Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரம்போ – ப.தெய்வீகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரம்போ – ப.தெய்வீகன்

EditorOctober 17, 2023
ரம்போ – ப.தெய்வீகன்

(1)

தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம்.

ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவுகள் என்று அவனுக்கு யாரும் இல்லை.

சித்திரக்கற்களால் மடக்கி மடக்கிக் வேயப்பட்ட பென்னாம்பரிய அந்த நினைவுப் பேராலயத்தை பூமரக்கிளைகள் தழுவியபடி சரிந்திருந்தன. கிளைகளில் ஆங்காங்கே குமிழ்களாய் வெளித்தள்ளிய பொன்நிற மலர்கள், வெயில் கரைந்து உறைந்ததுபோல காட்சியளித்தன. நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் வெள்ளை வண்ண பிளாஸ்திக் கதிரைகளை நிரம்பியிருந்தனர்.

பாண்ட் வாத்திய ஓசை நினைவாலயத்தின் பின்பக்கமாகக் கேட்டவுடன், அரங்கிலிருந்தவர்கள் நிமிர்ந்து இருந்துகொண்டார்கள். சத்தம் ஆரோகணித்துச் சென்றது. நீல வண்ணச்சீருடையில் வாத்தியக்குழுவினர் அணிவகுத்தபடி மேடையை நோக்கி நகர்ந்துவருவது ரம்யமாகத் தெரிந்தது. வாத்தியக்காரர்களுக்குப் பின்னால், சாம்பல் வண்ண சீருடைகளில் இலட்சினை பொருத்திய படைத் தளபதிகள் ஊர்ந்து வந்தார்கள். அவர்களது நடையில் இராணுவ இறுக்கமும் பெருமையும் தெரிந்தது.

எல்லோரும் எழுந்து நின்று மதிப்பளித்தார்கள். பேர்கஸன் சக்கர நாற்காலிக்குள்ளிருந்து விழிகள் விரியப் பேரார்வத்துடன் எட்டிப்பார்த்தான். இறுதியாகக் கண்டுகொண்டோம்.

கழுத்தைத் தவிர மேனியெங்கும் கருமை படர்ந்த கொழுத்த நாய். அணிவகுப்பின் மத்தியில் இராணுவ வீரன் ஒருவனுக்கு அருகில் மிக நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. தன்னைச் சூழக் கேட்டபடியிருக்கும் சத்தங்களுக்கு மிகவும் பழக்கமானதைப் போன்ற ஒத்திசைவான தோரணை அதன் மாபிள் கண்களில் தெரிந்தது. அவ்வப்போது கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தது. நடையில் கம்பீரத்தைக் காண்பித்தது.

பாண்ட் வாத்திய ஒலிகள் ஓய்ந்து, போர் வீரர்களை நினைவு கூரும் உரைகள் நிறைவடைந்தன. கௌரவிப்பு நேரம் ஆரம்பமானது. வெளிநாடுகளில் சென்று நேச நாட்டுப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் பெருஞ்சாதனைளை தளபதி ஒருவர் பேசத்தொடங்கினார். சாதனைகள் நிகழ்த்தியவர்களின் பெயர்களை அவர் அரங்கதிரக்குறிப்பிட்டார். பின்னர், அந்தப் பெயர்களை அழைத்தபோது, இறுக்கம் குலையாத சீருடைகளுடன் வரிசையில் வந்த சேனாபதிகள் தங்களுக்குரிய இலட்சினைகளை வாங்குவதற்கு மார்பு புடைக்க நிமிர்ந்து நின்றார்கள். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துத்தினார்கள். மேடையின் ஓரத்தில் குந்தியிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களது நாய், இப்போது தனக்கான நேரம் வந்துவிட்டதைப்போல முன்னாலிருந்த கூட்டத்தைப் பெருமையோடு பார்த்தது.

பல வண்ண இலச்சினைகள் தாங்கிய புதிய தளபதியொருவர் மேடையின் வலதுபுறமிருந்த ஒலிவாங்கித் தண்டின் முன்னால் வந்து நின்றார். கௌரவம் பெறவுள்ள பெருமதிப்புக்குரிய நாயின் சாதனைகளை வரிசைப்படுத்தினார். போர் நெடி கொண்ட மூன்று நாடுகளில் பணியாற்றியபோது, தன்னாற்றலால் கண்டுபிடித்த கண்ணிவெடிகள் என்ற நீண்ட கணக்கொன்றைச் சொன்னார். எதிரி நாட்டுக் கிளர்ச்சியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு அந்த நாய் செய்த உதவிகளை கந்தக மணம் பறக்க விவரித்தார். விமான நிலையங்களில் அது முகர்ந்தறிந்த வெடிகுண்டுப் பொதிகள், போதைப்பொருள் பொட்டலங்கள் என்று அத்தனை சாதனைகளையும் மந்திரம்போலச் சொல்லிச்சென்றார். கரவொலி சூழ்ந்த மேடையின் நாயகனாய் அந்த நாய் நாணத்தோடு வாலைக் குழைத்தது. மாபிள் கண்கள் விரியச் சிரித்துக் குனிந்தது.

