Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்?

கு.கணேசன்

கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது.

கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணையவழி கற்றலு’க்குப் பழக்கப்படுத்தினோம். அதை இப்போதும் அவர்கள் உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டார்கள். மாலையில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். கைபேசியே கதி என்று வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.

பெரியவர்கள் நாம் பேருந்திலோ, சொந்த வாகனத்திலோ அலுவலகம் செல்ல முடியாமல் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். அதுதான் வினையாயிற்று. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னும், பன்னாட்டு நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. கணினியும் கைபேசியும் நம்மை ‘ஆள’ வந்தன. அதனால் அமர்ந்தே செய்யும் வேலைகள் அதிகரித்தன.

வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் புதிய போக்கு நம் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் புரிந்திருக்கிறோம்?

முதுகு வலியின் பிறப்பு!

ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு வேலை செய்யும்போது கீழ்முதுகில் கயிறு கட்டியதுபோல் அழுத்தம் அதிகரிக்கிறது; தசை இயக்கம் குறைகிறது; தசைநார் இறுகுகிறது. முதுகெலும்புச் சங்கிலியில் உள்ள இடைத் தட்டு (Disc) நசுங்குகிறது. இயல்பாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உடற்பருமன் உள்ளவர்களுக்குச் சொல்லவா வேண்டும்? இடைத் தட்டு வீங்கிவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது. அப்போது கீழ் முதுகுவலி ஆஜர் ஆகிறது.

நாம் அமர்வதிலும் ஓர் ஆரோக்கிய அம்சம் இருக்க வேண்டும். நிமிர்ந்து அமர்வதுதான் அந்த ஆரோக்கிய அம்சம். அப்படி அமர்பவர்கள் பாதிப்பேர்கூட இல்லை. சிலர் கூன் விழுந்த நிலையில் அமர்வார்கள். இன்னும் சிலர் ஒரு பக்கமாக சாய்ந்தும் முதுகு வளைந்தும் அமர்வார்கள். இன்னும் பலர் அமர்ந்த மாத்திரத்தில் அரை அடி ஆழத்துக்கு அழுந்திக்கொள்ளும் மெத்தைகளில் அமர்வார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். முதுகெலும்பின் வளைவுக்கு அவை மோசம் செய்யும். அப்போது முதுகு வலி ஆக்ரோஷம் அடையும்.

இப்போதாவது நாம் உஷாராக வேண்டும். இல்லையென்றால், கீழ்முதுகில் கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக்கொண்டே போய் பின்புறத் தொடைக்கோ, காலுக்கோ அது பரவிவிடும். ‘மின்சார ஷாக்’ மாதிரியான அந்த வலியைத் தொடர்ந்து கால் மரத்துப்போகும். படுத்து ஓய்வெடுத்தால் கால் வலி குறையும்; நடக்கும்போது வலி அதிகமாகும்.

நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீர் புல்லுக்கும் போய்ச் சேர்கிறமாதிரி முதுகில் ஏற்பட்ட பிரச்சினை இப்போது கால் நரம்புக்கும் பரவிவிட்டது என்று அர்த்தம். ‘சியாட்டிகா’ (Sciatica) எனப்படும் அந்தக் கால் குடைச்சல் சிலருக்குப் படுக்கையில் முடக்கிப்போடும் அளவுக்குக் கடுமையாகிவிடும் என்றால் அதன் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

6276392663d75.jpg

கழுத்து வலி நிச்சயம்

இப்போதெல்லாம் அலுவலகத்தில் மேஜைக் கணினியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மடிக்கணினியில் வேலை செய்வதும் அதிகரித்துவருகிறது. அப்போது பொருத்தமான இருக்கைகள் இல்லாதபோது, பலரும் சோபாவில் அல்லது படுக்கையில் சாய்ந்துகொண்டு, கழுத்தைத் தூக்கிக்கொண்டும், குனிந்துகொண்டும்தான் மடிக்கணினித் திரையைப் பார்க்கிறார்கள். இந்தப் பழக்கம் கழுத்துத் தசைகளை இறுக்கிக் கழுத்துவலிக்கு மாலை சூடுகிறது.

