இரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடைகள் தளர்வால் இந்தியாவுக்கு என்ன லாபம்?
பட மூலாதாரம்,LightRocket via Getty Images
படக்குறிப்பு,இந்தியா தான் நுகரும் எண்ணெய் பொருள்களில் 90% வரை இறக்குமதி செய்கிறது, இது உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தியாவை அதிகம் ஆட்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது.
கட்டுரை தகவல்
சௌதிக் பிஸ்வாஸ்
இந்தியா செய்தியாளர்
21 மார்ச் 2026, 06:09 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நெருக்கடியில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இரானிய எண்ணெய் குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக தடை நீக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராக இந்தியா இருக்கலாம்.
தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.
உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும்.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சர்வதேச சந்தையில் கிடைக்க வழிவகுக்கும்" என்று கூறினார்.
இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசன்ட் கூறினார்.
இத்தகைய நடவடிக்கை, கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய, பல கோடி பேரல் எண்ணெயை உலகச் சந்தைகளில் வெளியிடக்கூடும்.
தனது எண்ணெய்த் தேவையில் 90%-ஐ இறக்குமதி செய்யும் மற்றும் தள்ளுபடி விலையிலான விநியோகத்தைப் பெறுவதில் சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு, ஒரு சிறிய தளர்வு கூட நிம்மதியையும் வாய்ப்பையும் வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இறுக்கமான உலகளாவிய விநியோகத்தைத் தளர்த்துவதற்கான ஒரு வழியாக பெசன்ட் இந்த நடவடிக்கையை முன்வைத்தார். இது, நீண்டகால அமெரிக்கக் கொள்கையில் ஒரு வியக்கத்தக்க மற்றும் நிச்சயமற்ற மாற்றத்தைக் குறிக்கும்.
பட மூலாதாரம்,Bloomberg via Getty Images
படக்குறிப்பு,தடைகளுக்கு முன்பாக, 2018-இல் இரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல ஒரு எண்ணெய் டேங்கர் தயாராகிறது.
தற்போது கடலில் உள்ள இரானிய சரக்குகளை (அதன் அளவு சுமார் 140 மில்லியன் பேரல்கள் என்று அவர் குறிப்பிட்டார்) வாங்குபவர்களைச் சென்றடைய அனுமதிப்பதன் மூலம், 10 முதல் 14 நாட்களுக்கு மட்டுமே என்றாலும் சப்ளை பற்றாக்குறையைக் குறைக்கவும் விலையைக் கட்டுப்படுத்தவும் முடியும் என அமெரிக்கா நம்புகிறது,
இந்த நடவடிக்கை சீனாவை விட்டு இரானிய எண்ணெய் விநியோகத்தைத் திசைதிருப்பக் கூடும், இதனால் சீனா சந்தை விலைக்கு நெருக்கமான விலையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதே நேரத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய நுகர்வோருக்கு கச்சா எண்ணெய் கிடைக்கச் செய்யும் என்று பெசன்ட் கூறினார். (இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாகச் சீனா உள்ளது.)
இந்த மறுசீரமைப்பின் மையத்தில் இந்தியா இருக்கக்கூடும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60%-க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளிலிருந்து - முதன்மையாக இராக், செளதி, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன. இந்த இறக்குமதிகளில் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பயணிக்கின்றன, இது தற்போது மோதலால் மூடப்பட்டுள்ள ஒரு குறுகிய வளைகுடாப் பாதையாகும்.
"சீன நுகர்வோர் (அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள்) மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து, கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியத் தேவை மையமாக இந்தியா உருவெடுக்கக்கூடும்," என்று கடல்சார் உளவுத் துறை நிறுவனமான கெப்லரின் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சந்தை ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகிறார்.
வரலாற்று ரீதியாக, இந்தியா இரானிய கச்சா எண்ணெயை வாங்கும் ஒரு முக்கிய நாடாக இருந்தது, 2018-இல் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு அதன் மொத்த நுகர்வில் இரானிய இறக்குமதி சுமார் 11.5% ஆக உயர்ந்தது.
இரானிய 'லைட்' மற்றும் 'ஹெவி' ரக கச்சா எண்ணெய்கள் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் பெரும்பாலும் சாதகமான விலை மற்றும் பணம் செலுத்தும் விதிமுறைகளுடன் வந்தன.
அந்த வரத்து 2019-இல் நின்றது, முதலில் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெயாலும், பின்னர் யுக்ரேன் போர் உலகளாவிய வர்த்தகத்தை மாற்றியமைத்த பிறகு பெருமளவு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய பேரல்களாலும் மாற்றப்பட்டது.
பட மூலாதாரம்,Anadolu via Getty Images
படக்குறிப்பு,இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த பல மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன.
ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைத்தபோது, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் களத்தில் இறங்கி, குறைந்தபட்ச இடையூறுகளுடன் இறக்குமதியை அதிகரித்தன.
இரானிய பேரல்கள் மீண்டும் சந்தைக்கு வந்தால் இதே போன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் இப்போது வாதிடுகின்றனர்.
தற்போது சேமிப்பு மற்றும் போக்குவரத்தில் உள்ள சரக்குகள் உட்பட சுமார் 170 மில்லியன் பேரல் இரானிய கச்சா எண்ணெய் கடலில் இருப்பதாக கெப்லர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அவை அனைத்தும் விற்கப்படாதவை அல்ல, ஆனால் ஒரு பகுதி இன்னும் விற்கப்படாமல் உள்ளது,
"இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள், முந்தைய அனுபவம் மற்றும் நிறுவப்பட்ட வர்த்தக அமைப்புகளின் ஆதரவுடன், குறைந்தபட்ச செயல்பாட்டு மாற்றங்களுடன் இந்த பேரல்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் திறனைப் பெற்றுள்ளன," என்று ரிடோலியா கூறுகிறார்.
உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நாடான இந்தியா, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது - ஆனால் சீனாவைப் போலல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் ஏற்றுமதியைக் குறைக்க அது முனையவில்லை.
இருப்பினும், கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன.
இரானிய எண்ணெய் சந்தைக்கு திரும்புதல் என்பது சுத்திகரிப்புத் திறனை விட வணிகம் மற்றும் புவிசார் அரசியலைச் சார்ந்தே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம்,LightRocket via Getty Images
படக்குறிப்பு,இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும்.
தடைகள் விற்பனையை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; அவை கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றைச் சிக்கலாக்குகின்றன.
"தடைத் தளர்வின் நோக்கம் மற்றும் நீடித்திருக்கும் தன்மை (கப்பல் போக்குவரத்து உட்பட), விலையமைப்பு மற்றும் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் தளவாட வழிமுறைகள் கிடைப்பது ஆகியவை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை," என்று ரிடோலியா கூறுகிறார்.
இந்த வழிமுறைகள் தெளிவுபடுத்தப்படாவிட்டால் அல்லது தளர்த்தப்படாவிட்டால், பரிவர்த்தனைகள் சவாலானதாகவே இருக்கும்.
இத்தகைய விலக்கு எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது வருமானம் மீண்டும் தெஹ்ரானுக்குச் செல்வதைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுமா என்பது குறித்து பெசன்ட் விரிவான தகவல்களை அளிக்கவில்லை. கருவூலத் துறை இது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டது.
இந்த யோசனையை ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியான பதில் அளிக்காமல், "விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான எதையும் நாங்கள் செய்வோம்" என்று கூறி முடித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cy41lwlmyywo
By
ஏராளன் ·