“தீர்மானித்துவிட்டேன். எனது நாயின் பெயர் ரம்போ” – உச்ச மகிழ்வில் என் காதருகில் வந்து சொன்னான் பேர்கஸன்.

தடித்த கருநீலத்துணியால் போர்த்திக் கழுத்தில் கறுப்புப்பட்டியணிந்து, மேடையின் மத்திக்கு அழைத்துவரப்பட்ட ரம்போ, அதற்கு முன்னர் அங்கு வந்த சகல படைத்தளபதிகளையும்போல மிடுக்கோடு நிமிர்ந்து நின்றது. ரம்போவுக்காக எல்லோரும் எழுந்து நின்று சிறப்பாகக் கரவொலி எழுப்பினர். அரங்கில் சத்தங்கள் பெருகப் பெருக ரம்போவின் கண்களில் பெருமகிழ்ச்சியின் அலைகள் திரண்டு தெரிந்தன. ரம்போவுக்கான பதக்கங்களை ஆஸ்திரேலியாவின் மூத்த படைத்தளபதிகளில் ஒருவர் முழந்தாளில் இருந்து அணிவித்தார். பதக்கங்களை சூடிக்கொண்ட ரம்போவிலும் இப்போது இராணுவ மிடுக்கொன்று தெரிந்தது.

(2)

போர் நிலங்களில் பணிபுரிந்த பெருமைக்குரிய நாய்களை, அவை ஓய்வுபெற்ற பின்னர் வீட்டுப்பிராணிகளாகத் தருவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக அறியக் கிடைத்தவுடன், அவ்வாறான அவ்வாறான நாயொன்றைத் தான் வாங்கப்போவதாக பேர்கஸன் என்னிடம் கூறியிருந்தான். ஆரம்பத்தில் அவனது விருப்பம் எனக்குள் மென்மையான ஆச்சரியத்தைத் தந்தது. தனிமையின் பேரழுத்தங்களினால் அவன் பீடிக்கப்பட்டு விட்டானா என்று யோசித்தேன். ஆனால், அவனுக்குள்ளிருந்த விருப்பம் வேறு பலதாயிருந்தது.

மூன்று மாங்களின் பிறகு நானும் பேர்கஸனும் கன்பராவிலுள்ள சிறப்பு விலங்குகள் காப்பகத்துக்குச் சென்றபோது ரம்போ சற்றுக்கொழுத்திருந்தது. கண்களில் பழைய மிடுக்குக் குறைந்து கனிவு தெரிந்தது. ரம்போவை அழைத்துச்செல்வதற்கான ஆவணங்களை அதிகாரி கார்லோஸிடம் பெற்றுக் கையெழுத்திட்டுக்கொடுத்தான் பேர்கஸன்.

போர் நிகழ்ந்த இடங்களில் பணி செய்து திரும்பிய களைப்பிலிருந்து ரம்போ முழுதாக மீளவில்லை என்று கூறி அதற்கான மாத்திரைகள் அடங்கிய குப்பியை கார்லோஸ் தந்தான். சிவப்புக் குப்பியிலுள்ள குளிசைகள் தீர்ந்த பிறகு, மெல்பேர்னில் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற மருந்தக விவரங்களையும் அவர் குறித்துக் கொடுத்தான்.

“இன்றிலிருந்து இன்னொரு ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய படைவீரரும் உன் வீட்டில் வசிக்கப்போகிறார். அவரைக் கவனமாகப்பார்த்துக்கொள்” கார்லோஸ் சொன்னான்.

கார்லோஸின் குரலில் தெரிந்த கரிசனை எனக்குப்புரிந்தது. பேர்கஸனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்த கார்லோஸ், தனது பாதிச் சிரிப்பை எனக்கும் தந்தான்.

இறுதியில் ரம்போவை எங்களது காரின் பின் ஆசனத்தில் ஏற்றியபோது, அது காருக்கு மிகப்பழக்கமான பயணிபோல ஏறிக்கொண்டது. பின்ஆசனத்தில் அங்குமிங்குமாக தனது கொழுத்த உடலைப்புரட்டி விளையாடியது. முன் ஆசனத்தில் கால்களை வைத்து எழுந்து நின்று, தனது தலையைச்சரித்துவைத்து கண்ணாடி வழியாக வெளியே பார்த்தது. காரின் வாசனை அதற்கு மிகவும் பிடித்திருந்தது.

கன்பராவிலிருந்து மெல்பேர்ன் வரும்வரைக்கும், பேர்கஸன் நெடு வீதியையும் வாகனம் ஓட்டிய என்னையும் பார்த்ததைவிட, பின் ஆசனத்திலிருந்த ரம்போவைக் கவனித்ததுதான் அதிகம். நீண்ட சொந்தமொன்று தனக்குள் மீண்டது போன்ற நிறைவு அவன் மேனியெங்கும் பிரவாகித்து வழிந்தது.

