Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நாம்தேவ் கட்கர்
  • பதவி, பிபிசி மராத்தி
  • 5 மே 2024

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும் சமூகத் தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த விசாரணை அறிக்கையின் விவரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளைப் பார்ப்பதற்கு முன், அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்குப் பிறகு, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் தோந்தா பிரசாந்த் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். தோந்தா பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தெலங்கானா காவல்துறை விசாரணைக் குழுவை நியமித்தது. அதில், சைபராபாத் காவல் ஆணைய எல்லைக்கு உட்பட்ட மாதப்பூர் பிரிவின் அப்போதைய ஏசிபி எம்.ராமண்ண குமார், ஏசிபி என். ஷியாம் பிரசாத் ராவ், ஏசிபி ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் விசாரணைக்குப் பிறகு 21 மார்ச் 2024 அன்று 60 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், விசாரணையில் கண்டறியப்பட்டது என்ன என்பதையும் அதன் முடிவுகள் என்ன என்பதையும் சைபராபாத் மாதாபூர் பிரிவு காவல் உதவி ஆணையர் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கையின் படி, மொத்தம் 59 பேரின் வாக்குமூலம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த 'ஆதாரமும் இல்லை' என்பதே விசாரணை அறிக்கையின் சாராம்சம். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை’ என்றார். மார்ச் 21, 2024 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை, மே 3, 2024 அன்று வெளிவந்தது, அதன் முடிவுகள் சர்ச்சையைத் தூண்டின.

விசாரணை அறிக்கையில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று, ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது. மற்றொன்று, ரோஹித் வெமுலாவை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என்பது. இந்த இரண்டு முடிவுகளும் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இவ்விரு விவகாரங்கள் தொடர்பாகவும் காவல்துறை விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதை பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்
படக்குறிப்பு,ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகம்

ரோஹித் ஒரு 'தலித்' அல்ல - விசாரணை அறிக்கை

காவல்துறையினர் இந்த விசாரணை அறிக்கையில் 11 கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்துள்ளனர். முதல் கேள்வி ரோஹித் வெமுலாவின் சாதி பற்றியது.

"ரோஹித் வெமுலா பட்டியல் சாதி வகுப்பை சேர்ந்தவரா? இந்த வழக்கில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பொருந்துமா?' என்ற கேள்விக்கு பதில் அளித்த காவல்துறை, 'ரோஹித் வெமுலா வத்தேரா சாதியை சேர்ந்தவர். தெலங்கானாவில் வத்தேரா சாதி (Vaddera) பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படுகிறது. எனவே, ரோஹித் வெமுலா பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்ல, அவரது தற்கொலை வழக்கில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல, வத்தேரா சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடும் காவல்துறை, "ரோஹித்தின் சாதி அவரது முந்தைய கல்லூரியில் 'மாலா (எஸ்சி)' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் சாதி சரிபார்ப்புத் துறையிடம் விசாரணை மேற்கொண்டோம், அப்போது ரோஹித் வெமுலா 'வத்தேரா' சாதியைச் சேர்ந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. எஸ்சி சாதி சான்றிதழை வருவாய் துறையிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுள்ளனர்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோஹித்தை யாரும் தற்கொலைக்குத் தூண்டவில்லை - விசாரணை அறிக்கை

இந்த விசாரணை அறிக்கையின்படி, தடய அறிவியல் ஆய்வகம் (FSL) ரோஹித் வெமுலாவின் தற்கொலை கடிதத்தில் உள்ள கையெழுத்து அவரின் கையெழுத்துடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும், ரோஹித் மற்றும் பிற மாணவர்களுக்கு எதிராக முறையான விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் வெமுலா மற்றும் அவருடன் இருந்த மாணவர்களுக்கு எதிராக எந்தவித சட்டவிரோத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ரோஹித் வெமுலாவுக்கு உதவித்தொகை மறுக்கப்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில், "ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அப்பா ராவ் கொடுமைப்படுத்தினார்’’ என்ற கூற்றையும் காவல்துறை நிராகரித்துள்ளது.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்
படக்குறிப்பு,விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி

ரோஹித் வெமுலா விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறை விசாரணை நடத்தி, அவரின் தற்கொலை கடிதத்தை விசாரணை அறிக்கையில் இணைத்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது ரோஹித் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் உண்மையில், ரோஹித் வெமுலா உறுப்பினராக இருந்த அமைப்புகளின் (ASA மற்றும் SFI) மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ரோஹித் தனது தற்கொலை கடிதத்தால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

உண்மையில் ரோஹித் வெமுலாவின் சாதி என்ன?

