Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CM MK Stalin: பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை.. அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM MK Stalin: பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை.. அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 

 
MK Stalin Writes Letter to DMK Cadres Minister Ponmudi ED Raid BJP Tamil Nadu CM CM MK Stalin: பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை.. அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காத்திட உண்மையான இந்தியா உருவாகி இருக்கிறது. அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடப்பதாகவும், கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

மதுரை மாநகரில் நம் உயிர்நிகர்த் தலைவர் அவர்களின் நூற்றாண்டுப் பெருமையாக ஜூலை 15-ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான, கல்வி வளர்ச்சி நாளில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களிடம் மகத்தான ஆதரவினைப் பெற்றிருப்பதுடன், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் பணியைத் தொடங்கி விட்டது.

 

'தி இந்து' ஆங்கில நாளிதழ் தனது 17-07-2023 தேதியிட்ட இதழில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிடுவதைக் குறிப்பிட்டிருப்பதுடன், “இது மதுரைக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடியது” என்று பார்வையாளர்கள் தெரிவித்திருப்பதைப் பதிவு செய்துள்ளது. 12-07-2023 அன்று உங்களில் ஒருவனான நான் எழுதிய கடிதத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் ‘தென்தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயில்’ என்று குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

மதுரை தந்த தமிழறிஞர் - நாடறிந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் நூலகத் திறப்பு விழாவில் என்னுடன் பங்கேற்றதுடன், அதனை 'ஞானத் திருக்கோயில்' எனப் பாராட்டித் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார்.

மாமதுரையின் மாணவராகத் தமிழில் குடிமைப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பை வகித்ததுடன், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று நிறுவிக்காட்டி, தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்கள், சமூக வலைத்தளத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பயன்களை மிகச் சிறப்பான முறையில் பதிவிட்டிருக்கிறார்.

திராவிட மாடல் அரசின் அறிவுத் திருப்பணிக்குக் கிடைத்த பாராட்டு

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு, தான் ஆயத்தமானபோது அதற்கான நூல்களையும் நூலகங்களையும் தேடித் தேடி அலைந்த காலகட்டத்தையும், இன்று மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குடிமைப் பணித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்காக ஒரு தளமே புத்தகங்களால் நிரம்பியிருப்பதையும், அதனால் இன்னொரு முறை குடிமைப்பணித் தேர்வு எழுத ஆசை ஏற்பட்டிருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் அவர் பதிவு செய்திருப்பதை, திராவிட மாடல் அரசின் அறிவுத் திருப்பணிக்குக் கிடைத்த பாராட்டாகக் கருதுகிறேன்.

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகளை நீண்ட கட்டுரையில் விவரித்திருக்கின்ற புதுடெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அவர்கள், இதனைத் தி.மு.க. என்ற அறிவியக்கத்தின் அடையாளம் எனப் பாராட்டியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குத் தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான நூல்களைக் கொடையாக வழங்கிய ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி பகுதியில் நடைபெற்ற ஓர் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மனுதாரருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதியரசர்கள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர்,  “இந்தத் தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தகம் வாங்கிடப் பயன்படுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தொடங்க வேண்டும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்” என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்று சொல்வார்கள். புத்தகங்கள் வழியாகப் பொது அறிவைத் தேடிப் பெறுகின்ற சமுதாயம் உருவாகின்ற போது குற்றங்கள் குறையும். கைதிகள் குறைந்து போவார்கள். சிறைச்சாலைகளுக்குத் தேவை இருக்காது என்ற அந்த மூதுரையை, மூதூராம் மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அமையப்பெற்ற உயர்நீதிமன்றக் கிளையின் நீதியரசர்களின் தீர்ப்பு எடுத்துக்காட்டி, நிலைநாட்டியிருக்கிறது.

அறிவுத் திருக்கோயில்களால் சமுதாயத்தை மேம்படுத்திட திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசோ அமலாக்கத்துறையைக் கொண்டு பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து சோதனைகள் நடத்தி அவதூறுகளைப் பரப்பி, அவப்பெயர் ஏற்படுத்தும் அரசியல் கயமைத்தனத்தில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜூலை 17-ஆம் நாள் காலையில் நான் பெங்களூருக்குப் புறப்படும் நேரத்தில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும்,  உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி அவர்களையும், அவரது மகன்  கௌதமசிகாமணி எம்.பி.யையும் குறி வைத்து, அமலாக்கத்துறையை ஏவி, சோதனை நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு.

நெருக்கடிகளைக் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம்

தி.மு.கழகம் இதுபோன்ற சோதனைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைக் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். அதனைக் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞர் எந்தவொரு சோதனையான காலகட்டத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் பேராற்றலை எங்களுக்குப் பயிற்றுவித்திருக்கிறார். பழிவாங்கும் போக்குடன் பச்சையாக அரசியல் செய்யும் பா.ஜ.க. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகின்றன என ஊடகத்தினரிடம் தெரிவித்துவிட்டு பெங்களூரு புறப்பட்டேன்.