(3)

எங்கள் வீட்டுக்கு அருகில் பாம்பு மலை என்ற விவசாய நிலங்களுடன் கூடிய பெருங்குன்று ஒன்றிருந்தது. அதன் அடிவாரத்தைச் சூழவும் சணல் வயல்கள் நிறைந்திருக்கும். அறுவடை முடிந்த பிறகு, அடிக்கட்டைகள் நிறைந்த பெரு நிலப்பரப்பு மஞ்சள் கடல்போலக் காட்சியளிக்கும்.

மாலை வேளைகளில் நாங்கள் ரம்போவை அழைத்துக்கொண்டு அந்த வயல் வெளிகளில் உலாவிவரலாமென்று பேர்கஸனும் நானும் புதிய ஒழுங்குமுறையொன்றைத் தீர்மானித்துக்கொண்டோம். மாத்திரைகளின் தூக்கத்தினால் நடுப்பகல் வரைக்கும் சோம்பல் வழிந்தபடி வீட்டின் ஒவ்வொரு மூலையாக குட்டி நித்திரையடிக்கும் ரம்போ, மாலையானதும் சுறுசுறுப்பாகும்.

பாம்பு மலைக்கு மிக அண்மையில் நீளமான நதியொன்று பரந்திருக்கும். பளபளக்கும் நீல நிறத்தில் பள்ளத்தில் தெரியும் அந்த நதி ரம்போவுக்கு மிகவும் பிடிக்கும். பெரு வெளிகளையும் நதியையும் கண்டவுடன் தன்னை அறியாமல் தனியாக ஓடத்தொடங்கும். தாவித் தாவி தரையை முகர்ந்து பார்க்கும். சில இடங்களில் கால்களால் நிலத்தைக் கிளறும். திடீரென்று சில இடங்களில் நிறுத்தி யோசிப்பதுபோல முகத்தைச் சரிக்கும். மீண்டும் வேகமாக ஓடும். ரம்போவின் சகல உடல்மொழிகளும் சாதாரண நாய்களைவிட மிகவும் வித்தியாசமானவையாகவே தெரிந்தன. அது என்ன சொல்ல வருகிறது என்பதைக் கலைத்து கலைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எமக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதற்கிடையில் என்னுடைய அம்மாவின் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்து சென்ற புண்ணியத்தில், ரம்போ ஈராக்கில் கண்ணிவெடியகற்றும் வேலையில் ஈடுபட்டது என்ற தகவல், அடுத்த தெருவிலிருந்த ஹாலிப் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. ஒரு நாள் வேலை முடிந்து வரும்போது ஹாலிப் தனது மகனோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.

ஹாலிப்பும் அவனது குடும்பமும் நான்கு வருடக் கடும்போராட்டத்துக்குப் பிறகு, ஈராக்கிலிருந்து வெளியேறி படகு வழியாக ஆஸ்திரேலியா வந்தவர்கள். அவர்களின் குடும்பத்தில் இருவர் உட்பட உறவினர்கள் பதினொரு பேர் ஈராக் போரில் இறந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள பூங்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்திருந்த போதுதான் ஹாலிப்பினை முதன்முதலாகக் கண்டேன். பிறகு, அவ்வப்போது மாலையில் நான் பட்மின்டன் விளையாடப் போகும்போது தனது மகனோடு அங்கு வருவான். போர் தனது குடும்பத்தை தின்று சிதைத்த கதைகளைச் சொன்னான். அவனது இரண்டாவது மகளும் மனைவியின் தங்கையும் தனியாக இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோது, கண்ணிவெடியில் சிக்கிப் பலியான சம்பவத்தை ஒருநாள் கூறினான். போரின் சத்தங்கள் அடங்காத அவனது கண்களைப் பார்த்தேன். தனது மகளின் உடலின் எந்தப் பாகமும் எஞ்சவில்லை என்று என் கைகளில் தன் கைவைத்துச் சொன்னபோது, அவனது கைகளில் நான் உணர்ந்த நடுக்கம், எனது ஒவ்வொரு நரம்பிலும் பரவியோடியது.

“ஹலோ ஹாலிப் வாருங்கள் வாருங்கள்….”

ஹாலிப்பும் அவனது மகனும் ரம்போவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டுக்குத் தங்களை அழைத்துப்போகும்படி கேட்டார்கள்.

அவர்கள் வந்திருந்த மாலை நேரம் ரம்போ எங்களுடன் பாம்பு மலைப்பக்கமாக வழக்கம்போல நடைபோவதற்கு மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தது. ஹாலிப்பையும் மகனையும் கண்டவுடன் அதன் கண்களைவிட வால்தான் வேகமாகப் பேசியது. ரம்போவைக் கண்டதும் அதன் கண்களைப் பார்க்கும் ஏக்கத்துடன் ஹாலிப் தலையை அங்கும் இங்குமாகச் சரித்தான். தன் நாட்டைக் கண்டுவந்த தேசாந்திரியிடம் கதை கேட்கும் ஆர்வத்தோடு அவன் ரம்போவை அள்ளியணைப்பதற்கு அவசரப்பட்டான். ரம்போவுடன் ஒரு பிணைப்பு உருவாகியதுபோல அவனது முகத்தில் பல மின்னல் கொடிகள் தோன்றி மறைந்தன.

