Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

10 SEP, 2023 | 12:27 PM
image
 

(எம்.மனோசித்ரா)

  • 8 மாதங்களில் சிறுவர்கள் மீதான 654 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவு 
  • அறியாமை , சமூகத்தின் விமர்சனங்கள் மீதான அச்சத்திலிருந்து பெற்றோர் வெளிவர வேண்டும் 

சிறுவர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் இலங்கையில் சமீப காலமாக மிகவும் அதிகரித்து உயர் புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. நவீன காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் சார் வன்கொடுமைகளுக்கு நிலையான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்கள் செயற்படுகின்ற போதிலும் , அவற்றால் இறுதி இலக்கை அடைய முடியாதுள்ளது. 

பன்னாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , வறுமை , மனித குலத்துக்கு அப்பாலான செயற்பாடுகளால் சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகும் சிறுவர்கள் முதல் சவாலாக பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள சிறுவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். 

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்வதால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization)  தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள அந்த அமைப்பு, இதற்கு தீர்வினைக் காண்பதற்கு விரைவாக செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையின் நிலைமையை அவதானிக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு  நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் யாதெனில் சிறுவர்கள் பாடசாலைகளிலும் , தனியார் வகுப்புக்களிலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையாகும். சிறுவர்கள் மத்தியில் இதுவரையும் பாலியல் தொடர்பான புரிதல் இன்மையும் , பெரும்பாலான பெற்றோரின் அறியாமையும் , அநாவசிய அச்சமும் இவற்றுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கின்றன. 

இவ்வாறான நிலையில் ஆசிரியர் ஒருவரால் 7 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8 மாதங்களின் பின்னர் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. (தனிநபர் தகவல் பாதுகாப்பு நலன் கருதி பாடசாலையின் பெயர் , பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகநபரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை). சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு , அவரது மனைவி பாலர் பாடசாலை ஆசிரியையாவார். 

சந்தேகநபர் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதோடு , அவரது மனைவி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடத்துகின்றார். இவர்கள் இருவர் தமது வீட்டிலேயே மேலதிக வகுப்புக்களை நடத்தியுள்ளனர். கணவன் வீட்டிற்குள் காணப்படும் அறையொன்றிலும் , மனைவி வீட்டிற்கு வெளியிலும் வகுப்புக்களை நடத்தியுள்ளனர். இவ்வாறானதொரு சூழலிலேயே சிறுமி குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ரீதியான மாற்றங்களை அவதானித்த அவரது தாயார் , சிறுமியை மருத்துவ சிகிச்சைக்க்காக அழைத்து சென்ற போதே தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமையை அறிந்து கொண்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் முன்வரவில்லை. காரணம் சமூகம் தொடர்பான அச்சமும் , அதனால் ஏற்படக் கூடிய அவமானமும் அவர்களை முற்போக்காக சிந்திக்க இடமளிக்கவில்லை. 

இதனால் அந்த பெற்றோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பிரிதொரு பிரதேசத்தில் குடியமர்ந்ததோடு, அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையில் தனது மகளை சேர்த்துள்ளனர். குறித்த சிறுமியை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ள போதிலும் , அவர்கள் மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரியவருகிறது. 

எவ்வாறிருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த சிறுமி சுகயீனமடைந்ததையடுத்து , அவரது தாயார் அவரை அருகிலுள்ள ஆதார வைத்தியசாலையொன்று அழைத்துச் சென்றுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி எயிட்ஸ் (எச்.ஐ.வி.) தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் பெற்றோரிடம் மேலதிக தகவல்களைக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். 

வைத்தியர்களின் முறைப்பாட்டுக்கமைய கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (விளக்கமறியல் இம்மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.) வேலியே பயிரை மேய்தலைப் போன்று பெற்றோருக்கு அடுத்ததாக பிள்ளைகளின் பாதுகாவலராகவும் , தெய்வத்துக்கு மேலாகவும் கருதப்படுகின்ற ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களின் வாழ்வை சீரழிப்பது மன்னிக்க முடியாத , தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். 

