Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிசேரியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 20 நிமிடங்களுக்கு முன்னர்

சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றில், இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2% ஆக இருந்த நிலையில், 2016-2021க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் 21.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது, 43.1 சதவிகிதத்தில் இருந்து 49.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மருத்துவ ரீதியான சிக்கல்கள் குறைந்துள்ள போதிலும் (42.2 சதவிகிதத்திலிருந்து 39.5 சதவிகிதமாக குறைந்துள்ளது) அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்திருப்பதாக, அந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு, பிஎம்சி பிரெக்னன்சி மற்றும் சைல்ட்பர்த் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 2015-26 மற்றும் 2019-21 இல் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளை தொகுத்து, இந்த ஆய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு உடல் எடை குறைவாக உள்ள பெண்களை விட இருமடங்கு அதிகம் என்றும், 35-49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் அறுவைகிச்சை பிரசவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறித்து இந்த ஆய்வில், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் தமிழ்நாட்டில் அதுவே மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது அந்த ஆய்வு.

 
அறுவை சிகிச்சை பிரசவங்கள் - சென்னை ஐஐடி ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஒப்பீடு

இதற்கு இரு மாநிலங்களிலும் உள்ள பொது சுகாதார கட்டமைப்பில் உள்ள வித்தியாசத்தையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. சத்தீஸ்கரில் 2021-ஆம் ஆண்டில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் 77% நிரப்பப்படவில்லை. சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணக்காரர்களே அதிகளவில் செல்வது, அந்த சுகாதார வசதியை ஏழைகள் அணுக முடியாததை காட்டுவதை பிரதிபலிக்கிறது.

தமிழ்நாட்டில் இதே காலக்கட்டத்தில் 73 சதவிகித ஏழைகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் ஆனால், ஏழைகள் அல்லாதோர் என வரையறுக்கப்பட்டவர்களில் இந்த விகிதம் 64% ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஏழைகள் அல்லாதோருக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏழைகளே அதிகம் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 40% அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரியான 16 சதவிகிதத்தைவிட அதிகம். சத்தீஸ்கரில் இது 10 சதவிகிதமாக உள்ளது.

அதேபோன்று, அறுவை சிகிச்சை பிரசவங்கள் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 64.2 சதவிகிதமாகவும் இந்திய சராசரி 49.7 சதவிகிதமாகவும் சத்தீஸ்கரில் 58.9 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து 21.5% அறுவை சிகிச்சை பிரசவங்கள் இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுள்ளன.

அறுவை சிகிச்சை பிரசவங்களின் உயர்வுக்கு அப்பெண்களின் சமூக-பொருளாதார காரணிகள், கல்வி, சுகப்பிரசவம் குறித்த பயம் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், எந்த சுகாதார சேவையை அணுகுகிறோம் என்பதை பொறுத்து அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுவது அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

 
அறுவை சிகிச்சை பிரசவங்கள் - சென்னை ஐஐடி ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நல்ல நாள் பார்த்து நடைபெறும் பிரசவங்கள்

மருத்துவக் காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, கர்ப்பிணி 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது 34 வயதுக்கு மேல் இருந்தாலோ, முந்தைய குழந்தைக்கு உண்டான இடைவெளி 24 மாதங்களுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது பிறக்கும் குழந்தை அப்பெண்ணுக்கு நான்காவது அல்லது அதற்கும் மேலான குழந்தை என்றாலோ, அந்த கர்ப்பங்கள் மிகவும் ஆபத்தான கர்ப்பங்கள் என கருதப்படுகிறது. அச்சமயத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொள்வது மருத்துவ ரீதியாக நியாயமானது என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம், தேவையற்ற சமயங்களில் அதனை மேற்கொள்வது உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு இத்தகைய பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, சென்னை ஐஐடியின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியரும் இந்த ஆய்வாசிரியர்களுள் ஒருவருமான வி. ஆர். முரளிதரன் பிபிசி தமிழிடம் பேசினார்.

“இந்திய அளவில் பெண்களிடையே உடல் பருமன் 24 சதவிகிதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஏழை பெண்களிடமும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் ரத்தச்சோகையும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமாகியுள்ளன” என்கிறார் அவர்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-ன் படி, தமிழ்நாட்டில் 40 சதவிகித பெண்கள் உடல் பருமனுடன் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் படித்த பெண்களிடையே அறுவை சிகிச்சை பிரசவங்களை மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல், தாமாக முன்வந்து அறுவை சிகிச்சை பிரசவம் செய்துகொள்வது அதிகமாகியுள்ளதாக முரளிதரன் கூறுகிறார்.

