Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மஞ்சள் மாளிகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அவுட்லுக் தொடர்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 12 மே 2024

"ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார்.

ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி மீண்டும் அவரின் கண் முன் தோன்றியது.

`இன்’ நதியின் பள்ளத்தாக்கின் சரிவுகளில், பனி மூடிய ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத் தொடரின் நிழலில் அமைந்திருக்கும் வெளிறிய மஞ்சள் நிற வீட்டின் புகைப்படம் அது.

இப்போது அந்த மஞ்சள் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடமாக உருமாறி இருந்தது. ஆனால் அதன் சுவர்கள், இன்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் வாழ்ந்த ஈவி போன்ற குழந்தைகளிடம் மறைக்கப்பட்ட ஒரு பயங்கரமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது.

ஆஸ்திரியாவை பூர்விகமாக கொண்ட ஈவி, விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, தன் குழந்தைப் பருவத்தின் இருண்ட அத்தியாயத்தை தனது மனதில் பூட்டி வைத்திருந்தார். தனது உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையாளரிடம் கூட இந்த உண்மைகளை ஈவி சொல்லவில்லை.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

ஈவியின் வாழ்க்கையில் இரண்டு கருப்பு அத்தியாயங்கள் இருந்தன. ஒன்று அவரின் வீடு, மற்றொன்று அந்த மஞ்சள் நிற குழந்தைகள் கண்காணிப்பு மையம். முதல் அத்தியாயத்தில் சரியான குடும்ப அமைப்பு இன்றி தனிமையில் எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்துள்ளார். ஆஸ்திரியாவில் இருந்தவரை அவருக்கு சில இனிமையான நினைவுகள் இருந்தாலும், பெரும்பகுதி கசப்பான நினைவுகளை கொண்டிருந்தது. எனவே அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஆஸ்திரியா பற்றிய கடினமான நினைவுகள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும் முயற்சியில், அவர் அங்கு திரும்பி செல்லக்கூடாது என்றும் ஜெர்மன் மொழியைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

ஆனால் உண்மை வேறு. அவர் அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாலும், அவை ஆழ்மனதில் நிரந்தரமான வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தை பற்றிய இணையத் தேடலுடன், தனக்குள் புதைந்திருக்கும் கொடிய நினைவுகளை மீண்டும் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஒருவழியாக அந்த சம்பவங்களை வெளியே சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. குழந்தை பருவத்தில் நடந்தவற்றை, 59 வயதான ஈவி பகிர்ந்து கொண்டார்.

ஈவியின் தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. ஆனாலும் துன்பகரமான குழந்தை பருவத்தை பற்றி சொல்லும் போது, சிரமத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார்.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,8 வயதில் ஈவி

ஈவியின் மகள் லில்லி மற்றும் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முற்பட்டார்.

"நான் என் கடந்த காலத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்தேன். ஆனால் குழந்தைகள் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய அந்த மனநல மருத்துவமனையில் நான் வைக்கப்பட்ட அத்தியாயத்தை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அது இருட்டு, வலி.. என்னோடு போகட்டும்”

ஒரு நாள், ஈவி தனிமையில் இருந்தபோது, அவருக்கு சட்டென நினைவுக்கு வந்த ஆஸ்திரிய நகரான இன்ஸ்ப்ரூக்கில் ஒரு முகவரியை இணையத்தில் தேடினார், அப்போது தான் அந்த ’வார்த்தை’ அவர் கண்களில் தென்பட்டது.

" `Kinderbeobachtungsstation” .. ஆம் இது தான் அந்த குழந்தைகள் காப்பகத்தின் பெயர். அதன் பொருள் 'குழந்தைகள் கண்காணிப்பு நிலையம்’. டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்...,' என்று தொடர்ந்து படித்த போது, ஆமாம், அவர்தான் அந்த மருத்துவர் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த இடம் என்று நினைத்தேன்."

Kinderbeobachtungsstation என்பது ஈவிக்கு ஒரு புதிய பெயர்; ஆனால் அந்த காப்பகத்தை வழி நடத்திய அந்த நபரை ஈவிக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகள் அவர் மனதில் மெல்லமெல்ல எழ ஆரம்பித்தது.

மேலும் அந்த இடத்தை பற்றி இணையத்தில் இருந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். அங்கு வளர்ந்த மற்றவர்களும் தங்களின் கொடிய அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். பல விரிவான தகவல்கள் கிடைத்தன. ஈவி அவற்றை அவநம்பிக்கையுடன் படித்தார்.