பிரணீதா வர்ணகுலசூரிய

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர் மாத்திரமின்றி, சிறுவர்களை தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின்  (United Nations Human Rights Organization) நிறைவேற்றுப்பணிப்பாளர் பிரணீதா வர்ணனுலசூரிய கூறுகின்றார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் இலங்கையில் சேவைகளை வழங்கி வரும் இலாப நோக்கற்ற அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சமூக செயற்பாட்டாளருமான பிரணீதா வர்ணகுலசூரியவிடம் இந்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

'பெற்றோரின் அறியாமை, அச்சம் மற்றும் வெட்கத்தால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை கடந்த 7 மாத காலமாக மறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆரம்பத்திலேயே இது தொடர்பில் தெரிந்து கொண்ட வைத்தியரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை. இதனால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அதற்கு முரணாகச் செயற்பட்டால் அதனை எவ்வாறு கூறுவது?' என்ற கேள்வியை கண்ணீருடன் முன்வைக்கிறார் பிரணீதா வர்ணகுலசூரிய. 

'இந்த சம்பவத்தையும், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். சந்தேகநபரிடம் இந்த மாணவி தவிர மேலும் 14 மாணவிகள் மேலதிக வகுப்பிற்குச் சென்றுள்ளனர். அது மாத்திரமின்றி சந்தேநபருக்கும் 8 மற்றும் 11 வயதுகளில் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். உண்மையில் அவர்கள் உட்பட ஏனைய மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் லயன் அறைகளுக்குள் இதுபோன்று மறைக்கப்பட்ட கதைகள் எத்தனை இன்னும் இருக்கக் கூடுமல்லவா? 

இந்த சம்பவத்துக்கு சந்தேகநபரின் மனைவியும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் நாம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடளிக்கவில்லை. காரணம் அந்த அதிகாரசபையால் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனமான சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவ்வாறான குற்றச் செயல்களின் போது குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்திருந்தால் இன்று அந்த சிறுமிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.' என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

குறித்த சிறுமி ஜனவரி மாதமளவிலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். ஆனால் 7 மாதங்களின் பின்னரே இவ்விடயம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பருவமடையாத இந்த சிறுமிக்கு எவ்வாறு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டது என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே சிறுமியின் பெற்றோர் , சந்தேகநபரான ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாத்திரமே சிறுமிக்கு தொற்று ஏற்பட்டதன் மூலத்தை அறிய முடியும். சம்பவம் இடம்பெற்றதற்கும் , அது தொடர்பான தகவல்கள் வெளியாவதற்கும் இடையில் காணப்பட்ட 7 மாத காலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார். 

எவ்வாறிருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய அரச நிறுவனம் என்ற ரீதியில் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சானக உதயகுமார அமரசிங்கவை பல முறை தொடர்பு கொண்டு வினவ முயற்சித்த போதிலும் , அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது அவர் விளக்கமளிக்கையில் ,

'இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைப்பாடளிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவோ அல்லது முறைப்பாடளிக்கவோ முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அரச பாடசாலையொன்றின் ஆசிரியர் என்பதால் அவர் அரச உத்தியோகத்தர் ஆவார். சகல அரச உத்தியோக்கதர்களுக்கும் பொதுவான ஒழுக்க கோவையொன்று காணப்படுகிறது. அதன் அடிப்படையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும். 

எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால், சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக ஒழுக்க விசாரணையை முன்னெடுக்குமாறு நாம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவித்திருப்போம். இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியால் சாட்சியமளிக்கப்படும். விளக்கமறியல் மற்றும் வழக்கு விசாரணை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 'அரச சேவையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல்' என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியரை பணியிடை நிறுத்தம் செய்ய அல்லது நிரந்தர பணி நீக்கம் செய்ய அல்லது இடமாற்றத்தை வழங்க முடியும். எனினும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதான வழக்கு விசாரணை நிறைவடைய வேண்டும். 

