Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்பு தந்த புகைப்படத்தை எடுத்தவரின் 3 லட்சம் நெகட்டிவ்கள் என்ன ஆயின?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாகராஜ ராவ்

பட மூலாதாரம்,PREMNATH

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 25 அக்டோபர் 2023, 07:46 GMT
    புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மேக்அப் டெஸ்ட் போட்டோவை நீங்கள் பார்த்ததுண்டா?

தெலுங்கு திரைப்பட உலகத்தின் ஜாம்பவான் என்.டி.ராமராவ் இரவு இரண்டு மணிக்கு எடுத்த மேக் அப் டெஸ்ட் போட்டோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் திரைப்படத்தின் புகைப்படம் என பல அரிய புகைப்படங்களை எடுத்தவர் பழம்பெரும் புகைப்பட கலைஞர் நாகராஜராவ்.

தற்போது இவர் எடுத்த சினிமா புகைப்படங்களை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், மானியம் கொடுத்து பாதுகாக்க முன்வந்துள்ளது.

யார் இந்த நாகராஜராவ்? இவரது புகைப்படங்களில் அப்படி என்ன சிறப்பு? அமெரிக்கப் பல்கலைக் கழகம் இவற்றின்மேல் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது?

 
நாகேஷ்வரவாவ்

பட மூலாதாரம்,PREMNATH

படக்குறிப்பு,

நாகராஜராவ்

1950களில் இருந்து 1980கள் வரை வெளியான பல தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு முழுநேர புகைப்பட கலைஞராக இருந்தவர் சென்னையை சேர்ந்த நாகராஜராவ்.

அவர் எடுத்த பல்லாயிரம் புகைப்படங்கள் மற்றும் நெகட்டிவ் தாள்களைப் பாதுகாக்க, அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் பிரேம்நாத் ராவ் பலமுயற்சிகள் எடுத்தார். பல ஆயிரம் நெகட்டிவ்கள், போட்டோ பிரிண்ட்கள் காலப்போக்கில் கரையானுக்கு இரையாகின.

மீதுமுள்ள நெகட்டிவ் தாள்களை, பாதுகாப்பதற்கு இப்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்படப் பிரிவின் தலைவர் ரமேஷ் குமார், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 'அழிந்துவரும் கலாசார ஆவணங்களை பாதுகாக்கும்' திட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அதில், தென்னிந்தியாவின் திரைப்படங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாதுகாக்கும் திட்டம் தேர்வாகியிருந்தது.

 

மிகவும் அரிதான 1 லட்சம் புகைப்பட நெகட்டிவ்கள்

பாதுகாப்பு பணி தொடங்கிய ஒரு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சம் நெகட்டிவ் தாள்களை தூய்மை செய்து, பத்திரப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மேலும், இரண்டு லட்சம் நெகட்டிவ் தாள்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நாகராஜராவின் புகைப்படங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரமேஷ் குமார், "நாகராஜராவின் படங்கள் மிகவும் அரிதானவை. சுமார் 35 ஆண்டுகள் முழுநேரமாக திரைப்படங்களில் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்," என்றார்.

"அதுவும் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் அவர் படம் எடுத்திருக்கிறார். வெறும் சினிமாவில் எடுத்த படங்கள் என்று பார்க்காமல், இவரது சேகரிப்பில் உள்ள படங்கள் பலவும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் எவ்வாறு இருந்தன, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, அன்றைய சமூகஅமைப்பு, பொது இடங்கள் எவ்வாறு இருந்தன என்று துல்லியமாக காட்டுகின்றன," என விவரிக்கிறார்.

சென்னை எழும்பூர் பகுதியில் நகராஜராவ் வசித்த வீட்டில் ஒரு பகுதியை அவர் புகைப்பட ஸ்டுடியோவாக மாற்றியிருந்தார். அந்த வீட்டில் தொடர்ந்து வசித்துவரும் அவரது மகன் பிரேம்நாத், தந்தையுடன் பயணித்தவர். அவரது உதவியாளராக இருந்தவர். அவரது தந்தை எடுத்த பல புகைப்படங்களுக்கு பின்னால் நடந்த சுவாரசியமான தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

எம்.ஜி.ஆர்

பட மூலாதாரம்,PREMNATH

'என் தந்தை எடுத்த படம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தது'

எம்.ஜி.ஆரின் முதல் மேக் அப் டெஸ்ட் படம் பற்றி பேசிய பிரேம்நாத், 1947-இல் சினிமாவுக்காகத் தனது முதல் முதல் படத்தை எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்டார், என்கிறார்.