இந்தக்காட்சியை பேர்கஸன் தனது சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கனிவோடு கண்டு களித்தான். ரம்போ தனது வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பேர்கஸின் முகத்திலும் பெரும் மலர்ச்சி தெரிந்தது.

“நாங்கள் ரம்போவுடன் வெளியே போகும் நேரம்தான், ஹாலிப் நீங்களும் வாங்களேன்”

ஹாலிப் மிகுந்த மகிழ்ச்சியோடு இணைந்துகொண்டான். ஹாலிப்பைவிட அவனது மகனோடுதான் ரம்போ நெருக்கமானது. ரம்போ முதலில் அவனது கால்களை முகர்ந்தது. அவன் குனிந்திருந்து ரம்போவின் தலையை வருடிவிட்டான். அவனது பிஞ்சு விரல்களின் ஸ்பரிஸம் ரம்போவுக்கு புதிதாயிருந்தது. கூச்சத்தில் அவனது கால்களை நக்கியது. பிறகு வழக்கம்போல சணல் வயல்களுக்குள் வேகமாக ஒடியது. வரம்புகளின் மீது துள்ளியெழுந்து புற்தரைகளில் விழுந்து, முடிகளை உதறியது. ஹாலிப்பின் மகன் ரம்போவின் சேட்டைகளைப் பார்த்துச் சிரித்தவாறே அதனைக் கலைத்துச் சென்றான்.

“இந்த நாட்டின் அடையாளம் கங்காரு. பண்ணைக்காரர்கள் என்றால் குதிரை. மாடு, ஆடு என்று எத்தனையோ வீட்டுப் பிராணிகள் உள்ளன. நாய் என்றாலும்கூட எத்தனையோ அழகான – பெறுமதியான – வீட்டுநாய்கள் வளர்ப்பதற்கு இங்கே இருக்கின்றன. போர் நிலத்து நாயை நீங்கள் வாங்கியிருப்பது புதிராக இருக்கிறது”

பேர்கஸனைப் பார்த்து ஹாலிப் கேட்டான்.

“நாங்கள் எல்லோரும் போரின் பிடியிலிருந்து அதிஷ்டத்தினால் தப்பிவந்தவர்கள் இல்லையா? மீண்டும் அந்தப் போரின் அடையாளமொன்றை வீட்டுக்குள் கொண்டுவந்து வைத்திருப்பது, எங்களது கெட்ட நினைவுகளை பாதுகாப்பதற்கு நாங்களே ஒரு பிரிட்ஜ் வாங்குவது போல் இல்லையா”

ஹாலிப் தனது சந்தேகங்களை சரை சரையாக கொட்டினான்.

“உண்மைதான் ஹாலிப். போர் முனையில் ஏதோவாரு ஒளி காத்திருப்பதாக எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இந்தநாட்டில் வந்திருந்து பார்க்கும்போதுதான் புரிகிறது, போர் என்பது உலகின் மிகப்பெரிய அவநம்பிக்கை. அதன் மீது நாம் வைத்திருந்த எதிர்பார்ப்புதான் உலகின் மிகப்பெரிய பொய். படையிலிருக்கும் யாருக்கும் அது புரியாது. அதுதான் போர் எமக்குத் தருகின்று போதை. அந்த அவநம்பிக்கையிலிருந்து மீண்டவர்கள் எல்லோரிலும் நான் என்னைப் பார்க்கிறேன். ரம்போ என்னைப்போன்ற எனக்கான அடையாளம்”

பேர்கஸனின் பதிலால் ஹாலிப்பின் முகம் ஆச்சரியமாய் மாறத்தொடங்கியது.

“உனது நாட்டினைக் கடைசியாகப் பார்த்து வந்த ஒரு நாயைக் காணவேண்டும் என்ற பேரார்வத்தோடு எப்படி ஓடிவந்தாயோ, அதுபோலத்தான்; இந்தப்போரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ஒருத்தனை – பழியுணர்ச்சியற்ற ஒருவனை – எத்தனை யுகத்துக்கும் போரை நிராகரிக்கும் ஒருத்தனை – பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எஞ்சிக்கிடக்கிறது. போருக்குள்ளிருந்து தப்பியோடி வந்தவர்கள்தான் போரிற்கான நிராகரிப்பை மீண்டும் மீண்டும் அழுத்தமாக உணரவேண்டும். இதோ பார்… எனது ரம்போவை…இது போருக்கு ஒட்டுமொத்தமான எதிரி. யார் புதைத்துச் சென்றாலும் கண்ணிவெடியைக் கண்டுபிடித்துக் கிளறச் சொல்லும். யார் வெடிகுண்டோடு நின்றாலும் முகர்ந்துபிடித்து செயலிழக்கச் சொல்லும். ரம்போ போரின் தூய எதிரி. எனக்கு இந்த நாய்கள் மீது பல ஆண்டுகளாக ஏற்பட்ட ஈர்ப்பும் நேசமும் எத்தகையது என்பதை இந்த நாய்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை என்பது ஒன்றுதான் எனக்குள்ள கவலையே தவிர, ரம்போ எனக்குக் கிடைத்திருப்பது, எனக்குள்ளிருக்கின்ற குற்ற உணர்வை கொஞ்சமாவது தணிக்கிறது ஹாலிப்”

