Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுத்தாளர் மோ-யென்னின் நோபல் ஏற்புரையின் தமிழாக்கம் - கை.அறிவழகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக் கல்லறை ஒன்றில் உறங்கிப் போனது பெரும் துயரமென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறையை உடைத்து அம்மாவின் நினைவுகள் தளும்பிக் கண்ணீராகப் பெருக்கெடுக்க அங்கே நின்றிருப்பது இன்னும் எத்தனை துயரமென்று யோசித்துப் பாருங்கள்.....
 
எங்கள் கிராமத்தைக் கடந்து போகிற புதிய ரயில்பாதை அம்மாவின் கல்லறை வழியாகப் போகிறதென்று அரச சேவகர்கள் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள்.
 
ஆனாலும், வேறு வழியில்லை. அம்மாவின் உறக்கத்தை மீண்டும் ஒருமுறை கலைக்க வேண்டும். குழந்தைகளுக்காக உறக்கமின்றிக் கிடப்பதொன்றும் உலகில் அம்மாக்களுக்குப் புதிதில்லை.
 
இப்போதும் துளி நினைவு கிடைத்து விட்டால் கூடத் தன் பிள்ளைகளுக்காகக் கல்லறையிலிருந்து எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக் கொள்ளக் கூடியவள்தான்.....
 
அம்மாவின் கருவறைக்குள் கொஞ்சமாக வளர்ந்து கால்களை அவள் வயிற்றுச் சுவர்களில் மோதுகிற நள்ளிரவுகளில் எல்லாம் அம்மா உறக்கத்தை மறந்து, முழுதாய் வளராத என் பிஞ்சுக் கால்கள் அந்த இருட்டறைக்குள் விசாலமாக அசைந்து கொள்வதற்காய் எத்தனை இரவுகள் விழித்துக் கிடந்திருக்கிறாள்?
 
கால் பதிகிற தடத்தில் கைகளால் வருடியபடி அவள் கொடுத்த அன்பினால் தானே உலகம் தழைத்திருக்கிறது. உடலே பெருஞ்சுமையான மனிதனுக்கு, உடலே வாதையான வாழ்க்கைக்கு, இன்னொரு உடலை உள்வைத்து ஊனும் உயிரும் கொடுத்து வளர்ப்பதன் வலி எல்லோரும் உணர்ந்து கொள்ளக் கூடியதில்லை தான்.
 
நினைத்தவற்றைத் தின்று உடல் கிடத்தி உருண்டு புரள முடியாத இரவுகளை அம்மாதானே கடந்து வருகிறாள்; அறிவும், அதிகாரமும் கிடைத்துத் தனியுடலாக நானே சகலமும் அறிந்த மானுடத் துண்டமென்று துடிக்கிற பொழுதுகளில் அம்மாவின் கருவேறிய இரவுகளில் கிடந்த மன அழுத்தமும், உயிர் வலியும் நமக்கு அத்தனை எளிதாகப் புரிய வாய்ப்பில்லை தான்.
 
நாங்கள், கலவையான நினைவுகளோடும், இனம் புரியாத மனப் பதற்றத்தோடும் அம்மாவின் கல்லறையை உடைப்பதைப் பார்த்தபடி நின்றிருந்தோம்; வெயிலில் அப்பாவின் நிழல் அதிர்வதை என்னால் உணர முடிந்தது; அம்மா என்கிற புவிப் பந்தின் அழியாத நினைவுகள் உடைசல்களில் இருந்து ஒரு புதைக்கப்பட்ட நதி பீறிட்டு மேலெழுவதைப் போலிருந்தது அங்கே நின்றிருந்த கணங்களில்.
 
அம்மா மண்ணோடு கலந்திருந்தாள்; உடல் மட்கிப் போய் நிலத்தோடு கலந்து விட்டிருந்தது; ஒரு சடங்காக அங்கிருந்த மண்ணைக் கலயங்களில் சுமந்து நாங்கள் பீச் மரத் தோட்டத்துக்கு அப்பால் வெகு தொலைவில் பிறிதொரு நிலத்தில் அவளை விதைத்தோம். இதயச் சுவர்களில் மீன்களின் செதிலைச் சுரண்டுகிற ஆணிகள் பொருந்திய கட்டையால் சுரண்டுவதைப் போலிருந்தது அந்தக் கோடை நாள்.
 
கசங்கிய உடல்களோடு வீட்டுக்கு வந்து குளித்துப் பசியாறியபோது அம்மாவின் நினைவுகள் வீடு முழுவதும் மிதந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. நான் அம்மாவின் கடை மகன், இளஞ்சூடான அவளது உடலோடு நினைவு தெரிந்தவரை ஒட்டியே வளர்ந்தவன்.....
உலகம் பெருவெடிப்பில் தெறித்துச் சிதறி நெருப்புக் கோளமாய்த் திரண்டு குளிர்ந்து உயிர் பரப்பித் தழைத்ததென்ற உண்மை அறியாத வரையில் அம்மாவின் அணைப்பும், சொற்களுமே உலகமாய் வளர்ந்தவன் நான்.
 
