Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன்

manage-work-relationship.jpgmanage-work-relationship.jpg
 

சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது.

இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள்.

“உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள்

“உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான்

அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள்.

சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள்.

“எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள்

“யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள்.

ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது.

ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும்.

சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும்.

பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது.

எப்படிப் பிரிவது?

“எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க”

தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே!

ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.eric-ward-7KQe_8Meex8-unsplash-300x200.j

பிரிவதற்கான படிநிலைகள்:

பிரிவதற்கான காரணங்களை உணர்வது

பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது

முடிவை ஏற்றுக்கொள்வது

பிரிவின் வலியைக் கடந்து வருவது

பிரிவில் இருந்து முழுமையாக வருவது

பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு.

அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும்.

பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது.

relationship_problems-1638970335-hero-30முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும்.

ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.
 

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ஒரு உறவில் நான் நானாக இருக்கமுடியாது என உணரும் பொழுது அந்த உறவில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை

மனைவிக்கு அல்லது காதலிக்குப் பிடிக்கும் என்பதற்காக தனது கொள்கை/விருப்பங்களை மாற்றி வாழ நினைத்தாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அப்படி இருக்க முடியாமல் போகும் என்றுதான் நினைக்கிறேன். 

ஒரு உறவில் இருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி அவரவர் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அந்த உறவு விரிசல் இன்றி தொடரும். ஆனால் தேவையற்ற விதமாக கட்டுப்படுத்துவதும் விதிகளைப் போடுவதும் அந்த உறவினை நம்பவில்லை என்பதுடன் அவமானப்படுத்துவதாகவே கருதப்படும் என நம்புகிறேன். 

ஒரு உறவில் இருக்கும் பொழுது  மூச்சு முட்டி சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் இருப்பது அடிக்கடி நிகழுமாயின் அங்கே அந்த உறவில் விரிசல் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். 

நீண்ட காலம் ஒன்றாக வாழ வேண்டும் என நினைத்தால் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தால், இருவரும் ஒருவரில் ஒருவர் பரஸ்பர நம்பிக்கையும் வைத்திருக்கவேண்டும். அத்துடன் அவரவர் உணர்வுகளுக்கும்/விருப்பங்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் தங்களையும் ஏமாற்றாமல் வாழலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.