Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்"
 
 
ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா?  அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். 
 
ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும் 18 வயது ரவியும், சாதாரண வகுப்பு பயிலும் 16 வயது மாயாவும் தங்கள் குடும்பத்தின் தலைவிதியைச் சுற்றியுள்ள மர்மத்தை அறிய, அவிழ்க்க உறுதியாக இருந்தனர். அவர்களின் கொஞ்ச கொஞ்ச நினைவுகளுடனும் மற்றும் அவர்களுக்கு இன்று தெரிந்த மூத்தவர்களால் சொல்லப்பட்ட  அல்லது சமூக ஊடங்களுக் கூடாக அறிந்த செய்திகள் மற்றும் கதைகளுடனும், அவ்வற்றை தங்களின் தேடுதலுக்கான ஆயுதமாக ஏந்திய அவர்கள், நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் 'வேரைத் தேடும் தளிர்களாக', தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
 
அவர்களின் பயணம் பல இடையூறுகளை மற்றும் வசதியின்மைகளை சந்திக்க நேரிட்டாலும், ரவியும் மாயாவும் தங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கக்கூடிய பல அன்பான உள்ளங்களின் ஆதரவுகளையும் பெற்றனர். 
 
அவர்கள் முல்லைத்தீவில் கிராமம் கிராமமாகச் சென்ற போது, உள்ளூர் கிராமவாசிகளைச் சந்தித்து கதைத்தனர். அவர்கள் மீள்தன்மை மற்றும் உயிர்வாழ்வதற்கான கதைகளைப் பகிர்ந்து அவர்களை சோர்வில் இருந்தும் கவலையிலும் இருந்தும் மீட்டு எடுக்க பலவகையில் முயற்சித்தனர். சிலர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கினர், மற்றவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றில் தாம் அனுபவித்த சொல்லமுடியாத துயரங்களை, கொடுமைகளை பகிர்ந்தனர்.
 
அதேவேளை அந்த இறுதி மே மாத நாளில் உயிர் பிழைத்தவர்கள், தற்காலிக அகதிகள் முகாம்களில், அவர்களைப்  போன்ற துயரங்களைச் சந்தித்தவர்களுடன் அவர்கள் நட்புறவைக் கண்டனர். அவர்களுடன் தங்களின் இழப்பு மற்றும் வேர்களைத் தேடும் நம்பிக்கையின் கதைகளை பரிமாறிக் கொண்டனர், ஒருவருக் கொருவர் அங்கு ஆறுதல் கண்டனர்.
 
முல்லைத்தீவில் உள்ள முதியவர்களுடனும் அல்லது அந்த நேரம் எதோ ஒரு வகையில் அங்கு பணியாற்றியவர்களுடனும், தங்கள் வேர்களுக்கான பதில்களைத் தேடுவதில் முனைப்பாக இருந்தார்கள். பலவேளைகளில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கா விட்டாலும், ஓர் இருவரிடம் இருந்து தங்கள் குடும்பத்தின் சில ஆரம்ப  தடயங்களை பெற்றனர். அது அவர்களின் முதல் வெற்றியும் மகிழ்ச்சியும் ஆகும், 
 
இந்த சந்திப்புகள் மூலம், ரவியும் மாயாவும் தங்கள் பயணம் தங்களுடையது என்றாலும், அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை அறிந்து கொண்டனர். ஏனென்றால், வழியில் சந்தித்தவர்களின் இதயங்களில், அவர்கள் தொடர்வதற்கான வலிமையையும் ஆதரவையும் கண்டார்கள். ஒவ்வொரு தங்கள் அடியிலும், அவர்கள் தங்கள் வேர்களாகிய, பெற்றோர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணரும் முயற்சியில் நெருங்கி நெருங்கி வந்தனர். சமூக ஊடங்களும் அவர்களுக்கு துணை இருந்தனர். இதனால் சிலவேளை அரச அமைப்புகளில் இருந்தும் சில தடைகளும் பயமுறுத்தலும் அவர்களுக்கு நேர்ந்தது.
 
