Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும்

ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

   ஜனாதிபதி தேர்தல்கள் என்று வரும்போது ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதற்கு தனக்கு வாய்ப்பு இல்லை என்று கண்டால் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடுவார். முதல் இரு தடவைகள் தோல்வியடைந்த அவர் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடாமல் வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததைக்  கண்டோம். 

   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் அவர் இரு  பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்து பிரதமராக வரமுடிந்தபோதிலும் முழுமையாக ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க  நீடிக்கமுடியவில்லை.    இலங்கையின் அரசியல் வரலாற்றில் கூடுதலான காலம்  எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த ‘பெருமை ‘அவருக்கே உரியது.

  இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்க முடியவில்லை. தேசிய பட்டியல் மூலமாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பயன்படுத்தி அதுவும் பத்து மாதங்கள் கழித்து பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த விக்கிரமசிங்க, எவரும் எதிர்பார்த்திராத வகையில் மாற்றமடைந்த அரசியல் கோலங்களின் விளைவாக தன்னிடமிருந்து கால் நூற்றாண்டு காலமாக நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தன்வசப்படுத்தக்கூடியதாக இருந்தது.

   இவையெல்லாம் பழைய கதைகள் தான். ஆனால், ஜனாதிபதியாக வந்த பிறகு தேர்தல்கள் தொடர்பில் அவர்  கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் அரசியலில் ஏற்படுத்துகின்ற குழப்பங்கள் அவற்றை இங்கு குறிப்பிடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

  பாராளுமன்றத்தினால் தெரிவான முதலாவது இலங்கை ஜனாதிபதியான விக்கிரமசிங்க தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற விருப்பத்தைக்  கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால்,  வேறு எந்த தேர்தல்களையும் தற்போதைக்கு நடத்தக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் அவர் ஜனாதிபதி தேர்தலைப்  பற்றி மாத்திரம்  பேசுவார். ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க போட்டியிட்டு பெரு வெற்றிபெறுவார் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

   அவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்த ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. பொதுஜன பெரமுன அதன் வேட்பாளரை களத்தில் இறக்கும் என்று வெளிப்படையாக கூறுகிறது. அடுத்த தேசிய தேர்தல்களை இலக்குவைத்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதில் ஜனாதிபதி  விக்கிரமசிங்க அக்கறை காட்டுகின்றபோதிலும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை. 

   உண்மையில், ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு பாராளுமன்ற ஆதரவை வழங்கிவரும் பொதுஜன பெரமுனவோ தற்போதைக்கு தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடு்க்கக்கூடிய நிலையில் இல்லை. எந்த தேர்தல் நடந்தாலும் தங்களது கட்சி வெற்றிபெறும் என்று ராஜபக்சாக்கள் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்  என்பதைப் பற்றி சிந்திக்காமல்  பேசிக்கொண்டிருப்பது வேறு விடயம்.

    உள்ளூராட்சி தேர்தல்களுக்கும் மாகாணசபை தேர்தல்களுக்கும் நேர்ந்த கதிக்கு பிறகு தேசிய தேர்தல்களுக்கும் என்ன நேருமோ என்ற  பயம் மக்களுக்கும்  அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. இதற்கு அரசாங்கத் தரப்பில் இடைக்கிடை வெளியிடப்படும் அறிவிப்புக்களே  காரணமாகும். 

   பட்ஜெட்டில்  தேர்தல்களுக்கு  நிதி  ஒதுக்கீடு செய்தால்  மக்களின் தேவைகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் போகும் என்று  பேசும் அரசியல்வாதிகள்  ஒருபுறமிருக்க, தேர்தல் முறை சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும்  அந்த பயத்தை மேலும் அதிகரிக்கிறது. 

     இத்தகைய பின்னணியில், கடந்த மாத பிற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, அரசியலமைப்பு  ஏற்பாடுகளின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் உள்ளூராட்சி தேர்தல்களும் 2025 முதல் அரைப் பகுதியில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். 

  அதை அறிவித்து சில தினங்கள் கடந்த நிலையில் அவர் கடந்த வாரம் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் விரிவாக ஆராய்ந்து சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அவசியமான விதப்புரைகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசத்  டெப்   தலைமையில்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறார்.

  பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பளித்தல், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதிகளைச் செய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து ஆராயுமாறு ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

  பாராளுமன்ற தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் போட்டியிடும் ஒருவர் மக்களினால் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இரு சபைகளிலும் ஏககாலத்தில் அங்கம் வகிப்பதற்கு வசதிசெய்யக்கூடிய ஏற்பாடு குறித்தும் ஆராயுமாறும் ஆணைக்குழு பணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு ஏற்பாட்டினால் ஏற்படக்கூடிய பயன் என்ன என்பது குறித்து எவருக்கும் விளங்கவில்லை. 

  எவருமே அத்தகைய  கோரிக்கையை இதுகாலவரையில் முன்வைத்ததில்லை  என்றாலும் ஜனாதிபதி அதில் விசித்திரமான அக்கறை காட்டுகிறார். பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து தனது  கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஒரு சந்தர்ப்பத்தில்  இந்த யோசனையை அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆறு மாதகால அவகாசத்திற்குள் அல்லது ஜனாதிபதி தேர்தல் வருவதற்குள் அதனால் பணிகளை நிறைவுசெய்யமுடியுமா என்று ஏற்கெனவே அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டன.

 கடந்த  உள்ளூராட்சி தேர்தல்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு எதிர்பார்த்த பயன்களை தரவில்லை என்று கண்டறியப்பட்ட  கலப்பு தேர்தல் முறையை (தொகுதி அடிப்படையிலான முறையும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையும் கலந்தது)  பாராளுமன்ற தேர்தலுக்கும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடந்த மாதம் சமர்ப்பித்திருந்த நிலையில் இந்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதும் விஜேதாசவின் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்தாலோசனை நடத்திக்கொண்டிருந்தவேளையிலேயே அவர் அந்த  ஆணைக்குழு நியமிக்கப்பட்ட தகவலை அறிந்துகொண்டதும் அரசாங்கத்திற்குள்  தீர்மானங்களை எடுப்பதில் அதன் தலைவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய  ஒருங்கிணைப்பின் இலட்சணத்தை தெளிவாக  அம்பலப்படுத்துகிறது.

   ஜனாதிபதி  விக்கிரமசிங்க இன்னமும் ஒரு வருடத்துக்கே பதவியில் இருக்கமுடியும். அதற்குள் அக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டியிருக்கிறது. தன்னால் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது என்று உறுதிசெய்யும் வரை அவர் தேர்தலில் களமிறங்குவது குறித்து திட்டவட்டமாக அறிவிக்கக்கூடிய சாத்தியமில்லை.

   தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து அவர் பேசும்போது தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு உபாயங்களை தேடுகிறார் என்பது இன்று பொதுவெளியில் பரவலான கருத்தாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட ‘ தேசத்தின் மனநிலை’ என்ற  கருத்துக்கணிப்பில் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக கண்டறியப் பட்டிருக்கிறது. 

  பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில்  தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்  மறசீரமைப்பு நடவடிக்கைகள் தனக்கு மக்கள் மத்தியில் செலவாக்கை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வைத்திருந்தார்.

  ஆனால், அரச  வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து அண்மைய வாரங்களாக செய்யப்படும் வரி அதிகரிப்புகளும் விலைவாசி உயர்வும் மீண்டும் மேலும் வாழ்க்கைச் செலவை கடுமையாக அதிகரிக்கச் செய்து மக்களை திணறடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு கடுமையாக அதிகரிக்கிறது.

   இத்தகைய சூழ்நிலையில், தனக்கு  வாய்ப்பான தருணத்துக்காக  காத்திருக்கும் ஜனாதிபதி  உண்மையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் என்றே தோன்றுகிறது. என்னதான் நீண்டகால அரசியல்வாழ்வு அனுபவத்தைக் கொண்டவராக இருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் தலைவர்களில் வெளியுலகினால் பெரிதும் மதிக்கப்படுபவராக விளங்குகின்ற போதிலும் சொந்த 

 மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட ஒரு தலைவர் என்ற நிலைக்கு அவரால் வரமுடியாமல் இருக்கிறது. 

   காலம் செய்த கோலம் காரணமாக ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்க முடியாவிட்டால் அவரது  ஐக்கிய தேசிய கட்சியின் நிலை தற்போதையதை விடவும் மிகவும் பரிதாபகரமானதாக  இருந்திருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கண்ட வரலாற்றுத்  தோல்விக்கு பிறகு தனது  கட்சியை கலைத்துவிடுவது குறித்து  விக்கிரமசிங்க யோசித்தாகவும் கூட  கூறப்பட்டது.