பேர்கஸன் சொல்லிமுடிக்கவும், நாங்கள் பாம்பு மலைக்கு மிக அருகாமையில் வந்துவிட்டிருந்தோம். மேற்குச் சூரியன் தன் செங்கரங்களால் நதி நீரில் கோலம்போடத் தொடங்கியிருந்த நேரம். ரம்போ வழக்கம்போல நதியின் ஓரங்களை முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. வயல்களுக்கு நீர் இறைப்பதற்காகக் கட்டிய வரிசையான வாய்க்கால் கற்களில் ஒன்றின் மீதிருந்து ஒன்றுக்குப் பாய்ந்து பாய்ந்து, நீரில் தன் முகம் பார்த்தது. தன் காதுகளின் அருகில் கட்டளைகள் கேட்காத வித்தியாசத்தை அவ்வப்போது உணர்ந்துகொள்வதும் திரும்பிப் பார்ப்பதுமாகப் பதகளித்தது. ரம்போவிற்கு எங்களுடனான நடைபயணம் தினமும் புதிதாக இருந்தது.

ஹாலிப்பின் மகன் “ரம்போ…..ரம்போ…..” – என்று கத்தியபடி அதனைத் தன் பிஞ்சுக்கால்களால் துரத்திக்கொண்டிருந்தான்.

(4)

நான்கு மாதங்களில் ரம்போ பேர்கஸன் போல என்னுடனும் மிகவும் நெருக்கமாகிட்டான். காலையில் எழுந்தவுடன் மாத்திரை, அதன் பிறகு அவனுக்காக கட்டப்பட்ட அலுமீனியக் கூட்டுக்குள் மீண்டும் நுழைந்திருந்து நீண்ட நித்திரை. அன்றாட ஆகாரங்களில் குறைச்சலில்லை. வதக்கிய கோழி மற்றும் முயல் இறைச்சி போன்றவற்றை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை பேர்கஸன் முறையாகச் சமைத்துப் பரிமாறினான். மதியத்திற்குப் பிறகு இன்னொரு மாத்திரை. மாலையில் நான் வேலைவிட்டு வந்தபிறகுதான், ரம்போவின் அன்றைய நாளே உற்சாகமாக ஆரம்பமாகும்.

ரம்போவுக்கு ஒரே மாதிரியான கால அட்டவணைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கும் அதற்குரிய கட்டளைகளை பேர்கஸினிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பிடித்திருந்தது. அதனை அது நிதானம் தவறாமல் பின்பற்றியது. நித்திரையற்ற நேரங்களில் ரம்போ அதிக சத்தத்தை விரும்பியது. பாம்புமலைப் பக்கம் கூட்டிச்செல்கின்றபோதெல்லாம், வெட்டவெளியில் வீசுகின்ற காற்றுச் சத்தம்கூட ரம்போவுக்குள் ஏதோவொரு வழமை உணர்வை ஏற்படுத்தியது. ரம்போவை நோக்கி தொடர்ச்சியாக அதன் பெயரை நான் அழைத்தாலோ, பெரிய சத்தத்தில் கூவினாலோ அது ஏக மகிழ்ச்சியில் தன் உடலை உதறியபடி புற்தரையில் புரண்டு எழும்பும். உடல்மொழிகளின் ஊடாக தனக்குத் தேவையானதை எனக்குக் குறிப்புணர்த்துவதில் ரம்போவுக்கு பெரும் திருப்தியிருந்தது.

ஆனால், அன்று இரவு –

கூட்டுக்குள்ளிருந்த ரம்போ பெரிய சத்தத்தில் குரைக்கத் தொடங்கியபோது நானும் அம்மாவும் அதிர்ந்துபோனாம். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து நேரத்தைப் பார்த்தபோது இரவு ஒரு மணியாகியிருந்தது. ரம்போவை அடைத்துவைத்த அலுமீனியக் கூட்டுப்பக்கமாகக் கேட்ட பெரும் ஊளைச் சத்தம் எங்கள் இருவருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ரம்போ இதுவரைக்கும் எழுப்பியிராத பெரும் சத்தம் அது. ரம்போவின் சத்தம்தான் என்று நம்புவதற்கே எனக்குப் பெரும் குழப்பமாகவிருந்தது. ரம்போவின் கூட்டுக்குள் ஏதூவது நுழைந்துவிட்டதால், அச்சத்தில் குரைக்கிறதா என்று முதலில் நினைத்தேன். பின் தாழ்வார வெளிச்சத்தைப் போட்டபோது, பேர்கஸனும் எழுந்து தனது சக்கரநாற்காலியுடன் கூட்டுப்பக்கமாக வந்துவிட்டான். எங்கள் வீட்டின் பின் வீட்டிலிருப்பவர்களும் பக்கத்து வீட்டார்களும் ஏற்கனவே ரம்போவின் சத்தத்திற்கு எழுந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. ரம்போ விடாது குரைத்துக்கொண்டிருந்தது.