ரவியும் மாயாவும் ஆகிய தளிர்கள், தாங்கள் இது வரை பெற்ற தரவுகளின் அடிப்படையில், வேரைத் தேடும் முதல் முயற்சியாக அவர்களின் குடும்ப வீட்டின் இடிபாடுகள் நிறைந்த, தாம் பிறந்த மண்ணை கண்டுபிடித்தனர், அது ஒரு காலத்தில் அழகாக வசதியாக இருந்த வீட்டின் மிஞ்சிய பகுதிகளாகும், இன்று பற்றைகளும் புதருமாக அதைச் சூழ்ந்து இருந்தது. இடிபாடுகளுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் சில தடயங்களைக், அவர்களின் அம்மா நேசித்த உடைந்த தேநீர் கோப்பை மற்றும் ஒரு காலத்தில் தங்கள் தந்தையின் விருப்பமான நாற்காலியை அலங்கரித்த ஒரு கிழிந்த துணி, ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
 
இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து, தடை செய்யத பகுதியாக, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அண்மையில் தான் விட்டு விட்டு சென்றது என அறிந்தார்கள். அவர்கள்  வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது ரவிக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அது இப்போதும் எங்கேயாவது இந்த உடைந்த இடிபாடுகளுக்கிடையில் இருக்கும் என்று அவன் நினைத்தான். அவனின் தந்தை  அதை அடிக்கடி தூசி தட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, தங்களது  சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை அவனின் அப்பா எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும்? இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். பனை வடலி பதினான்கு பரப்பு, தோட்டக் காணி பத்துப் பரப்பு, தென்னங் காணி இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார் என்பது அவன் மனத்தில் நிழற் படமாக ஓடியது.
 
அந்த நேரம் ஒரு முதியவர் ஒரு பழைய துவிச் சக்கர வண்டியில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து அங்கு இவர்களைக் கண்டு வந்தார். அவரைக் கண்டதும் ரவிக்கு, முன்பு அவன் சிறுவர் பாடசாலை [nursery] போகும் காலத்தில், அவனின் ஊரைச் சேர்ந்த கந்தையா என்ற ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அவர் அப்பொழுது தினம் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். பின் கொஞ்சம் பொறுத்து மதியத்துக்கு முன், பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி பொருட்களுடன் போவார். எனவே, அவன் அவரை, நீங்கள் கந்தையா தாத்தாவை என்று கேட்க, ஆமாம், நீ ரவியோ ? என்று அவரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார்.  
 
கந்தையா, தான் உறுதி, புகைப்பட ஆல்பம் மற்றும் முக்கிய தப்பிய ஆவணங்களும் பெறுமதியான சில பொருட்களும் எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, உடனடியாகவே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். என்றாலும் அம்மா, அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்கிறார்  
 
ரவியும் மாயாவும் மகிழ்ச்சியின் தருணங்களைக் காட்டும் அந்த  புகைப்பட ஆல்பத்தை ஆவலாக வாங்கி பார்த்தார்கள். அதில் அம்மா, அப்பா மற்றும் தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஒழுகியது. ஒவ்வொரு கண்டு பிடிப்பும் தங்கள் அன்புக்குரிய அப்பா, அம்மாவைக்   கண்டுபிடிப்பதற்கான உறுதியைத் மேலும் மேலும் அவர்களுக்குத் தூண்டியது.
 
அவர்களின் தேடலானது அவர்களை தற்காலிக அகதி முகாம்களுக்கும் அழைத்துச் சென்றது. அங்கே, அவர்கள் இழப்பு மற்றும் துயரங்களுடன் உயிர்வாழும் ஏனையவர்களின் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் பெற்றோரை படையினரால் அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்தனர், மற்றவர்கள் கொடிய குண்டுவெடிப்புகளிலிருந்து அதிசயமாக தப்பித்ததை விவரித்தார்கள். ஒவ்வொரு கதையும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது, ஆனால் அவர்களின் சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு அது அவர்களை நெருங்கவில்லை.
 
மனம் தளராமல், ரவியும் மாயாவும் முல்லைத்தீவின் சிக்கலான குழப்பமான பாதைகள் நிறைந்த தெருக்களில் பயணித்து, ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அவர்களின் இதயங்கள் துக்கத்தால் பாரமாக இருந்தாலும், நம்பிக்கையை கைவிட வில்லை. 
 
நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அவர்களின் தேடல் ஒரு பயனற்றதாகத் அவர்களுக்குத் தோன்றியது, மேலும் அவநம்பிக்கை அவர்களைத் தின்றுவிடும் போல இருந்தது, அத்தனை இடையூறுகள் அவர்களுக்கு வந்தது. அதனால் அவர்கள் சோர்வு அடைந்து விட்டுக் கொடுக்கும் விளிம்பில் இருந்தபோது, ஒரு திடீர் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது.
 
