Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்- நிலாந்தன்

191210-Human-Rights-Day-families-of-disa
374185203_7261030803914095_8503909474860
191210-Human-Rights-Day-families-of-disa
210830_Mullaitivu_fod_2.jpg

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மோதலைப் பற்றிய விளக்கம் உண்டு. ஆனால் அது முழுமையானதாக தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் உள்ள எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைகின்ற எல்லாச் சங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மையக் கட்டமைப்பு இல்லை. கடந்த 14 ஆண்டுகளாக, சங்கங்களையும், தனித்தனிய அம்மாக்களையும் தனித்தனியாக பிரித்துக் கையாண்ட கட்சிகளும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இந்த மோதல்களுக்குப்  பொறுப்பு கூற வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட ஆகப்பிந்திய வீழ்ச்சி அது. கடந்த 14 ஆண்டுகளாக எல்லாப் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முன்னணிப் படையாக நிற்பது அந்த அம்மாக்கள்தான். கண்ணீரோடு மண்ணை அள்ளி வீசி அரசாங்கத்தைச் சபித்தபடி, எல்லாப்  போராட்டங்களிலும் முன்னரங்கில் காணப்படுவார்கள்.

கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பது இந்த அம்மாக்கள்தான். கட்சிகளோ குடிமக்கள் சமூகங்களோ அல்ல. கடந்த 14 ஆண்டுகளாக வவுனியாவிலும் முல்லைத் தீவிலும்  இரண்டு குடில்களில் மிகச் சில அம்மாக்கள் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய போராட்டத்தை மக்கள் மயப்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. மக்களும் அவர்களை நோக்கிச் செல்வது குறைவு. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். முழுத் தமிழ் மக்களுக்குமான போராட்டத்தின் உணர்ச்சிக் கூர்முனையாக அவர்களே காணப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் கணிசமானவர்கள் மூப்பினாலும் களைப்பினாலும் ஏமாற்றத்தினாலும் நோய்களினாலும் இறந்து போய்விட்டார்கள். எனினும் விடாது போராடுகிறார்கள்.

அவர்களுடைய கண்ணீருக்குத் தமிழ் அரசியலில் ஒரு மகத்தான சக்தி உண்டு. கடந்த 14 ஆண்டு கால நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் உணர்ச்சிகரமான ஈட்டி முனையாக அவர்களே காணப்படுகிறார்கள்.

அதனால்தான் அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கட்சிகளும் முயற்சிக்கின்றன ;புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும், தனி நபர்களும் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அரசாங்கம் ஒரு முறை அவர்களை, அவர்கள் பயணம் செய்த பேருந்துக்குள் அடைத்துவைத்து வெளியேறவிடாமல் தடுத்தது; அவர்களை முரட்டுத்தனமாகக் கையாண்டது. அதனால்தான் அமெரிக்க தூதுவர் அவர்களைச் சந்தித்து அவர்களோடு படமெடுத்து அதைத் தனது ருவிட்டர் பக்கத்தில் பிரசுரிக்கிறார். அமெரிக்கத் தூதர் மட்டுமல்ல, இலங்கைக்கு வரும் மேற்கத்திய ராஜதந்திரிகள், ஐநாவின் முக்கியஸ்தர்கள் போன்றோர் அந்த அம்மாக்களைச் சந்திக்காமல் செல்வது குறைவு. ஐநா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களுக்கான கண்ணீர் சாட்சியங்கள் அவர்கள்தான்.

அந்த அம்மாக்களின் சங்கங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாரும்  அரசியல் தெளிவுடையவர்கள் என்றில்லை. அந்த அம்மாக்களின் கண்ணீர்தான் அவர்களுடைய பலம். ஆனால் கண்ணீருக்கு அரசியல் தெளிவு இருக்க வேண்டும் என்று இல்லை. இது அந்த அமைப்புகளில் காணப்படும் பிரதான பலவீனம்.

அடுத்த பலவீனம், அவர்களுக்கு உதவி புரியும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தனி நபர்களும். அவர்கள்தான் உதவி புரிகிறார்கள்; அவர்கள் தான் தொலை இயக்கியால் இந்த அமைப்புகளை கட்டுப்படுத்தவும் முயல்கின்றார்கள். மூன்றுக்கும் குறையாத புலம்பெயர்ந்த தரப்புக்கள் இந்த அம்மாக்களைத் தத்தெடுக்க முயற்சிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய உதவிகள் இல்லையென்றால் கடந்த 14 ஆண்டுகளாக இந்த அம்மாக்கள் தொடர்ச்சியாகப் போராடியிருக்க முடியாது. அவர்களுடைய உதவிகள் இல்லையென்றால் இந்த அம்மாக்கள் ஐநா போன்ற உலக அவைகளுக்குச் சென்று தமது கண்ணீரைச் சாட்சியமாகக் கொடுத்திருக்க முடியாது. ஆனால் அவ்வாறு உதவி செய்யும் அமைப்புகளும் தனி நபர்களுமே  இந்த அம்மாக்கள் பிரிந்திருப்பதற்கு ஒருவிதத்தில் காரணம். கட்சிகளும் காரணந்தான்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை பலமாக இருந்த காலகட்டத்தில் இந்த அம்மாக்களின் சங்கங்களை ஒற்றுமைப்படுத்த முயற்சித்தது. முடியவில்லை. சில குடிமக்கள் சமூகங்கள் முயற்சித்தன. முடியவில்லை.  எனினும், வெளிநாட்டுத் தூதுவர்களுடான சந்திப்புகளின்போது சில சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த அம்மாக்களுக்கு உதவுவதுண்டு. ஆனால் எந்த ஒரு குடிமக்கள் சமூகத்தாலும் இந்த அம்மாக்களின் சங்கங்களை கட்டுக்கோப்பான ஐக்கிய அமைப்பாக திரட்டியெடுக்க முடியவில்லை.