"'பைத்தியக்காரன்' என்ற படத்தில் நடிப்பதற்காக எடுத்த புகைப்படம் அது. இந்தப் புகைப்படத்திற்காகச் சுமார் இரண்டு மணிநேரம் எம்.ஜி.ஆர் ஸ்டுடியோவில் செலவிட்டார். என்.எஸ்.கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பிரச்னையில் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம் பைத்தியக்காரன். இதில் என்.எஸ்.கே கேட்டுக்கொண்டதால் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார்," என்கிறார் பிரேம்நாத்.

''அவருடன் வந்த மேக் அப் ஆர்ட்டிஸ்ட் சிகை அலங்காரம் செய்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் கதர் வேஷ்டி மற்றும் ஜிப்பா தான் அணிவார். அவருக்கு தாடை பகுதிக்கு கீழ் ஒரு தசை தெரியும். அது தெரியாமல் எடுக்கவேண்டும் என்பார்," என்கிறார் அவர்.

மேலும், "என் தந்தை எடுத்த படம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலான எம்ஜிஆரின் திரைப்படங்களுக்கும் என் தந்தைதான் புகைப்படம் எடுத்திருக்கிறார். முதல்வராக ஆன பின்னர், பல செய்தித்தாளில் பணியாற்றும் புகைப்படக்காரர்களிடம் நாகராஜராவ் எடுப்பதுபோல என்னை படம் எடுங்கள் என சொல்லியிருக்கிறார்,'' என நினைவுகூருகிறார் பிரேம்நாத்.

 

சிவாஜிக்கே சவால்விட்ட பானுமதி

பானுமதி

பட மூலாதாரம்,PREMNATH

மிகவும் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்த பானுமதி நடித்த 'ராணி லலிதாங்கி' திரைப்படத்தில், அவரது கதாபாத்திரம் இளவரசனுக்காகக் காத்திருக்கும் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

1957-இல் இந்த படம் வெளியான இப்படத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக முடிவு செய்யப்பட்ட சில காட்சிகள் எடுக்கப்பட்டன.

பின்னர், இந்தப் படத்தில் சிவாஜிதான் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் எடுக்கப்பட்ட சமயத்தில், பலமுறை ரிகர்சல் பார்க்கும்போது, இயக்குநர் சொல்லும் விதத்தில் நடித்து காட்டும் பானுமதி, உண்மையான காட்சி படமாக்கப்படும் நேரத்தில், தனது நடிப்பை வேறுவிதத்தில் வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதனால், இந்த படத்தில் பல காட்சிகளில், சிவாஜிக்கு சவால் விடும் விதத்தில் பானுமதி நடித்திருந்தார். ஒரு சில காட்சிகள், மீண்டும் படமாக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது, என்கிறார் பிரேம்நாத்.

 
ரிக்ஷாக்காரன்

பட மூலாதாரம்,PREMNATH

ரிக்ஷாக்காரன் ஷூட்டிங் பார்க்க குவிந்த உண்மையான ரிக்ஷாக்காரர்கள்

இந்த படம் 1971ல் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த படத்தில் ரிக்ஷாக்காரனாக நடிப்பதற்காக எம்.ஜி.ஆர் ஒரு சைக்கிள் ரிக்ஷா வாங்கி ஓட்டிப் பயிற்சி எடுத்தார்.

சில காட்சிகள் சென்னை அண்ணாநகர் பகுதியில் படமாக்கப்பட்டபோது, சென்னையில் இருந்த நூற்றுக்கணக்கான ரிக்ஷாக்காரர்கள் அங்கு குவிந்துவிட்டார்கள். அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. நடிகை மஞ்சுளாவின் முதல் படம் இது. இந்த படத்தின் விளம்பர போஸ்டரை பலரும் விரும்பி சேகரித்தனர், என்கிறார் பிரேம்நாத் .