ஒரு நாள் ரவியும் மாயாவும் ஒரு கோவிலில் அடைக்கலம் தேடும்போது வயதான துறவியை அங்கு கண்டனர். அவர் அமைதியான தியானத்தில் அப்பொழுது அமர்ந்தார், ஒளிரும் கற்பூர வெளிச்சத்தில் அவரது அமைதியான நடத்தையால் கவரப்பட்ட அவர்கள் அவரை எச்சரிக்கையுடன், மெதுவாக அணுகினர்.
 
ரவி: "மன்னிக்கவும் குரு. நாங்கள் எங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை தேடி சில வாரங்களாகத் திரிகிறோம். எங்களுக்கு ஏதாவது அறிவுரை இருக்கிறதா?" என்றான். 
 
வயதான துறவி: (கண்களைத் திறந்து, மென்மையான புன்னகையுடன் அவர்களைப் பார்த்து) "ஆ, உண்மையான பற்றுடன் தேடும் குழந்தைகளே, . என்னுடன் உட்கார்ந்து, வேர்கள் மற்றும் தளிர்கள் பற்றி பேசுவோம்" என்கிறார். 
 
மாயா: (ஆர்வத்துடன்) "ஐயா, வேர்கள் மற்றும் தளிர்கள்?" ஆச்சரியத்துடன் துறவியை பார்த்தாள். 
 
முதிய துறவி: (ஆமா என்று தலையசைத்து) "ஆம், என் குழந்தைகளே. தளிர்கள் வளர பூமியில் இருந்து ஊட்டத்தை தேடுவது போல, உங்கள் குடும்ப மரத்தின் வேர்களை நீங்கள் தேட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பயணம் நீண்ட மற்றும் கடினமானதாக இருக்கலாம்? சோதனைகள் மற்றும் இன்னல்கள் நிறைந்ததாக இருக்கலாம்? இருப்பினும், உங்கள் இந்த இருண்ட காலங்களில், உங்கள் அன்பு மற்றும் உறுதி உங்களை வழிநடத்தும்." என்றார் 
 
ரவி: (உத்வேகத்துடன்) "நன்றி ஐயா. கட்டாயம் இனி என்ன தடைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்." என்றான் 
 
முதிய துறவி: (ஒரு மென்மையான தொடுதலால் அவர்களை ஆசீர்வதித்து) "தைரியத்துடனும் அன்புடனும் செல்லுங்கள், என் குழந்தைகளே. நீங்கள் தேடும் பதில்கள் நீங்கள் நினைப்பதை விட நெருக்கமாக இருக்கலாம்? விரைவில் அது வரட்டும்" என்றார். 
 
துறவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ரவியும் மாயாவும் தங்கள் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர், விரக்தியுடன் அல்ல, ஆனால் உறுதியையும்  அன்பையும்  ஆயுதம் ஏந்தி, ஒன்றாக, அவர்கள் உள்ளூர் கோவிலின் காப்பகங்களைத் தேடி, பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பதிவுககளில் தங்கள் பெற்றோரின் உறவினர்கள் பற்றிய தடயங்களைத் தேடினர்.
 
பின்னர், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மங்கலான காகிதத் குறிப்பில் தடுமாறினர், அது காலப்போக்கில் மையில் பொறிக்கப்பட்டது. நடுங்கும் கைகளுடன், அவர்கள் தங்கள் குடும்ப மரத்தின் கோடுகளைக் கண்டுபிடித்தனர், ஒவ்வொரு பெயரும் அவர்களின் இரத்த வழி உறவிற்கு சான்றாக இருந்தது அவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. 
 
அந்த இரத்த உறவுகளின் பெயர்களுக்கு மத்தியில், அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒளியைக் கண்டனர். ஒரு   தொலைதூர உறவினர், போரில் தப்பிப்பிழைத்து இப்போது பக்கத்து கிராமத்தில் வசிக்கிறார் என அறிந்தனர். எனவே புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், நீண்ட காலமாக இழந்த இந்த உறவினரைக் கண்டுபிடிக்க அவர்கள் புறப்பட்டனர், அவர்களின் இதயங்கள் எதிர்பார்ப்புகளால் நிறைந்தன.
 