இந்தியாவில் ‘நல்ல நாள்’, ‘நல்ல நட்சத்திரம்’ பார்த்து அந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களும் உண்டு என அவர் தெரிவித்தார். இந்த கலாசார காரணிகள் தமிழ்நாட்டிலும் உண்டு என்கிறார் அவர்.

அறுவை சிகிச்சை குறித்து தாலுகா, கிராம அளவில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். எப்படி தவிர்க்கலாம், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 
அறுவை சிகிச்சை பிரசவங்கள் - சென்னை ஐஐடி ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பு

இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாசிரியர் வர்ஷினி நீதி மோகன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு அதிகளவு சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதை பிபிசியிடம் கூறினார்.

“தமிழ்நாட்டில் 17% தான் ஏழைகள் என வரையறுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பொது சுகாதார கட்டமைப்பு மிக நன்றாக உள்ளன. பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் செல்கின்றனர். சில சிக்கல்கள் இருந்தால் கடைசிக் கட்டத்தில் தான் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். கர்ப்பகால ஆபத்துகளுடன் தான் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதால் அவர்களுக்கு சிசேரியன் நடக்கிறது என நாம் கருதலாம்” என்றார்.

அறுவை சிகிச்சை பிரசவங்களை தவறாக சித்தரிப்பது ஆய்வின் நோக்கம் அல்ல என்றும், அறுவை சிகிச்சைகளால் தாய் இறப்பது எந்தளவுக்குக் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

“சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்புக்கு முழுக்க முழுக்க மருத்துவர்கள்தான் காரணம் என சொல்ல முடியாது. படித்தவர்கள் தாமாகவே அதை தேர்ந்தெடுக்கின்றனர். பிரசவ வலி குறித்த பயம் இருக்கிறது" என்கிறார் வர்ஷினி.

கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்கும் நேரம் உட்பட பலவற்றை குடும்பங்கள் தீர்மானிப்பதாக பேராசிரியர் முரளிதரன் தெரிவித்தார்.

 
அறுவை சிகிச்சை பிரசவங்கள் - சென்னை ஐஐடி ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாமாக சிசேரியனை தேர்ந்தெடுக்கும் பெண்கள்

மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவங்களை தேர்ந்தெடுத்த சில பெண் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவருக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “எனக்கு ஏற்கெனவே மூன்று முறை கருக்கலைந்து விட்டது. பின்னர், செயற்கை கருத்தரிப்பின் மூலம் (ஐயூஐ) என்னுடைய 34-வது வயதில் கர்ப்பமானேன். ஏற்கனவே வயதும் சற்று அதிகமாகிவிட்டதால் மேலும் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என, நானும் என் கணவரும் இணைந்தே அறுவை சிகிச்சை செய்துகொள்வதென முடிவெடுத்தோம்" என்கிறார் அவர்.

ஆனால், தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் இறுதிகட்ட நேரம் வரை தனக்கு சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார். எனினும் தான் அறுவை சிகிச்சையையே தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

“கருத்தரித்து 34-ம் வாரத்திலேயே அறுவை சிகிச்சையை செய்ய நாங்கள் முடிவெடுத்தோம். மருத்துவர்கள் ஒரு வாரம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தனர். ஆனால் நாங்கள் அதற்கு முன்பாகவே அறுவை சிகிச்சை செய்துகொண்டோம்" என்கிறார் அவர்.

அவருடைய 25 வயது தங்கையும் எந்த சிக்கல்களும் இன்றி சிசேரியன் பிரசவம் செய்துகொண்டதாக அவர் கூறுகிறார்.

தங்களின் திருமண நாளன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற விரும்பி அந்நாளை தேர்ந்தெடுத்ததாக அப்பெண் கூறுகிறார்.

“சுகப்பிரசவத்திற்கு முயற்சித்து கடைசி நேரத்தில் ஏதேனும் அவசரநிலையில் சிசேரியன் செல்லலாம் என மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படி நான் பலரிடம் கேள்விப்பட்டதுண்டு. அதனால், நாங்களே சிசேரியன் செய்ய முடிவெடுத்தோம். 34-ஆம் வாரத்திலேயே அறுவை சிகிச்சை செய்ததால், குழந்தைக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அறுவை சிகிச்சைக்கு முன்னதாக எனக்கு சில ஊசிகள் செலுத்தப்பட்டன” என்றார்.

