Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தேர்தலில் சமூக ஊடகங்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 16 ஏப்ரல் 2024

“நீங்க எப்போ திருமணம் பண்ணிக்க போறீங்க?” பரபரப்பான பாரத் ஜோடோ யாத்திரைக்கு நடுவே, ஓர் இரவு உணவுடன் கூடிய கலந்துரையாடலில் காமியா ஜானி எனும் யூடியூபர் ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்வி இது.

இந்திய அரசியலில் சில தொலைக்காட்சி நேர்காணல்கள் அதிர்வுகளை கிளப்பியிருக்கின்றன. சில கேள்விகள் அரசியல் தலைவர்களுக்கு கடும் நெருக்கடி அளித்திருக்கிறது. ஆனால் இது சமூக ஊடகங்களின் யுகம். இன்று, அரசியல் தலைவர்கள் மக்களைச் சென்றடைய வெகுஜன ஊடகங்களை தாண்டியும் பல உத்திகளை கையாள்கின்றனர்.

பொது வாழ்க்கையில் இருக்கும் அவர்கள் மக்களுக்குத் தெரியாத தங்களது மென்மையான மறுபக்கத்தை காட்டுவதற்காக சமூக ஊடக பிரபலங்களுக்கு நேர்காணல் அளிப்பது சமீபத்திய உத்தியாக மாறி வருகிறது. இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தி, தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு வாக்குகளாக மாறுமா? விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை

யூடியூபருடன் குப்பைகளை அகற்றிய பிரதமர்

கடந்த ஆண்டு அக்டோபரில் குப்பைகள் இல்லா இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ஹரியானாவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான அன்கித் பையன்பூரியாவுடன் பிரதமர் நரேந்திர ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அன்கித்துடன் உடன் கலந்துரையாடியவாறே நரேந்திர மோதி குப்பைகளையும் அகற்றினார்.

PM Modi

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,யூடியூபர் அன்கித் உடன் நரேந்திர மோதி

இதுபோன்ற யூடியூபர்களுடன், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் தோன்றியுள்ளார். ஆனால் ஊடகங்களை காட்டிலும் யூடியூபர்களிடம் அதிகம் பேசுவது ஏன் என்கிற கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் வேறு ஒரு காரணத்தை முன்வைக்கிறார். 2023 ஜூன் மாதம் யூடியூபர்களுக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி

“ஊடகங்கள் ஒருசிலரை கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. நம்மிடம் (எதிர்க்கட்சிகள்) பேச விருப்பம் இல்லை. வெகுஜன ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்கிற முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, அவர்களிடம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றார்

செப்டம்பர் 2023-ல் INDIA கூட்டணியின் ஊடகக் குழு, தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த 14 ஊடகவியாளர்களை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் நாட்டில் வெறுப்பை பரப்புவதாகவும் INDIA கூட்டணி குற்றம்சாட்டியது.

Rahul

பட மூலாதாரம்,CURLYTALES

படக்குறிப்பு,ராகுல் யூடியூபர் காமியா உடன்

‘யூடியூபராக’ மாறிய நரேந்திர மோதி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னை ஒரு யூடியூபராக அடையாளப்படுத்தியிருக்கிறார். செப்டம்பர் 2023-ல் நடந்த யூடியூப் ஃபேன்பெஸ்ட் இந்தியா (YouTube Fanfest India) நிகழ்ச்சியில் நரேந்திர மோதி பெரும்பாலான யூடியூபர்கள் சொல்வதுபோல தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

உலகிலேயே யூடியூபில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட அரசியல் தலைவராக நரேந்திர மோதி திகழ்கிறார். சுமார் 2 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை அவர் கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட இலங்கை மக்கள் தொகைக்கு நிகரானது.

“சமூக ஊடகங்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கலையில் முதலில் வெற்றிபெற்றவர் பிரதமர் நரேந்திர மோதிதான்” என்கிறார் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில்நாதன்

“2014 தேர்தலிலேயே சமூக ஊடகங்களை மிகப்பெரியளவில் பயன்படுத்திக்கொண்ட கட்சியாக பாஜக இருந்தது. அதன் பிறகு, அதே சமூக ஊடகங்களில் இந்துத்துவ பிரசாரம் அல்லது வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டதன் மூலமாக 10 ஆண்டுகளாக வலதுசாரி அமைப்புகளே சமூக ஊடகங்களை ஆக்கிமிரமித்திருந்தன. தற்போது இதற்கு எதிர்வினையாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன” என ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.

