Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி]
 
 
“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே."
 
கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்து போகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் என் மாந்தளிர் மேனியும் விணாகிக் கொண்டிருக்கின்றதே -- இப்படி ஏங்கி தவித்து இருந்தவளுக்கு இன்று ஒரு பௌர்ணமி.
 
".... திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?"
 
நீ [தலைவன்] முழுமதி போன்றவன். உன் [தலைவன்] நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது? என்று நினைத்தாலோ ?அவளது முகமும் முழுமதியாக ஒளிர்ந்தது. பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேண்டும் அப்படி ஒரு அழகு.
 
''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."
 
நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள். அவள் யாருக்காக இவ்வளவு காலமும் காத்திருந்தாளோ அந்த கள்ளன் வருகிறான்.
 
"உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்று ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்;
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே"
 
மாறனோ அம்புமேல் அம்பு பொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவனை நினையாதிருக்கவும் அவளால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் அவள் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை என்று இது வரை காலமும் இருந்தவளுக்கு இப்ப அவன் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறான் என்றால் எப்படி இருக்கும்?. அந்த பூரிப்பில் அவள் அழகு மேலும் மேலும் மெருகேறியது. ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அப்படித்தான் இவளும் இருந்தாள். பெயரில் மட்டும் அல்ல, அழகிலும் அப்படித்தான். ஆனால் அவளுக்கு என்னவோ அந்த பெயர் எள்ளளவும் பிடிக்காது. ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் படைத்தவனுக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது. பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்டான் பிரம்மா. ஆசையோடு காமத்தோடு அணைத்தான். அவள் பெண் மானாக மாறி தப்பி ஓடினாள். பிரமன் விட்டானா? ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்து தன் பசிக்கு இரை யாக்கினான். இதனால் தான் போலும் அந்த பெயர் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. தன் பெயரை "திலோ" என்று மட்டுமே கூறி வந்தாள் மிக மிக அமைதியுடன் அவள் பயணிகள் வருகையை நோக்கி வந்தாள்.
 
"ஒரு பெண் நீராட வரும்போது அவளது நடையை பார்த்து பழகுவதற்காக ஒரு அன்னப்பறவை வயலில் காத்து நிற்குமாம்"
 
- இப்படி கூறினான் கம்பன். அதே மாதிரி தான் அவளும் அன்ன நடை பயன்று வந்தாள் அங்கு ஆர்ப்பரித்தெழுந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அப்படியே ஒருக்கா நின்றுவிட்டது. அவள் அதை சற்றும் பொருட் படுத்தாதவளாய் அங்கே ஒரு மூலையில் அவனுக்காக காத்திருந்த்தாள்.
 
"உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து ,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,"
 
புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல; நானும் அவரும் ஒருவரை ஒருவர் காணும் போது நடக்கக் கூடாது .
 
"புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,"
 
விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள், நல்ல நாள் ஆகட்டும் என்று நினைத்தவாறு இன்னும் நேரம் இருப்பதால் தன்னை அறியாமலே பாவம் கொஞ்சம் "சேமம் புகினும் யாமத்து உறங்கு" போல் அவள் தூங்கி விடடாள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 2 தொடரும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 [ஒரு புது முயற்சி]
 
 
"சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப,
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே."
 
சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவனே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? இப்படி சங்க கால "தெரியிழை அரிவை" யாக அவள் தோன்றினாள். அவள் பயந்தவளாக திடுக்கிட்டு கண்ணை அகல திறந்து பார்த்தாள். இன்னும் அவன் வர நேரம் இருக்கிறது. என்றாலும் அவள் மனதில் திடீர் என ஒரு கவலை எங்கு இருந்தோ வந்து ஆடத் தொடங்கியது. எப்படி சங்க கால காதலன் இரவுக்குறியில் சந்திப்பதற்கு வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் காதலி வருந்தினாலோ, அப்படி அவளும் வருந்த தொடங்கி விட்டாள். மேல் நாடு சென்று மேல் படிப்பு முடித்து வரும் அவனை, தன் காதலனை "பரிசம்" கொடுத்து யாரவது கொத்தி விடுவார்களோ என அவள் உள்ளம் ஒரு ஊஞ்சல் ஆட தொடங்கி விட்டது. எங்கே நல்ல உத்தியோக, நல்ல படிப்பு மாப்பிள்ளை கிடைக்காதா தமது மகளுக்கு என பண முடிப்புடன் காத்திருக்கும் சிலரை எண்ணி கலங்கினாள்.
 
"உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பம் எனினே, தப்பு ந பலவே."
 
பசியைப் போக்க ஒரு நாழித் தானியம் மற்றும் உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத் துணியும் ஆகிய இரண்டே; பிற எல்லாமும் எல்லார்க்கும் சமமே; சேர்க்கும் செல்வத்தை சமூக வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் மெத்தைக்குள் தைத்து வைத்துக் கொண்டு தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை பல இன்னல்களைத் தரும் என்றாலும் அது பாதாளம் வரை செல்லக்கூடியது. அவர்கள் எவரையும் மாற்றக் கூடியவர்கள்.பணம், செல்வாக்கு எல்லாத்தையும் வாங்கிவிடும்.
 
"பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை"
 
என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள் நெஞ்சில் வந்து மோதி,
ஒரு நடுக்கம் அவளை ஆட்ட, அவள் மீண்டும் அயர்ந்து விடடாள்.
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே,
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;
‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!
இயங்குதி! என்னும்;’யாமே,"
 
தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே,ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். இப்படித்தான் பெண்பிள்ளைகளை சரி சமனாக பார்த்தார்கள் அதை ஒரு பாரமாக அவர்கள் கருதியது இல்லை அது மட்டும் அல்ல பெண் எடுப்பதற்கு ஆண் வீட்டார் தான் பரிசம் கொடுத்தார்கள்.
 
"உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே"
 
பெண்ணுக்கு ஒரு விலை தந்து, பொல் பிடிக்கும் நரைத்த தலையும் உடைய பெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து, மணம் பேசி முடிக்கும் வழக்கம்,
 
"பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டு உடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களோ
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே.",
 
அதாவது பெண்ணைத் தேடி வரும் வழக்கம் அன்று இருந்தது.
 
"..மூவேறு தாரமும் ஒருங்குடன்கொண்டு
சாந்தம் பொறைமர மாக நறைநார்..
இன்தீம்பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் ..
யாமும் நாள் வல்லே வருக என
இல்லுறை கடவுட்குப் பலி ஓக்குதும்."
 
வெவ்வேறாகிய அம்மூன்று பண்டங்களையும் சந்தன மரம் காவு மரமாக அவற்றை ஒரு சேரக் காவிக்கொண்டு, நறைக் கொடியாய நாரினால் ........... ............ மிக்க இனிமையுடைய பலாமரங்களையுடைய அழகு மிக்க செல்வத்தையுடைய நம் தந்தையும் நின்னைக் கொடுத்தலை ஏற்றுக் கொண்டான் ........... .............. நாமும் நம் மணத்திற்கு வரைந்த நாள் விரைந்து வருவதாக என்று நல்ல இறையினையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து மனையுறை தெய்வத்திற்கு பலி செலுத்து வோமாக - இப்படி இருந்த நாம், எப்படி இப்படி மாறினோம் ?அவளுக்குள் ஒரு குமறல்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 3 தொடரும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03  [ஒரு புது முயற்சி] 


"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல ... 
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்" 

காட்டில் உறையும் தாய் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த் தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இப்படி பெண்ணுக்கு முன்னுருமை கொடுத்த தமிழ் இனம் எப்படி மாறியதோ ? இதற்கு யார் காரணமோ ? அவள் தூக்கத்தில் புலம்பினாள். பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகின்றான்.

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர ஸ்தேபி யாந்தி பராம்கதி"[133]

"பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்" 

என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு பகவத் கீதையில் இழிவு படுத்துவதை  காணலாம். இப்படித் தான் மெல்ல மெல்ல மாற்றப்பட்டதோ? பரிசம் சீதனமாக மாறியது. அதன் விளைவு? அவள் நெஞ்சம் பட படத்தது. தன் அக்காவின் கதை நிழலாக அவள் கண் முன் ஓடியது. அவள் தன்னை அறியாமலே கண்ணீரில் நனைந்தாள். 


வால்மிகியின் ராமாயண சீதை அவள் முன் தோன்றி ஆறுதல் கொடுத்தாள். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலை வைத்து படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காகம் வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாக ராமனுக்கு படவில்லை. இராவணனை வென்ற இராமன், சீதையை பார்க்க மறுத்த நிலையில், 

"இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை" 

என்றான். மேலும் அவன் 

"உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே!  உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம் ... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா." 

