Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர்த்தக சூதாட்டத்தால் வதைபடும் தமிழ் சினிமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக சூதாட்டத்தால் வதைபடும் தமிழ் சினிமா!

- தயாளன்

 

a2pon0re-tile-1668945011.jpg


100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்?

திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். 125 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தப்பிக்க முடியும். இதுவே யதார்த்தம்” என்று பேசியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

விஷால் சொல்வது எந்த அளவிற்கு சரி? தமிழ் சினிமாவில் இனி குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையிடும் வாய்ப்பே இல்லையா? என்ற கேள்விகளை கேட்கும் முன் சில விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது.

vishal.jpg

கொரானா காலத்திற்கு பின் மிகப் பெரிய பட்ஜெட் படமான கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன்  வசூலைக் குவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணிவு, வாரிசு ஆகியவை ஓரளவு வசூலிக்கவே செய்தன.  தொடர் வெற்றிகளை கொடுத்த நெல்சனின் பீஸ்ட் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. எனவே, நெல்சனின் இயக்கத்தில் தயங்கி தயங்கி ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் அசுரத்தனமான வசூலை வாரிக் குவித்திருக்கிறது.  ஆனால், எல்லா பெரிய பட்ஜெட் படங்களும் வசூலைக் குவிக்கின்றனவா? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே.

126870384_f32b79b6-2c82-4991-94c6-5b9e65

தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் சிலவும் போராடி வெளிவரத் தான் செய்கின்றன. அவை சினிமா ரசிகர்களின் வரவேற்பையும் பெறுகின்றன. கையைக் கடித்துக் கொள்ளாமல் தப்பித்தோம், பிழைத்தோம் என வசூல் தரும் சிறிய படங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. பெரும் தொழிலாளர் பட்டாளத்தைக் கொண்டுள்ள சினிமா துறையில் சிறிய பட்ஜெட் சினிமா படங்கள் தான் கலைஞர்களையும், தொழிலாளர்களையும் ஒருங்கே வாழ வைத்துக் கொண்டுள்ளன. ஆனால், அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட பல நல்ல சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடக்கப்படுகின்றன.

pc-dbp-005-1022-575X755.jpg 2022 ல் வெளியாகி வரவேற்பை பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள்!

இந்த வணிக சூதாட்டம் எப்படி நிகழ்கிறது. முன்பு, திரைத் துறையில் சினிமா வினியோகம் (Film Distribution System) என்பது ஓரளவு ஜனநாயகத் தன்மையோடு, உள்ளூர் திரையரங்கு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்ற அளவில் சீராக இருந்து வந்தது.  ஏ, பி, சி என்ற வகைமையில் ஏரியா வர்த்தகம் நடந்தது. மிகப் பெரிய ஹிட் படங்கள் என்றால் 100 நாட்கள், 175 நாட்கள், 250 நாட்கள், 365 நாட்கள் ஓடக் கூடியவையாக இருந்தன.  பின்பு 50 நாட்கள் ஓடினாலே வெற்றிப் படம் என்ற நிலைமை இருந்தது. அதன் பின்பு படிப்படியாக குறைந்து ஒரு வாரத்திலேயே சினிமாவின் ஆயுள் முடிவுக்கு வரத் தொடங்கியது. வெள்ளிக் கிழமை ரிலீசானால் அடுத்த வியாழன் வரையே எல்லா சினிமாக்களுக்கும் வாய்ப்பு இருந்தது. அதிலும் விடுமுறை நாட்கள் என்றால், பத்து நாட்கள் அதிகபட்சம் திரையரங்குகளில் ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தற்போது ஒரு சினிமா, வெள்ளிக்கிழமை வெளியானால் மூன்றே நாட்களில் மாபெரும் வெற்றி அடைந்து சக்ஸக் மீட் நடத்தி முடித்து விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வசூல் என்று கணக்கு சொல்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில், 450 கோடி வரை வசூலித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிடுகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? இங்குதான் கார்ப்பரேட் பகாசுர சினிமா கம்பெனிகளின் சூதாட்ட வணிகம் நிகழ்கிறது.

23-64bb41bbbda5c.jpg

தமிழ் சினிமாவின் அதியுயர்  நாயகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல் ஆகியோரின் கால்ஷீட்டுகளுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவம் இருக்கிறார்கள்.  அவர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்ட பிறகே கதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதுகிறார்கள்.  ஏனென்றால், இவர்கள் எழுதியுள்ள திரைக்கதையில் இந்த நாயகர்கள் பொருந்த மாட்டார்கள். எனவே, இவர்களுக்கென்ற “மாஸாக” ஆக்‌ஷன் காட்சிகளுடன் திரைக்கதை வலிந்து எழுதப்பட்டு படமாக்கப்படுகிறது.

மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களுடன் களமிறங்கும் அந்த படங்கள் எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும்,  முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களில் போட்ட முதலுக்கு மேல் வசூலை வாரிக் குவித்து விடுகின்றன.  100 நாட்களில் கிடைக்க வேண்டிய வசூலை 5 நாட்களில் பெற்று விடுகிறார்கள்.  சூப்பர் ஹீரோ, சூப்பர் டைரக்டர் படங்கள் வெளியாகும் அன்று தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து திரைகளிலும் எல்லா காட்சிகளும் அந்த குறிப்பிட்ட படம் மட்டுமே வெளியாகிறது.

உதாரணமாக, தமிழ் நாட்டில் 1000 திரைகள் (Screens) இருக்கிறது எனில், சுமார் 5,000 காட்சிகள் ஒரு நாளைக்கு ஒரு படம் மட்டுமே வெளியாகிறது.  5,000 காட்சிகள் நிரப்புவதற்காக, ப்ரோமோஷனல் ஈவெண்ட்ஸ், தேவையற்ற சர்ச்சை, முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தை பார்த்தாக வேண்டும் என்ற வெறியூட்டல், ட்ரெண்டிங், படத்திற்கு தேவையான ஹைப் ஆகியவற்றின் மூலம் சுறுசுறுப்பான வேலைகளை செய்து விடுகிறார்கள்.

4dbvas10_640x360.png புரமோஷனுக்கான வர்த்தக தந்திரங்களால் தியேட்டருக்கு முன் ரசிகர்கள்!

வெறியேறிய இளைஞர்களும் ரசிகர்களும் வீக் எண்ட் கொண்டாட்டத்திற்காகச் செலவு செய்யத் தயங்குவதில்லை. ஐந்து நாட்களில் எல்லா காட்சிகளும் இப்படி நிரப்பப்படுகின்றன. இது போக, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இந்தி, வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட், ஓடிடி உரிமைகள் ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் உபரியின் மூலமாக சினிமா கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளை லாபம் சம்பாதித்து விடுகின்றன.

இப்படி செய்வதற்கான ஒரே உத்தி, சூப்பர் ஸ்டார் நாயகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைப்பது தான்.  மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்படும் அனைத்து படங்களிலுமே தயாரிப்பு செலவு படத்தின் பட்ஜெட்டில் 35% வரையே வருகிறது. அப்படியானால் மீதி 65% பெரிய நடிகர்களின் சம்பளமாக தரப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் 80 கோடி சம்பளமாகவும், படம் வெளிவந்த பின்பு “வருவாய் பகிர்வு” என்ற அடிப்படையில் மொத்தமாக 210 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ் சினிமா கொடூரமான வணிக விஷச் சூழலில் சிக்கிக் கொண்டிருப்பதன் அடிப்படைக் காரணங்களை யோசித்துப் பார்த்தால், அது நாயகர்களின் சம்பளத்தில் தான் இருக்கிறது என்பது புரியும்.  சுமார் 100 முதல் 150 கோடிகள் வரை ஊதியமாக பெறும் நாயக திரைப்படங்களின் கதை எப்படி இருக்கிறது என்று கேட்டால், சலிப்பும் கோபமும்தான் வருகிறது.

vikram_movie_review.jpg நல்ல கலைஞனான கமல் தயாரித்த மிக மோசமான படம்!

வன்முறை, ஆபாசம், டார்க் காமெடி என்ற பெயரில் அபத்த நகைச்சுவை, ஸ்லோ மோஷனில் ஹீரோ பில்டப் காட்சிகள், நடிகைகளின் ஆபாச குத்துப்பாட்டு, கழுத்தறுத்து கொல்லும் சண்டைக் காட்சிகள், ஆ…. ஓவென்று அலறும் பெரும் ஓசை, இசை என்ற பெயரில் இரைச்சல், வைப் என்ற கூத்து இவற்றின் தொகுப்பாக இருக்கிறது தமிழ் சினிமா. இந்த திரைப்படங்களின் இலக்கு குழந்தைகள் மற்றும் விடலைகளாக இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய அவலம்.  குழந்தைகளை திரைக்கு வரவழைப்பதற்காக காமிக்தனமான ஹீரோக்களை உலவ விடுகிறார்கள். அவர்கள் செய்யும் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் பெரியவர்களாலேயே பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு சென்சார் போர்டு எந்த அடிப்படையில் U சான்றிதழ் அளிக்கிறது என்பது மிகப் பெரிய மர்மம்.

