Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : புதனன்று வட, கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 AUG, 2023 | 02:31 PM
image
 

 

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.

இத்தினத்தன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதிக்கட்ட போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2300 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக எதிர்வரும் புதன்கிழமையன்று வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதேபோன்று உள்ளகப் பொறிமுறையின் மீது தாம் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தும் அதேவேளை, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது. 

அதுமாத்திரமன்றி அன்றைய தினம் மாலை 'காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போவதற்கு இடமளிக்காதிருப்போம்' என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/163280

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான விசாரணைகளில் சுமார் 10 - 12 பேர் உயிருடன் இருப்பதாக கண்டறிவு - தகவல்கள் எதிர்வரும் 30இல் வெளியாகும்!

27 AUG, 2023 | 01:22 PM
image
 

 

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.  

வருடாந்தம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் புதன்கிழமை காலை கொழும்பில் அமைந்துள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் இதனையொத்த நிகழ்வுகள் அன்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளன.

அதன்படி. கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வின்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையான காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் மூலம் அடையப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சுமார் 10 - 12 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுபற்றிய விபரங்கள் புதன்கிழமையன்று நடைபெறவுள்ள நிகழ்வில் அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

இதுவரையான காலப்பகுதியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச் சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரே நபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதியப்பட்ட 2644 முறைப்பாடுகளையும் (முகத்தோற்றத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டவை) கழித்ததன் பின்னர் அலுவலகத்தின்வசம் 12,988 தேறிய முறைப்பாடுகள் இருந்தன. 

அவை அச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு 2000 - 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான சம்பவங்கள், 1981 - 1999ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான சம்பவங்கள், 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவான சம்பவங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டன. அவற்றில் 2000 - 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவான 6025 முறைப்பாடுகளில் 3900 முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான இரட்டிப்பு முறைப்பாடுகள் (முகத்தோற்றத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படாதவை) மற்றும் முறைப்பாடு வழங்கப்பட்டதன் பின்னர் உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகளை ஒருங்கமைப்பதற்கான வழிகாட்டல் கோவை ஒன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாரித்துவருகிறது.

அதேபோன்று நாட்டின் எந்தவொரு பாகத்திலும் மனிதப் புதைகுழிகளோ அல்லது மனித எச்சங்களோ கண்டறியப்படும் பட்சத்தில், அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய சட்டக்கையேடு ஒன்றையும் தயாரித்திருக்கும் இந்த அலுவலகம், அதனையும் எதிர்வரும் புதனன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/163276

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும்  30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூறப்படவுள்ளது.

இந்நிலையில் வடக்கில் மன்னாரிலும், கிழக்கிலே மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுகொள் விடுத்துள்ளார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில்  புளோட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எப்.  அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1347131

#################   ######################   ########################

 

வேதனையைப் புரிந்தவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

வேதனையைப் புரிந்தவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

பாதிக்கப்பட்ட தரப்பினரின் வேதனையைப் புரிந்து கொண்ட அனைவரும் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

எங்களுக்கான விடுதலைக்காக தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் போராட்டத்தை மேற்கொண்டு எமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லை , எங்களுக்கான நீதி வேண்டும் என சர்வதேசத்திற்கு காட்டி வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட தரப்பாக நாங்கள் வீதிகளில் நின்று போராடுவது சிலருக்கு வேடிக்கையாகவும் , நகைச்சுவையாகவும் இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் அனைவரும் குறித்த போராட்டத்திற்கு வருவீர்கள்.

நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

பணத்திற்காகவோ, ஆதரவுக்காகவோ இல்லை எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் கண்ணீர் வடித்து கண்ணீருடன் தான் போராடி கொண்டிருக்கின்றோம்.

அனைவரும் சேர்ந்து குறித்த போராட்டத்திற்கு வர வேண்டும் என கேட்பதோடு 30 ஆம் திகதி போராட்டத்திற்கு செல்ல வேண்டிய வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிலாவத்தை, விசுவமடு , மாங்குளம் ஆகிய இடங்களில் இருந்து காலை 6 மணிக்கு பேருந்துகள் புறப்பட உள்ளன அத்தோடு குறித்த போராட்டமானது ஓஎம்பி அலுவலகத்திற்கு எதிரான போராட்டமாகும்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் இருக்கும் என்பதோடு தேசியத்திற்கு பயணிக்கும் அனைத்து உறவுகளையும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1347141

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை இன்றும் தேடும் தமிழர்கள் - அந்த நாளில் என்ன நடந்தது?

பேத்தியை தேடும் மூதாட்டி
 
படக்குறிப்பு,

இறுதிக் கட்ட யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு இந்த தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2380 நாட்களை கடந்து இன்றும் நடந்து வருகின்றது.

தசாப்தங்களாக தொடரும் தேடல்

இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இன்றும் தேடல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.

இவ்வாறு தொடர் தேடல்களில் ஈடுபடும் சிலரை, பிபிசி தமிழ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது.

வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான வெலன்டினா, இறுதி யுத்தத்தில் தனது தாயான விக்டோரியா ராணியை தொலைத்து இன்றும் தேடி வருகின்றார்.

திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து வரும் வெலன்டினா, 14 வருடங்கள் தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

தாயை தேடும் மகள்
 
படக்குறிப்பு,

வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான வெலன்டினா, இறுதி யுத்தத்தில் தனது தாயான விக்டோரியா ராணியை தொலைத்து இன்றும் தேடி வருகின்றார்.

 

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி என்ன நடந்தது?

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி. இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் - வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர தாக்குதல்களில் வெலன்டினாவின் தாய் பலத்த காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த தாயை, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீசப்பட்டிருந்த பாய் ஒன்றில் வைத்து, ராணுவ பகுதியை நோக்கி வெலன்டினா இழுத்து கொண்டு வந்துள்ளார்.

அங்கு நிலைக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகள், காயமடைந்த வெலன்டினாவின் தாயை, வெலன்டினாவிடமிருந்து தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

மீண்டும் தாயை ஒப்படைப்பதாக கூறி ராணுவம் தனது தாயை டிராக்டரில் ஏற்றியதாக வெலன்டினா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குறித்த டிரக்டரில் காயமடைந்த சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரை ராணுவம் ஏற்றிச் சென்றதாக கூறுகின்றார் வெலன்டினா.

அந்த நிமிடமே தனது தாயை இறுதியாக கண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''2009 இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் அம்மா காயப்பட்ட நேரம், அவங்களால் நடக்க முடியாத காரணத்தினால் மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக வீதியில் இருந்த பாயை எடுத்து, பாயில் படுக்க வைத்து இழுத்து கொண்டு வந்து வட்டுவாகல் பாலத்தில் சைவ கோவிலுக்கு அருகாமையில் ராணுவத்திடம் கொடுத்தேன். ஆனால், இன்று வரை எங்கு என்று தெரியாது." என வெலன்டினா கூறுகின்றார்.

தாயை தேடும் மகள்
 
படக்குறிப்பு,

இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

 

"இன்று வரை கிடைக்காத தாய்"

ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பிடம் சென்ற போதிலும், தனது தாயை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

''நான் சகல இடமும் போயிருக்கேன். ஜனாதிபதி, ஐ.சி.ஆர்.சி, மனித உரிமை ஆணைக்குழு என நிறைய இடங்களுக்கு சென்றேன். போலீஸில் எல்லாம் முறைப்பாடு செய்து எந்தவித பலனும் எனக்கு கிடைக்கவில்லை." என அவர் குறிப்பிடுகின்றார்.

தாய் காணாமல் போனதன் பின்னர், தான் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்தும் வெலன்டினா பிபிசியிடம் கருத்து தெரிவித்தார்.

''சாகுறதா, இருக்கிறதா என்ற முடிவுல இருக்கிறோம். உண்மையில் வெளியில் கதைத்து, சிரிக்கின்றேனே தவிர, உள்ளே உள்ள கஷ்டம் கடவுளுக்கு தான் தெரியும். இருந்தால் என்ன, விட்டால் என்ன என்ற மாதிரி இருக்கு." என கூறுகின்றார்.

தனது தாயை மாத்திரமன்றி, தனது குடும்பத்தில் பலரை வெலன்டினா யுத்தத்தில் இழந்து, இன்று தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

''நான் தனியா தான் இருக்கிறேன். நான் திருமணம் செய்யவில்லை. எனக்கு 52 வயது. அம்மாவை தேடி போய் பலனில்லை என்றே சொல்ல வேண்டும். சர்வதேசம் எங்களுக்கு ஒரு முடிவை கொடுத்தால் தான் நல்லது என்று நான் நினைக்கின்றேன். அம்மா கிடைப்பா என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனாலும் அரை மனசுல தான் இருக்கின்றோம்." என கவலையாக கூறினார் வெலன்டினா.

 

பேத்தியை தேடும் பாட்டி

பேத்தியை தேடி வரும் மூதாட்டி
 
படக்குறிப்பு,

இறுதி யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து, தனது பேத்தியை ராணுவம் அழைத்து சென்றதாக கூறுகின்றார் தனலெட்சுமி.

இறுதிக் கட்ட யுத்தத்தில் தனது பேத்தியை தொலைத்த 76 வயதான தனலெட்சுமி, இன்றும் அவரை தேடி வருகின்றார்.

வவுனியா - புளியங்குளம் பகுதியில் யுத்தத்தினால் கடும் சேதமடைந்த தனது பூர்வீக வீட்டிற்கு அருகில் சிறிய வீடொன்றை கட்டிக் கொண்டு மற்றுமொரு பேத்தியுடன் வாழ்ந்து வருகின்றார் தனலெட்சுமி.

இறுதி யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து, தனது பேத்தியை ராணுவம் அழைத்து சென்றதாகக் கூறுகின்றார் தனலெட்சுமி.

