Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூடியூப் சேனலை 'லைக்' செய்தால் பணம் சம்பாதிக்க முடியுமா? – புதிய மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சைபர் குற்றம், பண மோசடி, காவல் துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாட்ஸப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

அதில், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.

அதை நம்பி நீங்கள் அந்தப் பக்கத்தை லைக் செய்தால், பல்லாயிரக் கணக்கில் பணத்தை இழக்கிறீர்கள்.

'என்ன கொடுமை சார் இது?' என்கிறீர்களா?

இது தற்போது பரவிவரும் ஒரு புதுவகையான மோசடி என்கிறது தமிழகக் காவல்துறை.

இது எப்படி நடக்கிறது?

இதிலிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது?

வாட்ஸப்பில் துவங்கும் மோசடி வலை

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக 'பூலோக ரகஸியம் என்ற மதி மோசக் களஞ்சியம்' என்ற நூல் வெளிவந்தது. அந்த நூலில் சுமார் 140 மோசடிகளை அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் விளக்கியிருப்பார்கள். அதில் பெரும்பாலான மோசடிகள், மனிதனின் ஆசையை மூலதனமாகக் கொண்டிருக்கும்.

இணையம் வந்த பிறகு, மனிதனின் ஆசையை அடிப்படையாக வைத்து அங்கு நடக்கும் இது போன்ற மோசடிகளைத் தொகுத்தால் இரண்டு, மூன்று புத்தகங்களாகத் தொகுக்க வேண்டியிருக்கும். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ஒரு மோசடிதான், 'லைக் பண்ணுங்க, பணம் சம்பாதிங்க' என்ற மோசடி.

வாட்ஸப்தான் இந்த மோசடியின் துவக்கப் புள்ளி.

ஒரு பெண்ணின் புகைப்படத்தை புரொஃபைல் படமாக வைத்திருக்கும் ஒருவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பிப்பார். தான் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் சார்பில் பேசுவதாகவும் தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கு தொந்தரவே இல்லாத வகையில் கூடுதலாக ஒரு வேலை பார்க்கலாம், அதைப் பற்றிச் சொல்லவா என்றும் கேட்பார்.

நீங்கள் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் அனுப்புவார். யூடியூப் தொடர்பாக தான் ஒரு பணியை வைத்திருப்பதாகவும், தினமும் சிறு சிறு வேலைகள் சொல்லப்படும் என்றும், அதைச் செய்தால், ஒவ்வொரு வேலைக்கும் 50 முதல் 100 ரூபாய் வரை கிடைக்கும் என்றும் சொல்வார்.

ஆரம்பத்தில், இதற்கு எந்தப் பதிவுக் கட்டணமும் கிடையாது என்றும் தாங்கள் சொல்லும் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் போதும் என்றும் சொல்வார்கள். தினமும் 20 - 25 யூடியூப் சேனல்களைப் பின் தொடர வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் அன்றைய நாளின் முடிவில் அதற்கான தொகை அனுப்பப்படும் என்றும் சொல்வார்.

இதுதான் தூண்டில். மிக எளிதான வேலையாக இருக்கிறதே என்று இதில் சிக்கினால், அது மிகப் பெரிய சுழலுக்கு இழுத்துச் செல்லும்.

சைபர் குற்றம், பண மோசடி, காவல் துறை

பட மூலாதாரம்,HARIHARASUDAN THANGAVELU

 
படக்குறிப்பு,

'லைக்' செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி ஒரு நாள் மிகப் பெரியதாக வெடிக்கப்போகிறது என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுனரான ஹரிஹரசுதன் தங்கவேலு

மோசடியின் அடுத்தக் கட்டம் எப்படிச் செயல்படுகிறது?

அவர்கள் சொல்வதைப் போல யூடியூப் சேனல்களை பின்தொடர்வது, லைக் செய்வது போன்ற வேலைகளைச் செய்ததும் சிறிய அளவிலான தொகை உங்களுக்கு அனுப்பப்படும். இந்தத் தொகை 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கலாம்.

இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு, மோசடியின் அடுத்த கட்டம் ஆரம்பமாகும். இந்த இரண்டாவது கட்டத்தில் என்ன நடக்குமென விவரிக்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுனரான ஹரிஹரசுதன் தங்கவேலு.

"இந்த இரண்டாவது கட்டத்தில் ஃபினான்ஸ் அதிகாரி என ஒருவர் அறிமுகமாவார். இவர் நம்மைப் பற்றிய விவரங்கள், வங்கிக் கணக்கு எண் எல்லாவற்றையும் கேட்பார். வழக்கமாக கிரெடிட் கார்ட் எண் கேட்டு மோசமான ஆங்கிலத்தில் பேசுபவரைப்போல இவர் பேச மாட்டார். மாறாக, மிகச் சிறப்பான ஆங்கிலத்தில் அவர் பேசுவார். இதற்குப் பிறகு நீங்கள் ஒரு டெலிகிராம் க்ரூப்பில் இணைக்கப்படுவீர்கள். அதில் நிறையப் பேர் இருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த பிரபலத்தின் புகைப்படத்துடன் கூட அதில் ஆட்கள் இருப்பார்கள்,” என்றார்.

பிறகு, அந்தக் குழுவில் இருக்கும் சிலர் தங்களுக்கு செய்த வேலைக்குப் பணம் வந்ததாக பதிவிடுவார்கள். நன்றி தெரிவிப்பார்கள். அடுத்ததாக, அந்தக் குழுவை நடத்துபவர் ஒரு பதிவை இடுவார். அதில் ஐந்தாறு பேருக்கு மட்டும் இன்று வேலை இருப்பதாகச் சொல்வார். அந்த வேலையை தங்களுக்குத் தரச் சொல்லி குழுவில் இருக்கும் எல்லோரும் போட்டியிடுவார்கள், என்கிறார் தங்கவேலு.

சைபர் குற்றம், பண மோசடி, காவல் துறை
 
படக்குறிப்பு,

'நாங்கள் சொல்லும் யு டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தால் போதும், பணம் கிடைக்கும்' என ஆசை வலை விரிக்கப்படுகிறது

‘5,000 ரூபாய் கட்டினால் பலமடங்கு லாபம்’

அந்தத் தருணத்தில், அந்தக் குழுவின் அட்மின் ஒரு எக்ஸெல் ஷீட்டைப் பகிர்வார். நீங்கள் அதில் குறிப்பிட்டிருப்பதைப் போல 5,000 ரூபாய் வரை பணம் கட்டினால் உறுப்பினராகிவிடலாம். கட்டிய பணத்தைவிட கூடுதலான பணம் உடனடியாகக் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

இந்தத் தருணத்தில், நாம் அந்தக் குழுவில் இருக்கக்கூடிய மற்றவர்களிடம் இதெல்லாம் சரியா, பணம் திரும்பக் கிடைக்குமா என்று கேட்போம். அவர்களும் கண்டிப்பாக கிடைக்கும். எனக்குக் கிடைத்திருக்கிறது என்று கூறி, அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை அனுப்புவார்கள். இதற்குப் பிறகு நாம் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாய் செலுத்தியவுடன், மிகச் சிறிய வேலைகளைக் கொடுப்பார்கள். அதைச் செய்தவுடன் நம் கணக்கில் 7,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.

பிறகு அவர்கள் ஒரு இணையதளத்தின் முகவரியையும் அனுப்புவார்கள். அதை க்ளிக் செய்து பார்த்தால், நம் வங்கிக் கணக்கின் இணையதளத்தை பார்ப்பதுபோலவே இருக்கும். அந்தக் கணக்கில் ஏழாயிரம் ரூபாய் இருப்பதாகக் காட்டும். ஆனால், ஒரு லட்ச ரூபாய் சேரும்வரை அதை எடுக்க முடியாது என்று சொல்வார்கள்.