Narendra Modi

பட மூலாதாரம்,NARENDRA MODI/YT

படக்குறிப்பு,நரேந்திர மோதி

அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நாடுவது ஏன்?

சென்னையில் வசிக்கும் யூடியூபரான சமீஹாவுக்கு 22 வயது. நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கிறார். சமீபத்தில் இவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை தன்னுடைய யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்திருந்தார். யதார்த்தமான உரையாடலுடன் வெளிவந்த அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நாடுவது ஏன்? என்கிற கேள்வியை சமீஹாவிடம் முன்வைத்தோம்.

“அரசியல் தலைவர்கள் சமூக ஊடக படைப்பாளிகளை நோக்கி ஏன் வரக்கூடாது? வெகுஜன ஊடகங்கள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டவை. அதே நேரம், சோசியல் மீடியா அப்படியல்ல. இதனை பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்துகின்றனர். புது வகையான பார்வையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் சென்றடையவே அரசியல் தலைவர்கள் யூடியூபர்களை நோக்கி வருகிறார்கள்” என்றார் சமீஹா.

திமுக எம்.பி கனிமொழியுடான நேர்காணலை சமீஹா தயாரிக்க விரும்பிய விதம் குறித்து கேட்டோம், “அதிகமாக அரசியல் பேசாமல், ஒரு யதார்த்தமான நேர்காணலை தயாரிக்க விரும்பினேன். எனக்கு என்ன கேள்விகள் கேட்கத் தோன்றியதோ அதைத்தான் கேட்டேன்” என்று சமீஹா பதிலளித்தார்.

Sameeha
படக்குறிப்பு,யூடியூபர் சமீஹா மர்யம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு யூடியூபரான இர்ஃபானும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை நேர்காணல் செய்திருக்கிறார். கனிமொழியுடன் இர்ஃபான் நேர்காணல் செய்தபோது அவருக்கு சுவாரஸ்யமான உணவு சவால் ஒன்றை (Weird Food Challenge) முன்வைத்திருந்தார்.

"இயல்பாகவே எந்த ஒரு எம்.பியும் எம்.எல்.ஏவும் இதுபோன்ற சுவாரஸ்யமான சவாலை செய்ய மாட்டார்கள். தமிழில் இப்படி ஒரு நேர்காணலை யாருமே எடுத்ததில்லை. ஆனால் கனிமொழி ஸ்போர்ட்டிவாக இதை செய்திருந்தார். அந்த காணொளி மிகவும் நன்றாக வந்திருந்தது" என நினைவுகூர்ந்தார் இர்ஃபான்.

Irfan
படக்குறிப்பு,யூடியூபர் இர்ஃபான்

ஜனநாயக நாட்டில் வெகுஜன ஊடகங்களின் பங்கு என்ன?

மேலே தலைப்பிடப்பட்ட அதே கேள்வியை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரனிடம் கேட்டோம்.

'இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' என்கிறார் திருவள்ளுவர். இந்த குரலுக்கு ஏற்றாற்போல நாட்டில் எங்கு தவறு நடந்தாலும் அதை எடுத்துச் சொல்லும் மிகப்பெரிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. விமர்சன கண்ணோட்டத்தோடு நாட்டில் நடப்பவற்றை எந்தவித பக்கச் சார்பும் இன்றி, செய்தியாக வெளியிட வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்தது. ஆனால் தற்போது ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது” என பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

Balachandran
படக்குறிப்பு,முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன்

வெகுஜன ஊடகங்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், ஆட்சியில் இருக்கும் பிரதமர், சில முதலமைச்சர்கள் முன்பு போல பத்திகையாளர்களை தொடர்ச்சியாக சந்திப்பதில்லை. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. இது குறித்து பேசிய பாலச்சந்திரன்,

“நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் உள்பட யாராக இருந்தாலும் அவர்கள் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான நடைமுறை. பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் ஏன் வாய்மூடி மெளனம் காக்கின்றன. இது ஓர் ஆரோக்கியமற்ற சூழல். ஆனால் இந்த சூழலை ஏற்படுத்தியதும் ஊடகங்கள்தான்" என்கிறார்

தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகள்

தேர்தலில் சமூக ஊடகங்கள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,யூடியூபர் மைத்திலி உடன் பிரதமர் நரேந்திர மோதி

மும்பையின் முன்னணி யூடியூபர்களில் ஒருவரான ரன்வீர் அல்லாஹ்பாடியா மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் உள்பட சிலரை நேர்காணல் செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் டெல்லியில் மத்திய அரசு நடத்திய National Creators Award எனும் தேசிய படைப்பாளிகளுக்கான விருது விழாவில் ரன்வீருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி (Disruptor of the Year) விருது வழங்கினார்.