காவல்துறையின் அறிக்கையின்படி, சாதி சரிபார்ப்பு விசாரணையின்போது, ரோஹித், வத்தேரா (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சாதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனை, அவரது தந்தையும் உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக ரோஹித்தின் சாதி குறித்த சர்ச்சையான கருத்துக்கள் பரவியது. அந்த சமயத்தில், ரோஹித்தின் தாயார் வி.ராதிகா, “நான் பட்டியல் சாதிப்பிரிவான `மாலா’ என்ற சமூகத்தில் பிறந்தேன். பின்னர் வத்தேரா சாதியைச் சேர்ந்த மணிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். சில காரணங்களால் மணி குமாரை விட்டுப் பிரிந்தேன்” என்றார்.

தெலங்கானாவில் `மாலா’ என்ற சாதி, பட்டியல் சாதி பிரிவின் கீழ் வருகிறது.

இது குறித்து வி.ராதிகா மேலும் கூறியிருப்பதாவது, “மணிகுமாரை பிரிந்த பிறகு மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எஸ்.சி காலனியில் குடிபெயர்ந்தேன். மேலும் பட்டியல் சாதியினரின் அனைத்து மரபுகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்றார். ரோஹித் வெமுலாவின் பட்டியல் சாதிச் சான்றிதழ் ‘மோசடி’ செய்து பெறப்பட்டது என்று அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது.

2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தந்தை அல்லது தாயார் தலித் என்றால் அவர்களது மகனும் தலித்துகளாகவே கருதப்படுவார்கள் என்று கூறியது.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் வெமுலாவின் தாய் வி. ராதிகா மற்றும் சகோதரர் ராஜா

விசாரணை அறிக்கை அடிப்படையற்றது, பிழையானது - வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ்

ரோஹித் வெமுலா வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் பிபிசியிடம் கூறுகையில், "ரோஹித் வெமுலா வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணையில் குறைகள் உள்ளன. மிக அலட்சியமாக இந்த வழக்கு கையாளப்பட்டுள்ளது. ரோஹித் இறப்பதற்கு முன் எழுதிய இரண்டு கடிதங்களில், பல்கலைக்கழகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெளிவாக குறிப்பிட்டுருந்தார். மன உளைச்சல் ஏற்படும்படி தன்னிடம் நடந்து கொண்டதாகவும் எழுதியுள்ளார்.

ஆனால், காவல்துறை விசாரணை அறிக்கையில் சாதி உறுதி செய்யப்பட்டதால், வருங்காலத்தில் ஏதாவது பிரச்னை வரலாம் என கருதி அவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆதாரமின்றி இப்படி குறிப்பிடலாமா? மேலும், குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சாதி சான்றிதழ் குறித்துக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் இன்னமும் குண்டூர் ஆட்சியர் முன்பு ஆஜராகவில்லை. மறுபுறம், ரோஹித் ஒரு தலித் என்பதை நிரூபிக்கும் 18 ஆதாரங்கள் காவல்துறையின் முன் சமர்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்
படக்குறிப்பு,ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகம்

ஜெய் பீம் ராவ் மேலும் பேசுகையில், “இவ்வாறான சூழ்நிலையில், வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையை புறக்கணித்துவிட்டு, மிகவும் அலட்சியமாக நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ஆட்சியரின் விசாரணை முடிவு வெளியாகாமல் சாதி பற்றி கேள்வி எழுப்பக்கூடாது.