இதற்குப் பிறகு, யூடியூப் சேனல்களின் இணைப்புகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். லைக் செய்தால் 5 ரூபாயும் சந்தாதாராகச் சேர்ந்தால் 10 ரூபாயும் உங்கள் கணக்கில் சேர்ந்துகொண்டே வரும்.

இதற்கு நடுவில் அந்த டெலிகிராம் சேனலில், பலரும் தங்களுக்கு பணம் கிடைத்த ஸ்க்ரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டே இருப்பார்கள்.

அதோடு நீங்கள் வெளியில் வர முடியாத வகையில் தொடர்ந்து தூண்டில் போட்டு, கூடுதல் தொகையை கட்டவைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு பத்து நாட்களுக்குள் 5,000, 10,000 என நீங்கள் 25,000 ரூபாய் வரை அதில் இழந்திருப்பீர்கள். ஆனால், உங்கள் கணக்கில் ஒரு லட்சம் இருப்பதாகக் காட்டும்.

யூடியூப் சேனல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நாம் ஐயாயிரம் ரூபாயை ஏமாந்துவிட்டு காவல்துறையில் புகார் செய்தால், பிடிபடுவது ஐம்பதாயிரம் ரூபாயை தொலைத்துவிட்டு, நாம் அனுப்பிய ஐயாயிரம் ரூபாயைப் பெற்றவராக இருப்பார்.

பணம் கொடுப்பவர், பெறுபவர் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்

இந்தத் தருணத்தில் அதில் இருக்கும் பணத்தை எடுக்க முயன்றால், ஜி.எஸ்.டி நம்பர் வாங்க வேண்டும், உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பதுபோல பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறகு ஒரு நாள், இப்போது பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால், இன்று இரவே 99,000 ரூபாய் கொடுத்துவிடலாம் என்று சொல்வார்கள். இப்படியாக உங்களுக்குப் பணம் கொடுப்பதை இழுத்துக்கொண்டே போவார்கள்.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது இரண்டு மூன்று நாட்களில் ஒருவர் பணம் ஏமாந்துவிட்டதாக உணர்ந்து சைபர் கிரைமில் புகார் செய்தால், அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட பேமென்ட் கேட்-வேவுக்குத் தகவல் அனுப்புவார்கள். பேமண்ட் கேட்வே வாடிக்கையாளருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, மோசடிக் கணக்கிலிருந்து பணத்தை திரும்பி எடுத்துவிடுவார்கள்.

ஆனால், இதற்கு உடனடியாகப் புகார் செய்ய வேண்டும். அப்படி புகார் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிட்டத்தட்ட 2- 3 மாதங்களுக்குள் உங்களிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

அதேபோல, நீங்கள் பணத்தைச் செலுத்தும்போது வெவ்வேறு எண்களுக்குச் செலுத்தச் சொல்வார்கள். அந்த எண்கள், நம்மைப் போல ஏமாந்தவர்களின் எண்களாக இருக்கும். அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு ஐயாயிரம் ரூபாய்க்காக காத்திருப்பார்கள்.

நாம் ஐயாயிரம் ரூபாயை ஏமாந்துவிட்டு காவல்துறையில் புகார் செய்தால், பிடிபடுவது ஐம்பதாயிரம் ரூபாயை தொலைத்துவிட்டு, நாம் அனுப்பிய ஐயாயிரம் ரூபாயைப் பெற்றவராக இருப்பார். ஆகவே, இதில் ஏமாறுபவரும் ஏமாற்றுபவரும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பெரிய அளவிலான பணத்தை அனுப்பச் சொல்லும்போது மட்டும்தான் அவர்கள் தங்கள் எண்ணுக்கு அனுப்பச் சொல்வார்கள். அவை க்ரிப்டோவாக மாற்றப்பட்டு, வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிடும்" என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேல்.