நாங்கள் ஏழ்மையின் எல்லைக் கோடுகளைத் தொட்டுணர்ந்து வாழ்ந்தவர்கள். கோதுமை வயல்களில் அறுவடை முடிந்த நாளொன்றில் அம்மாவும் நானும் சிதறிக் கிடக்கிற தானியங்களைச் சேகரிப்பதற்காகப் போனோம். அம்மா தன் சேலைத் தலைப்பை விரித்து சேகரித்த தானியங்களைக் கட்டி வைத்திருந்தாள்....
 
என் சின்னஞ்சிறு விரல்களால் நானும் இயன்றதைச் சேகரித்து சேலை முடிச்சில் போட்டபடி இருந்தேன்; மஞ்சள் நிறத்தில் நிலம் கண்ணுக்கெட்டியவரை பரவிக் கிடந்தது; நிழலேதும் இல்லாத சதுர வயல்கள் எங்களை அரவணைத்திருந்தன; கத்தி மீசையும், கம்பும் எப்போதும் இருக்கிற காவல்காரனின் காலடிகள் நிழலோடு எங்களை நோக்கி ஓடி வருவதை அம்மா உணர்ந்த கணத்தில் நாங்கள் ஓடத் துவங்கினோம்....
தானியங்களையும், என்னையும் பிணைத்துக் கொண்டு அம்மா அப்படி வயல்களில் ஓடுவதை நான் முன்பு எப்போதும் பார்த்ததில்லை; பசியைத் துரத்துகிற இருத்தலுக்கான மானுடத்தின் ஓட்டமாக அது இருந்தது; அம்மாவால் நீண்ட நேரம் ஓட முடியவில்லை; வாழ்நாளெல்லாம் ஓடிக் களைத்த அவளது கால்கள் தளர்ந்து தடுமாறி நிலத்தில் சரிந்து விட்டன.....
 
அம்மா, அப்போதும் எனது கைகளை விட்டு விடவில்லை; நெருங்கி வந்த கத்தி மீசைக் காவல்காரன் அம்மாவைத் தன் கையில் இருந்த தடியால் அடித்தான்; அம்மா தவறுதலாக ஒரு அடியும் என் மீது படாமலிருக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள்.....
கனவான்களின் வயல்களில் எலிகளும், பறவைகளும் சிதறிக் கிடந்த கோதுமையைக் கவலையின்றித் தின்று பசியாறுகையில், அம்மா இப்படி நிலத்தில் நிலை குலைந்து கிடந்தாள்....
 
அம்மாவின் இடது பக்க உதட்டில் குருதி பெருகிக் கொண்டிருந்தது; வாழ்க்கையின் மிகத் துயரமான நாளின் சாட்சியாகவும், சிறிதும் கருணையற்ற வாழ்க்கையின் எச்சமாகவும் கூனிக் குறுகி அம்மாவின் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன்.
ஆனால், அந்த நாள்தான் வாழ்நாள் முழுவதும் அம்மாவின் கருணையை நினைவு கூர்கிற வாய்ப்பை எனக்கு வழங்கியது; அந்த நாள்தான், துயரத்தின் கோரப்பிடி தன்னைச் சூழ்ந்திருக்கிற பொழுதிலும் அம்மா என் மீது காட்டுகிற நேசத்தைக் குறைத்துக் கொண்டு விடமாட்டாள் என்கிற நம்பிக்கையின் ஒளியை என் மீது பாய்ச்சியது....
 
அந்த நாள் தான் மன்னிப்பின் வலிமையான சான்றாக, மன்னிப்பின் ஆற்றில் இருந்து இதயத்துக்குள் பாய்கிற குளிர் நீராக அம்மா இருக்கிறாள் என்று எனக்கு உணர்த்தியது.
 
ஆம், நிலத்தில் வீழ்ந்து மீண்டெழுந்து நாங்கள் வீடு திரும்பிய நாட்களின் சாயலற்ற இன்னொரு நாளில், வலிமையான கரங்களோடும் பழி தீர்க்கும் உக்கிரத்தோடும் நான் வளர்ந்திருந்த இன்னொரு நாளில் சந்தைக்கு அருகே நான் அந்தக் கத்தி மீசைக் காவலனைப் பார்த்தேன்.....
அப்போது அம்மாவும் என் அருகிலிருந்தாள்; மூப்பும், பிணியும் கொண்ட வெளிர் நிற முடிகளோடு நடுங்கும் கால்களோடு அவன் எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்தான்; துயரத்தின் வடுக்கள் சினமாகப் பெருக நான் கைகளை உயர்த்தி அவனை அடிக்கப் பாய்ந்த கணத்தில் கருணையால் செய்யப்பட்டிருந்த அம்மாவின் கரங்கள் என்னைத் தடுத்திருந்தன.
 
