Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தடங்களில் அலைதல்

sudumanalMay 8, 2023

நூல் அறிமுகம்

thadankalil-alaithal-susee-1b.jpg?w=945

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.

என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.

“எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது தூசணங்களோடு போய்க் கொண்டிருந்தார். என்னைச் சுற்றி கூட்டம். எல்லோரும் என்னை அடிக்கத் தயாராகிவிட்டனர்.

நாட்டிய ஆசிரியை ஒருவரின் கணவர் இடையில் புகுந்து, “இவரை நாங்கள் கூப்பிடாமலேயே தானாக வந்து மேடையேறிவிட்டார்” என்று வேறு சொல்லிவிட்டார். என் நம்பிக்கைகள் சிதறின. என் ரோச நரம்புகள் செத்துக் கிடந்தன. என்னை அவர்கள் விடுவதாயும் இல்லை. ஓடவும் முடியாது.

கூட்டத்தில் நின்ற நியாயவாதி ஒருவர் கூறினார், “நாங்கள் எல்லாரும் ஏதோவொரு வகையில் பைத்தியக்காரர்கள்தான். ஆனால் என்ன… இவருக்கு கொஞ்சம் மிகை… அவ்வளவுதான்” என்றார். அப்போ தெரிந்தவர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டு, “ஏன்… என்ன பிரச்சினை” என கேட்டு என்னை மீட்டுச் சென்றார். இந் நகரத்தின் ஒரு அறியப்பட்ட புத்திஜீவி என்னைக் காப்பாற்றிவிட்டார் என நினைத்துக் கொண்டேன். “நான் கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றை மேடையில் சொன்னன்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவர், “உனக்கேன் தேவையில்லாத வேலை… இலங்கை முஸ்லிம் பிரச்சினையை இங்கை எதுக்குப் பேசினாய்” என திருப்பிக் கேட்டார்.

தடங்களில் அலைதல் நூலின் ஆசிரியர் சுசீந்திரனை கலீல் ஜிப்ரான் இவ்வாறான ஒரு பிரச்சினையில் மாட்டிவிட்டிருந்தார். புகலிட இலக்கியம் இந்தச் சுழிகளுக்குள்தான் இயங்கியது, இயங்குகிறது.

நாம் கடந்துவந்த அனுபவங்கள், அதை குறித்துவைத்த கடதாசித் துண்டுகள், பதிவுகள், குறிப்புகள், கடிதங்கள் என்பன பல காலத்தின்பின் கிளறப்படும்போது அவற்றிலிருந்து எழும் நினைவுகள் கதைசொல்லிகளாக மாறிவிடுவதுண்டு. அனுபவங்களை பட்டறிவு என்கிறோம். இற்றைப்படுத்தப்பட்ட இன்றைய அறிவில் அன்றைய அனுபவங்களில் விதையாய் விழுந்து புதைந்த வார்த்தைகள் மீண்டும் வெவ்வேறு அர்த்தங்களுடன் முளைத்து உயிர்கொண்டு வியாபிக்கிறதெனின் அவை காலமாகிவிடவில்லை என்பதுதானே அர்த்தம். தடங்களில் அலைதல் என்ற இந்த 120 பக்க நூலின் அந்த முளைப்புகளையும் வியாபித்தலையும் ரசித்தபடி வாசித்தேன்.

சிறுவயதில் தங்கை உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலின் நடு அச்சாணியின் முனையிலுள்ள ‘நட்’டுகளை கழற்றி வீசிவிட்டு, சுவாரசியத்துக்காகக் காத்திருந்தபோது அது தந்தையால் வேறு அனுபவமாக மாற்றப்பட்டுவிடுகிறது. விளையாட்டுத்தனமாக தொடங்கிய அந்தச் செயல் இன்று சக மனிதருக்கு ஆபத்து விளைவிப்பதை செய்யத் துணியாத மனவளத்தில் ஓர் அச்சாக சுழல்வதால், அது மறக்கப்படாமல் இருக்கிறது. வார்த்தைகள் முளைத்துக் காட்டுகின்றன. தாயின் இன்னொரு கையாக இருந்த தையல் மெசினோடு தந்தை ‘அலவாங்கு’ கொண்டு போர் புரிகிறார்.

“என்னைக் கொன்றபின் அதைக் கொல்” என்கிறாள் தாய். அதற்கு நானேதான் ஒரே சாட்சி என பெருமூச்சால் முற்றுப்புள்ளி இடுகிறார் சுசீந்திரன். அங்கும் வார்த்தைகள் இயற்கை எய்திவிட முடியாததாக தடங்களில் அலைகின்றன.

எடி ஜேக்கோவின் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்”, மிகயில் ஷோலகவ்வின் “டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது”, ஹைன்றிஷ் பொல்லின் “ஒரு கோமாளியின் பார்வைகள்” போன்றவை உட்பட வேற்றுமொழி நாவல்கள் சிலதையும், தமிழ் நாவல்கள் சிலதையும் அவ்வப்போது புகலிட இலக்கிய முகத்திற்கு அறிமுகமாக்கிய கட்டுரைகளும் இந் நூலில் இடம்பெறுகின்றன.