குழந்தை பருவத்தில் ஈவியை அங்கு அனுப்பி வைத்தவர்கள், குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் என்றே சொல்லி சேர்த்து விட்டனர். ஆனால் அதன் நோக்கம் மிகவும் மோசமானது என்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார்.

அவர்கள் ஈவி போன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக அங்கு ஒரு பெரிய பரிசோதனைக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர்.

ஓர் இருண்ட இரவு

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்..

இன்ஸ்ப்ரூக்கில் உள்ள அந்த மஞ்சள் வீட்டில் தன்னை வைத்து என்ன பரிசோதனை செய்தார்கள் என்பதை இப்போது அவர் அறிய விரும்பினார்.

"என்னை என்ன செய்தார்கள்?’’

குழந்தை பருவத்தில் தனக்கு இருண்ட அறையில் நடந்ததை பற்றி ஈவி தற்போது கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

" எட்டு வயது சிறுமியாக இருந்த போது எனக்கு அது நடந்தது. அந்த கண்காணிப்பு மையத்தின் இருட்டு அறையில் எனக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. அதன் தாக்கம் 60 வயதை கடந்தும் எனக்குள் இருக்கிறது. இப்போதும் நான் இருட்டைக் கண்டு பயப்படுகிறேன், எனவே நான் எல்லா நேரங்களிலும் விளக்கை எரிய விடுகிறேன். எனக்கு மஞ்சள் மீது வெறுப்பு உள்ளது. இந்த நிறம் என் அனுபவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறது.

மஞ்சள் நிறத்துடன் சமாதானம் செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. மஞ்சள் அந்த வீட்டின் நிறம் மட்டும் அல்ல. சூரியன், பூக்கள் மற்றும் ஒளியின் நிறம் என்பதை நினைவூட்ட முயற்சிக்கிறேன்."

கடந்த காலத்தை பற்றி மீண்டும் ஆராய வேண்டுமெனில் இந்த பயத்திலிருந்து விடுபட வேண்டும். எனவே ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்.

ஈவி 60களின் நடுப்பகுதியில் ஆஸ்திரியாவில் பிறந்த போது, அவரது தாயாருக்கு திருமணமாகவில்லை, எனவே அந்த சமயத்தில் ஈவி மீதும் அவரது தாயின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூகத்தின் பார்வையில் இருவரும் தவறாக தெரிந்தனர்.

சரியான குடும்ப சூழல் அமையாததால், ஈவி அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்களின் பராமரிப்பில் வளர்ந்தார்.

பின்னர், ஈவி தனது வளர்ப்பு தாய் 'ஆனி' நடத்தி வந்த விடுதியில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார்.

"என் வளர்ப்பு தாயான ஆனிக்கு என்னைப் பிடிக்கவில்லை, என்னை தொல்லைமிகு உயிரினமாக பார்த்தார். சதா என்னை திட்டி கொண்டே இருப்பார்.

விடுதியில் இருந்த பாதிரியாரும் என்னை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். நான் முட்டாள்தனமாக இருந்ததற்காகவும், என் அம்மாவுக்கு கஷ்டம் கொடுப்பதற்காகவும் என்னைத் திட்டி கொண்டிருப்பார்."

"எனக்கு 4 வயது இருக்கும். எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஆனி என்னை திட்டியது மட்டும் தான். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டினார். பாத்திரங்களை உடைக்கிறேன். சுவற்றில் கிறுக்குகிறேன் என்று காரணங்களை சொல்லி திட்டுவார். ஆனால் நான் எதையும் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை என்னை அடிப்பார், பின்னர் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து தண்டனை கொடுப்பார்.”

"அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு, டிசம்பர் 1973 இன் இறுதியில் ஓர் இரவில் அங்கிருந்து நான் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 8 வயது. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மஞ்சள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."என்றார்.

 
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,6 அல்லது 7 வயதாக இருந்தபோது ஈவி..

அன்று நடு ராத்திரியில் என் வீட்டில், யாரோ வந்து என்னை கட்டிலில் இருந்து தூக்கி சென்று, காரில் ஏற்றினார்கள். அப்போது இருட்டாக இருந்தது, குளிர்ந்தது, நான் மிகவும் பயந்தேன். யாரும் எதுவுமே பேசவில்லை, நாங்கள் நீண்ட நேரம் பயணித்தோம். காரில் யார் இருந்தார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் இன்ஸ்ப்ரூக் வந்தடைந்த போது என்னுடன் ஆனி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது.