மாற்றம் காணும் வளர்சிதை மாற்றம்

அடுத்து, வீட்டில் உள்ளவர்கள் அதிக நேரம் அமர்வது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்தான். அப்போது சும்மா அமர்வதில்லை. கையில் ஒரு தட்டு நிறைய நொறுவைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அளவில்லாமல் அதைத் தின்று தீர்க்கிறார்கள். இது நாள்பட நாள்பட உடற்பருமனை போனஸாகக் கொடுத்துவிடுகிறது. அத்தோடு நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, உடலுக்குள் வளர்சிதை மாற்றப் பணிகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் விளைவாக, உடலுக்குள் ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (Insulin Resistance) அதிகரிக்கிறது.

இது இளம் வயதிலேயே சர்க்கரை நோயைத் தானமாகத் தந்துவிடுகிறது; கொஞ்ச நாளில் உயர் ரத்த அழுத்தத்தைத் துணைக்கு அழைக்கிறது.

அமர்ந்தே இருக்கும்போது உணவுக் கலோரிகள் உடலில் சரியாக எரிக்கப்படாமல் போகும். அப்போது கெட்ட கொழுப்புக்குத் திருவிழா கொண்டாட்டம் ஆகிவிடும். பிறகு, இந்த மூன்றும் ஜோடி சேர்ந்து இதய நோய்க்கு ‘முன்பணம்’ கட்டும். இதை உறுதிசெய்யும் விதமாக வந்திருக்கிறது ‘ஹார்வர்டு ஹெல்த் ஸ்டடி’ (Harvard Health Study) எனும் அமெரிக்க ஆய்வு.

ஆம், நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால், அது ஒரு சிகரெட் புகைப்பதற்குச் சமம் என்கிறது அந்த ஆய்வு. கூடவே உங்களுக்குப் புகைப்பழக்கமும் இருக்கிறது என்றால், மாரடைப்பு வாய்ப்புக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்று கூவுகிறது அதே ஆய்வு.

இவை தவிர, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் ரத்த ஓட்டம் தேங்கிவிடும். இதனால் ரத்த உறைவு (DVT) ஏற்படும். மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் ‘கூரியர்’ இது. சிலருக்குச் சுருள் சிரை நோய் (Varicose veins) வரக்கூடும்.

 

6288c879ddffd.jpg

தப்பிக்க என்ன வழி?

நீங்கள் அமரும் இருக்கை முதலில் சரியாக இருக்க வேண்டும். முதுகையும் கழுத்தின் பாரத்தையும் தாங்கும் வகையில் இருக்கையில் குஷன் இருந்தால் சிறப்பு. நிமிர்ந்து அமர்வதும், கால்களை செங்குத்தாகத் தொங்கப்போட்டு, தரையில் பதித்துக்கொள்வதும் முக்கியம்.

கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி, 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துக்கும் கண்ணுக்கும் நல்லது.

அடுத்து, அமர்ந்த இடத்திலிருந்து மணிக்கொருமுறை எழுந்து 5 நிமிடம் நிற்கலாம்; நடக்கலாம்; கை, கால்களை நீட்டி மடக்கலாம். இந்த இடத்தில் மதுரையில் இருக்கும் என் பேராசிரியர் டாக்டர் சந்திரபோஸ் நினைவுக்கு வருகிறார். அவர் நோயாளிகளைப் பார்க்கும்போது தொடர்ந்து அமர மாட்டார். நோயாளி அமர்ந்த இடத்துக்கு அவரே சென்று நின்றுகொண்டுதான் பரிசோதிப்பார். இது நல்ல உத்தி.

 

627fb41078e0d.jpeg

அலுவலகத்தில் முடிந்தவரை மின்தூக்கிகளைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்தலாம். இடைவேளையில் காபி/தேநீர் போன்றவற்றை உங்கள் மேஜைக்கு வரவழைக்காமல், வெளியில் சென்று அருந்திவிட்டு வரலாம். நீண்ட நேரம் கைபேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம்.

இது எதுவும் முடியாது என்றால், காலையில் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது சைக்கிள் ஓட்டுங்கள் அல்லது நீச்சல் மேற்கொள்ளுங்கள் அல்லது யோகா செய்யுங்கள். அமர்வதால் வரும் ஆபத்துகள் விலகிவிடும்.
 

https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-sitting

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.