  தேர்தல்களில் வெற்றிபெறமுடியாத சூழ்நிலை இருக்கும் என்றால் அதற்கு மாற்றுவழி தேர்தல்களை நடத்தாமல் விடுவதோ அல்லது தனக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களை  காலந்தாழ்த்திக் கொண்டுபோவதோ அல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பது  பதவியில் இருப்பதற்கான  நியாயப்பாடு தொடர்பில் ஏற்கெனவே சவாலுக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்துக்கு பலமுனைகளிலும்  மேலும் நெருக்கடிகளைக்  கொண்டுவரும்.

  ஜனாதிபதியாக வந்த நாள் தொடக்கம் விக்கிரமசிங்க தேர்தல்கள் தொடர்பில் உறுதியான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அரசியலமைப்புக்கான  13 திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவது குறித்து ஒரு கட்டத்தில் பேசிய அவர்  கிளம்பிய எதிர்ப்பையடுத்து அது குறித்து தீர்மானிப்பது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்று கூறி தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டார்.

  உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அதற்காக அரசியலமைப்புத்  திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்தும் கூட அரசாங்க வட்டாரங்களில்  பேசப்பட்டது.பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

  பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும்  கலைக்கக்கூடிய அதிகாரத்தை தற்போது கொண்டிருக்கும் ஜனாதிபதி வெற்றி பெறக்கூடிய கூட்டணி ஒன்றை அமைக்கக்கூடிய நிலை இல்லை என்பதால்  புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு போக விரும்பவார் என்று எதிர்பார்க்கமுடியாது.

  அடுத்த ஜனாதிபதி  தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று ஒரு மதிப்பீட்டைச் செய்த விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து  அரசாங்க உறுப்பினர்களைப் பேசவைத்தார். பிறகு அந்தப் பேச்சும் அடங்கிப்போனது.

   இந்த நிலையில் இறுதியாக அவர் தேர்தல் சீர்திருத்தங்களை கையில் எடுத்திருக்கிறார். முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சியில் இருந்தவேளையிலும் பிறகு அமைச்சராக பதவி வகித்த வேளையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கினார். அவர் அறிக்கைகளை சமர்ப்பித்த போதிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை,  அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டவாக்கச் செயன்முறைகளை எல்லாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு  இடையூறாக அமையாத வகையில் நிறைவுசெய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

  இதனிடையே அடுத்த வருடம் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு 3000 கோடி ரூபாவை திறைசேரியிடம் கேட்டிருக்கிறது என்று ஆகை்குழுவின் பணிப்பாளர் நாயகம் கடந்தவாரம் கூறினார்.

   தேர்தல் ஆணைக்குழுவுக்கு நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே இதுவரை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாவது உறுப்பினரை அரசியலமைப்பு பேரவை இன்னமும் நியமிக்கவில்லை. ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று என்பதால் அது இயங்கக்கூடியதாக இருக்கிறது.

  உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளின்போது முன்னைய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை தனது முடிவுகளுக்கு  அனுகூலமாக  ஜனாதிபதி பயன்படுத்தியதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழு  உறுப்பினர்களையும்  நியமிப்பதில்  அரசியலமைப்பு பேரவை காண்பிக்கும் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

   அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் மக்கள் வீதிகளுக்கு  இறங்குவார்கள் என்று கொழும்பில் அல்ல நியூயோர்க்கில் இருந்து தேசிய ஐக்கிய சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

   அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் உரையாற்றிய அவர், ” உள்ளூராட்சி சபைகளின் நிருவாகத்தை ஆணையாளர்களின் கீழும் மாகாணசபைகளின் நிருவாகத்தை ஆளுநர்களின் கீழும் கொண்டுவருவது சாத்தியம்.ஆனால், மக்களின் நிறைவேற்று அதிகாரம் மக்களினால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியினாலேயே செயற்படுத்தப்படவேண்டும். அடுத்த வருடம் அக்டோபர் 17 க்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தலை தவிர்க்க ஜனாதிபதி முயற்சிப்பாரேயானால் அவர் அக்டோபர் 17 க்கு அப்பாலும்  செலல வேண்டியிருக்கும்.ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தப்படப்போவதில்லை ஒரு சமிக்ஞை கிடைத்த மறுகணமே  மக்கள் வீதிகளுக்கு இறங்குவார்கள்” என்று கூறினார்.

  ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தனக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களை தாமதிப்பதற்கான உபாயங்கள் அருகிக்கொண்டே போகின்றன என்பதே அரசியல் அவதானிகள் மத்தியில் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

(வீரகேசரி வாரவெளியீடு)
 

 

https://arangamnews.com/?p=10130



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.