ரன்வீரை போலவே 23 பேருக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. அதேசமயம், ரன்வீர் உள்பட பெரும்பாலனவர்கள் வலதுசாரி கருத்துகளைக் கொண்ட காணொளிகளை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தொடர்ச்சியாக தயாரித்து வெளியிடுவதையும் கவனிக்க முடிகிறது.

ஆனால், நாட்டில் சிறந்து விளங்கும் சமூக ஊடக படைப்பாளிகளை கெளரவிக்கும் விதமாக முதல்முறையாக இப்படியொரு விழாவை நடத்துவதாக பாஜக அரசு அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை என விழாவிலேயே பிரதமர் நரேந்திர மோதி பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

அந்த விழாவில் சமூக ஊடக பிரபலங்களுடன் நரேந்திர மோதி சகஜமாக கலந்துரையாடினார். பெரும்பாலான படைப்பாளிகள் நரேந்திர மோதியை மேடையில் புகழ்ந்து பேசினர். சிலர் பிரதமரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். லட்சக்கணக்கானோர் பின்தொடரும் அவர்களின் சமூக ஊடக பக்கங்களிலும் பதிவிட்டனர்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து மோதியே தனிப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்துவதாக பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? (How to win an Indian Elections) என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் சமூக ஊடகங்கள்

“கோடிகளில் காசு புரளுகிறது"

சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பாக்கில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.

“டிவி, பிரிண்ட் மீடியாக்களை காட்டிலும் சோசியல் மீடியாவில்தான் அனைத்து கட்சிகளும் அதிக கவனம் செலுத்தும். டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்கிற்கு மட்டுமே பல கோடி ரூபாயை மிகச் சாதாரணமாக செலவிடுவார்கள். எல்லா கட்சிகளுக்கும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட அளவில் ஆதரவு இருக்கிறது.

யூடியூபர்களின் ஆதரவு வட மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு அதிகம். தேர்தல் நெருங்கும்போது புதுப்புது யூடியூப் சேனல்கள் முளைக்கும். செய்திச் சேனல்கள் என்கிற போர்வையில் சின்ன சின்ன யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள், பத்திரிகையாளர் என்கிற பெயரில சிலரிடம் நேர்காணல் எடுத்து வெளியிடும். அனைத்திற்கும் இங்கே காசுதான்.” என்றார் அந்த முன்னாள் ஐ-பாக் ஊழியர்.

தொடர்ந்து பேசிய அவர், “நடுநிலை என காட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்து பேச தனியான யூடியூப் சேனல், நேர்மறையான விளம்பரத்திற்கு தனியான யூடியூப் சேனல், எதிராளியை விமர்சிக்க தனியான சேனல்கள் இயங்குகின்றன. இவை அனைத்தையும் செய்ய பணம் தரப்படுகிறது. சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த, எவ்வளவு கோடிகளை வேண்டும் என்றாலும் செலவிட அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர்” என முன்னாள் ஐ-பாக் ஊழியர் தெரிவித்தார்

சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

Social Media

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவில் உள்ள சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை

2023 ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை சுமார் 58 கோடி என்கிறது இண்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Internet and Mobile Association of India) ஆன்லைன் தரவுகளை சேகரிக்கும் ஜெர்மனியின் ஸ்டாடிஸ்டா நிறுவனத்தின் கூற்றுப்படி. உலகளவில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதிக பயனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

ஜனவரி 2024 வரை இந்தியாவில் மட்டும் சுமார் 46.2 கோடி பயனர்களை யூடியூப் கொண்டிருப்பதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. ஃபேஸ்புக் 36.6 கோடி பயனர்களையும், இன்ஸ்டாகிராம் 36.2 கோடி பயனர்களையும் கொண்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது தேர்தல் திருவிழாவை எதிர்கொள்கிறது. அதேவேளை, RSF (Reporters Without Borders) எனும் அமைப்பு சர்வதேச அளவில் 180 நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2023-ம் ஆண்டு நிலவரத்தின்படி இந்தியாவுக்கு 161-வது இடம் அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn0wyy2954yo



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.