எப்போது பிரசவ வலி வரும் என தெரியாததாலும் அச்சமயத்தில் வீட்டில் யாரும் இருப்பார்களா, இல்லையா என்பது தெரியாததாலும் பலர் சிசேரியன் பிரசவங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பெண் கூறுகையில், தான் பிரசவ தேதியை நெருங்கும் சமயத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். எனினும், சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியிருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால், ‘நல்ல நாளில்' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தன் நெருங்கிய உறவினர் கூறியதாக தெரிவித்தார்.

 
அறுவை சிகிச்சை பிரசவங்கள் - சென்னை ஐஐடி ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மருத்துவ வளர்ச்சிதான் காரணம்"

தமிழ்நாட்டில் தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்-மே கோடைக்காலம்) குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொள்பவர்களும் உண்டு என்கிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்.

தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பை எதிர்மறையாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர்.

“தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், குழந்தைகள் மருத்துவம், தீவிர சிகிச்சை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை (NICU) உட்பட மற்ற துறைகள் நன்றாக வளர்ந்துள்ளது. 2.5 கிலோவுக்கும் குறைவாக எடை கொண்ட குழந்தைகளை பிழைக்க வைக்கிறோம். குறை மாத குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். 24-25 வார குழந்தைகளும் பிழைக்கின்றன. 42 வார குழந்தைகளும் பிறக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம் தான்” என்கிறார் அவர்.

2020-ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் (பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8.2 ஆக உள்ளது. மேலும், 2022-2023 இல் பேறுகால இறப்பு விகிதம் (ஒரு லட்சம் பிரசவங்களில்) 52 ஆக குறைந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

“அதே ஆய்வில் சத்தீஸ்கரில் 77% சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் 34 அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுகாதார வசதிகள் அடிமட்ட அளவில் எல்லோருக்கும் சென்றடைந்துள்ளது” என்கிறார் சாந்தி ரவீந்திரநாத்.

 
சிசேரியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தானாக விரும்பி சிசேரியன் செய்வது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்ளும் அவர், இது தார்மீக ரீதியில் சரியானதா இல்லையா என்பது குறித்த விவாதங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

“பிரசவத்தின் போது தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை முற்றுகை, மருத்துவர்களை தாக்குவது அடிக்கடி நிகழ்கின்றன. அதனால், தாய்-குழந்தையை காப்பாற்ற பாதுகாப்பான வழியாக சிசேரியன் பல சமயங்களில் நடக்கிறது" என்றார்.

தாமாகவே விரும்பி சிசேரியன் செய்ய சொல்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள், ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என கூறுகிறார் அவர்.

“எல்லாவற்றையும் தாண்டி எந்த வழியில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்பது அப்பெண்ணின் உரிமை” என்கிறார் மருத்துவர் சாந்தி.

உலக சுகாதார மையத்தின்படி, 1985-ம் ஆண்டு முதல் மக்கள்தொகையில் 10-15% அறுவை சிகிச்சை பிரசவங்களையே பரிந்துரைத்துள்ளது. உலகளவில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 2021-ம் ஆண்டின்படி, 21 சதவிகிதமாக உள்ளது என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தேவையற்ற சமயங்களில் அறுவை சிகிச்சை செய்வது தாய், மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

“10-15% என்பதை 1980களில் உலக சுகாதார மையம் பரிந்துரைத்தது,. தற்போது அடைந்திருக்கும் மருத்துவ வளர்ச்சியுடன் இந்த விகிதத்தை மாற்ற வேண்டும்” என்கிறார் மருத்துவர் சாந்தி.

"அரசு தீவிரமாக கண்காணிக்கிறது"

தமிழ்நாட்டில் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய சுகாதார திட்டம், மருத்துவமனை முதல்வர்கள், இணை இயக்குநர்கள் வாயிலாக ஒவ்வொரு மாதமும் எந்தெந்த மாவட்டங்களில் சிசேரியன் சதவிகிதம் கூடுதலாக இருக்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என விரிவான ஆய்வு நடத்துகிறோம். சிசேரியன் சிகிச்சையை முழுமையாக தவிர்க்க முடியாது. அவர்களின் பாதுகாப்புக்காகவும் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், எவ்வித சிக்கலும் இல்லாமல் இருப்பவர்களுக்கு இயற்கை பிரசவம் தான் ஆக வேண்டும். அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன, நாங்கள் இதை மிக தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். கர்ப்பிணி பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள், மூத்த செவிலியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4n1d2490x7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.