அம்மா, அதே மெலிதான குரலில் என்னிடம் சொன்னாள், "அன்று என்னை அடித்த மனிதனும் இவனும் ஒன்றில்லை மகனே, காலம் மனிதனுக்குள் ஊடுருவி அவனைத் தினமொரு பாத்திரமாக மாற்றிக் குழைக்கிறது; அன்று கனவான்களின் காவலனாக இருந்தவன், இப்போது ஏதுமற்ற நடுங்கும் கால்கள் கொண்ட முதியவன்; அவனது கண்களில் வாழ்வின் துயரம் மண்டிக் கிடக்கிறது".
 
வாழ்வை முழுமையாக உணர்ந்த வானுயர் முனிவனின் இதய சுத்தியைப் போல அம்மாவின் அந்தச் சொற்கள் எனது உயிரில் இன்னும் ஒட்டிக் கிடக்கின்றன; மானுடத்தை நேசிக்கிற, உயிர் வாழ்வை மதிக்கிற மாபெரும் பாடங்களை எல்லாம் அம்மாக்கள் தான் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்; உலகின் மிகப் பெரிய மேதைகள் எல்லாம் கூட அவற்றில் இருந்துதான் மிகச் சொற்பமானவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 
வீட்டைச் சுற்றி மிதக்கிற அம்மாவின் கிளறப்பட்ட நினைவுகள், உலகை ஒரு பஞ்சுப் பொதி போல சுற்றி இருக்கிறது; குடிநீர் பிடிக்கிற போத்தலுக்குள் அம்மா வாழ்கிறாள்; வைக்கோல் போரின் உள்ளிருக்கும் கணகணப்பைப் போல அம்மாவின் நினைவுகள் நெஞ்சக்குழிகளில் நிரம்பி இருக்கிறது....
ஒற்றைப் போத்தல்தானிருந்தது அப்போது; கனவான் வீட்டுக் குழாயில் நீர் பிடிக்கப் போன வழியில் நாய்களை வேடிக்கை பார்த்தபடி போத்தலைக் கீழே விட, வீட்டின் ஏழ்மை குறித்த எந்த அக்கறையுமின்றி அது உடைந்து போனது, நான் சின்னஞ் சிறுவனல்லவா?
அச்சம் சூழ வைக்கோல் போருக்குள் ஒளிந்து நாளெல்லாம் கிடக்க, மாலையில் அம்மாவின் குரல் பக்கத்தில் வந்து விட்டது; அடியும், உதையும் பெற்றுக் கொள்வதென்று மெல்லத் தவழ்ந்து வெளியேறிய போது அம்மாவின் கரங்கள் தலையைக் கோதியபடி "எங்கே போனாய் என்று உயிர் பதறிப் போனேனே அன்பு மகனே" என்று சொன்னதால் தானே பெரும் கனமான இந்த வாழ்க்கையைக் காதலித்து நான் வளர்ந்து நிற்கிறேன்.
அம்மா என்பது வெறும் சொல்லா? உறவா? அம்மா என்பது அகலாது நின்று மானுடத்தின் தாகம் தணிக்கிற ஜீவ நதியா? தெரியாது; ஆனால், என்னைப் பொறுத்தவரை அம்மா என்பது அல்லலுறுகிற மானுட இதயத்தை ஆற்றுப்படுத்துகிற அருங்கொடை. உலகெங்கும் குற்றங்களின் சேற்றால் அடைக்கப்படுகிற நீதியின் பாதையை எந்தச் சலனமும் இல்லாமல் தூர் வாரிக்கொண்டே இருக்கிற மாபெரும் இயக்கம் தானே அம்மா.
அம்மாவும் நானும் தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ்களைக் கூடையில் சுமந்து சந்தையில் விற்றுக் கொண்டிருந்த ஒரு நாளில், முட்டைக்கோஸின் விலை இரண்டு ரூபாயென்று முன்னரே சொல்லி இருந்தாள் அம்மா; விலை பற்றிக் கவலை கொள்ளாத ஒரு சீமாட்டியிடம் கூடுதலாய் ஒரு ரூபாய் வைத்து நான் விற்றது தெரிந்த அன்றைய மாலையில் அம்மா சொன்னாள்:
 
"உண்மையோடு இருப்பது தானே வாழ்வின் அடிப்படை,; ஒற்றை ரூபாய் கூடுதல் லாபத்தால் அம்மாவின் நம்பிக்கையைச் சிதைத்தாயே? அதற்கு விலை உண்டா?"
 