தோளோடு சாய்ந்து நின்ற தோழர்களின் அவ்வப்போதான மரணங்களின் போது எழுதிய சில அஞ்சலிக் குறிப்புகளும் தடங்களில் அலைதலில் வருகின்றன. முக்கியமாக பாரிஸில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தோழர் சபாலிங்கம்!. புகலிட வாழ்வின் இலக்கிய அரசியல் வெளிகளிலிருந்து அழித்துவிட முடியாத அந்தத் தோழரின் கொலையும் காலச்சிதைப்பும் சுசீந்திரனின் அஞ்சலிக் குறிப்பிலும் உயிர்த்தே நிற்கின்றன.

தடங்களில் அலைதல் நூலானது கட்டுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான இலக்கிய வடிவங்களின் வகைப்பாடுகளின் சட்டகங்களுக்குள் சசீந்திரனின் தடங்களில் அலைதல் நூல் அகப்படாமல் இருக்கிறது என்றே வாசிப்பு அனுபவம் சொல்லி முடித்தது.

கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், தனிநபர் அறிமுகங்கள், வாழ்வனுபவங்கள், அஞ்சலிக் குறிப்புகள் என தடங்களில் அலைதல் ஓர் அறிதலையும் சீரிய வாசிப்பனுபவத்தையும் ஒருபுறம் தருகிற அதேவேளை, இன்னொரு புறம் வலியும் நினைவுச்சுகமும் என முரண்களை அருகருகே வைப்பவையாகவும் இருக்கின்றன. அவை காலத்தைப் பின்னோக்கி நகர்த்திக்காட்டும் வல்லமை கொண்டவை. கால மாற்றத்தோடும் அறிவோடும் அனுபவங்களோடும் இற்றைப்படுத்தப்பட்டு முன்னோக்கி வந்துவிடுகிற நம் ஒவ்வொருவரையும் பின்னோக்கிய காலத்தில் இழுத்துச் சென்று அவற்றின்மீது புதிய பரிமாணங்களைக் காட்டுகிறது. அந்த புதிய பரிமாணமானது அறிவை சரிபார்ப்பதிலும் செழுமையாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. தடங்களில் அலைதல் நூலை வாசித்து முடித்தபோது இந்த எண்ணங்களே சேர்ந்தலையத் தொடங்கின.

அனுபவங்களானவை உள்ளுடனில் உணர்வுகள் உணர்ச்சிகள் காயங்கள் வலிகள் என ஒரு பக்கத்தையும், அவை நினைவாக எழும்போது தரும் சுகமும் சுவாரசியமும் என இன்னொரு பக்கத்தையும் எப்போதுமே கொண்டிருக்கும். அது தடங்களில் அலைதலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.

//மகிழ்ந்திருத்தல் என்பது அபரித ஆடம்பரமானது என்று எணணும் ஒரு வாழ்வினை வரித்துக் கொண்டவர்களில் எனது தாய் முதன்மையானவர் என நான் நினைப்பதுண்டு. அவளது கூறைச்சேலை சிவப்பு நிறமும் வெள்ளிச் சரிகை வேலைப்பாடும் கொண்டது. அதை நான் காவலாளியாக நடித்த ஒரு நாடகத்தில் உடுத்தியிருந்தேன். அதுவே என் இராக்கால போர்வையாகவும் இருந்தது. நான் அறிய அவள் கோவில்களுக்குச் சென்றதில்லை. சுற்றம்சூழ என்பார்களே.. அதை அவள் அனுபவித்ததில்லை. என் அப்பாவை அவள் நேசிப்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருந்ததுவா என்று நான் இன்று எண்ணிப் பார்க்கிறேன். தாய் பற்றி எழுத உங்கள் எல்லோருக்கும் இருப்பதுபோலவே எனக்கும் ஆயிரம் உண்டு// என நூலாசிரியர் தடங்களில் அலைதலுக்கான பயணத்தில் சக பயணிகளைக் காண்கிறார். எம்மையும் நினைவுத் தடங்களில் அழைத்துச் செல்கிறார்!

*

நூலாசிரியர் சுசீந்திரன் (ஜேர்மனி)

மேற்குலக புகலிட இலக்கிய வெளியின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் சுசீந்திரன். 80 களின் கடைசியில் தொடங்கிய இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இருந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் சுமார் 40 வருட கால நீண்ட புகலிட இலக்கிய அரசியல் வெளியில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல யேர்மன் மொழியிலும் புலமையுடையவராக இருந்ததால் மொழிபெயர்ப்புகளின் மூலமும் புகலிட இலக்கியத்துக்கு தன் பங்குக்கு வலுச் சேர்த்தவர். சேர்த்துக் கொண்டிருப்பவர். இன்னமும் அதிகமாக மொழிபெயர்ப்பில் அவர் செயற்பட்டு அவற்றை தமிழுக்கு தந்திருக்க முடியும், தர முடியும் என்பது என் அபிப்பிராயம்!

 

 

https://sudumanal.com/2024/03/09/தடங்களில்-அலைதல்/#more-5996

  • Like 2


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.