Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சீகன் பால்குவிற்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என கடந்த வாரம் சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தரங்கம்பாடி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ஒருவருக்கு சிலையும் அரங்கமும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது ஏன்?

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

கிறிஸ்தவத்தை பரப்ப வந்து தமிழ் அறிஞரான பாதிரியார்

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் உள்ள சீகன் பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் சாமுவேல் மனுவேல் பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார்.

மத போதகரான ஜெர்மனியை சேர்ந்த பார்த்லோமேயு சீகன் பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். டென்மார்க் அரசர் 4ஆம் ஃபிரெட்ரிக் சமயப் பணி செய்ய அவரை அனுப்பி வைத்தார். 11.11.1705 அன்று தனது நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்குப் பின் 9.7.1706 தரங்கம்பாடி வந்தடைந்தார்.

"மிஷினரிகளான இவர்களை வரவேற்பதற்காக யாரும் அங்கு காத்திருக்கவில்லை. கவர்னர் இவர்களை சந்தேகப்பட்டதுதான் அதற்குக் காரணம். ஜெர்மனியில் இருந்து வரும் இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டார்களா அல்லது தன்னை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டார்களா என்ற சந்தேகம்தான் அதற்குக் காரணம்" என்று கூறிய இயக்குநர் சாமுவேல் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் விவரித்தார்.

"கடல் வழியாக வந்த அவர்களை கவர்னர் மாலை வரை சந்திக்கவில்லை. ஆளுநர் மாலையில் தனது அதிகாரிகளுடன் வந்து டென்மார்க் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களால் தனது பிரதேசத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றும், விரும்பினால் பள்ளியை நிறுவி ஆசிரியர்களாகப் பணியாற்றலாம் என்றும் கூறினார்."

ஆனால் ஆளுநர் ஹேசியஸ், அவர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் பற்றி எதுவும் கூறாமலே அந்த இடத்தை விட்டு வெளியேறினார். கோட்டை அதிகாரி ஒருவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு வெள்ளிப்பாளையம் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மாமனார் வீட்டில் இரவு தங்க ஏற்பாடு செய்ததாகவும் தொடர்ந்து சில இடையூறுகளைச் சந்தித்தாலும் சீகன் பால்கு தனது பணியில் கவனமுடன் தீவிரமாகச் செயல்பட்டதாகவும் விளக்கினார் இயக்குநர் சாமுவேல் மனுவேல்.

சீகன் பால்கு இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றார். அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 8 மணிநேரம் செலவழித்து, தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டார்.

 

கணவரை இழந்த பெண்களுக்கு ஆதரவு

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

"சீகன் பால்கு எப்பொழுதுமே உண்மை மற்றும் நியாயத்தின் பக்கமே இருப்பார்" என்று கூறிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் சாமுவேல் அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் விவரித்தார்.

"சீகன் பால்குவிற்கு கவர்னர் ஹாசியஸிடமிருந்து நிறைய பிரச்னைகள் இருந்தன. ஒரு கத்தோலிக்க, கணவரை இழந்த பெண் உள்ளூர் மோசடி நபர் ஒருவரால் ஏமாற்றப்பட்டார், அவர் கவர்னர் ஹேசியஸிடம் புகார் செய்தார். ஆனால் கவர்னர் மோசடிப் பேர்வழியான உள்ளூர் ஆசாமிக்கு ஆதரவாக இருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி சீகன் பால்குகுவிடம் புகார் செய்தார். சீகன்பால்கு வழக்கை எடுத்துக் கொண்டார். அவர் ஆளுநரிடம் சென்று அப்பெண்ணுக்காக வாதிட்டார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் சீகன் பால்கு சிறையிலும் அடைக்கப்பட்டார். நான்கு மாதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்."

இருந்த போதிலும் "அவர் பணியில் கவனமாகவே செயல்பட்டு வந்தார். அவர் இந்தியாவுக்கு வந்தபோது தரங்கம்பாடி கிராமப் பகுதிகள், குறிப்பாக பட்டியலின மக்கள் வாழ்ந்த காலனி பகுதிகளில் மக்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தனர். கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல வழிகளில் முயயன்று அதில் வெற்றியும் பெற்றார். அதேபோல் கணவனை இழந்த பெண்களும் சமூகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு கற்பித்து அவர்களைக் கல்வியாளர்களாக மாற்றி அவர்களைக் கொண்டே கிராமப் பள்ளிகளையும் நடத்தினார்."

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தரங்கம்பாடிக்கு வந்திருந்தபோதிலும், தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் கொண்டார். அவர் தமிழ் மொழிப் புத்தகங்களை மொழி பெயர்த்து பிற மொழிகளிலும் அச்சிட்டு வழங்கியதாகக் கூறுகிறார் இயக்குநர் சாமுவேல்.

 

சீகன் பால்கு வாழ்ந்த வீடுதான் அருங்காட்சியகம்

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?
படக்குறிப்பு,பேராசிரியர் மரிய லாஸர்

மிக எளிமையாக வாழ்ந்த அவரின் வீடு தற்போது அருங்காட்சியமாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பயன்படுத்திய மேசை, புத்தகங்களை அச்சிடப் பயன்படுத்திய அச்சு இயந்திரம், (அச்சு இயந்திரம் தற்பொழுது வரை பயன்பாட்டில்தான் உள்ளது, விளக்கமும் மக்களுக்காக அவ்வப்போது காண்பிக்கப்படுகிறது), அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை இன்னமும் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தரங்கம்பாடியில் வாழ்ந்த ஜெர்மனிய கிறிஸ்தவர்களுக்கு ஜெர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது, சீகன் பால்குவின் தொடக்க காலப்பணியாக இருந்ததாகச் சொல்கிறார் பொறையாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மரிய லாசர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீகன் பால்கு தொடர்ந்து புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கும் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு அப்பணியில் ஈடுபட்டார். அப்போது நிறைய இடர்பாடுகளையும் அவர் சந்தித்துள்ளார். பெரும்பாலும் அடித்தட்டு மக்களே கிறிஸ்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர் அதிக நேரம் செலவிட்டார்."