தனது பேத்தியை ராணுவத்திடம் ஒப்படைக்கும் போது, பேத்திக்கு 17 வயது என அவர் கூறுகின்றார்.

அன்று முதல் இன்று வரை தான் அனைத்து இடங்களுக்கும் சென்று தனது பேத்தியை தேடி வருகின்ற போதிலும், அவர் தொடர்பிலான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிடுகின்றார்.

"யுத்தம் வந்தது, பிள்ளைகளை இழந்தோம்"

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
 
படக்குறிப்பு,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2380 நாட்களை கடந்து இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது.

ஓமந்தை சோதனை சாவடியில் ராணுவம், தனது பேத்தி உள்ளிட்ட பலரை பள்ளிகூட அறைகளுக்குள் அழைத்து சென்று விசாரணைகளை நடத்தி, வாகனங்களில் ஏற்றியதை தான் அவதானித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

''யுத்தம் வந்தது. எனது மகள், மருமகன் எல்லாம் சேர்ந்து வட்டுவாகலுக்கு போனோம். முல்லைத்தீவு கடும் சேதமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக இருந்து, இருந்து கடைசியாக வட்டுவாகலுக்கு போனோம். போன இடத்தில் மகளும், மருமகனும் செத்துட்டாங்க. அவங்க இரண்டு பேரும் இறந்த பிறகு இந்த பிள்ளைகள் இரண்டும் என்னுடைய கையில் தான். அங்கிருந்து ஓமந்தைக்கு கடலில் தான் தாண்டி தாண்டி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தோம். ஓமந்தையில் ராணுவம் எங்களை இறக்கி விட்டது. "

"எல்லா பிள்ளைகளையும் ஒவ்வொருவரா அறையில் வைத்து, எல்லாம் பொடியன்கள் தான். எனக்கு யார் என்று தெரியாது. வரிசையில் இருந்த ஒவ்வொரு பிள்ளைகள கூட்டிக் கொண்டு போனார்கள். பள்ளிகூட அறையில் வச்சு தான் கதைத்தார்கள். என்ன கதைத்தார்கள் என்று தெரியாது. நான் போய் கேட்டேன். நாங்கள் அனுப்புவோம் என்றார்கள். ராணுவம் எல்லாம் வாகனத்தை வைத்துக்கொண்டு இருந்தது. அதில் கொண்டு ஏற்றினார்கள். எல்லா பிள்ளைகளையும் ஏற்றினார்கள். ஆனால் இன்று வரை முடிவு வரவில்லை." என தனலெட்சுமி தெரிவிக்கின்றார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கடந்த 14 வருட காலமாக ராணுவம் மீது முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகவே மறுத்து வருகின்றது.

https://www.bbc.com/tamil/articles/cgez55l21pdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று : வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

30 AUG, 2023 | 08:48 AM
image
 

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் (30) 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் நீட்சியாக இன்று புதன்கிழமை வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதன்படி வடமாகாணத்தில் மன்னாரில் சதொச மனிதப்புதைகுழிக்கு அண்மையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி மன்னார் விளையாட்டரங்கத்துக்கு (மன்னார் ஸ்டேடியம்) அண்மையில் நிறைவடையும். அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இருந்து காலை 9 மணிக்கு பேரணி ஆரம்பமாகும்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், உள்ளகப்பொறிமுறையின் ஊடாகத் தமக்குரிய நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையைத் தாம் முற்றுமுழுதாக இழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், எனவே நம்பத்தகுந்த சர்வதேசப்பொறிமுறையின் மூலம் தமக்கான நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடன்கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் இப்போராட்டத்தின் ஊடாகத் தாம் வலியுறுத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/163445

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன 10 பேரை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லை என்கிறது தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

30 AUG, 2023 | 01:30 PM
image
 

காணாமல்போன பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகிறோம். சுமார் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் போருக்கு முன்னும், பின்னும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை பற்றிய உண்மையினை வெளிப்படுத்த முடியும்.

அத்துடன் 40ஆண்டுகளுக்கும் மேலாக, கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களைக் கைது செய்வதற்கு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இலங்கை நம்பியுள்ளது. 

இது தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. இதுவே பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.

போரின் போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. 

அந்த துணை ராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.

இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்தபிக்குகளாய்  ஆகியுள்ளனர். 

அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாக வாழ்கிறார்கள்.

காணாமல் போன 10 பேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் கடந்தவாரம் எங்களுக்கு அறிவித்தனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை.

எனினும், காணாமல் ஆக்கப்பட்ட  குழந்தைகள் உண்மையில் பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதாகவும் நாங்கள் கூறிய விடயம் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக  எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளை தேடுவதற்கு உதவும்.

தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம்.

அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை  எமக்கு செய்யவேண்டும்.

அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும் என்றனர்.

IMG_9300.jpg

IMG_9295.jpg

IMG_9293.jpg

https://www.virakesari.lk/article/163496

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.