இந்த சூழலில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையிட எங்கே இடம் இருக்கிறது? கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களிலும் மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் வருகின்றன. ஆனாலும், மிக நல்ல குறைந்த பட்ஜெட் படங்களும் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெறுகின்றன. கன்னடத்தில் வெளியான டேர்டெவில் முஸ்தபா, ஆச்சார் அண்ட் கோ, மலையாளத்தில் வெளியன நெய்மர் போன்ற படங்கள் எளிய கதையம்சத்துடன் சுவாரஸ்யமான திரைக் கதையுடன் வெளியாகி உள்ளன. தெலுங்கிலும் கூட சிறிய எளிமையான படங்கள் வருகின்றன.

new-project-5-3-tile-1688709721-Copy.jpg இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள்!

இந்த வணிக கொள்ளையில் முக்கியமான வேறொரு கோணமும் இருக்கிறது. பான் இந்தியா சினிமா எடுக்கிறோம் என்று சொல்லி, இந்தியா முழுமைக்கும் வணிகத்தை விரிவுபடுத்த கதைத் தேர்வும், திரைக் கதையும் நடத்தப்படுகிறது.  கேஜிஎப், காந்தாரா, RRR, புஷ்பா போன்ற படங்களின் வெற்றியைப் பார்த்து தாங்களும் சூடு போட்டுக் கொள்கிறார்கள். ஜெயிலர் படத்தில் வில்லன் வினாயகம், சுனில், மோகன்லால், சஞ்சய்தத் என்று வெவ்வேறு சினிமா பிரபலங்களை கேரக்டர்களாக எழுதி தள்ளுகிறார்கள்.

சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறதா என்றால், அங்கேயும் கார்ப்பரேட்காரர்கள் தான் கதையை தீர்மானிக்கிறார்கள்.  வணிக ரீதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களையே அவர்களும் வெளியிட விரும்புகிறார்கள். அதீத வன்முறை, செக்ஸ் காட்சிகளுடன் உள்ள திரைக்கதைகள் கொண்ட சினிமாவையும் வெப் சீரீஸ்களையுமே அவர்கள் விரும்புகிறார்கள்.

lenin-editor03-1597509974-2.jpg எடிட்டர் லெனின், நடிகர் போஸ் வெங்கட்

எடிட்டர் லெனின் தற்போது, வெறும் எட்டரை லட்ச ரூபாய்க்கு தரமான தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட சினிமா ஒன்றில் பணியாற்றி இரண்டே நாட்களில் எடிட்டிங்கை முடித்து கொடுத்ததாக கூறுகிறார்.

திரைப்பட இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட், “100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள்? என்று கேட்க ஆள் இல்லை. மக்களுக்கு தேவையான நல்ல படங்களை தராமல், தங்கள் கஜானாக்களை நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல், சிறிய பட்ஜெட் என்று வெற்று வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது, நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண் அள்ளி கொட்டுவதற்கு சமம்” என்று கொந்தளிக்கிறார்.

முதலில் இங்கு தமிழக தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சில பெரும் முதலைகளிடம் இருந்து தமிழ் சினிமாக்களுக்கு விடுதலை வேண்டும். சுதந்திரமான வணிகம், சூதாட்ட மனமில்லாத நேர்மையான வணிகத்தை நிலைப்படுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான சிறிய பட்ஜெட் படங்களை தியேட்டருக்கே கொண்டு வர முடியாத நிலைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். சிறிய பட்ஜெட் படங்களால் தான் சிறந்த ரசனையை வளர்க்க முடியும்.

நல்ல சினிமா என்பது பட்ஜெட்டை பொறுத்ததல்ல. கதையும், திரைக்கதையுமே நல்ல சினிமாவை தீர்மானிக்கின்றன. நாயக வழிபாட்டு, கார்ப்பரேட் சினிமாவாக சீரழிந்து கிடக்கும் தமிழ் சினிமாவை மீட்டெடுத்து எளிய மக்களின் சினிமாக்கள் வெல்லும் காலம் வரும்.

கட்டுரையாளர்; தயாளன்,
 

 

https://aramonline.in/15126/big-gambling-cinema-industry/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.