய நூல்.

 


இவரிடம் தலைவர் மாமா கூறிய கூற்றாக இவர் தெரிவிப்பது:

"நாங்கள் வீரசாகசம் புரிபவர்களாக எங்களைக் காட்டக்கூடாது. எங்கட போராளிகள் படும் துயரங்களை முதலில் வெளியில் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட துயரங்களுக்குள் நின்றுதான் வெற்றியைத் தேடித் தருகிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

நாங்கள் அடையும் தோல்விகளையும் எழுதுங்கள். ஏனென்றால், நாங்கள் ஒரு காலத்தில் தோற்றுப் போகலாம்; திரும்பக் காட்டுக்குப் போகலாம். அந்த நேரங்களில் நாங்கள் விட்ட தவறுகளை, நாங்கள் அடைந்த தோல்விகளை சரியாக எழுத வேண்டும். வெற்றியைப் பலர் புழுகி எழுதலாம், அது எனக்கு தேவையில்லை. வெற்றி பற்றிய எழுத்து தேவை, ஆனால் நாங்கள் ஏன் சில சமர்களில் தோற்றுப் போனோம் என்பது மிக முக்கியம். அதை நீங்கள் வரலாறாக்க வேண்டும்."

கூற்றுக் காலம்: ~1995 .

பின்னர் 2000களின் தொடக்கத்தில் இவர் மேல் துரோகிப் பட்டம் வீசப்பட்டது. இவர்மேல் சுமத்தப்பட்ட குற்றம் யாதெனில், புலிகளினுள் நிகழ்ந்த பிரதேசவாதத்தை தனது "வன்னிச் சமர்க்களம்" என்ற நூலில் பதிந்தமையே ஆகும். 

மட்டு-அம்பாறை படையணிகளில் ஒன்றினது கட்டளையாளர்களில் ஒருவர் - இவரின் பெயர் உமாரமணன் என்று அறிகிறேன் - யாழ் நகரின் வாசலில் நின்றபடி யாழ் நகருக்குள் மட்டக்களபைச் சேர்ந்த படையணிகளின் கொம்பனிகளை உள்ளடக்கிய படைத்தொகுதி ஒன்றைத் தள்ளுவதற்கு ஆயத்தமாக நின்றார். அப்போது ஓ.அ. 3 இன் கட்டம் ஐந்திற்கான கட்டளைப் பணிமனையிடம் இதற்கான அனுமதியைப்பெறக் கேட்டார். அப்போது பின்தளத்தில் தலைவரோடு நின்ற யாழ்ப்பாணைத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர்களும் பொறுப்பாளர்களுமென மூன்று பேர் அதற்கான இசைவை வழங்க வேண்டாம் எனத் தலைவரைக் கேட்டுக்கொண்டனராம். ஏனெனில் யாழ்ப்பணத்தை மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றினர் என்ற பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதால். அவர்களின் அன்றைய பிரதேசவாதத்தால் அவர்களை பின்னுக்கு வரும்படியும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புதிதாகப் பயிற்சி முடித்திருந்த கொம்பனிகள் சில களமுனைக்கு அனுப்பப்படும் என்றும் கட்டளைப் பீடத்தில் இருந்தவர்கள் கட்டளை பிறப்பித்தனர். இதனால் மனமுடைந்த அந்த மட்டு- அம்பாறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர் தன் படைத்தொகுதியோடு பின்வாங்கினாராம். பின்னுக்கு வந்தவர் இவ் எழுத்தாளரைச் சந்தித்து "இன்னும் எண்ணி மூன்று நாட்களில் நாங்கள் போட்ட கட்-அவுட்களை எல்லாம் விட்டுட்டு இவங்கள் பின்னுக்கு வருவாங்கள் பாருங்கோ" என்று இவரிடம் கூறிச் சென்றாராம். அதன்படியே புலிகளும் சிங்களவரின் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நின்றுபிடிக்க இயலாமல் பின்வாங்கினராம். 

இதை அப்படியே தனது புத்தகத்தில் பதிந்தார்.

இச்செயலிற்காய் புலிகளால் தூற்றலுக்கும் ஆளானவர். ஆம், கருணா பிரிந்து சிங்களத்தோடு சேர்ந்து தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு துரோகமிழைத்த போது இவர் மேல் தனது புத்தகம் மூலம் பிரதேசவாதத்தை தூண்டியதாக 'துரோகிப்' பட்டம் வீசப்பட்டது. இவரை சுடவேண்டும் என்றுகூறி இவருடைய சிற்றூரின் பாடசாலையில் ஒரு கூட்டத்தை தவிபு புலனாய்வுத்துறையின் ஒருபிரிவினர் ஒழுங்குபடுத்தினராம். ஆனால் அதையும் கடந்து துடைத்து ஒரு நாட்டுப்பற்றாளராய் தொடர்ந்து எழுதியவர் இவராவார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குள் சென்று மீண்டவர்களுள் இவரும் ஒருவர். இப்போதும் வன்னியில் வசிக்கிறார்.

 


 

உசாத்துணை

படிமப்புரவு:

  • திரைப்பிடிப்பு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் (பிரதேசவாத) சேர்ப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் இணைத்த காணெளி, இரண்டாம் பாகம். முதலாவது பாகத்தையும் கேட்ட பின்பு வன்னிச்சமர்களமும் கிழக்குப் போர்முனை நூலும் உண்மையில் அழிந்து போயிருக்குமா???

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இணைத்த காணெளி, இரண்டாம் பாகம். முதலாவது பாகத்தையும் கேட்ட பின்பு வன்னிச்சமர்களமும் கிழக்குப் போர்முனை நூலும் உண்மையில் அழிந்து போயிருக்குமா???

அவரும் இதே ஐயத்தொனியிலே தான் அக்கருத்தையும் கூறியிருக்கிறார். 

எனவே எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.