“பசிபோல இருக்குது, குசினியில கோழி எலும்புகள் கொஞ்சம் கறியோட கிடக்குது. கூட்டுக்குள்ள வச்சுவிடு”

அரை நித்திரையில் அம்மா ஆலோசனை சொன்னார்.

அலுமீனியக் கூட்டுக்கு அருகில் சென்ற எனக்கு, ரம்போவின் இரண்டு கண்களும் மினுங்கும் குருதிக்கோளங்களாக அச்சமூட்டின. ரம்போவை நான் பார்த்தபோது தனதுடலில் தணல் விழுந்ததுபோலக் குரைத்தது. அந்தக்கூட்டின் அலுமீனியத் தடிகளைத் தனது கூரான பற்களால் கடித்தபடி என்னை மிரட்டியது. நான் கூட்டுக்கு அருகில் செல்லச் செல்ல அதன் குரைப்பொலி முன்பைவிட அதிகரித்தது. என்னையும் பேர்கஸனையும் கர்ஜனையோடு பார்த்தது. என்னைவிட பேர்கஸன் அதிகம் பயந்திருந்தான். பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த குழந்தையொன்றின் நீண்ட அழுகையொலி, ரம்போவின் குரைப்புக்கு மேல் கேட்டது. ரம்போ தனது கூட்டுக்குள் அங்குமிங்குமாக நடந்து தனது உடலைப்புரட்டிக் குரைத்துக்கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடக்கூடும் என்ற பெரும் பீதி என் தலையைப் பிரித்தது.

“ஏன் இன்னும் குலைக்குது? சாப்பாடு வச்சனியே”

அம்மாவின் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாமல், எனது நா தடுமாறியது.

“நேற்றுத்தான் ரம்போவுக்கான மாத்திரை முழுவதுமாகத் தீர்ந்திருந்தது. அதனைக் கார்லோஸிடம் அழைத்துச் சொன்னபோது, “நான்குமாதங்களாகிவிட்டன, இனிமேல் மாத்திரைகளை முற்றாகத் தவிர்க்கலாம்” என்று அவன் சொல்லியிருந்தான். ஆனால், மாத்திரை உட்கொள்ளாத முதல்நாளே ரம்போவுக்குள் இவ்வாறு பெரும் மாற்றங்கள் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை”

பேர்கஸன் பரிதாபமாகச் சொன்னான்.

அடுத்த தெருவிலுள்ள வீடுகளிலும் வெளிச்சங்கள் தெரியத்தொடங்கின. யாராவது பொலீஸிடம் சொல்வதற்கு முன்னர், நாங்களே அழைத்து முறைப்பாடு செய்யலாமா என்று அம்மாவும் நானும் யோசித்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், அம்மா சாமியறையில் வைரவர் படத்துக்கு முன்னால் தீபத்தை ஏற்றிவைத்து “காக்க காக்க கனவேல் காக்க” – என்று நடுங்கும் குரலில் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கினார். இன்னும் சற்றுப் பொறுக்கலாம், ரம்போ களைத்துப் படுத்துவிடுவான் என்று வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நான் நடந்துகொண்டிருந்தேன். எனக்கு கால்களின் வழியாக பயக்குளிர் ஏறிக்கொண்டிருந்தது.

“நாய் கூட்டுக்குள்ள கொஞ்சத் திருநீறு போடுவமே தம்பி…வைரவர் வாகனம் சொன்னது கேக்கும்…..”

எனது முகத்தில் தெரிந்த பதில் ரேகைகளைப் புரிந்துகொண்டு, அம்மா திரும்பவும் சாமியறைக்குள் போய்விட்டார்.

மூன்று மணி நேரப் பொறுமையின் பின்னர், காலை நேரக் குருவிச் சத்தங்களும் வாகன ஒலிகளும் கேட்கத்தொடங்கின. ரம்போவின் குரைப்பொலி அடங்கியது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அலுமீனியக்கூட்டுக்குள் சிறிய அனுங்கல் ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்னர் தூங்கிவிட்டது.

நாயின் சத்தம் அடங்கும்வரைக்கும் காத்திருந்தவர் போல அம்மா தொடங்கினார்.

“தேவையில்லாத கோதாரி வேலை தம்பி இது. ஊர் பேர் தெரியாத நாய வீட்டுக்குள்ள கொண்டுவந்து வச்சுக்கொண்டு பெரிய தலையிடியப்பா. நாளைக்கே ரெண்டுபேருமா போய் அவங்களிட்டத் திருப்பிக் குடுத்துப்போட்டு வாங்கோ….”

தூக்கம் கலைந்த சினம் அம்மாவை உலைத்தது. தனது காலை நேர வேலைகளுக்கு ஒத்திசைவாக ரம்போவை வைது தீர்த்தார்.

(5)

பெருங்குற்ற உணர்ச்சியில் உடைந்துகிடந்த பேர்கஸனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவன் இரண்டாம் தடவையும் போரினால் காயமடைந்ததைப்போல மிகவும் உடைந்து போயிருந்தான்.

