Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு?

அ.நிக்ஸன்

காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் மனிதப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது.

பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆனாலும் இஸ்ரேல் அரசுடன் இந்திய மத்திய அரசு கொள்கையளவில் கைகோர்த்திருக்கிறது. தென்னாபிரிக்க அரசு இன அழிப்பு என்று வழக்குத் தாக்கதல் செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இதுவரையும் பகிரங்கமாக வரவேற்கவில்லை. மதில்போல் பூனை போன்று உள்ளது.

ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் இஸ்ரேலுடன் நிற்பதை அறிந்தே தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கை தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாக வரவேற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் பாராட்டவில்லை.

இஸ்ரேலுடன் இணைந்து கமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க இந்திய அரசுகள் ஓரணியில் நிற்கின்றன. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் வல்லரசுகளிடையே எழுந்துள்ள அரசியல் போட்டியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா முற்று முழுதாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பாளனாக மாறியிருக்கிறார்.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் எதிராலியாக தென்னாபிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பில் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று பகிரங்கப்படுத்தி வழக்கும் தாக்கதல் செய்திருந்தாலும் அதனை பலஸ்த்தீன புலம்பெயா் அமைப்புகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன.

சென்ற வியாழக்கிழமை ஆரம்பித்த முதல் நாள் விசாரணையில் தனது தரப்பு வாதங்களை தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க மாநில அரசுகளின் உறுப்பினர்கள் இருநூறு பேர் காசாவில் போர் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சென்ற ஒக்ரோபர் ஏழாம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் குறைவான நிலையில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் இதனால் போரை நிறுத்துமாறும் அமெரிக்க உள்ளூர் பொது அமைப்புகளும் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க எழுநூறு இஸ்ரேல் மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களே செய்தி வெளியிட்டிருக்கின்றன. இஸ்ரேலிய மக்களின் எழுபத்து ஐந்து சதவீதமான மக்கள் காசாவில் போர் நடப்பதை விரும்புகின்றனர் என்றும் இந்த நிலையில் எழுநூறு பொது மக்கள் பலஸ்தீன மக்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கதல் செய்துள்ளதால் கணிசமான அளவு இஸ்ரேலிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாக அரபு ஊடகமான நியுஅரப் (newarab) என்ற ஆங்கில செய்தி இணையத்தளம் கூறுகின்றது.

மியன்மாரில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி வரும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பாக அமைதியாக இருக்கின்றது.

சட்ட ஆதாரங்களை தேட வேண்டும் என்று மாத்திரம் பிரித்தானியா கூறியிருக்கிறது. அதேபோன்று கனடாவும் கூறுகின்றது. காசாவில் நடப்பது இன அழிப்புத் தொடர்பான சா்வதேசச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கிறது.

தென்னாபிரிக்க அரசு மேற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகள் தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு ஆதரவு வழங்கத் தயங்குகின்றன.

ஆகவே ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் குழப்பியிருந்த உலக அரசியல் ஒழுங்கு தற்போது இஸ்ரேல் – கமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் குழப்பமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்த பின்னர் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான உலக அரசியல் அணுகுமுறையில் முன்னுக்குப் பின்ன முரணான வாதங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடியும்.

இந்த அரசியல் சூழ்நிலையை இலங்கை நன்கு பயன்படுத்துகிறது குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் 2010 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனாலும் இன அழிப்பு என்று எந்த ஒரு நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பது வெளிப்படை.

நான்கு மாதங்களில் 23 ஆயிரும் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்ததை உணர்ந்தும் அச்சமடைந்த நிலையிலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. சர்வதேசத்தை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறார்.

spacer.png

தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன. இப் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க சென்ற புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார். தூதுவர்களுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக ரணில் தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏனைய கொழும்பில் உள்ள மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளின் தூதுவர்களையும் ரணில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில் குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்குச் சூழலில் எந்த ஒரு சிறி நாடுகளின் ஒத்துழைப்புகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றன. அதேபோன்று சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏதாவதொரு சிறிய நாடுகளைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை இலங்கைக்குத் தற்போது உருவாகியுள்ளது.

குறிப்பாக கனடா, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறி வருகின்றது. அதுவும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கனடா புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு பேசி வருகின்றன.

சில சமயங்களில் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் இனஅழிப்பு என்பது இணைக்கப்பட்டால் அதனை மையமாகக் கொண்டு வேறு சில சிறிய நாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்துவார்கள் என்று கருதியே அதனைத் தடுக்கும் முன்னேற்பாடுகளில் இலங்கையின் வெளியுலக இராஜதந்திர சேவை அதிகளவு கவனம் செலுத்துகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சந்தித்து பலஸ்தீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு என்று ரணில் உறுதியளித்திருந்தாலும், அமெரிக்க – இந்திய அரசுகளைப் பகைத்துகொள்ளாத முறையில் இஸ்ரேல் அரசுடன் இலங்கை முழு அளவில் மறைமுகமாகக் கைகோர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை.

1983 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்குக் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இஸ்ரேல் ஆலோசனை வழங்கியிருந்தமையும் தற்போது ஆதரவு வழங்கக் காரணம்.

இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைக்குச் சீனாவை ஓரளவுக்குத் தூரத் தள்ளிவைப்பது போன்றதொரு தோற்றத்தைக் காண்பித்தாலும், சீனாவுக்குத் தாக்கம் எழாத முறையில் அமெரிக்க – இந்திய அரசுகளை இலங்கை அரவனைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கான காரண – காரியம் என்பது குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலைமைக்குள் கனடா ஊடாக வேறு சிறிய நாடுகளை புலம்பெயர் தமிழர்கள் நாடிவிடக் கூடும் என்ற அச்சமே.

இலங்கையும் முற்று முழுதாகச் சீனாவின் பக்கம் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதைக் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூலமாக அமெரிக்கா சொல்ல வைக்கிறது என்ற அவதானிப்புகளும் இல்லாமில்லை.

அதேநேரம் காம்பியா என்ற ஆபிரிக்காவின் சிறிய நாடு ஒன்றுதான் ரோஹின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை பிரித்தானியா முழுமையாக ஆதரித்து வருகின்றது.

ஆகவே இவ்வாறான ஒரு பின்னணி புலம்பெயர் அமைப்புகளுக்கு வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் எதிர்வுகூறல் இலங்கைக்கு உண்டு. இதற்கு ஏற்ப பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இலங்கைத்தீவுக்குள்ளும் வெளியுலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அரங்கேறி வருகின்றன.

இலங்கையின் இத் திட்டத்திற்கு ஜேர்மன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளும் ஒத்துழைகை்கின்றன.

ஆனால் தமிழ்த்தரப்பில் இந்த உத்திகள் எதுவுமே இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டி, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் போலித் துவாரகா பற்றிய ஆய்வுகளையே தமிழ்த்தரப்பு செய்து கொண்டிருக்கிறது. பல தமிழ் ஊடகங்களும் இதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குறைந்தபட்சம் தென்னாபிரிக்க அரசைப் பாராட்டி ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்குக் தமிழ்த்தேசியக் கட்சிகள் கடிதம் எழுதியிருக்கலாம். இன அழிப்பு என்று கூறிவரும் கனடாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான கென்சர்வேற்டீவ், லிபரல் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்குக் கடிதத்தின் மூலம் பாராட்டிருயிருக்கலாம்.

ஆகவே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் இந்தியாவின் வஞ்சக அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள் முடங்கியுள்ளன என்பதையே இது பகிரங்கப்படுத்துகின்றது.

2006 இல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கென்சர்வேற்றீவ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்புத்தான் என்று கூறுவதுடன், பதவிக்கு வந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே பலஸ்த்தீன மக்களை ஆதரிப்பதாகக் காண்பித்துக் கொண்டு இஸ்ரேல் அரசின் பக்கம் இலங்கை நிற்பது போன்று அமெரிக்க இந்திய அரசுகளுக்குக் இரட்டை வேடம்போடுகின்றது. ஆனால் அரசு அற்ற சமூகமாகக் கடந்த எண்பது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழ்த் தரப்பு, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏன் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கின்றன?

2014 வரையும் தென்னாபிரிக்க அரசு ஈழுத்தமிழர் பக்கம் நின்றது. ஆனால் அதனைத் தமிழர் தரப்பு உரிய முறையில் கையாளவில்லை. பிரதிதி ஜனாதிபதியாக இருந்த சிறில் ரமபோசா 2020 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வரக்கூடும் என்று கணித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிரமபோசவை இலங்கைக்குப் பல தடவைகள் அழைத்துப் பேசியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினை 2009 இல் முடிவடைந்து விட்டது என்றும் இலங்கையில் இன நல்லிணக்கமே அவசியம் என்றும் போதித்திருக்கிறார். இன்று இமாலயப் பிரகடனத்துக்கு தென்னாபிரிக்கா முழு ஆதரவு வழங்குவதுடன் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக வாழ முடியும் என்றும் கூற ஆரம்பித்துள்ளது.

ஆகவே உல அரசியல் விவகாரங்களை அறிந்து நுட்பமாகக் கையாள்வதற்குரிய புதிய இளம் தலைமை ஒன்று ஆங்கில அறிவுடன் உருவாக வேண்டும்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாகத் தன்னைக் காணிப்பிக்க முற்படும் இந்தியா, சர்வதேச விவாகாரங்களில் இரட்டை வெளியுறவுக் கொள்கைகளோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதற்கும், சிறிய நாடான இலங்கை ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய, மேற்கு மற்றும் ஐரேப்பிய நாடுகளையும் இந்தியாவையும் அதேநேரம் பொருளாதார உதவிகளைப் பெற சீனாவையும் எவ்வாறு நுட்பமாகக் கையாள்கின்றது என்பதற்கும் கண்முன்னே பல உதாரணங்கள், படிப்பினைகள் உண்டு.

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது.

ஆனால் தமிழ்த்தரப்பு?

http://www.samakalam.com/சர்வதேச-நீதிமன்ற-விவகாரம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.