மேலும், 2018 முதல் 2024 வரை முடங்கியிருந்த இந்த வழக்கில் காவல்துறை திடீரென ஒரு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. விசாரணை அதிகாரிகளாக இருக்கும் போலீசார், தங்கள் கடமையை முற்றிலும் புறக்கணித்து, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்” என்றார்.

“ரோஹித் வெமுலா அவமதிக்கப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது. மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று அரசு கூறுகிறது. எனவே, அவர்கள் மீண்டும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

காவல்துறையின் விசாரணை அறிக்கையில் மீதான கேள்விகள்

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் டாக்டர் சுக்தேவ் தோரட்டை, பிபிசி மராத்தி நேர்காணல் செய்தது.

டாக்டர் சுக்தேவ் தோரட், “ரோஹித் வெமுலா பட்டியல் சாதியா அல்லது ஓபிசியா என்பதை கண்டுபிடிப்பதில் அமைப்பின் நேரத்தை செலவிடுவது சுத்த முட்டாள்தனம். ரோஹித் வெமுலா ஒரு தலித் என்ற பாகுபாட்டை எதிர்கொண்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை தேவைப்படுகிறது.

ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெலங்கானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அவரின் குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளது திருப்தி அளிக்கிறது. இந்த விவகாரம் மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

டாக்டர் சுக்தேவ் தோரட் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா பட்டியல் சாதி சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை பெற்றார், அதன் அடிப்படையில் அவர் அனைத்து சலுகைகளையும் பெற்றார். அதாவது, பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் ரோஹித் தலித் என்பது தெரியும். அவர் மீது காட்டப்பட்ட பாகுபாடு, இப்போது அவர் தலித் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் அழிந்து போகுமா என்ன?”

“பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த உள்ள அம்பேத்கரிய அமைப்புகளில் இணைந்து ரோஹித் வெமுலா செயல்பட்டு வந்தார். அவர் தெளிவான பாதையில் தான் சென்றிருக்கிறார். கருத்தியல் ரீதியாகவும் அவர் பட்டியல் சாதி எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எதிராக தான் இயங்கி இருக்கிறார். அப்படியிருக்க, அவர் ஒரு தலித் அல்லாதவர் என்பது அம்பலமாகிவிடும் என்ற பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வது மிகவும் தவறு” என்றார்.

மேலும் பேசிய அவர், "ரோஹித் வெமுலா வழக்கில் சிலரை விடுவிக்க இவ்வாறு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், தற்போது தெலங்கானா அரசு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் உண்மை வெளிவரும் என நம்புகிறோம்," என்றார் டாக்டர் சுக்தேவ் தோரட்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சரும், தலித் இயக்க தலைவருமான டாக்டர் சஞ்சய் பாஸ்வானும் பிபிசி மராத்தியிடம் பேசினார். அவர் கூறுகையில், “ரோஹித் வெமுலா வழக்கின் போக்கை நான் ஆரம்பத்திலிருந்தே பின்பற்றி வருகிறேன். எனக்குத் தெரிந்தவரை, ரோஹித் மிகவும் தெளிவான மாணவர். சாதி அடையாளத்தை வெளிக்கொணர அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“இந்த வழக்கில் காவல்துறை சரியாக விசாரணை நடத்தவில்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது. விசாரணையின் திசை சரியாக இருக்க வேண்டும். இப்போது மீண்டும் விசாரிக்கத் தயாராகி விட்டீர் எனில் முந்தைய விசாரணையில் உள்ள குறைபாட்டை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று அர்த்தம். எனவே, விசாரணை அறிக்கை பிழையானது என்பது நிரூபணமாகிவிட்டது. இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். இம்முறை வெளியாகும் விசாரணை சமூகத்திற்கு சரியான தகவலை வழங்க வேண்டும், இதன் மூலம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும்" என்று டாக்டர் சஞ்சய் பாஸ்வான் கூறினார்.