அவர்கள் எனக்கு சீருடை, உள்ளாடைகள் மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை கொடுத்தனர். எனக்கு நினைவிருக்கிறது, அந்த வீட்டின் உட்புற சுவர்களில் எல்லா இடங்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது, ஹால்வேயில் ஒரு பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டாவது மாடியில், ஒரு ஜன்னல் கொண்ட ஒரு பெரிய அறை இருந்தது, வரிசையாக படுக்கைகள் இருந்தன. கட்டிலில் ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் காணும் தனி வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. என் கட்டிலில் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது.

அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. வெள்ளை கோட் அணிந்த பெரியவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அந்த அறையின் கதவுக்கு மேல் ஸ்பீக்கர் இருந்தது, பகல் முழுவதும் பல ஒலிகள் மற்றும் அலாரங்களை அது உருவாக்கியது."

குழப்பமும் பயமுமாக அந்த இடத்தின் விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அவர்கள் எங்களை பேச விடவில்லை, சைகையால் பேச வேண்டும், இல்லையெனில் சுருக்கமாக பேச வேண்டும். எதையும் செய்வதற்கு முன் நாங்கள் அனுமதி கேட்க வேண்டும். உதாரணமாக, 'தயவுசெய்து, பல் துலக்க வேண்டும்’ , சாப்பிடும் போது, 'ப்ளீஸ், ஸ்பூன்' என்று சொல்ல வேண்டும்.

தட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் சாப்பிட வேண்டும். மீதம் வைத்தால், அந்த தட்டில் இருக்கும் உணவு கெட்டு போனாலும், அடுத்த வேளைக்கு அதையே கொடுத்து சாப்பிட சொல்வார்கள்.

கொடூர மருத்துவர்

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அடிக்கடி ஊசி போடப்பட்டது, ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது.

ஈவி மற்றும் இளம் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்வகித்த, அந்த மையத்தை நடத்திய மனநல மருத்துவரின் பெயர் டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்.

"அவர் ஜெர்மனியின் நாஜிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் அந்த சித்தாந்தத்தை கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரியாவில் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்தில் நிபுணராக கருதப்பட்டார். ஆஸ்திரிய குழந்தைகள் சுகாதார அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், எனவே அவரது பரிசோதனைக்கு அதிக அளவில் குழந்தைகள் தரப்பட்டனர்."

மஞ்சள் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நோவாக்-வோகல் ஒரு நாள் எங்கள் முன்னிலையில் கூறினார். அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் தனது ஊழியர்களுக்கான வழிமுறைகளின் பட்டியலையும் அவர் சொன்னார்.”

"இது மிகவும் நீளமானது மற்றும் அபத்தமானது. அவர்கள் குழந்தைகளின் அனைத்து பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பார்கள். எங்களின் குளியல் அறையை கூட பார்ப்பார்கள். இது மிகவும் ஊடுருவும் சூழல். எங்கள் கனவுகளை கூட அவர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தினார்கள்."

குழந்தைகள் அங்கு பயத்தில் வாழ்ந்தனர். ஈவி வேண்டுமென்றே விதிகளை மீறிய ஒரு குழப்பமான தருணத்தை தெளிவாக நினைவு கூர்ந்தார்.

"அன்று ஏதோ இனிப்பு தருவதாக வரிசையாக வரச் சொல்லி இருந்தார்கள், அதைக் கொடுத்த போது, அந்த இனிப்பு முழுக்க எறும்புகள் நிறைந்திருப்பதை கண்டு நான் பயந்தேன். நான் ஓ வென கத்தினேன், கவுன் அணிந்த பெரியவர்கள் என்னைத் தூக்கி வெளியே அழைத்துச் சென்று அடிக் கொடுத்தார்கள்.”

இது அடிக்கடி நடந்தது, ஆனால் ஈவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இல்லை.

கொடிய சிகிச்சை முறை

ஈவி இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒன்றைக் கண்டுபிடித்தார்.

"சிகிச்சைகள்"

நோவாக்-வோகல் குழந்தைகளுக்கு ரோஹிப்னோல் உட்பட வலுவான மயக்க மருந்துகளை வழங்கி இருக்கிறார், மேலும் எபிஃபிசன் என்ற விசித்திரமான ஹார்மோனையும் உட்செலுத்தி இருக்கிறார். எபிஃபிசன் என்பது கால்நடைகளின் பினியல் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதனை கால்நடை மருத்துவர்கள் கால்நடைகள் மற்றும் பசுக்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தினர்.

இது மனிதர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை அடக்கவும், சுயஇன்ப உணர்வை கட்டுப்படுத்தவும், நோவாக்-வோகல் இதை சோதித்திருக்கிறார் என்பது இப்போது எனக்கு தெரிய வந்தது.

