Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"குடியை கெடுத்த குடி"
 
 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” 
(குறள் 926)
 
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார் வள்ளுவர். அப்படியான ஒருவர் தான் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த கந்தசாமி ஆவார். அவர் ஒரு குடிசை வீட்டில் மனைவியுடனும் ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவரின் மகள் பெரிய அழகு ராணி என்று கூற முடியாவிட்டாலும், அவர் ஒரு இளைஞனை பிரமிக்க வைக்கும்  ஓரளவு அழகு உள்ளவரே! அவரின் பெயர் ரோஜா என்று எண்ணுகிறேன். மனைவி காலையில் அப்பமும் இடியாப்பமும், தன் குடிசையில் சுட்டு , அயலவர்க்கு விற்பார். மாலையில் இட்டலி, பிட்டு அவித்து விற்பார். ஆனால் கந்தசாமி தொடக்கத்தில் கூலிவேலைக்கு போய் ஓரளவு உழைத்து வந்தாலும், போகப் போக நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகினார். 
 
கந்தசாமியின் இந்த மாற்றத்தை நான் காணும் பொழுது, தொடக்கத்தில், அதன் தன்மை அல்லது போக்கு சரியாக விளங்கா விட்டாலும், பண்டைய சுமேரியாவில், கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட மதுவை பற்றிய ஒரு சுமேரியன் துதி பாடலின் [Sumerian Hymn to Ninkasi] சில வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தது.  
 
"நின்காசியே,  நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான 
இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய், 
அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய், 
நின்காசி, நீ வடி கட்டும் பெரும் மரத்தொட்டி 
ஒரு இன்பமான ஒலியை தருகிறது!
குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா 
பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக 
[a blissful mood… with joy in the [innards] [and] happy liver] 
அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" 
 
[தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]  
 
கந்தசாமி, கூலி வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது, அவரின் நடையும், தனக்கு தானே சிரித்து, ராஜா மாதிரி ஆனால், தள்ளாடி தள்ளாடி வரும் அவரின் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலை ஏன் என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது!. ஆனால் அவர் பிற்காலத்தில் தானே நின்காசி மாதிரி சாராயம் டிப்பார் என்றோ, அந்த கள்ள சாராயத்தில் என் தந்தையும் தன் உயிரை பறிகொடுப்பர் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.    
 
ரோஜா, தனது சிறுவயதில் நன்றாக படித்ததுடன், மிகவும் மகிழ்வாக எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவராகவும் இருந்தார். உடுப்புகளும் ஓரளவு வண்ணம் வண்ணமாக கவர்ச்சியாக உடுப்பார்.  
 
நாமும் சில வேளை அவர்களிடம் காலை உணவுக்கு அப்பம் வாங்கி உள்ளோம். நானும் தம்பியும் அதை சாப்பிட்டுவிட்டுதான் பாடசாலை போவோம். அப்பத்துக்கு சம்பலும் தருவார்கள். அவரின் மனைவி, அவர் குடிக்க தொடங்கிய பின், சிலவேளை அழுது என் அம்மாவிடம் முறையிடுவார். 'இவர் இப்படியே போனால், காசும் கரையும், உடலும் கரையும் ஏன் வாழ்வே கரையும்' என்பார்.   
 
நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,
 
 "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே 
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"  . 
 
என்று எடுத்து உரைக்கிறார். அது மட்டும் அல்ல, பெண்கள் தெளிந்த கள்ளினைக் குடித்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடினார் என்று அகநானுறு 336 இல் காண்கிறோம். 
 
"தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்"
 
அப்படியான ஒரு சம்பவத்தை விரைவில் கந்தசாமி வீட்டிலும் காண்பேன் என்று முதலில் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் குடியை குடி கெடுக்கும் என்று , அவரின் மனைவி கந்தசாமியை பற்றி அடிக்கடி என் அம்மாவுக்கு முறையிடுவதை கண்டுள்ளேன். அப்ப எல்லாம் ரோஜா கூட , தாயின் கையை பிடித்துக்கொண்டு, தனக்கு, அம்மாவும் அப்பாவும் இரவில் தினம் சண்டை என்பதால், காதை பொத்திக்கொண்டு நேரத்துடன் படுக்கைக்கு போவதாகவும், அது தன் படிப்பை, மற்றும் பாடசாலை கொடுத்து விடும்  வீட்டு வேலைகளை, முடிக்காமல் போய் விடுவதாகவும், படிப்பில் கவனம் குறைவதாகவும் , தாயுடன் சேர்ந்து என் அம்மாவிடம் முறையிடுவதை கேட்டுள்ளேன். 
 
கந்தசாமி ஒரு நாள் கூலி வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு, தானே சாராயம் காச்சி களவாக வீட்டில் இருந்து விற்க தொடங்கியதை அறிந்தோம். அது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அமைதியான எம் சுற்றாடல், இனி என்ன பாடு படப்போகுதோ என்று எமக்கு தெரியவில்லை. குடியால் தன் குடியை இப்ப கெடுத்துக் கொண்டு இருக்கும் கந்தசாமி, இனி எத்தனை எம் அயலவர்களை  கெடுக்கப் போகிறானோ என்று ஒரே கவலை!. எம் அயலவர் சிலர் காவல் துறையினருக்கு அறிவித்த போதிலும், அவனின் பணம் அவர்களையும் வாங்கி விட்டது என்பதை பின்பு தான் உணர்ந்தோம். 
 