”காவல்துறை அறிக்கையைப் பார்க்கும்போது, ரோஹித் வெமுலா இரண்டாவது முறையாக கொல்லப்பட்டிருக்கிறார்” என்று மூத்த சட்ட நிபுணர் சங்கராஜ் ருப்வதே கூறுகிறார்.

சங்கராஜ் ருப்வதே பேசுகையில், “ரோஹித் வெமுலாவின் சமூக அந்தஸ்து தலித்தா அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பா என்பதை விட்டு விடுவோம். ஆனால், அவர் தற்கொலை சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்தது, அந்த வழக்கு முந்தைய சம்பவங்களின் பின்னணியைக் கொண்டிருந்தால், அது முறையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த அறிக்கையில் தற்கொலை சம்பவத்துக்கு முன்னர் நடந்தவற்றை பற்றி எந்த தகவலும் இல்லை”.

"ரோஹித் தனது சாதி குறித்து அம்பலமாகிவிடும் என்று பயந்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது ஒரு கற்பனைக் கதையாகத் தெரிகிறது. பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவர்களுக்கானது. அவர்களின் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் , இவ்வழக்கில் நிர்வாகத்தைக் காப்பாற்றுவதே முன்னுரிமையாக தெரிகிறது.

இத்தகைய அறிக்கைகள் சட்டத்தின் மீதான பயத்தைப் போக்கி விடும், எந்த மாணவரும் துணிந்து அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டார்கள். இது கல்வி நிறுவனங்களில் ஜனநாயக சூழலுக்கு உகந்ததல்ல" என்றார் சங்கராஜ் .

ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கேள்வி எழுப்பினர்

"பேராசிரியர் அப்பா ராவ் துணைவேந்தராக வராமல் இருந்திருந்தால் ரோஹித் உயிருடன் இருந்திருப்பார்” என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் சமூக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கக் கொள்கை துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீபதி ராமுடு கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், “அப்பா ராவ் எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னையை பெரிதுபடுத்தினார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தலித்துகள் மீதான அவரின் வெறுப்பு, பாகுபாடு மற்றொன்று சில அதிகார பிரமுகர்களிடம் இருந்து பாராட்டு பெறுவது.”

இந்த வழக்கின் போக்கை கூறும் பேராசிரியர் ராமுடு, “உண்மையில், அப்பா ராவ் துணைவேந்தராக வருவதற்கு முன்பே இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போதைய வி.சி.சர்மா, இரு தரப்பு மாணவர்களும் தவறு செய்ததாகக் கூறியதுடன், தவறை மீண்டும் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தார். இந்த விவகாரம் அத்துடன் முடிந்திருக்கும், ஆனால் சர்மா சென்ற பிறகு துணைவேந்தராக வந்த அப்பா ராவ், விஷயத்தை மீண்டும் கிளறினார். தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்ட குழுவை அமைத்து ஐந்து மாணவர்களையும் இடைநீக்கம் செய்தார். ஐந்து பேரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்” என்றார்.

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்

பட மூலாதாரம்,ROHITH VEMULA'S FACEBOOK PAGE

படக்குறிப்பு,ரோஹித் வெமுலா

அவர் மேலும் கூறுகையில், “எங்களை தூக்கிலிடுங்கள் அல்லது சயனைடு கொடுங்கள் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவுக்கு ரோஹித் வெமுலா கடிதம் எழுதியிருந்தார், ஆனால் அப்பா ராவ் பதிலளிக்கவில்லை. இவ்வளவு உணர்வுபூர்வமான தீவிரமான கடிதத்திற்கு பல்கலைக்கழகத் தலைவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், நடந்த சம்பவத்துக்கு அவர்கள் தான் பொறுப்பு? போலீஸ் தரப்பு இந்த கோணத்தில் ஏன் விசாரிக்கவில்லை.

இது சாதிச் சான்றிதழுக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று. ஒரு மாணவர் அப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், அதற்கு துணைவேந்தர் பதிலளிக்கவில்லை என்றால், மாணவரின் மரணத்திற்கு துணைவேந்தர் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களையோ, அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்களை விசாரிக்காமல் போலீஸார் விசாரணையை முடித்தால் அதனை சதியாகவே கருத வேண்டும்” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய அப்பா ராவ், "யார் என்ன சொன்னாலும் அதற்கு நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. நான் நீதித்துறையை நம்புகிறேன்” என்றார்.