வேலைக்கு அழைத்து லீவு சொன்னேன். கன்பரா அரச அலுவலகங்கள் ஒன்பதுமணிக்குத்தான் திறக்கும். காத்திருந்து கார்லோஸிற்கு அழைப்பெடுத்தேன்.

“போர் நிலங்களில் பணிபுரிந்த நாய்கள் சத்தங்களுக்குப் பழக்கப்பட்டவை அவற்றின் காதுகளில் ஏதாவதொரு சத்தம் விழுந்து கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒலிகளுமில்லாத இரவுகள் இந்த வகை நாய்களுக்கு மிகுந்த ஒவ்வாமை மிக்கவை. அதற்காகத்தான் இவற்றுக்கு மாத்திரைகள் கொடுத்து, வீட்டு விலங்குகளாக மாற்றி, உங்களுக்குத் தருகிறோம். ஆனால், இவ்வளவு மாதங்களுக்குப் பிறகும் ரம்போ உங்களுக்குச் சிக்கல் கொடுக்கிறது என்றால், நீங்கள் திரும்பவும் மூன்று நேர மாத்திரைகளை கொடுக்கத் தொடங்குங்கள். நாயினால் ஆபத்து தொடரும் என்று நீங்கள் கருதினால், மீண்டும் கன்பராவுக்குக் கொண்டுவாருங்கள்”

கார்லோஸ் இது குறித்து முன்பே சொல்லியிருந்தபோதும், அதன் நீண்ட விளைவுகள் இவ்வளவு பயங்கரமானவை என்று பேர்கஸனோ நானோ உணர்ந்திருக்கவில்லை.

ரம்போவுக்கான மாத்திரையை வாங்குவதற்கு வெளியே போய்வந்தபோது, அம்மா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். முன்வீட்டு மஸிடோனியன்காரனும் பக்கத்துவீட்டு ஆஸ்திரேலியனும் நான் இல்லாத நேரத்தில் பேர்கஸினிடம் வந்து ரம்போ பற்றிய முறைப்பாட்டினை கடுமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்மா ஆங்கிலத்தில் தனக்கு விளங்கியதை கோர்த்து வைத்து எனக்குச்சொன்னார். புதிதாக வாங்கிய நாய் என்றும் திருப்பிக்கொடுக்கப்போவதாகவும் அவர்களிடம் உறுதியளித்து பேர்கஸன் அவர்களை மன்றாடி அனுப்பிவைத்திருக்கிறான்.

வீடு திரும்பிய என்னிடம், “அவகாசமே வேண்டாம், நாயைக் கன்பராவுக்குத் அனுப்பிவிடுவோம்” என்று பேர்கஸன் குரல் தழுதழுக்கச் சொன்னான். மாற்று மார்க்கமோ மாத்திரை மார்க்கமோ வேண்டாம் என்பதில் பேர்கஸன் உறுதியாயிருந்தான். தான் வெறுக்கும் போரின் சிறுபொறியொன்றை தானே மூட்டிவிட்டதைப்போல அச்சம் அவனது விழிகளில் விம்மியது.

காலை தூக்கத்திலிருந்து எழுந்து, கூட்டுக்குள்ளிருந்து எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரம்போவைப் பார்த்தேன். எதுவுமே நடக்காததுபோல வாலைக்குழைத்தது. சிறு ஒலிகளை எழுப்பி அலுமீனியத் தடிகளின் வழியாக செல்லம் கொஞ்சியது. எனக்குக் கூட்டைத் திறப்பதற்கு அச்சமாக இருந்தது. முதல் நாளிரவு சுற்றுவட்டாரமும் பட்டபாடுகள் இன்னமும் நினைவில் அகலவில்லை.

வேலைக்குப் போகாத எனது காரினை வீட்டின் முன் கராஜில் கண்டுகொண்ட ஹாலிப், மதியமளவில் ஐந்தாறு நண்பர்களுடன் வந்தான். ரம்போவின் முன்னிரவு அட்டகாசங்கள் அடுத்த தெருவுக்கும் எட்டிவிட்டதா என்ற ஆச்சரியத்தோடு அவனை வரவேற்றேன். ஹாலீப்போடு வந்தவர்கள் பேர்கஸன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஈராக்கியர்கள். தங்களது நாட்டில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் ரம்போவைப் பார்க்கவேண்டும் என்று வந்திருப்பதாக ஹாலிப் கூறியபோது எனக்கு நெஞ்சுக்குள் குளிர் குழாயொன்று வெடித்தது போலிருந்துது.

ஹாலிப்பிடம் முதல்நாளிரவு நடந்தவற்றைச் சொன்னேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கினேன். நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, அவன் வந்தபோதிருந்த பூரிப்பு முகத்திலிருந்து மறைந்தது. தனது நிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சக அகதி மீதான கவலையும் பரிவும் அவனுக்கு ரம்போ மீது எழுந்ததை உணரமுடிந்தது. கண்கள் கலங்கினான். அவன் ரம்போவில் அதிகம் உரிமைகொள்வது எனக்குப் புதுமையாயிருந்தது.

