Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மன அழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள், மனநல மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 39 நிமிடங்களுக்கு முன்னர்

ஒருவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல், தொடர் இருமல், ஜலதோஷம்” என்றால் உடனே ஒரு மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டுக் கொண்டால் சரியாகிவிடும் என்று சொல்வோம். ஆனால் அதே நபர் “எனக்கு மனநிலை சரியில்லை” என்று கூறினால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்?

உடல்நிலை சார்ந்த பிரச்னைகள், அவை உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட இயல்பாகக் கடந்து செல்லும் சமூகம், ஒருவருக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று சொன்னால் அவரை பல அடிகள் தள்ளியே வைக்கிறது.

இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி என்னும் மருத்துவ இதழ் (Indian Journal of Psychiatry) மனநலப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 47% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என நம்புகின்றனர், மேலும் 60% பேர் மனநோயைத் தனிப்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க, மன அழுத்தம் (stress) அல்லது மனச்சோர்வு (Depression) போன்ற வார்த்தைகள் இப்போது பொதுவான வார்த்தைகளாக மாறிவிட்டன. ஆனால் அவற்றைத் தீவிர மனநலப் பிரச்னைகளாக யாரும் கருதுவதில்லை. பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சுற்றுலா சென்றால் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் அல்லது நல்ல பிரியாணி சாப்பிட்டால் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் மன அழுத்தம் சரியாகிவிடும் எனப் பலரும் மருத்துவர்களாக மாறி கருத்து கூறுகின்றனர்.

இதில் எந்தளவு உண்மையுள்ளது? உண்மையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்றால் என்ன? எப்போது ஒருவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்?

 

மன அழுத்தம் (Stress) Vs மனச்சோர்வு (Depression)

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் (International Journal of Mental Health Systems) ஆய்வின்படி, 13-17 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 7.3% பேர் குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

“இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக் கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கத் திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். ஆனால் மனச்சோர்வு நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடியது,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“தூக்கமின்மை, எப்போதும் ஒரு சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், தனது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவது ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள். இவை ஒருவருக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவர் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

சில பரிசோதனைகள் மூலம் ஒருவர் மனச்சோர்வின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்,” என்கிறார் ராஜலக்ஷ்மி.

 

‘மது, புகை, சுற்றுலா, மனச்சோர்வுக்கு தீர்வல்ல’

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகமானோர் மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் ஒன்று என நினைக்கிறார்கள், ஆனால் நாள்பட்ட மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்றும், அத்தகைய மனச்சோர்வு உடையவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்றும் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பிரச்னைகள் குறித்து இருந்த விழிப்புணர்வைவிட இப்போது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வும் புரிதலும் இருக்கிறது. ஏனென்றால் மனச்சோர்வு என்ற வார்த்தையை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசவும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல பலரும் தயங்குகிறார்கள். ஏதோ பெரிய பிரச்னை வந்தால் மட்டும்தான் மருத்துவரிடம் செல்வது பலரின் வழக்கம், அதுவும் மனநலம் சார்ந்த பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம். அன்றாட வாழ்வில் மன அழுத்தம் அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.

இதற்கு ஒரு பிரியாணி சாப்பிட்டால், புகைப் பிடித்தால் அல்லது மது அருந்தினால் சரியாகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள். சிலர் தனியாக அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தீர்வுகள். சில நேரங்களில் கைகொடுக்கலாம்.

ஆனால் அதே மன அழுத்தம் நாளடைவில் மனச்சோர்வாக மாறும்போது, இந்த தற்காலிக தீர்வுகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அப்போதும் மருத்துவ உதவியை நாடாமல் இருப்பது மிகவும் ஆபத்து. எனவே எப்படி உடல்நலப் பிரச்னைகள் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோமோ, அது போல நாள்பட்ட மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

 

‘மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்’

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்
படக்குறிப்பு,

உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“மன அழுத்தத்தை மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தொடர் மன அழுத்தத்தால் பல உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். செரிமானக் கோளாறுகள் முதல் இதய நோய், பக்கவாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

தொடர்ந்து பேசிய அவர், “மனச்சோர்வை எடுத்துக்கொண்டால், அது நேரடியாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் மனச்சோர்வு பிரச்னை உடையவர்கள் எப்போதும் ஒரு சோக உணர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எதிலும் ஆர்வமிருக்காது, உணவைக்கூட பெரிதாக விரும்பி உண்ண மாட்டார்கள், எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள்.