தரங்கம்பாடி வந்த சீகன் பால்கு தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டு விரைவாக எழுதவும், படிக்கவும் கற்று கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டதாக விவரிக்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் மரிய லாசர்.

 

தரங்கம்பாடியில் அச்சுக்கூடம்

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மொழிக்கான அச்சுக் கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். அதன் மூலம் புதிய ஏற்பாடு, தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார்.

சீகன் பால்கு, ‘புதிய ஏற்பாட்டைத் தமிழில் அச்சடிக்கும்போது பைபிளில் சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேர்வு செய்வது அவருக்குக் கடும் சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர்.

அவர், அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோர்க்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். முடிவில் கி.பி.1713ஆம் ஆண்டு பைபிள் புதிய ஏற்பாட்டுக்கான அச்சு கோர்க்கும் பணி தொடங்கியது. சுமார் 2 ஆண்டுக்காலம் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, கி.பி.1715ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பணிகள் முடிவடைந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் தயாராகியிருந்தது.

தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களையும் அச்சிட்டு வழங்கினார்.

 

காகித தொழிற்சாலை

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

தற்போது போன்று அக்காலத்தில் காகிதம் தொடர்ந்து கிடைப்பதில்லை, எனவே அந்தக் காகிதத்தைத் தயாரிப்பதற்காக கி.பி.1715ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக பொறையார் அருகே கடுதாசிப்பட்டறை என்ற கிராமத்தில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களில் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் எழுத்து தயாரிக்கும் கூடம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இதன்மூலம் அவர் தடையின்றி புத்தகங்களை அச்சிட்டார்.

அதோடு, மரியாடாரத்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இருவருமாகச் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டா பகுதிகளில் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மரியா லாசர்.

 

இந்து மத நூல்களையும் அச்சிட்ட சீகன் பால்கு

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு(சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை கி.பி.1718இல் கட்டினார். அதுமட்டுமின்றி, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவியதில் பெரும் பங்கு இவருக்கு உள்ளதாகவும் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர்.

"பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டு பள்ளிக்கூடம், தையற்பயிற்சிப் பள்ளி, விடுதிகள் ஆகியவற்றை அமைத்து எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்திருந்தாலும் மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்." 13 ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர் 23.3.1719இல் இயற்கை எய்தினார்.

"சீகன் பால்கு கட்டிய ஆலயத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். சர்வ சமய உரையாடல்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி மத நல்லிணக்கத்தைப் பேணிகாத்தவர். கிறிஸ்தவத்தை பரப்புகின்ற பணிக்கு வந்து அப்பணியைப் பின்னுக்குத் தள்ளி தமிழுக்காக உழைத்து தமிழ் நூல்களைக் காகிதத்தில் அச்சேற்றி பெரும் பணியைச் செய்ததோடு, தமிழர்கள், பெண்களின் உரிமைகளுக்காக அக்காலத்திலேயே போராட்டங்கள் பலவற்றைச் செய்தவர் சீகன்பால்கு," என்றார் பேராசிரியர் மரியா லாசர்..

திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார். கிறிஸ்தவ மதம் தொடர்பான நூல்களை மட்டுமல்லாமல் இந்து மதம் தொடர்பான நூல்களையும் அவர் எழுதி, அச்சிட்டு வெளியிட்டார்.

 

57 பார்வதி தேவி, 77 வகை பேய்கள்

ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவிற்கு தமிழ்நாடு அரசு அரங்கம் அமைப்பது ஏன்?

குறிப்பாக ஜெர்மனிய மொழியில் தென்னிந்திய தெய்வங்கள் குறித்து "தென்னிந்திய தெய்வங்களின் மரபு (ஜீனியாலஜி ஆப் சௌத் இந்தியன் டெய்டிஸ்)" என்ற நூலை அவர் எழுதியுள்ளார். இந்த நூலில் சைவ, வைணவ தெய்வங்கள் குறித்த புராண செய்திகளையும் எழுதியுள்ளார்.

அத்துடன் அய்யனார், எல்லம்மன், மாரியம்மன், அங்காளம்மன், பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் குறித்தும் எழுதியுள்ளார். பேய்களின் வகை குறித்தும் அவரது நூல் குறிப்பிடுகிறது. அதில் கலகப்பேய், காவல் பேய், பரிகாசப்பேய், நிர்மூலப் பேய் என 77 வகை பேய்கள் பற்றி அவர் எழுதியுள்ளார். அதேபோல் இந்து கடவுளான பார்வதியைக் குறிக்கும் 57 பெயர்களையும் தொகுத்து அளித்துள்ளார்," என்று விவரித்தார் மரியா லாசர்.

அதேபோல் "தென்னிந்தியாவில் மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் குறிப்பெடுத்து அனுப்பியுள்ளார். ஜெர்மனியில் உள்ள ஹால்வே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவுவதற்குப் பெரும்பங்காற்றினார்.

தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் (பெரும்பகுதி ஓலைச்சுவடிகள்) அடங்கிய நூலகம் ஒன்றைத் தமது இறுதிக் காலத்தில் உருவாக்கினார்."

விளிம்பு நிலை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பல பள்ளிக் கூடங்களை நிறுவினார்.

"இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கெனத் தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்து கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாக்கி சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் சீகன் பால்கு" என்று கூறுகிறார் மரியா லாசர்.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சிதுறை மானிய கோரிக்கையில் தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சகத்தை அமைத்து பெருமை சேர்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.