“உங்களுக்கு இது புதிததாக இருக்கலாம். இந்தப் பிரச்சினை என்னுடைய மகளுக்கும் பல காலமாக இருந்தது. அவள் பிறந்ததிலிருந்தே யுத்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு, சதைகளைவிட சத்தங்களால் வளர்ந்தாள். இங்கு வந்த பிறகு, நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இது மனச்சிதைவு என்று கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்களுக்குப் பலகாலமானது நண்பனே. எத்தனையோ மாத்திரைகள், எத்தனையோ தடவைகள் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட தூக்கச் சோதனைகள் என்று சில மாதங்களுக்கு முன்னர்தான், சத்தங்கள் இல்லாமல் எனது மகள் தூங்குகிறாள்”

அவன் சொல்லி முடிக்கும்போது எனக்கு கண்கள் இருண்டன. முதல் நாளிரவு அலுமீனியக் கூட்டுக்குள் தெரிந்த நெருப்புக்கோளங்கள் போன்ற ரம்போவின் விழிகள், மூளையின் எல்லா நரம்புகளிலும் மின்னுவது போலிருந்தது.

(6)

கன்பராவிலிருந்து மெல்பேர்னுக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், விலங்குகள் காப்பு அமையத்திலிருந்து நான்கு விசேட அதிகாரிகள் பச்சை வண்ண வாகனத்தில் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் உத்தரவின்படி நாங்கள் ரம்போவின் கூட்டினை இரண்டு நாட்களாகத் திறக்கவில்லை. மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து குவளையில் வைத்து, கூட்டுக்குள் தள்ளிவிட்டிருந்தோம்.

ரம்போவைத் திரும்பக்கொடுக்கப் போகிறோம் என்ற தகவலறிந்து ஹாலிப் காலையிலேயே தனது முழுக்குடும்பத்துடன் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தான். அவனது நண்பர்களும் கூடவே வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த விலங்குகள் காப்பு மையத்தின் வாகனத்தைக் கண்டு, அப்பகுதியால் நடை சென்ற பலர், வந்து புதினம் கேட்டார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் வாசலில் நின்று விளக்கம் சொன்னார்கள். அவர்கள் ஆச்சரியமாக, ‘நாங்கள் செய்வது சரிதான்’ என்ற முகக்குறிகளோடு தலையாட்டிச் சென்றார்கள்.

பேர்கஸன் வீட்டின் பின்பக்கமாக தங்களது தடித்த கம்பிக்கூட்டோடு சென்ற அதிகாரிகள், ரம்போவினைப் பாதுகாப்பாக தங்களிடம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வாகனத்தில் கொண்டுவந்து ஏற்றினார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் அப்போதுதான் ரம்போவைப் பார்த்தார்கள். அவர்கள் தங்களை அறியாமலேயே “ரம்போ….ரம்போ…” – என்று அழைத்தார்கள். ரம்போ அவர்களின் சத்தங்களினால் மிகுந்த பரவசமடைந்தது. அந்தக்கூட்டத்தில் என்னையும் பேர்கஸனையும் தேடியது. என்னைக் கண்டவுடன் வேகமாக வாலை ஆட்டியபடி தடித்த கம்பிக்கூட்டுக்குள் உடலைப்புரட்டி செல்லம் பொழிந்தது.

எப்போதும் எழுப்புகின்ற விநோத ஒலிகளினால் சமிக்ஞை தந்தது. என் விழிகள் கண்ணீரால் நிரம்பியது. ரம்போ மங்கலாகவே தெரிந்தான்.வெளியில் வரவிரும்பாத பேர்கஸன் வீட்டின் முன்னறையில் சக்கர நாற்காலியிலிருந்து அழுத சத்தம் வெளியிலும் கேட்டது.

வாகனம் புறப்படத்தயாரானது. ஹாலிப் என் தோள் மீது கைபோட்டு அருகில் வந்து நின்றான். பெரும் கூட்டத்ததையும் சத்தங்களையும் சீருடை அணிந்த அதிகாரிகளையும் கண்ட ரம்போ மிகுந்த மகிழ்ச்சியில் கூட்டுக்குள் துள்ளிக்குதித்தது. கேட்டால் எதையும் செய்யத்தயார் என்பதுபோல அங்குமிங்குமாய் உடலை வளைத்தது.

மெது மெதுவாக ஊர்ந்துகொண்டு எங்கள் தெருவினால் ஓடத்தொடங்கிய வாகனத்தின் பின்னால், ஹாலிப்பின் மகன் “பாய்….பாய் ரம்போ….” என்றபடி ஓடி ஓடி வழியனுப்பினான்.

முற்றும்
 

https://vanemmagazine.com/ரம்போ-ப-தெய்வீகன்/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

யுத்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு, சதைகளைவிட சத்தங்களால் வளர்ந்தாள். இங்கு வந்த பிறகு, நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இது மனச்சிதைவு என்று கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்களுக்குப் பலகாலமானது நண்பனே.

காலத்துக்கு ஏற்ற கதை. தந்ததற்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.