 

வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் - தெலங்கானா போலீசார்

ரோஹித் வெமுலா: சந்தேகங்களை எழுப்பிய விசாரணை அறிக்கையின் முழு விவரம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தெலங்கானா காவல்துறை இயக்குநர் ரவி குப்தா

இதற்கிடையில், தெலங்கானா காவல்துறையின் விசாரணை அறிக்கை வெளியானதும், ரோஹித்தின் தாயும் சகோதரரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதன்பின், தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநர் ரவி குப்தா கடிதம் ஒன்றை வெளியிட்டு, இந்த வழக்கில் மேலும் விசாரணைக்கு மனு தாக்கல் செய்வோம் என்று கூறினார்.

விசாரணை அறிக்கை நவம்பர் 2023-க்கு முன் எழுதப்பட்டு, மார்ச் 2024ந்இல் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று காவல்துறை இயக்குநர் ரவி குப்தா கூறினார்.

மேலும் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “ரோஹித் வெமுலாவின் தாயார் மற்றும் பிற உறவினர்கள் விசாரணை குறித்து கேள்வி எழுப்பியதால் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும். இதுகுறித்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

விசாரணை அறிக்கைக்குப் பிறகு ரோஹித் வெமுலாவின் தாயார் வி.ராதிகா மற்றும் சகோதரர் ராஜா வெமுலா ஆகியோர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, ரோஹித் வெமுலாவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி எங்களிடம் உறுதியளித்துள்ளார். ரோஹித்துடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற மாணவர்களைப் பற்றியும் முதலமைச்சரிடம் தெரிவித்தோம். வழக்கு காரணமாக இந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் பிஹெச்டி படித்தவர்களாக இருந்தும் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது என்றோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த அரசாங்கம் எமக்கு நீதி வழங்கும் என நம்புகின்றோம்” என வி.ராதிகா தெரிவித்தார்.

உண்மையில் 2016-ல் நடந்தது என்ன?

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ஜனவரி 17, 2016 அன்று, ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன், ரோஹித் வெமுலா மற்றும் அவரது நான்கு நண்பர்கள் பல்கலைக்கழகத்தால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர், மாணவர்கள் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும், பல்கலைக்கழகத்தின் முதல் விசாரணையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டது, அதன் பிறகு ரோஹித் மற்றும் அவரது மற்ற மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும், பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் வந்தார், அவரது பதவிக் காலத்தில் எந்த ஒரு உறுதியான காரணமும் கூறாமல் பழைய முடிவு திரும்பப் பெறப்பட்டது. மீண்டும் ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் பல்கலைக்கழக விடுதி மற்றும் பிற பொது இடங்களில் தடை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், செகந்திராபாத் பாஜக எம்.பி. பண்டாரு தத்தாத்ரேயா (தற்போது ஹரியானா ஆளுநர்) அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதினார். அவர் பல்கலைக்கழகத்தை 'நம்பிக்கை துரோகி' என்று அழைத்தார் மற்றும் அங்கு நடந்த சம்பவங்களில் தலையீடு கோரினார்.

தத்தாத்ரேயாவின் கடிதத்தைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது, இது ரோஹித் வெமுலா மற்றும் பிற மாணவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.

ரோகித் வெமுலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த கடிதத்தை மேற்கோள் காட்டி, அம்பேத்கர் மாணவர் சங்கம், தத்தாத்ரேயாவின் கடிதத்திற்கு பிறகு, பல்கலைக்கழகத்தில் பிரச்னைகள் தொடங்கியதாகவும், அதன் பிறகு மேலும் சில தலித் மாணவர்கள் சமூக பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கில் பண்டாரு தத்தாத்ரேயா மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தத்தாத்ரேயா, குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c51nv2j0ng2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.