இது குற்ற உணர்விற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட இதற்குக் காரணம் நான்தான் எனப் பழி போட்டுக்கொள்வார்கள். இறுதியில் தற்கொலை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருநாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. பல நாட்கள் அவர்கள் மனச்சோர்வால் அவதிப்பட்டிருப்பார்கள். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் அல்லது சொல்ல யாரும் இல்லாமல், அந்த முடிவை எடுத்திருப்பார்கள். எனவே மன அழுத்தம், மனச்சோர்வு இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கான உதவியை நாட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

 

மனநல மருத்துவரை அணுகுவதில் உள்ள தயக்கம்.

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்
படக்குறிப்பு,

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

“இப்போது பிரபலங்கள்கூட தங்களது மனநலப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பணம் இருந்தால் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு வராது என்பது பொய், யாருக்கு வேண்டுமானாலும் அது வரலாம்.

எனவே சமூகம் என்ன சொல்லும் எனத் தயங்காமல் மனநல சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது சாதாரண ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

மத நம்பிக்கைகளும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர்.

“ஒருவருக்கு மனநலப் பிரச்னை என்றால் அவரை ஏதேனும் கோவிலுக்கோ அல்லது தர்காவுக்கோ அழைத்துச் செல்வது இன்னும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. கல்வி மற்றும் தொடர் விழிப்புணர்வு மூலமாகத்தான் இதை மாற்ற முடியும்.”

 

யோகா, தியானம் உதவுமா?

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குப் பலரும் யோகா மற்றும் தியான முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து உளவியலாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டபோது, “யோகா மற்றும் தியானம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனச்சோர்விற்கு அது தீர்வா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை," என்கிறார்.

"முன்பு சொன்னது போல, இதுவும் ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும். இதுபோல மருத்துவ உதவியை நாடாமல், தற்காலிக தீர்வுகளையே நாடிக்கொண்டிருந்தால் அது மனச்சோர்வை தீவிரமாக்கும்."

நாள்பட்ட மனச்சோர்வு இருப்பவர்கள், மனநல மருத்துவரை அணுகவில்லை என்றால் தங்கள் இயல்பான குணத்தை நிரந்தரமாக இழந்து விடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

"ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் எழுவதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இத்தகைய தற்காலிக தீர்வுகள் உதவாது எனப் புரிந்துகொண்டு அவர்கள் தவறான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள்,” என எச்சரிக்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

 

மனநல சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா?

மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனநல சிகிச்சை என்றால் அதற்கு அதிகம் செலவாகும் அல்லது மேல்தட்டு மக்களுக்கான ஒன்று என்ற பிம்பம் உள்ளது. ஆனால், மாவட்ட மனநலத் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் தமிழக அரசு பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக இத்தகைய வசதிகளை தாலுகா வாரியாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா.

அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவத்திற்கு எனத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது, மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“என்னைச் சுற்றி எதுவும் சரியில்லை, உலகமே என்னை மட்டும் ஏமாற்றுகிறது, எனக்கு எதிர்காலம் கிடையாது, இதெல்லாம் மனச் சோர்வு இருப்பவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்கள். இவ்வாறு இருப்பவர்கள் பல நல்ல வாய்ப்புகளை, மனிதர்களை வாழ்வில் இழந்து விடுவார்கள்.

நாம் நினைப்பதைவிடப் பல மோசமான விளைவுகள் மனநலப் பிரச்னைகளால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் நெருங்கியவர்களுக்கோ அத்தகைய பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள். அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைக் கண்டிப்பாக உணர்வீர்கள்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

https://www.bbc.com/tamil/articles/c4njn530j54o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.