Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                    சங்கிலித் தொடர்
                                                                   ---- சுப.சோமசுந்தரம்

         எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.  என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது.

"
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்"
               (குறள் 401; அதிகாரம் : கல்லாமை)
(
பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்)

என்ற குறளுக்கு விதிவிலக்காக, நிரம்பிய நூலறிவு இல்லாதாரும் சான்றோர் ஆன தொ. விடம் தமது கருத்தினைக் கூறலாம்; விவாதிக்கலாம்.
          
             
அவரிடம் ஒன்று கேட்டால் ஒன்பது கிடைக்கும். அதிலும் நாம் கேட்டதற்குத் தொடர்பானவையே! அந்த ஒன்பதும் ஒன்றன்பின் ஒன்றாய் சங்கிலித் தொடராக! இது பற்றியும் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "இதனை நீங்கள் கவனித்ததற்குக் காரணம் நீங்களும் அவ்வப்போது தொடர் சிந்தனையை வெளிப்படுத்துவதுதான். இதனை உங்களிடம் நான் கவனித்து இருக்கிறேன். நீங்கள் வாசிப்பையும் யோசிப்பையும் பெருக்கியதையே இது உணர்த்துகிறது" என்று என்னைப் பாராட்டினார். கூடவே எச்சரிக்கை மணியும் அடித்தார், "சிலரது சிந்தனையோட்டம் காடு மேடெல்லாம் வரம்பின்றித் திரிய, அப்படியே மேடைப்பேச்சிலும் பதிவு செய்து விடுகின்றனர். அந்நோய் நமக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிய விலகல் அரங்கத்திற்கு மெருகூட்டலாம். கருதுகோளிலிருந்து பெரிய அளவில் விலகிச் செல்லுதல் கேட்போர்க்கு சலிப்புத் தட்டும். தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலும் மேடைப் பேச்சும் வெவ்வேறானவை என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை" என்று அருமையாக எடுத்துரைத்தார்.

             
சரி, இனி தனிநபர் கலந்துரையாடலின் போது மேலே குறிப்பிட்ட எண்ணவோட்டத் தொடர் பற்றி எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாய் அமையப் பெறுவது.

காட்சி 1 :
             
சமீபத்தில் தோழர் பேரா. .கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடும்போது, மென்மேலும் கற்கையில் நமது அறியாமையை மென்மேலும் அனுபவபூர்வமாக நம்மால் உணர முடிவது பற்றிய பேச்சு வந்தது. காமத்துப்பாலில் எனக்குக் குறளொன்று நினைவுக்கு வருவதைக் கூறினேன். "எந்தக் குறளைச் சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது" என்று அவரே கூறி முடித்தார்.

"
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு"
                (குறள் 1110; அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்)
பொருள் : அறியுந்தோறும் அறியாமை காண்பதைப் போல, சிறந்த அணிகலன்களை அணிந்த இந்த அழகானவளிடம் (சேயிழை மாட்டு) இன்பம் துய்க்குந்தோறும் (காமம் செறிதொறும்) புதுமையே தோன்றுகிறது.

"
நமது ஆசான் (வள்ளுவனேதான்) எதைக் கொண்டு எங்கே சேர்க்கிறான், பார்த்தீர்களா? காமத்துப்பாலில் உவமையாக அறிவார்ந்த நிலையொன்றைக் கையாண்டான். அஃதாவது காமத்துப்பாலில் பொருட்பாலைத் தேடினான். அறிவு நிலைக்கு உவமையாகக் காமம் சார்ந்த ஒன்றைக் கையாண்டமையும் நினைவுக்கு வருகிறது" என்றேன்.

"
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று"
                   (குறள் 402; அதிகாரம் : கல்லாமை)
பொருள் : கல்லாதவன் (சான்றோரிடம் தன் கருத்தைச்) சொல்ல ஆசைப்படுவது, முலையிரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பியதைப் போன்றது.
(
காமுறுதல் - விரும்புதல், ஆசைப்படுதல்; சொற்காமுறுதல் - சொல்ல விரும்புதல்; பெண் காமுற்று - பெண் தன்மையை விரும்புவது; அற்று - போல (உவம உருபு))

இதே அதிகாரத்தில் (அதிகாரம் : கல்லாமை) ஏறத்தாழ இதே கருத்தை வலியுறுத்தும் குறள் இக்கட்டுரையின் தொடக்கத்தில் வேறு ஒரு சூழலுக்கு நாம் எடுத்துக் காட்டியது - "அரங்கின்றி வட்டாடியற்றே ........" (குறள் 401). நுணுக்கமான வேறுபாடு என்னவென்றால் நாம் இப்போது குறித்த குறள் 402 ஏதும் கல்லாதவர்க்கும், முன்பு குறித்த குறள் 401 நிரம்பிய நூலறிவில்லாதவர்க்கும் சொல்லப்பட்டவை.