பல மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, ரவியும் மாயாவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தங்கள் வயதான அத்தையைக் கண்டுபிடித்தனர். உணர்ச்சியில் மூழ்கிய அவர்கள் அவளை இறுகத் தழுவிக் கொண்டனர், கண்ணீர் வழிந்தோடியது.
 
அத்தை: (அழுகையுடன்) "என் அன்பான குழந்தைகளே, உங்களை கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி"  என்று கூறி அவர்களை அன்புடன் அணைத்தார். 
 
ரவி: "அத்தை, நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணி விட்டோம். எங்கள் பெற்றோரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று மிக ஆவலுடன் கேட்டான் 
 
அத்தை: (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) "உங்கள் பெற்றோர் ... அவர்கள் தைரியமான ஆத்மாக்கள், என் அன்புக்கு என்றும் உரியவர்கள். அந்த இருண்ட நாட்களில்,  எங்கள் குடும்பத்தைக் காக்க பல வழிகளில் முன்னின்று செயல்பட்டார்கள். ஆனால் ஐயோ, அவை மிக விரைவில் எங்களிடமிருந்து பிரிக்கப் பட்டன." என்றாள்.  
 
மாயா: (குரல் நடுங்கி) "என்ன நடந்தது?  ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்களா?" என்றாள். 
 
அத்தை: (சோகத்துடன் தலையசைத்து) "ஆமாம், என் குழந்தை. ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் உங்களில் வாழ்கிறார்கள் - உங்கள் வலிமை, உங்கள் நெகிழ்ச்சி, உங்கள் அன்பில்." என்றார்.  
 
ரவி: (மாயாவின் கையை பிடித்துக்கொண்டு) "நாம் அவர்களை மறக்க மாட்டோம் அத்தை. அவர்களின் பாரம்பரியத்தை எப்போதும் எங்களுடன் எடுத்துச் செல்வோம். ஆனால் இப்ப எங்கே எங்கள் அம்மா, அப்பாவை வைத்திருக்கிறார்கள்?" ஆவலுடன் கேட்டான்.
 
அத்தை: (அவள் கண்ணீரில் சிரித்துக்கொண்டே) என் குழந்தைகளே, இப்ப அரச நிர்வாகம் தங்களுக்கு தெரியாது என்று கைவிரித்து விட்டார்கள். அவர்களும் வலிந்து காணாமல் போனவர்களின் பட்டியலில் போய்விட்டார்கள்? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தனியாக இல்லை. எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீண்டு, அன்பு மற்றும் இரத்தத்தால் இன்று நாம் ஒன்றாகிவிட்டோம் . இனி ஒன்றாக, எந்த புயலையும் எதிர்கொள்வோம். நியாயமான பதில் வரும் மட்டும்" என்றார். 
 
அவர்கள் அதன் பின் அத்தையின் சமையல் அறையில், அடுப்பின் நெருப்புப் பகுதிக்கு கிட்ட  அமர்ந்து, தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களைப் பற்றிய அத்தையின் கதைகளைக் கேட்டபோது, ரவியும் மாயாவும் போர்க் காற்றால் தங்கள் வேர்கள் அசைந்திருந்தாலும், அவர்கள் பிடுங்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். ஏனென்றால், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை இன்னும் சுமந்து கொண்டு இருப்பதைக் உணர்ந்தனர். 
 
எனவே, முல்லைத்தீவின் இடிபாடுகளுக்கு மத்தியில், வேரைத் தேடும் இரண்டு தளிர்களாக  தங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, தைரியம் மற்றும் குடும்பத்தின் நீடித்த பந்தம் நிறைந்த எதிர்காலத்தையும் கண்டுபிடித்தனர்.
 
நன்றி 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
436341440_10225003096167381_4919463899562920047_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DxeizgOnx3AQ7kNvgHzJ5a0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBs059zmehGZzrSmfKHt7ikHdwYJ4tTsGTB-W-k7Y5Uag&oe=664D1812 437881565_10225003095007352_4223437105987489559_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-SI5N1ZLDk8Q7kNvgGG_doj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAW9sCKgk_s8Og9wBMWtLnGlShJ4C5avxBC_xq4yJ90GA&oe=664D3B1E 436417610_10225003095287359_8825751072635405914_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cyPlM9nhTSUQ7kNvgHoni5e&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYChsRoYbRKTlzged4jn3OfOaysgqlBiVlEwB_kWkzOyoQ&oe=664D2B68
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.