கடந்த 14ஆண்டுகளாக தமிழ்மக்கள் மத்தியில் போராட்டத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கமுடியாத கட்சிகளும், தாயக அரசியலில் நிர்ணயகரமான விதங்களில் தலையிட  முயற்சிக்கும் புலம்பெயர்ந்த  தமிழர் அமைப்புகளும்  இந்த அம்மாக்களை எப்படித் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்று எத்தனிக்கின்றன. போராடத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க முடியாத மேற்கண்ட தரப்புகள்  உணர்ச்சிகரமாக எப்பொழுதும் போராட்டத் தயார் நிலையில் காணப்படும் அம்மாக்களைத் தயார் நிலை முன்னணிப் போராளிகளாகப்  பார்க்கின்றன. எனவே அவர்களைத்  தத்தெடுக்க முயற்சிக்கின்றன. அவர்களாலும் கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை, உணர்ச்சிகரமான ஒரு பொது அடித்தளத்தில் ஓரளவுக்கு  அமைப்பாகக்கூடிய அம்மாக்களையும் ஐக்கியப்பட விடுகிறார்கள் இல்லை. அதன் விளைவாகவே அம்மாக்களை கட்டுக்கோப்பான ஒரு மையக் கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியவில்லை.

வவுனியாவில் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த  நபர்கள் சிலர் உண்டு என்று அம்மாக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வவுனியா மோதலுக்குக் காரணம் கொள்கை முரண்பாடு அல்ல. கொள்கை ரீதியாக அந்த அம்மாக்களுக்கிடையே முரண்பாடுகள் கிடையாது. அந்த முரண்பாடுகளின் தோற்றுவாய் சில புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ஏற்பட்ட ஒரு முரண்பாடு. அகமுரண்பாடு. இதனைப் பகை முரண்பாடு ஆக்காமல் நேச முரண்பாடாக அணுகியிருந்திருக்க வேண்டும். அல்லது அது பகை முரண்பாடாக மாறுவதை தடுத்து இந்த அம்மாக்களை ஒரு கட்சியோ சிவில் அமைப்போ ஐக்கிய படுத்தியிருந்திருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு இடையே ஐக்கியபட முடியாத கட்சிகளும், கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியாத குடிமக்கள் சமூகங்களும் இந்த வயோதிப அம்மாக்களை எப்படி ஐக்கியப்படுத்தும்?

தமிழ்த் தேசிய அரசியலானது அக முரண்பாடுகளைக் கையாளும் பக்குவம் குறைந்தது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம் இது. மற்றொரு உதாரணம், அண்மையில் இடம்பெற்றது. அம்மாக்கள் சண்டை போடுவதற்கு சில நாட்களுக்கு முன் நடந்தது.

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரன் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், சம்பந்தர் ஓய்வு பெற வேண்டும் என்று கேட்டிருந்தார். முதுமை காரணமாக சம்பந்தர் இயலாதவர் ஆகிவிட்டார் என்பதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். கட்சியின் மிக மூத்த தலைவரைப்பற்றி அடுத்த நிலைத் தலைவர் ஒருவர் அவ்வாறு பகிரங்கமாகக் கூறுவது எதைக் காட்டுகிறது ? அது ஒர் உட்கட்சிப் பிரச்சினை. அதை ஏன் அவர் பகிரங்கமாக கூற வேண்டி வந்தது ?

ஏற்கனவே கூட்டமைப்பாக இருந்தது படிப்படியாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசுக் கட்சியாகச் சுருங்கிப் போய்விட்டது. இபொழுது அக்கட்சி தனக்குள்ளேயும் மோதத் தொடங்கி விட்டதா? தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்று போட்டிதான் அதற்கு காரணம். அது எல்லா கட்சிகளுக்குள்ளும் ஏற்படும் ஜனநாயகப் போட்டி. அதில் சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

சி.வி.கே.சிவஞானத்துக்கும் விருப்பம் உண்டு. ஆனால் மாவையும் சம்பந்தரும் தேர்தலை வைக்கிறார்கள் இல்லை. அரசாங்கம் தேர்தல்களை வைக்கவில்லை என்று கேட்கும் ஒரு கட்சி, தன்னுடைய தலைமைக்கான தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. அதன் விளைவாக கட்சியின்  அடுத்த நிலைத் தலைவர் ஒருவர் உட்கட்சி விவகாரத்தை  பொதுவெளியில் வைத்துப் பேசியிருக்கிறார்.

தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை மேற்கண்ட இரண்டு உதாரணங்களும் நமக்குக் காட்டுகின்றன. தங்களுக்கிடையே தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை பொது வெளிக்குக் கொண்டு வந்து, தங்களையும் கீழ்மைப்படுத்தி, தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தையும் பலமிழக்கச் செய்யக்கூடியவைகளாக மேற்படி சம்பவங்கள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான தேசிய இயக்கம் இல்லாத வெற்றிடத்தில்தான் இவ்வாறான மோதல்கள் ஏற்படுகின்றன. மூத்த, பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் அப்புக்காத்துமாரும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை; பாதிக்கப்பட்ட முதிய அம்மாக்களும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை.

 

https://www.nillanthan.com/6344/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.