காட்சி 2 :
              
காலை நடைப் பயிற்சியின்போது சில சமயங்களில் மகளும் உடன் வருவதுண்டு - அவள் அன்று காலை ஓரளவு சீக்கிரம் கண் விழித்திருந்தால்! அவள் இலக்கிய (ஆங்கில இலக்கியம்) மாணவி என்பதாலோ என்னவோ, எனக்குத் தெரிந்த தமிழை என்னிடம் கேட்பதில் ஆர்வம் கொண்டவள். ஒரு நாள் புறநானூற்றின் முதற்பாடல் பற்றிய பேச்சு எழுந்தது. 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி' எனும் மன்னனால் பாடப்பட்டதைச் சொன்னேன். "பொதுவுடைமைவாதிகளான நாம் யாரை 'பூஷ்வா' என்று குறிப்பிடுகிறோமோ, அத்தகைய பூஷ்வாவான மன்னன் ஒருவனே சொல்கிறான் - இவ்வுலகம் இயங்குவதே பொதுவுடைமைவாதிகளால்தான் என்று" எனச் சொன்னேன். அப்பாடலை முழுமையாகச் சொல்லச் சொல்லி விளக்கமும் கேட்டாள். பொதுவாகவே ஒரு சொல் குறித்து ஒரு பாடலைச் சொன்னால் கூட முழுமையாகப் பாடலைச் சொல்லச் சொல்வாள். மீண்டும் சொல்கிறேன், "இலக்கிய மாணவி என்பதாலோ என்னவோ!". சரி, பாடலுக்கு வருவோம்.

"   
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே"
               (புறநானூறு; பாடல் 1)

பொருள் விளக்கம் :
உண்டால் அம்ம இவ்வுலகம்இவ்வுலகம் உண்டென்றால் (இயங்குகிறது என்றால்) -  "யாரால் தெரியுமா?" என்று சேர்த்துப் பொருள் கொள்ளலாம் - 'அம்ம' என்பது வியப்புச்சொல்;
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் - சாகா வரம் தருவதாய் நம்பப்படும் அமிழ்தத்தையே இந்திரர் தருவதாயினும்;
இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - அதனை இனிது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள்;
முனிவிலர் - சினம் கொள்ள மாட்டார்கள்;
துஞ்சலுமிலர்சோம்பல் கொள்ளவும் மாட்டார்கள்;
பிறர் அஞ்சுவது அஞ்சிஉலகோர் அஞ்சுகின்ற விடயங்களுக்குத் தாமும் அஞ்சி ('அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்பது வள்ளுவன் வாக்கு);
புகழ் எனின்உலகோரால் ஏற்றப்படும் நற்செயல்கள் எனின்;
உயிருங் கொடுக்குவர்அச்செயல்களை நிறைவேற்ற உயிரையும் கொடுப்பார்கள்;
பழியெனின் - பழி ஏற்படும் தீச்செயல்கள் எனின்;
உலகுடன் பெறினும் கொள்ளலர் -  (அத்தீச்செயல்கள் புரிய) உலகையே பரிசாகத் தந்தாலும் அதனைக் கொள்ள மாட்டார்கள்;
அயர்விலர் - சோர்வடைய மாட்டார்கள்;
அன்ன மாட்சி அனையர் ஆகிஇத்தகைய மாட்சிமை பொருந்திய குணங்களோடு;
தமக்கென முயலா - தமக்காக மட்டும் முயற்சி மேற்கொள்ளாதவர்கள்;
நோன் தாள் - (ஆனாலும்) வலிய முயற்சி உடையவர்கள்அஃதாவது தமக்கென முதலாதவர் என்பதால் முயற்சியற்றவர் என்ற பொருளில்லை;
பிறர்க்கென முயலுநர் உண்மையானேஉண்மையில் பிறருக்காக முயற்சி உடையவர்கள்.
        
இத்தகையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்கிறான் இளம்பெருவழுதி. 'தன்னால்' என்னும் கர்வமின்றி 'அன்ன மாட்சி அனையரால்' என அறிவிப்பதில் உள்ளது அவனது மாட்சிமை.

            
இப்பாடலைச் சொல்லி விளக்கியதில் அன்று ஒரு சங்கிலித் தொடர் உருவானது. அது முழுமையாக சொல்லாட்சியைக் கண்ணிகளாய்க் கொண்டது. பாடலில் மூன்று சொற்கள் பற்றிக் கேட்டாள் என் மகள். அவை தமியர், நோன், தாள். பொதுவாக, ஒரு சொல்லுக்குப் பொருள் சொல்வதோடு அச்சொல் எங்காவது எடுத்தாளப்பட்டது என் நினைவுக்கு வந்தால் அதனைச் சுட்டத் தவறுவதில்லை. கேட்போர் சிலர் ரசிப்பதும் உண்டு.