அவர் உடலுறவு மற்றும் குழந்தைகள் பாலுறவு மீது வெறுப்பாக இருந்தார். நாங்கள் அவருடைய சோதனைப் பொருட்களாக இருந்தோம். அவர் எங்களை விலங்குகளைப் போல நடத்தினார். சக்தி வாய்ந்த மருந்துகளை எங்களுக்கு கொடுத்தார்."

நோவாக்-வோகலைப் பற்றி ஈவி எவ்வளவு அதிகமாக கண்டுபிடித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவள் வருத்தமடைந்தார்.

குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவரின் அணுகுமுறை, நாஜி கண்ணோட்டத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கலாம். பராமரிப்பில் உள்ள பிரச்னையுள்ள குழந்தைகளின் குறைபாடுகள் மரபணு அடிப்படையைக் கொண்டு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த நேரத்தில் ஆஸ்திரிய கத்தோலிக்கத்தின் மிகவும் பழமைவாதம் பின்பற்றப்பட்டு வந்ததால் ஈவி போன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

"திருமணமாகாத தாயின் மகளாக இருப்பதால், என்னைப் போன்ற குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கைகளுக்கு நான் பலியானேன். அவர்களை பொருத்தவரை நாங்கள் தேவையற்றவர்கள், சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்."

நோவாக்-வோகலை பொறுத்தவரை, இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், சுய இன்பம் செய்யும் குழந்தைகள் மோசமான பிறப்பை கொண்டவர்கள் என்று நம்பினார். ஆஸ்திரிய சமுதாயத்தைப் பாதுகாக்க, அத்தகைய "குறைபாடுள்ள குழந்தைகளை" கவனித்துக் கொள்வதை விட சரிசெய்ய வேண்டும் என்று அவர் நம்பினார்.

மேலும் அவர்களை, கீழ்ப்படிய வைத்து, அவர்களது பாலியல் உணர்வை மாற்றி, சாதாரண நபர்களாக மாற்றுவதை அவர் தனது பணியாக மாற்றினார். அங்கு இரவுகள் மிகவும் பயங்கரமானவை. நாங்கள் ஒருவரையொருவர் தொடாதபடி எங்கள் அக்குளுக்கு கீழே போர்வை மற்றும் அதன் மேல் கைகளை வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வோம்.

மெத்தைகளில் உள்ளமைக்கப்பட்ட அலாரம் இருந்தது, அது யார் படுக்கையை நனைத்தாலும் அவர்களை எச்சரித்தது. அப்படி படுகையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வெள்ளை கோட் அணிந்தவர்கள் தண்டனையாக குளிர்ந்த நீரில் குளிக்க செய்வார்கள். பின்னர் நீங்கள் ஹால்வேயின் மூலையில் நிற்க வேண்டும். அடுத்த நாள், குழந்தைகள் படுக்கையை நனைத்த குழந்தையின் படுக்கையைச் சுற்றி நின்று அவரைப் பார்த்து அவமானப்படுத்தி சிரிக்க வேண்டும்."

 

வலியின் சுவடுகள்

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி தனது கடந்த காலத்தைக் கண்டறிய ஆஸ்திரியாவுக்குச் சென்ற பயணங்களில் ஒன்றில் தனது குழந்தைகளுடன்.

தற்போது, அந்த இடத்தைப் பற்றி ஈவி கண்டுபிடித்தது உண்மையிலேயே பயங்கரமானது, ஆனால் அது அவளுடைய நினைவுகளை அவற்றின் சரியான சூழலில் வைக்க உதவியது. அப்போது தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள உதவியது.

"அந்த மஞ்சள் வீடு 3,650 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்தது என்பதைக் கண்டுபிடித்தது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது."

2013 ஆம் ஆண்டில், இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த மையத்தின் மீது ஒரு அறிக்கையை வெளியிட்டது, நோவாக்-வோகல் "குறைபாடுள்ள" குழந்தைகளை கையாள்வதற்கான சாக்குப்போக்கின் கீழ் பல்வேறு துஷ்பிரயோகங்களை செய்ததாக அந்த அறிக்கை கூறியது. Kinderbeobachtungsstation ஐ "வளர்ப்பு இல்லம், சிறைச்சாலை மற்றும் சோதனை கிளினிக்" என்று விவரித்தது, அங்கு 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சள் மாளிகை 1954 முதல் 1987 வரை 33 ஆண்டுகள் செயல்பட்டது.