உண்மையில் ஒரு ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதேயன்றி, அவர்களிடம் தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதல்ல. இவ்வாறான சம்பவங்கள் மறைக்கப்பட வேண்டியவையல்ல. எனவே இவை தொடர்பில் சமூகத்துக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கு காணப்படுகிறது.

அரச உத்தியோகத்தர்களுக்கான நடத்தை நெறிமுறையை மீறியுள்ள இந்த ஆசிரியர் உட்பட இவரைப் போன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவ்வாறான சம்பவங்கள் எவரும் அறியாமல் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். இவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான புரிதல் இன்மையே அதற்கான காரணமாகும். எனவே அனைவருக்கும் அவற்றை அறிய செய்யும் படியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.' எனத் தெரிவித்தார். 

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 32 வகையான குற்றச்சாட்டுகளின் 6408 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 273 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் , 6 பாலியல் சுரண்டல் சம்பவங்களும் , 39 கற்பளிப்புக்களும் , 3 முறையற்ற பாலியல் உறவுக்கு உட்படுத்தலுடன் தொடர்புடைய சம்பவங்களும் , 309 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் , 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 6 சம்பவங்களும் , சிறுவர்களிடம் தவறான நடத்தை கொண்டமை தொடர்பில் 18 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

உண்மையில் இவை சில தரவுகள் மாத்திரமே. உத்தியோகபூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். எனவே துரதிஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டுள்ள சிறுவர் மற்றும் அவர்களது பெற்றோர் அடுத்த கட்டமாக சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

சமூகத்தின் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊரையும், பாடசாலையையும் மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. எனவே பெற்றோர் முதலில் விழிப்புணர்வுடன் முற்போக்காக சிந்தித்து செயற்பட வேண்டும். சமூகத்துக்குள் காணப்படும் போட்டித்தன்மையும் , மற்றவரைப் போன்று நாமும் எமது பிள்ளைகளை எல்லா வகுப்புக்களுக்கும் அனுப்ப வேண்டும் எண்ணத்திலும் வீண் சுமைகளை சிறுவர்கள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும். 

இலங்கையில் பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் கற்பித்தல் முறைமைகள் மிகவும் இலகுவானவையாகவே காணப்படுகின்றன. எனவே ஆரம்ப பிரிவு மாணவர்களை மேலதிக வகுப்புக்களுக்கு அல்லது தனியார் வகுப்புக்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் கிடையாது. 5ஆம் தர மாணவர்களை புலமைப்பரிசிலுக்கான வகுப்புக்களுக்கு அனுப்புவதாயினும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

அதே போன்று பெற்றோருக்கு அடுத்ததாக ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாவலர்களாக வேண்டும். ஆசிரியர்கள் என்பதற்கு அப்பால் தாமும் ஒரு பெற்றோர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் ஏனைய சிறுவர்களை பார்க்க வேண்டும். அதனை விடுத்து சொற்ப சந்தோஷங்களுக்காக ஆசான் என்ற புனிதமான தொழிலை இழிவாக்கி விடக் கூடாது.

https://www.virakesari.lk/article/164217

  • கருத்துக்கள உறவுகள்

தான் போய் வினையை வாங்கினதும் இன்றி இந்த குழந்தைக்கும் அதை கடத்தி இருக்கிறது இந்த மிருகம்.

இப்போ முன்பை போல எச் ஐ வி தொற்று ஒன்றும் மரண சாசனம் அல்ல. தகுந்த மருந்து மூலம் கிட்டதட்ட பூரண ஆயுளை நோய்தாக்கம் அதிகமின்றி கழிக்க முடியும். இதற்குரிய மருந்து இந்த மாணவிக்கு இலங்கையில் கிடைக்குமா தெரியவில்லை.

ஆசிரியரின் ஒட்டு மொத்த சொத்தையும் விற்று அதில் வரும் பணத்தை மாணவியின் மருந்து செலவுக்கு பயன்படுத்தலாம்.

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!

20 JUL, 2024 | 10:04 AM
image
 

கடந்த 2023 ஆம் ஆண்டில் 40 சிறுவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 694 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 694 பேரில் 613 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188913

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.