             
முதலில் 'தமியர்'க்கு வருவோம். ஒரு செயலில் 'தாம் மட்டுமே' என்னும் சுயநலத்துடன் செயல்படுவோரைக் குறிப்பதாய் அமைவது இச்சொல். எடுத்துக்காட்டாக,

"
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்"
                 (குறள் 229; அதிகாரம் : ஈகை)
பொருள் விளக்கம் :
இரத்தலின் இன்னாதுபிச்சை எடுப்பதை விடக் கொடுமையானது;
மன்ற - உறுதியாக (உறுதிப்படுத்தும் இடைச்சொல்; Good என்பதை உறுதிப்படுத்த Very good சொல்வதைப் போல);
நிரப்பிய - பொருள் தம்மிடம் குறைவுபடாமல் நிரப்பும் நோக்குடன்;
தாமே தமியர் உணல் - தாம் மட்டுமே என்னும் சுயநலத்துடன் செயல்படுபவர் உண்ணுதல்.

               '
தமியரை' விளக்க எடுத்த குறளில் 'மன்ற' அவளுக்கு (மகளுக்கு) இடறியது. மேலே பொருள் விளக்கத்தில் குறிப்பிட்டது போல் அஃது உறுதிப்பாடு பற்றிய இடைச்சொல் என்பதைக் கூறி, உடனே நினைவில் வந்த குறுந்தொகைப் பாடலைச் சொன்னேன். தொடர் சங்கிலியில் அது பக்கவாட்டில் ஒரு கண்ணியானது. அப்பாடலை அவளுக்கு விரிவாகச் சொன்னாலும் இங்கே சுருக்கமாக :
"
கார்காலத்தில் திரும்பி வருவேன் எனத் தலைவியிடம் கூறிப் போர்க்களம் சென்ற தலைவன் கார் வந்தும் வரவில்லை. கார்காலத்திற்குக் கட்டியங் கூறிக் கொன்றை மலர்கள் எங்கும் பூத்திருந்தன. வருந்திய தலைவியைத் தேற்றும் நோக்கில் அவளது தோழி, "காலமல்லாத காலத்தில் பெய்த மழையைக் கார் என நினைத்து மயங்கிய கொன்றை பூத்தது; எனவே நீ கலக்கமுறாதே!" என்று பொய்யாகத் தேற்றுகிறாள்.

"
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
--------------------------------------------------
---------------------------------------------------

வம்ப மாரியைக் கார்என மதித்தே"
            (குறுந்தொகை; பாடல் 66)
பொருள் விளக்கம் :
தடவுநிலைக் கொன்றைபரந்த அடியினையுடைய கொன்றை மரம்;
மன்ற - உறுதியாக;
மடவ - பேதலித்தது;
வம்ப மாரி - பருவமல்லாத காலத்தில் பெய்யும் மழை;
கார்என மதித்தே - கார் கால மழை என நினைத்து.

           
இனி பக்கவாட்டில் இருந்து மீண்டும் நாம் எடுத்துக்கொண்ட தொடர் சங்கிலிக்கு வருவோம். அடுத்த கண்ணி 'நோன்'. இதன் பொருள் "உண்டால் அம்ம  இவ்வுலகம் ........" பாடலின் பொருள் விளக்கத்தில் நாம் கண்ட 'வலிய' என்பதாகும். இச்சொல்லாட்சிக்கு நாம் எடுத்தாளும் மேற்கோள் புறநானூறு தருவது. தன் மகன் களிற்றியானையை வீழ்த்திய பின்பே தான் விழுந்தான் எனும் செய்தி தந்த உவகையும் மகனை இழந்த சோகமும் கலந்து, வீரமும் ஈரமும் பேசும் காவியமாய் வரும் பாடல்:

"
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
                             (புறநானூறு; பாடல் 277)

பொருள் விளக்கம் :
மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற;
வால்நரைக் கூந்தல் -  தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய;
முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்;
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் வீழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி;
ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே;
வெதிரத்து - புதரில்;
துயல்வரும் - அசைந்தாடும்;
நோன் - வலிய;
கழை - மூங்கில் கழியில்;
வான் பெய - மழை பெய்யும் போது;
தூங்கிய - தங்கிய;
சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்).