என்று கேட்கின்ற போதே, சீதையை கொன்றுவிட்டான் ? கடைசியாக இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு, மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள் சீதை. அவள் தனக்கு நடந்ததை கூறி

 " பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே."

பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்து நெய்தல் நிலத்துத் தலைவன் வரும் தேர். அது போல உன் அவன் வரும் விமானம் உன் கண்களில் தோன்றிய நோயைத் தீர்க்கும் என் கூறி அவள் கண்ணீரை துடைத்தாள். கண் விழித்த அவள் ஒரு வாறு தன்னை சரிபடுத்திக் கொண்டு, எல்லாம் நல்ல படியாக நடக்கும் என தன்னை தானே தேற்றிக் கொண்டாள். 

அவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் என ஒரு பெரும் கூட்டமே அங்கு வந்து கொண்டு இருந்தது. அவர்களுடன் அவளுக்கு தெரியாத ஒரு ஆடம்பர குடும்பம் வருவதை இட்டு அவள் திடுக்கிட்டாள். ஒரு சில நேரம் தடு மாறியே விட்டாள். அவளுக்கு இனி அவர்களை பார்ப்பது வெறுப்பாக இருந்தது. அவளுக்கு அங்கு இனி காத்திருப்பதும் பிடிக்கவில்லை. மேலும் தான் அங்கு வந்திருப்பதை காட்டி கொள்ள விரும்பாதவளாய், மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர் பாணம் வாங்கி குடிக்கத் தொடங்கினாள். ஆனால் கண் அவளுக்கு, அவள் எண்ணங்களுக்கு படியவில்லை. அது இன்னும் பயணிகள் வருகையின் வாசல்லையே பார்த்துக் கொண்ட்டிருந்தது. அவள் என்ன செய்வாள்?

"நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே” 

உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர! என அவள் வாய் தன்னையறியாமல் முணு முணுத்தது.

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?"

சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, ஒரு காரணத்தால்? என்ன செய்வது என்று எனக்கு புரியவில்ல. இப்படி அவள் மன நிலை இருந்தது.

"நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே” 

அவன் தனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான தன் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என நொந்தாள். மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச் சொல்லி? இல்லையே? இப்ப வருந்தி என்ன பயன்? மஞ்சளாய்ப் போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னவோ இவளது கண்கள் பச்சையாகி விட்டனவோ? யாருக்கு தெரியும்?


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 4 தொடரும்.

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04  [ஒரு புது முயற்சி] 
 
 
"அண்ணா வாரார்", "அங்கே தம்பி வருகுது" அவளை அறியாமலே ,அவள் கால்கள் மெல்ல அடி எடுத்து வைத்தது.
 
"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந் நோய் நோன்று கொளற்கு அரிதே"
 
பகல் பொழுதில் ஒரு பாறையின் மீது வெண்ணெய்யை வைத்து விட்டு, பேசவும் முடியாத கைகளும் இல்லாத ஒரு மனிதனை, வெண்ணெய்க்கு காவல் வைத்தால் எப்படி தவிப்பனோ அப்படி நான் உருகுகிறேன்,,, காலம் கழிய அந்த வெண்ணெய் வெயிலால் உருகும். அதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதனால் என்ன செய்ய முடியும்? உரக்க கூவி மற்றோரை அழைக்கவும் முடியாது .. ஏனெனில் அவன் ஊமை .. அதே நேரத்தில் தன் கரங்களால் அதை எடுத்து வேறு பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கவும் முடியாது ... ஏனெனில் அவனுக்கு கரங்களும் இல்லை .... அவனால் என்ன செய்ய முடியும் .... இயலாமையால் பரிதவிப்பான் ... அதைப் போலவே என் அவன் மிக அருகில் இருந்தும் நான் அவனை காண முடியவில்லை ... இயலாமையில் தவிக்கிறேன் .... என புலம்பினாள். அவனை ஒரு கூட்டமே மொய்த்து விட்டது. அந்த ஆடம்பர குடும்பத்துடன் வந்த அந்த பெண் அவனை கட்டிப்பிடித்து ஒரு முத்தமே கொடுத்து விட்டாள்.
 
"இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?"
 
சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ இப்படி நான் அவளிடம் சொன்னேன். அவளும் என்னிடம் ஆசையாகப் பேசினாள் ..... அந்தக் கொடிச்சி, அந்தக் காட்டுப் பெண் என்னை விட்டுச் செல்லும்போது, அவளுடைய முதுகைப் பார்த்துக் கலங்கிய என் நெஞ்சு - அவளை விட்டுவிடாதே!என்றது - இப்படி நடக்க வேண்டும் என் கனவு கண்டு ஏங்கியவளுக்கு இடியாக அந்த முத்தம் இருந்தது. எனினும்
 
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா."
 
பகல் நேரத்தில் காக்கை தான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்ல முடியாது. ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்து விடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்ல முடியாது. ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம். ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவது தான். ஆனால் அதற்காக அவன் அவசரப் படக்கூடாது. மீன் வரும் வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம். இப்படி நினைத்தவளாய் அந்த பெண்ணை தன் ஒரக் கண்ணால் பார்த்தாள். இவள் திலோத்துமை என்றால் அவளும் ஒரு மேனகா தான். மேனகா என்பது மேனி என்ற அழகு உடலைக் குறிக்கும்.
 
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு"
 
அவள் தேவதையோ? மோகினியோ? அழகிய தோகை மயிலோ? இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ ? அவளின் அழகைக் கண்டு என் மனமே மயங்குகிறதே. என் அவன், என் காதலன் என்ன செய்வான்?
 
"சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே."
 
சிறிய வெண்மையான அழகிய கோடுகளை உடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், அழகிய தோற்றம் உடையவளும் மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என தடுமாறக் கூடாது. இந்த புதியவளின் காதல் - ஈர்ப்பினால் என் அவன் தன் வாழ்வியல் நெறிகளில் இருந்து பிறழ்ந்து விடக்கூடாது என்று பல தடவை வேண்டிக் கொண்டாள். சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே என அறிவுறுத்தலாமோ என்று சற்று யோசித்தாள். அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்க வில்லை. மெல்ல மெல்ல நகர தொடங்கினாள். என்றாலும் அவளுக்கு ஒரு அவா. அங்கு என்னதான் நடக்குது பார்ப்போம் என்று. தன் இதயத்தை கல்லாக்கி கொண்டு மீண்டும் அந்த கடை அருகில் நின்று குடிக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் குளம் ஆகி விட்டன. காதில் - சிரிப்பது , பகிடி விடுவது, ஊர் கதைகள் இப்படி அவர்களின் ஆரவாரம் விழுந்து கொண்டு இருந்தன.
 
"கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே"
 
அவளது கண்ணீர் நிறைந்து அவளது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல் ஆகிவிட்டது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 5 தொடரும்.

Edited by kandiah Thillaivinayagalingam

  • kandiah Thillaivinayagalingam changed the title to இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலக்கிய பாடல்கள் ஊடாக  ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 [ஒரு புது முயற்சி] 
 

"நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே." 

நோகும் என் நெஞ்சே,நோகும் என் நெஞ்சே, இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார், நோகும் என் நெஞ்சே. என தன்னை தானே தேற்றிக் கொண்டு ,தலையை நிமிர்ந்து மீண்டும் ஒரு முறை ஏனோ அங்கு பார்த்தாள். அவள் கண்களுக்கு வெட்கமே இல்லை?

அந்த மேனகா "குட்டி மாமா.. குட்டி மாமா" என்று அவனை கூப்பிட்ட வாறு எதோ கொஞ்சி குழவிக் கொண்டிருந்தாள். அவள் அப்படியே பிரமித்து விட்டாள். அவனின் மூத்த அக்கா, அவன் சின்னவனாக இருக்கும் போதே கல்யாணம் செய்து வெளி நாடு போனது இப்ப அவளுக்கு நினைவுக்கு வந்தது. என்றாலும் எதிர் பக்கம் பார்த்த படி குளிர் பாணத்தை குடிக்கத் தொடங்கினாள். அது அவளது ஊடலோ ? 

"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்ல(து) அவர்அளிக்கு மாறு."

அவனிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவனோடு ஊடுதல், அவன் தன்மேல் மிகுதியாக அன்பு செலுத்த செய்ய வல்லது என்றோ ?