 
சிவாஜி

பட மூலாதாரம்,PREMNATH

சிவாஜியை கம்பீரமாக காட்டும் புகைப்படம்

மகாகவி காளிதாஸ் படத்தில் 'கலைமகள் எனக்கு ஒரு ஆணையிட்டாள்' என்ற பாடல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படம் இது.

இந்தப் பாடலில் சிவாஜி அணிந்துள்ள ஆடை மற்றும் அணிகலன்கள் மூலமாக அவரின் தோற்றம் புகழ்பெற்ற கவிஞர் என்று காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அவரின் அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும், அதேநேரம், அவர் அமர்ந்துள்ள இடத்திற்கு பின்புறம் உள்ள செட் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நான்கு நபர்கள் முழு வெள்ளை உடையில் நிறுத்தப்பட்டார்கள். மிக கம்பீரமாக அவர் காட்சியளிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட படம், என்கிறார் பிரேம்நாத்.

 
ஜெயலலிதா

பட மூலாதாரம்,PREMNATH

ஜெயலலிதாவின் அபாரமான நடிப்பு

1967-இல் வெளியான 'அரச கட்டளை' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்' என்ற பாடலை ஜெயலலிதா பாடும் காட்சியின்போது எடுக்கப்பட்டது.

இத்திரைப்படத்தில், துணை நடிகையாக நடித்திருந்த போதும், ஒரு கிராமத்துப் பெண் வேடத்தில் தனது நடிப்பை வெகுசிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. இந்தப் படத்திற்கு பின்னர், அவர் லண்டனில் ஒரு நாட்டிய நிகழ்வில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்திற்கு பின்னர் ஜெயலலிதா தான் தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக இணைந்து நடித்தார்.

 
எம்.சுப்புலட்சுமி

பட மூலாதாரம்,PREMNATH

அமெரிக்கர் இயக்கிய தமிழ்ப் படம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி 'மீரா' திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டப் புகைப்படம் இது.

அதில் மிகப்புகழ்பெற்ற 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல் காட்சி இது. 1945-இல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர். டங்கன். அமெரிக்கரான இவர், தனது இந்திய நண்பர் மாணிக்லால் டாண்டன் என்பவருடன் திரைப்படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

தமிழில் மீரா படத்தை டங்கன் எடுப்பதாக முடிவானது. இவருக்குத் தமிழ் மொழி தெரியாத போதும், அத்திரைப்படத்திற்கு ஸ்டில் புகைப்படக் கலைஞராக இருந்த நாகராஜராவின் ஆங்கில அறிவு அவருக்கு மிகவும் உதவியது. தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நாகராஜராவிடம் டங்கன் கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து, இந்தியிலும் இதே படத்தை டங்கன் இயக்கினார்.

 

கண்ணகியின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படம்

விஜயகுமாரி

பட மூலாதாரம்,PREMNATH

பூம்புகார் படத்தில் விஜயகுமாரி கோவலனை இழந்த கண்ணகியாக வசனம் பேசும் காட்சி இது.

1964-இல் இப்படம் வெளியானது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியின் புகைப்படம் இது. இந்தப் புகைப்படம் பல இடங்களில் திரைப்படத்தின் விளம்பரப் படமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. கோவம், இழப்பு, பரிதவிப்பு எனப் பலவிதமான உணர்வுகளை விஜயகுமாரி இதில் வெளிப்படுத்தவேண்டும் என்பதால், மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் முன்னாள் தமிழக மு.கருணாநிதி. இந்தப் புகைப்படத்தில் உள்ள உடையலங்காரத்தில்தான் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
குலேபாகவல்லி

பட மூலாதாரம்,PREMNATH

புலியுடன் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்

நடன கலைஞரான இ.வி.சரோஜா நடித்த 'குலேபகாவலி' படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இதில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் உள்ள சரோஜாவின் படம் மற்றும் எம்.ஜி.ஆரின் படம் ஒன்றும் சித்திரவேலைப்பாடுகள் செய்யப்பட்டு விளம்பர போஸ்டர் மற்றும் துண்டுப் பிரசுர விளம்பரமாக அளிக்கப்பட்டன.

