Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு என்ன ஆனது?

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 33 நிமிடங்களுக்கு முன்னர்

பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தவறு செய்யும்போது எல்லாத் தருணங்களிலும் இதுபோல நடக்கிறதா?

என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தபோது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, வேறொரு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரில் ஏறிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அந்த அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி இது தொடர்பாக புகார் அளிக்க அங்கிருந்து புரப்பட்டு சென்னையை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது அந்தக் காரை பெரும் போலீஸ் படையுடன் வந்து மடக்கிய அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், காரின் சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதற்கு அந்தப் பெண் அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் சாவியைத் தர மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் அதிகாரி பேசினார்.

தில்லியில் இருந்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தமிழக உயரதிகாரிகள் தலையிட ஒரு வழியாகச் சென்னையை வந்தடைந்த அந்த அதிகாரி அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்துப் புகார் அளித்தார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி

3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு

2021ஆம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இரு தரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20,500 அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் தனக்காக ராஜேஷ் தாஸே வாதாடினார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு என்ன ஆனது?

விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி ராஜேஷ் தாசுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆனால், இதுபோல அரசு உயர் அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அந்த வழக்குகள் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில், பல காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அருணா ஜெகதீஸன் ஆணையம் விசாரணை நடத்தி, பல காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க பரிந்துரை அளித்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்த அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி மாதப் பிற்பகுதியில் அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,FACEBOOK/GETTYIMAGES

உயர் அதிகாரிகள் தப்புவது எப்படி?

சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றும்போதுதான், அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குட்படுத்த முடியும்; இல்லாவிட்டால் ஏதும் நடக்காது என்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

"சிவில் சமூகம் வலுவாக இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணம். அதனால்தான் பல்வீர் சிங் விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில், சாத்தான்குளம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. இதன் காரணமாக அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இப்போதுவரை ஜாமீன் பெற முடியவில்லை. ராஜேஷ் தாஸ் விவகாரத்தைப் பொருத்தவரை, புகார் அளித்தவரும் இன்னொரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால்தான் இந்த வழக்கு இவ்வளவு தூரம் முன்னேறியது. சாதாரண காவலராக இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்கிறார் ஹரி பரந்தாமன்.

வேறு சில நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கே.பி.எஸ். கில், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்டார். இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.

"ஆனால், இதிலும் பாதிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அதனால் அவர் போராட முடிந்தது. அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்களை எதிர்க்கும் அளவுக்கு சிவில் சமூகம் இல்லை. இப்போதும் உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்து வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை சிவில் சமூகம் கண்டுகொள்வதேயில்லை.

மேலை நாடுகளில் இதுபோல நடந்தால், அடுத்த நாளே அரசு கவிழ்ந்துவிடும். ஜார்க்கண்டில் முதலமைச்சரைக் கைது செய்கிறது அமலாக்கத் துறை. பொதுமக்களிடம் எந்த உணர்வும் இல்லை. அப்படியிருக்கும்போது, அதிகாரவார்க்கம் தன் தவறுகளுக்காக தண்டிக்கப்படுவது அரிதான விஷயம்தான்" என்கிறார் ஹரி பரந்தாமன்.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
படக்குறிப்பு,

அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்

உயர் அதிகாரிகளுக்கு தனிச் சலுகை உண்டா?

அதிகார வர்க்கத்திற்கு என தனியாக எந்த சலுகையும் கிடையாது. அவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகவே தப்பிக்கிறார்கள் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ஜி. திலகவதி.

"இதுபோன்ற விவகாரங்களில் பெரும்பாலும் புகார் தெரிவிப்பவர்கள் உறுதியாக இருப்பதில்லை. அது ஒரு முக்கியக் காரணம். மேலும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு தப்பிக்கும் வழி தெரியும். தவிர, நம்முடைய சட்ட அமைப்பும் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இப்போது, ராஜேஷ் தாஸ் விவகாரத்தில்கூட இவர் இனி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். அங்கு தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்.

விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டபோதே, அவர் கைது செய்யப்படாமல் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டார். அதிகார வர்க்கத்திற்கென தனியான 'இம்யூனிட்டி' என ஏதும் கிடையாது. சட்டத்தில் உள்ள சலுகைகள், வழக்கறிஞர்களின் வாதத் திறமைகளின் காரணமாகவே இவர்கள் தப்பிக்கிறார்கள்" என்கிறார் திலகவதி.

https://www.bbc.com/tamil/articles/c3gkd9p8lq9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.