Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஓடம்"

 

"கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் 
காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் 
பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப்
போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" 


"கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை 
காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள்
தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் 
தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" 


"தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் 
திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும்
வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள்
உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!"


வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். 


அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள்.


விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்! 


அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை. 


அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான். 


எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். 


அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.  


“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .”


இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை? 


ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன.


அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர். 


ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன.


"ஓடத்தான் வந்தான் அன்று-விழி
ஓரத்தால் பார்த்தான் நின்று
சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை
வாடத்தான் நோவைத் தந்தான்!"


'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல்
ஓடிப்போய் நீரில் துள்ளும்
நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை
நாணத்தால் பின்னே தள்ளும்!"


"வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல்
வேகத்தைப் பாய்ந்தே வெல்லும்
வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த
வீரத்தான் வரவோ பஞ்சம்!"


கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது.


எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை.


வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது. 


அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது.


ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது.


ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது.


"என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை.


எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள். 


அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது! 


நன்றி 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be an image of 2 people and boat 437898081_10225042012380262_8285645113640037939_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ipS4Qlb8fFoAb5EjHhJ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB8o0r6bcw2neTGFu8XP_1Vi-t41Gxa7EVzwLWbjv-fmQ&oe=6628D548 438646312_10225042012100255_3142841522223801751_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=soSr1OwVZ48Ab6m4CR_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA5QTBESNjbuQnNNxR8_Vjllb8G7KDrnTlNjuZXRTOsfA&oe=6628F2C8 437950633_10225042012860274_6253344800217582986_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nmYDBOVYeroAb5IbRPH&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDCWRfVlz7BWOHDvp5oeCMG1UYPim3IK6YQa1oAoWPVMw&oe=6628DC19


 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.