இதே படத்தில் எம்.ஜி.ஆர். புலியுடன் சண்டையிடும் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சி படமாக்கப்பட்ட நேரத்தில், பழக்கப்பட்ட புலியாக இருந்தாலும், எம்.ஜி.ஆர் மிகவும் கவனமாக அந்த காட்சிகளில் நடித்தார். குறைந்தது எட்டு முதல் பத்து உதவியாளர்கள் அந்த காட்சி படமாக்கப்பட்ட சமயத்தில் பிரம்புகளுடன் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் அணிந்த உடையின் முதல் பகுதி தடிமனான இரும்பு போர்வை போல இருக்கும். அதற்கு மேல் தோல் பட்டையைக்கொண்ட கெட்டியான துணி அணிந்திருந்தார். திரைப்படத்தில் பிரம்பு வைத்துள்ள உதவியாளர்கள் தென்படாதவாறு காட்சிகள் படமாக்கப்பட்டன.

 
குலேபாகவல்லி

பட மூலாதாரம்,PREMNATH

 

‘அன்பே வா’ படத்தைவிட அதிகம் பேசப்பட்ட படப் போஸ்டர்

கேசினோ திரையரங்கம்

பட மூலாதாரம்,PREMNATH

ஒருகாலத்தில் சென்னையில் மிகவும் பிரசித்திபெற்ற திரையரங்கமாக விளங்கிய கேசினோ திரையரங்கத்தில் முகராசி படம் திரையிடப்பட்டது.

1966-இல் அந்த படத்தின் விளம்பரத்திற்காக, ஏரோக்ராப் என்று சொல்லப்படும், பெரிய அளவிலான படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டன. இந்தத் திரைப்படம் இரண்டே வாரங்களில் எடுத்துமுடிக்கப்பட்ட படம் என்ற சிறப்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளியான அதே சமயத்தில், எம்.ஜி.ஆரின் மற்றொரு படமான 'அன்பே வா' படமும் வெளியாகியிருந்தது. ஆனால் முகராசி படத்தின் போஸ்டர்கள் ஏரோக்ராப் வகை போஸ்டருக்காக அதிகம் பேசப்பட்டது. ரசிகர்கள் படம் திரையிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே வரிசையாக நின்று போஸ்டரை பார்த்து கதையை பற்றி பேசுவார்கள், என்கிறார் பிரேம்நாத்.

சென்சார் பிரச்னையில் சிக்கிய என்.டி.ராமராவ் படம்

என்.டி.ராமராவ்

பட மூலாதாரம்,PREMNATH

என்.டி.ராமராவ் 1981-இல் நடித்த ஸ்ரீமத்விரத் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மேக்அப் டெஸ்ட் படம் இது, என்கிறார் பிரேம்நாத்.

அதைப்பற்றி மேலும் பேசிய அவர், "இந்த மேக்-அப் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆனது. அவர் அந்த சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மேலும் அரசியல் தளத்தில் நுழைந்த நேரம் என்பதால் அதிக பணிச்சுமை அவருக்கு இருந்தது. இந்த படம் அதிகாலை இரண்டு மணிக்கு எடுக்கப்பட்டது," என்கிறார் பிரேம்நாத்.

"ஸ்ரீமத்விரத் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா திரைப்படம் 1981-இல் எடுக்கப்பட்டாலும், சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்கவேண்டும் எனக் கூறியது. இந்தப் படத்தை அவரே தயாரித்திருந்தார் என்பதால், நீதிமன்றம் சென்று வெளியிட உத்தரவை பெற்று, எந்த காட்சிகளையும் நீக்காமல் 1984ல் படத்தை வெளியிட்டார்," என்கிறார் அவர்.

 
என்.டி.ஆர்

பட மூலாதாரம்,PREMNATH

தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம்

1963-இல் வெளியான 'லவகுசா' என்ற படத்தில் என்.டி.ஆர், ராமனாக நடித்த படத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படம் இது.

இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது. அந்த செட்டில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், அடுத்தடுத்து ஒரே காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த கட்சியில் ராமன் சீதையை காட்டுக்கு அனுப்புவதா அல்லது அரசன் என்ற பதவியை துறப்பதா என்ற ஆலோசனையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் முக்கியமான காட்சி இது என்கிறார் பிரேம்நாத்.

https://www.bbc.com/tamil/articles/cd1rp3j00e2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.