 
சைபர் குற்றம், பண மோசடி, காவல் துறை
 
படக்குறிப்பு,

கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் வந்த செய்யப்பட்ட சைபர் கிரைம் புகார்களின் எண்ணிக்கை

'சிலர் 1 கோடி ரூபாய் வரை இழந்திருக்கிறார்கள்'

தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை இது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வகையில் ஏமாறுவது உட்பட தினமும் 200க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகச் சொல்கிறது காவல்துறை.

"இந்தத் திட்டத்தை நம்பி ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முயலும்போது 30% வரி கட்ட வேண்டும் என்பார்கள். டிக்கெட் ஜெனரேட் செய்ய வேண்டும் என்பார்கள். ஒரு கோடி ரூபாய் கிடைக்கப்போகிறதே என்ற ஆசையில் இன்னும் 30 லட்ச ரூபாயை இழந்தவர்கள் இருக்கிறார்கள்," என்கிறார் தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளரான லிசா ஸ்டெபிலா தெரஸ்.

தமிழக காவல்துறை இதற்கென பிரத்யேகமாக 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணை வைத்திருக்கிறது. ஆனால், பணத்தை இழந்தவுடன் புகார் அளித்தால் மட்டுமே அதனை மீட்பதற்கான வாய்ப்பு ஓரளவுக்காவது இருக்கிறது என்கிறார் லிசா.

"புகார் அளிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இழந்த பணத்தை மட்டும்தான் மீட்க முடியும். பல நாட்களுக்கு முன்பாக பணத்தை இழந்துவிட்டு மிகத் தாமதமாக புகார் கொடுத்தால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால், ஏமாற்றுபவர்களால் அந்தப் பணம், க்ரிப்டோ மூலமாகவோ,வேறு ஆப்களின் மூலமாகவோ, கிரெடிட் கார்டுகளுக்குச் செலுத்துவதன் மூலமாகவோ பல வகைகளில் வெளியே எடுக்கப்பட்டுவிடும். அந்த நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களது கணக்கை முடக்கி பணத்தை மீட்பது மிகச் சிரமமான காரியமாகிவிடும்," என்கிறார் லிசா.

சைபர் குற்றம், பண மோசடி, காவல் துறை

பட மூலாதாரம்,SANJAY KUMAR

 
படக்குறிப்பு,

ஆன் - லைன் மோசடி தொடர்பாக தினமும் 250க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகச் சொல்கிறார் தமிழக காவல்துறையின் கூடுதல் இயக்குநர் - ஜெனரல் சஞ்சய் குமார்

சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் எண்ணம்தான் பிரச்னை

இதுவரை, வாட்ஸப் மூலம் இதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில், சில நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் வெளிப்படையாகவே ஆட்களை அழைக்கிறார்கள்.

"இதுவும் ஒரு படிநிலை மோசடிதான். சரிவு நேரும்வரை பெரிதாக யாரும் பேச மாட்டார்கள். ஆனால் இது ஒரு நாள் பெரிய மோசடியாக வெடிக்கும்" என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேல்.

இம்மாதிரியான மோசடிகளுக்கு அடிப்படையான காரணம், குறுகிய காலத்தில் பெரிய பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைதான் என்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரலான சஞ்சய் குமார்.

"ஏமாற்றுபவர்கள்தான் அழைப்பு விடுக்கிறார்கள் என்றாலும், நீங்களாகத்தான் அதில் போய் சிக்குகிறீர்கள். ஆன்லைனில் ஏமாறாமல் இருப்பது குறித்து பல அறிவுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைனில் ஏமாந்தாக தினமும் சுமார் 250 புகார்கள் வருகின்றன. 700க்கும் மேற்பட்ட அழைப்புகள் 1930க்கு வருகின்றன. முடிந்த அளவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறோம். இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்," என்கிறார் ஏடிஜிபி சஞ்சய் குமார்.

https://www.bbc.com/tamil/articles/cw5r452gvn3o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.