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விடுதல்

கடந்த ஜூன் 24-ஆம் நாள் பீகார் தலைநகர் பாட்னாவில் தி.மு.கழகம் உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குச் சில நாட்கள் முன்பாக கழகத்தின் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை ஏவப்பட்டதை உடன்பிறப்புகளான நீங்கள் நன்றாக அறிவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மட்டுமின்றி, பா.ஜ.க.வின் மதவாத - ஜனநாயக விரோத - எதேச்சாதிகாரத் தன்மையைக் கொள்கைப்பூர்வமாக எதிர்க்கின்ற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை ஏவிவிடுவதும், எதிர்க்கட்சி வரிசையில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி வந்தால் அவர்களுக்குப் புனிதநீர் தெளித்து ‘புண்ணியவான்’கள் ஆக்கிவிடுவதும் நாடறிந்த ரகசியம்தான். நாம் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

அமலாக்கத்துறையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கை தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் மட்டுமின்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

அமலாக்கத்துறையின் அத்துமீறல்களையும் நள்ளிரவு கடந்த விசாரணையையும் ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம், பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததை ஏடுகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிக்கள் ஆங்கில ஏடு ‘சந்தேகத்தைக் கிளப்பும் அமலாக்கத்துறை சோதனைகள்’ (ED Raids Evoke Scepticism) என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், இதுபோன்ற சோதனைகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்காகவே மேற்கெள்ளப்படுகின்றன என்பதைப் பொதுமக்களும் உணர்ந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. தி இந்து ஆங்கில நாளேட்டில் 'தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை’ (Selective Prosecution) என்று தலைப்பிட்ட தலையங்கத்தில், “செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல்வாதிகள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த இரு அமைச்சர்களை மட்டும் குறிவைத்துப் பாய்ந்துள்ள நடவடிக்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சி.பி.ஐ. மற்றும் வருமானவரித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையான விசாரணையையும்கூட தொடரவில்லை.

வழக்குத் தொடர இசைவு தர மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி

குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகமே அனுமதி அளித்த பிறகும், அதே வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் மீது வழக்குத் தொடர்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இசைவு தர மறுத்து வருகிறார்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் புலனாய்வு - விசாரணை அமைப்புகள் மட்டுமின்றி, ஆளுநர் என்ற பதவியையும் அரசியல் பார்வையுடனேயே செயல்படுத்தி வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் ‘பண்பு’ அப்படிப்பட்டது என்பதை நன்கறிந்த அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாக நேற்றும் (ஜூலை 18), அதற்கு முந்தைய நாளும் (ஜூலை 17) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெருமதிப்பிற்குரிய சோனியா காந்தி அம்மையார் , அன்புச் சகோதரர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , மூத்த தலைவர் சரத் பவார் , சளைக்காத சமூகநீதிப் போராளி லாலு பிரசாத் , தலைவர் கலைஞரின் நண்பரும் மாநில சுயாட்சி வீரருமான ‘முன்னாள்’ ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா,  பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் , மேற்கு வங்க முதலமைச்சர் சகோதரி மமதா பானர்ஜி , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ,  சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்கள், மேலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட - பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் காத்திட வேண்டும் என்பதில் உறுதி கொண்ட - மதவாதமற்ற சகோதரத்துவமான இந்திய ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட 26 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருக்கும் இயக்கங்கள் அடங்கிய கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பெயர் பற்றிய ஆலோசனைகளும் சிந்தனைகளும் வெளிப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயர்தான் இந்தியா. I.N.D.I.A (Indian National Developmental Inclusive Alliance) இந்திய ஒன்றியம் முழுவதும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியினைப் பெற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்களிடமும், வழிமொழியுமாறு உங்களில் ஒருவனும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான என்னிடம் அன்புடன் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

பிரதமர் பேசியது வேடிக்கையான வேதனை


எதிர்க்கட்சிகள் கூடுவது ஃபோட்டோ எடுக்கத்தான் என வெளியில் கேலி பேசிய பா.ஜ.க. தலைமைக்கு உள்ளுக்குள் பயம் ஆட்டிப் படைத்தது. மத்திய பிரதேசத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி  பேசியபோதும், அந்தமானில் பேசியபோதும் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக தி.மு.க.வைத் தேவையின்றி விமர்சித்துப் பேசினார். பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. அ.தி.மு.க.வின் ஒரு பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பழனிசாமி உள்பட பல கட்சியினரும் விழுந்தடித்து ஓடி, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். அவர்களை விட்டால் இவர்களுக்கு ஆளில்லை. இவர்களை விட்டால் அவர்களுக்கு ஆளில்லை. இருதரப்புக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை.

இவர்களிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பா.ஜ.க.வினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.

இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வுக்கும் - அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும்  ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி.

இந்தியாவின் எதிரிகளான மதவாத - ஜனநாயக விரோத - மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் அடையாளம் காண்பீர்! மக்களிடம் அடையாளப்படுத்துவீர்! நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்குடன் இப்போதே ஆயத்தமாவீர்!” இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.abplive.com/news/tamil-nadu/mk-stalin-writes-letter-to-dmk-cadres-minister-ponmudi-ed-raid-bjp-tamil-nadu-cm-129904

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சனாதன அரசு தமிழ் நாடு அரசை கவிழ்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. ஆனால் மணிப்பூரில் என்னதான் அடடூழியம் நடந்தாலும் ஒன்றுமே செய்ய மாடடார்கள். இதுதான் மோடியின் ரத்த கறைகள் படித்த அரசின் சாதனைகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.