            
இறுதிக் கண்ணியாக வருவது தாள் எனும் சொல் இது பல பொருள் ஒரு மொழி. எழுதுகின்ற காகிதம், பாதம் எனும் பொருள்கள் தவிர 'முயற்சி' எனும் பொருளையும் கொண்டது. இக்காட்சியில் நாம் முதலில் எடுத்த "உண்டால் அம்ம இவ்வுலகம் ....." எனும் புறநானூற்றுப் பாடலில் தாள் என்பது முயற்சியையே குறிக்கிறது. மேலும் எடுத்துக்காட்ட பின்வரும் குறள் :

"
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"
             (குறள் 212; அதிகாரம் : ஒப்புரவறிதல்)
பொருள் விளக்கம் :
தாளாற்றி - பெருமுயற்சி மேற்கொண்டு - அயராது உழைத்து;
தந்த பொருளெல்லாம் - ஈட்டிய செல்வமெல்லாம்;
தக்கார்க்கு - தகுதியுடையோர்க்கு; வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவுடன் உதவி செய்வதற்காக.

        
இறுதிக் கண்ணி என்று நாம் அறிவித்தாலும் அது முடிந்த பாடில்லை என்பது போல, மேற்கோள் காட்டிய குறளிலிருந்து 'வேளாண்மை' எனச் சொல் வளர்த்தாள் மகள். என் மகளாயிற்றே!  'வேளாண்மை'யும் பல பொருள் ஒரு மொழி எனச் சொன்னேன். வேளாண்மை என்பது உழவுத் தொழில் குறிப்பது மட்டுமல்ல, ஒப்புரவறிந்து பிறருக்காக ஆற்றி இருத்தலுமாம். அது இரங்குதல், பெருமனம் கொள்ளுதல் (generous, magnanimous etc.) போன்ற நற்பண்புகளை அடிப்படையாய்க் கொண்டது. படித்த பாடம் மீண்டும் புறநானூற்றின் வழி நினைவுக்கு வந்தது. திருப்புறம்பியத்துப் போர்க்களத்தில் சோழன் செங்கணானிடம் தோற்று குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறை தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறான். அவனை உதாசீனப்படுத்துவது போல் காவலர் தாமதித்துத் தண்ணீர் கொடுக்கின்றனர். மானமே பெரிது எனும் வழி வந்த சேரமான் தண்ணீரை ஏற்காமல் உயிர் துறக்கிறான். அத்தறுவாயில் அவனே எழுதி வைத்த பாடலே இப்போது 'வேளாண்மை'க்கான நமது மேற்கோள் :

"
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?"
                                    (புறநானூறு-74)
பொருள் விளக்கம் :
குழவி இறப்பினும் - குழந்தை பிறந்து இறந்தாலும் அல்லது இறந்து பிறந்தாலும்
ஊன் தடி பிறப்பினும் - (உருவமற்ற) சதைப் பிண்டமாகப் பிறந்தாலும்
ஆள் அன்று என்று - அது ஒரு ஆள் இல்லையென்று
வாளின் தப்பார் - வாளினால் கீறுவதிலிருந்து தப்ப விடமாட்டார்
(அஃதாவது விழுப்புண் இல்லாது அதனைப் புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்; வீரம் செறிந்த இறப்பின் மேன்மை குறிக்கப் பெறுகிறது. அத்தகைய மரபில் வந்த தான் போரில் மடியாமல் சிறைப்பட்டு அவமானங்களைத் தாங்க வேண்டியுள்ளதே என்று சேரமான் சுய கழிவிரக்கம் கொள்வதே இப்பாடல்)
ஞமலி - நாய்
தொடர்ப்படு ஞமலியின்சங்கிலியால் கட்டப்பட்ட நாய் போல
இடர்ப்படுத்து இரீஇய - இடையூறு செய்திருக்க
கேளல் கேளிர் - நட்பு உணர்வு இல்லாத உறவு கொண்டோர் (பகைவர்)
வேளாண் - பெருமனதுடன் தரும்
சிறுபதம்தண்ணீர்
மதுகையின்றி - (அத்தண்ணீர் இன்றி உயிர்விட) மனவலிமை இன்றி
வயிற்றுத் தீத்தணியவயிற்றில் தீ போன்று உழற்றும் தாகம் தணிய
ஈன்மரோ - பெறுவரோ

             காட்சி 2 ல் மேற்கூறிய சங்கிலித் தொடர் பல்வேறு நாட்களில் நடைபயிற்சியின் போது கண்ணிகளாய்க் கோர்க்கப்பட்டவை. தமிழனாய்ப் பிறந்ததால் தமிழ் மொழி வாய்த்தது எனக்கான பேறு என்றால், என் ஆர்வத்தைத் தூண்டி நான் வாசித்து, கேட்டு அறிந்த தமிழை என்னிடம் கேட்கும் ஆர்வம் பெற்றது என் மகளுக்கான பேறு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.