அவரது மையம் மூடப்பட்ட பிறகும், நோவாக்-வோகல் பல்கலைக் கழகங்களில் விரிவுரை பணியைத் தொடர்ந்தார் மற்றும் 1998 இல் அவர் இறப்பதற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பதக்கம் பெற்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகள் இந்த விதிமுறைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

"என்னை இன்ஸ்ப்ரூக்கில் சேர்த்தது என் தவறு என்று நான் நம்பினேன். என்னை நானே குற்றம் செய்தவள் என்று நம்பினேன். நிறைய குழந்தைகள் அப்படித்தான் நம்பினார்கள்”

ஈவி ஏன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் அல்லது ஒரு கட்டத்தில் அவர் ஏன் எதிர்பாராத விதமாக வளர்ப்புத் தாயான ஆனியுடன் வாழத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று ஈவி ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை.

"மீண்டும் ஆனியிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்த கொடுமைகளுக்கு இது தேவலாம் போலிருந்தது. அன்று இரவு சாப்பாட்டு மேசையில், ஆனி குனிந்து, நாற்காலியில் ஒரு சிறிய கீறலைக் காட்டி, இது உன் வேலையா என்று திட்டத் தொடங்கினார். என் இதயம் நடுங்கியது. மீண்டும் மற்றொரு கொடுமை தொடங்கியது."

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி, Kinderbeobachtungsstation இல் தனது கோப்பில் ஸ்டேபிள் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்திருக்கிறார் .

"ஓரளவுக்கு சுயமாக முடிவெடுக்கும் வயது வந்த போது, ஆஸ்திரியாவை விட்டு வெளியேறினேன். அதுவரை ஆனியை சகிக்க வேண்டியிருந்தது. நண்பர்களின் உதவியுடனும், கரீபியனில் ஒரு பயணக் கப்பலில் வேலை கிடைத்தது. அதன் பின் நியூயார்க் வந்தேன். எனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடித்தது. என்னை யாரும் குறை சொல்லவில்லை. தண்டிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்த முதல் இடம் நியூயார்க் தான்"

அங்கிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. புதிய எல்லைகளை அடைந்தேன். ஆனால் எனக்கு நடந்த கொடுமைகளால் மனநோயாளி ஆனேன். ஆழமாக பாதிக்கப்பட்டேன். தூங்குவதில் மிகவும் சிரமப்பட்டேன், சாப்பிட முடியவில்லை.

Kinderbeobachtungsstation இல் இருந்த பிறகு , மனநல மருத்துவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நான் ஒருபோதும் உளவியலாளரின் உதவியை நாட போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தபோது தான் மனநல சிகிச்சை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து என்னால் சிகிச்சைக்கு செல்ல முடிந்தது."

முதலில் நியூயார்க்கிலும் பின்னர் வாஷிங்டனிலும், ஈவி ஒரு புகைப்படக் கலைஞராக ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கினார், காதலித்தார், திருமணம் செய்து கொண்டார், மூன்று குழந்தைகள் மற்றும் பல பூனைகளுக்கு தாயாக நிம்மதியாக வாழ்ந்தார்.

2021 ஆம் ஆண்டில், மஞ்சள் மாளிகை பற்றிய உண்மையை கண்டுபிடித்த போது, ஈவி தன் குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். கடந்த காலத்தின் பயங்கரங்களுக்கு விடை தேடி அவர் ஆஸ்திரியா திரும்பிய போது ஈவியின் குழந்தைகள் அனைவரும் அவருடன் சென்றனர்.

மஞ்சள் வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையம் இருப்பதை அவர்கள் அறிந்தனர் மற்றும் ஈவி அவர்களிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

"மற்றொரு பயணத்தில் என்னை வளர்த்த ஆனியைப் பார்க்க சென்றேன்.

அவர் என்னை பார்த்துவிட்டு வெளியே போ என்று சொல்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில் நம்ப முடியாத ஒன்றை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்து என் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். அன்பான ஒரு வயதான பெண்ணை அன்று நான் சந்தித்தேன்."

ஆனி என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். நான் ஆறுதல்படுத்தினேன். நான் அவருக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை. அதே சமயம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நான் மன்னிப்பதில்லை."

இப்போதெல்லாம் ஈவி நிம்மதியாக தூங்குகிறார், கடந்த காலத்தை பற்றி நினைப்பதில்லை.

"நான் கண்டறிந்த உண்மைகள் என்னை மாற்றின. இனி குற்றவுணர்ச்சிக்கும் பயத்துக்கும் இடமில்லை. நான் நன்றாக தூங்குகிறேன், நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்கிறார் ஈவி உற்சாகத்துடன்.

https://www.virakesari.lk/article/183355

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.