அவனுக்கு கையில் பணம் கணக்க புழங்க தொடங்க, வியாபாரம் கலைக்கட்ட, கந்தசாமியை திட்டிய மனைவியும் அதில் பங்கு பற்ற தொடங்கினார். அவரின் நடை உடை கூட கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர் இப்ப என் அம்மாவுடன் கதைக்கும் பொழுது, மது வாடை அவர் வாயில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் கந்தசாமியை திட்டுவதை மட்டும் விடவில்லை.  
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
 
என்பது போல அவரும் இப்ப இரவு நேரங்களில், கணவனுடன் சேர்ந்து, கொஞ்சம் கூட வெறிக்கக் கூடிய காச்சிய சாராயமும் - இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக் /பீர் ] கைவிட்டு மதுவினை - குடிக்க தொடங்கினார் என் அறிந்தோம். பாவம் ரோஜா அவர் இன்னும் படிக்க வேண்டும், நல்ல உத்தியோகம் எடுக்கவேண்டும், நல்ல குடும்பமாக  கௌரவமாக வாழ்வை அமைக்க வேண்டும் என்பதிலேயே இன்னும் இருப்பது போலவே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு, இப்ப தாயும் தந்தையுடன் கூடி இரவில் குடித்து இன்புற, எல்லாம் அவளுக்கு தலைகீழாக மாறிவிட்டது. 
 
அவரின் முகத்தில் ஒரு கவலை குடிகொண்டதை காணக் கூடியதாக இருந்தது. பொல்லாத காலம், அந்த காலக் கட்டத்தில் தான், இலங்கையில் மிக முக்கியமாக கருதப்படும் பரீட்சையில் ஒன்றான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் நடைபெற்றது. அவளின் முகத்தல் எந்த மகிழ்வையும் காண முடியவில்லை. கடைசிநாள் பரீட்சை எழுத போனவள், வீடு திரும்பவே இல்லை.  அவள் பரீட்சை முடிய தன் சக தோழிகளுடன் ஒருவேளை எதாவது உணவு விடுதியிலோ அல்லது எதாவது படம் பார்க்க போய் இருப்பாள் என அன்று இரவும் அவர்கள் தங்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். 
        
ஆனால், யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு போகும் கடைசி தபால் புகையிரதம் புறப்பட்டு போகும் பொழுது ஒரு இளம் பெண் தற்கொலை செய்ததால், தபால் வண்டி தாமதமாக புறப்படும் என்ற இரவு செய்தி தான் கந்தசாமிக்கும் மனைவிக்கும் ஒரு சந்தேகத்தை கொடுத்து இருக்கலாம். அப்ப தான் கந்தசாமியின் மனைவி பதைபதைத்து வந்து, என் அம்மாவிடம், என்னை  அங்கு போய் பார்க்கும் படி கூறினார்.   
 
கந்தசாமியும், அவரின் மனைவியும், தங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் அயலவர்களுக்கும், ஏன் எங்கள் அப்பாவின் சாவிற்கும் காரணமாக இருந்தாலும், ஒருவர் உதவி என வரும் பொழுது மன்னிப்பதே மனித அழகு என்பதாலும், இந்த சூழ்நிலையிலும், தன் பண்பாட்டிலும் பழக்கவழக்கங்களில் சற்றும் மாறாத ரோஜாவின் நல்ல இயல்பும், என்னை அங்கு போய் தேட வைத்தது. 
 
"வாய் மடித்து கண் சுழன்று 
வான் உயர கை அசைத்து   
வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே 
வான் இருண்டும் வராதது எனோ ?"
 
 
"மணலில் கதிரவன் புதையும் மாலையில்   
மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் 
மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் 
மடையர் போல் பாய்ந்தது எனோ ?"
 
 
"செவ்வாய் நீயோ வீடு வந்தாய்
செவ் இதழ் நீயோ திறக்கவில்லை 
செல்வச் செழிப்பாய் பல்லக்கில் வராமல் 
செத்து சாக்கில் வந்தது எனோ ?"  
 
 
"பள்ளி பையை ரயில் பாதையில் 
பகுதி பகுதியாக கண்டு எடுத்தேன்
பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் 
பள்ளி புத்தகம் சிவந்தது எனோ?"  
 
 
"மச்சம் கொண்ட உன் சிறுகால் 
மல்லாந்து என்னை பார்ப்பதை கண்டேன்
மயான அமைதியை விட்டு ரோஜாவே 
மடிந்தகால் நானென்று சொல்லாதது எனோ?" 
 
 
அது அவளே தான். எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி காவற்படை விசாரணை மற்றும் தாய் தந்தையரின் அடையாள உறுதி படுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பின்பே செய்வாய் அவளின் பிரேதம் வீட்டிற்கு கொடுக்கப் படும் என்றார்கள். குடி குடியை மட்டும் கெடுக்கவில்லை, அவர்களின் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிட்டது.  இனி அவர்கள் திருந்தி தான் என்ன பயன்? 
 
 
நன்றி 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.