Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: 'ஆர்வம்' காட்டும் திமுக, 'நெருக்கடி தரும்' மத்திய அரசு - முழு பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 17 மார்ச் 2024, 03:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தலைமையிலான அரசு, அதன் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகள் திட்டத்தில் இணைய விரும்புவது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது.

இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திமுக எதிர்ப்பு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார்.

அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார்.

அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார்.

மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன?

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பட மூலாதாரம்,ANBIL MAHESH POYYAMOZHI

படக்குறிப்பு,

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை?

பிரின்ஸ் கஜேந்திரபாபு
படக்குறிப்பு,

பிரின்ஸ் கஜேந்திரபாபு

இப்பள்ளிகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.

பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை என்ற கேள்விக்கு, "எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத்தான் கொடுக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டைத்தான் பேசுகிறது," என்று பதிலளித்தார்.

"பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும்தான் சிறந்த பள்ளிகளாக இருக்க வேண்டுமா? சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு மட்டும்தான் இருப்பார்களா? இந்தக் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அங்கிருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்று சொன்னால், மற்ற பள்ளிகளில் இத்தகைய வசதிகள் வேண்டாமா?"

"ஒரு சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி வாய்ப்பைக் கொடுப்பேன் என்று சொன்னால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா?" என பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வியெழுப்புகிறார்.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதா?

பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான இணையதளத்தில், அப்பள்ளிகளுக்கென நிர்வாக அமைப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பதை மாநில அரசு அடையாளம் கண்டு கூற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில படிநிலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

"ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகள் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் பிரின்ஸ்.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதற்கான அமைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் உறுப்பினர் செயலாளராக உள்ளதாகவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இந்நிலையில், இப்போது கடைசியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட உள்ளதாக அவர் விமர்சிக்கிறார்.

"அடுத்த கல்வியாண்டுக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என அரசின் தலைமைச் செயலாளர் கூறுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கையில், "அமைச்சரவை முடிவு எடுக்காத ஒரு விஷயம் குறித்து தலைமைச் செயலாளர் எப்படி முடிவு எடுத்தார்? இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கூற வேண்டும்" என வலியுறுத்துகிறார்.

நிதியுதவி அளிக்காமல் நெருக்கடி கொடுக்கின்றனர் என்பது நியாயமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறுகிறார். "கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இப்போது திமுக அரசு கொண்டு வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அரசமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, கருணாநிதியின் சமச்சீர் கோட்பாட்டுக்கும் எதிரானது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழ்நாட்டுக்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றை 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்தது.

இதிலும் தமிழ்நாடு அரசு மீது சர்ச்சை எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் மே, 2023இல் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனினும் அக்குற்றச்சாட்டுகளை அந்த நேரத்தில் உதயச்சந்திரன் மறுத்திருந்தார்.

 

'எப்போதும் எதிர்ப்போம்'

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், ”ஆய்வு செய்து எது தேவையோ அதை மட்டும் செயல்படுத்துவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

குலக்கல்வியை ஊக்குவிப்பதாக புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அனைவரும் சமம், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் திமுக குரல் கொடுத்து வருகிறது. அதனால் இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை,” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அளிப்பதாகவும் நிதியில்தான் முதலில் கை வைப்பதாகவும் அவர் கூறினார்.

'திமுக அரசியல் செய்கிறது'

திமுக எல்லா விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தலைமைச் செயலாளரின் கடிதத்தில், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இப்படிச் சொல்கிறார். அப்படியென்றால் திமுக அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது. இப்படித்தான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் தொடக்கம் வேண்டும் என்பதால்தான் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c720lexrg49o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.