மானுடன் தன் சொந்த வாழ்க்கைக்கு உண்மையாக இருப்பது தானே உலகத்தின் அறமாகப் பெருகி வளர்கிறது; அம்மாதானே அந்த அறத்தை எனக்குள் கிளைத்த மானுடத்தின் வேர்களில் ஊற்றினாள்.
 
குள்ளமான, பார்க்க சகிக்காத, ஊளை மூக்கோடும், பசியோடும் இருந்த என்னை அரவம் போல் சுற்றிக் கிடந்த ஏழ்மையின் தடங்கள் அண்டி விடாதபடிக்கு மாபெரும் மானுட இயக்கத்தையும், மன்னிப்பின் வலிமையையும், நீதியின் வேர்களையும் நோக்கி என்னைத் திருப்பியது அம்மா என்கிற பேராற்றல் தானே?
 
ஊரெங்கும் கதை சொல்லிகளைப் புத்தி பேதலித்த உதவாக்கரைகள் என்று புழுதி வாரித் தூற்றிய நாட்களில், வீட்டு வேலைகளை விட்டு விட்டு இரவுகளில் பெருங்கதை சொல்லிகளின் கதை கேட்கப் போவேன்....
 
இரவுகளில் நான் கேட்ட கதைகளை அடுப்படியில் களைத்துக் கிடக்கிற அம்மாவுக்கு, எந்தக் கவர்ச்சியும் இல்லாத, என் கீச்சுக் குரலில் திரும்பச் சொல்கிறபோது அம்மா சிரித்தபடி கேட்டாள், "நீயும் அப்படித்தான் மாறுவாயோ, என் அன்பு மகனே?".
ஆனால், அவள் நம்பினாள். இந்தக் குள்ளமான உதவாக்கரை ஊளை மூக்கன், உலகைத் தன் கதைகளால் வெல்வானென்று. அவள் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாதவளாக, குழந்தைகளை அவர்களின் கனவுகளுக்கும் சேர்த்து உணவளிக்கிற மகத்தான இயக்கமாக வளர்த்து விட்டு பீச் மரத் தோட்ட நிழலிலோ, பிறகு அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு விதைக்கிற இன்னொரு நிலத்திலோ ஓய்வு கொள்கிறாள்.
பின்பு நிலத்தில் இருந்து கிளைத்துப் பரவி வெளியாகி, வெளியிலிருந்து கதிரவனாய், குளிர் நிலவாய், பெருங்கடலாய், ஆர்ப்பரிக்கும் நதியாய், பள்ளத்தாக்கின் அமைதியாய், சிகரங்களில் தவழும் உயிர்க் காற்றாய், எல்லாமுமாய் உயிர்த்தெழுகிறாள். பிறகு மானுட நிலம் செழிக்க மனைவியாகவோ, மகளாகவோ மறுபடி மறுபடி உருமாறிக்கொண்டே நிலைக்கிறாள்.
 
அன்புக்குரியவர்களே, இந்த மாபெரும் சபையில் வந்து நிற்பதற்கான என் முதல் பயண நாளில் அம்மா தன்னுடைய கழுத்தில் நீண்ட காலம் அணிந்திருந்த ஒற்றைச் சங்கிலியை விற்று விட்டிருந்தாள். கிடைத்த பணத்தில், தான் இப்போது ஓய்வு கொண்டிருக்கிற நிலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் நான்கு புத்தகங்களை எனக்களித்து என்னை வழி அனுப்பினாள்.....
வழியெங்கும் அம்மாவின் சொற்களையும், அன்பையும் விடாது பிடித்தபடி தான் நான் உலகின் தலைசிறந்த கதைசொல்லி என்று எனை நீங்கள் சொல்கிற இந்த மேடையை வந்தடைந்திருக்கிறேன். பீச் மரத் தோட்டங்களில் இருந்தும், பிறகு தோண்டப்பட்ட நிலத்தில் இருந்தும் அவளே எனது கதைகளாகவும் மாறி இருக்கிறாள்.
 
மூலம் - மோ-யென்
தமிழில் - கை.அறிவழகன்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

அம்மா என்பது அல்லலுறுகிற மானுட இதயத்தை ஆற்றுப்படுத்துகிற அருங்கொடை. உலகெங்கும் குற்றங்களின் சேற்றால் அடைக்கப்படுகிற நீதியின் பாதையை எந்தச் சலனமும் இல்லாமல் தூர் வாரிக்கொண்டே இருக்கிற மாபெரும் இயக்கம் தானே அம்மா.

பிழம்பு, நல்லதொரு பதிவு👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.