"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் -" 

தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலையோ, அவர்கள் புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சியோ, அவர்களின் இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதமோ -- இப்படி எத்தனையோ நினைவுகள் கண் முன் அவளுக்கு தோன்றி தோன்றி மறைந்தன. அவன் ஏன் இன்னும் தன்னிடம் வரவில்லை என்ற கோபமும் அதிகரித்தது. அவள் இனி எப்போதும் திரும்பி பார்ப்பதே இல்லை என்ற இறுதி முடிவோடு விரைவாக அங்கிருந்து வெளியேற தொடங்கினாள். இது அவளின் ஒரு வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காத போது உண்டாவது தான் இந்த கோபம் . யாரோ தட தட என்று பின்னால் ஓடி வருவது போல அவள் உணர்ந்தாள். யாரோ நேரம் போகிறது என ஓடுகிறார்கள் என நினைத்தவாறு இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

"குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே! 
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே."

குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே, நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால் கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே! என்பது போல 

"என்னடி தாகமாக இருக்குது அந்த மிச்சத்தை தா "

என்று கூறியவாறு, பதிலுக்கு காததிராமல், மிச்சத்தை பறிப்பது போல் அவள் கையை பிடித்தே விட்டான். அதே குரல். தன்னுடன் தினம் தினம் தொலை பேசியில் கதைக்கும் அதே குரல். சட்டென திரும்பி , சற்றும் எதிர் பாராத விதமாக "அம்மா" என அலறி விட்டாள். அவன் தாய் பதறி ஓடி வந்து "என்ன? என்ன?" என கேட்டாள். மற்றவர்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர், அவள் ஒருவாறு தன்னை சமாளித்தவாறு உங்கள் மகன் விக்குகிறார் என்றாள். அதற்கு ஏன் இந்த சத்தம் ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ? பின் மகனை நோக்கி "எப்படித்தான் நீ இவளை கட்டி குடும்பம் நடத்தப் போகிறியோ என செல்லமாக கேட்டாள். அவள் சொர்க்கத்திற்கே போய் விட்டாள். தாயோ மகன் உண்மையிலேயே விக்கல் ஆட்கொண்டது என அவன் நெஞ்சை தடவினாள். அவனோ தாயின் கழுத்தில் சாய்ந்தபடி பின்புறமாக அவளை பார்த்த பார்வை -அதை அவள் என்ன என்று சொல்வாள்?

"அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, 
நகைக் கூட்டம்     
செய்தான், அக் கள்வன் மகன்"

அதிர்ச்சியடைந்த நான்  ‘அம்மா! இவன் என்ன செய்கிறான் பாரேன்’ என்று அலறினேன். அம்மாவும் பதறிப் போய் ஓடி வந்தாள். ஆனால் இவன்? எதுவும் தெரியாத அப்பாவி போல் விழிக்கிறான். நல்ல வேளை, நான் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவன் செய்த குறும்பை மறைத்து ‘தண்ணீர் குடிக்கும் போது இவனுக்கு விக்கல் எடுத்தது’ என்று பொய் சொன்னேன். நான் சொன்னதை அம்மா நம்பிவிட்டாள். ஆதரவாக அவனுடைய முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப் பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப் புன்னகை செய்தான்! இப்படித்தான் சொல்வாளோ ? அவள் கண் மூடி சந்தோஷ கடலில் மிதந்து கொண்டு இருந்த இந்த வேளையில் "குட்டி மாமி.. குட்டி மாமி.." என்ற கொஞ்சும் குரல் கேட்டு கண் திறக்கும் முன் அவள் கன்னத்தில் மாறி மாறி முத்த மழை பொழிந்தது. முத்தம் கொடுத்தது அந்த மேனகா. இப்ப இது எந்த எரிச்சலையும் கொடுக்கவில்லை. மாறாக பெருமையையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு கொடுத்தது.

 "யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." 

நானும் நீயும் எப்படி பழக ஆரம்பித்தோம் எப்படி ஒருவருக் கொருவர் அறிந்து கொண்டோம்? ஆனாலும்... எப்படி செம் மண்ணில் நீர் விழுந்த பின் அந்த செம்மண்ணும் நீரும் கலந்த கலவை போல் நம் நெஞ்சங்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்து விட்டன. இப்படி அவனும் அவளும் கலந்து விட்டனர். இனி எமக்கு அங்கு என்ன வேலை?.

நன்றி 
 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
  • நியானி changed the title to இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.