Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"தன்னம்பிக்கை"
 
 
யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம் தர பாடசாலையாக, 01/01/1952 அன்று, அன்றைய அதிபர் s அம்பிகைபாகனின் விடாமுயற்சியால் தரம் உயர்த்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
நாகமுத்து என் அம்மம்மா திருமதி பார்வதி முருகேசுவின் ஒரு அண்ணா ஆகும், மற்ற அண்ணா சரவணமுத்து இடைக்காடர் ஆகும். எது எப்படியாகினும் இன்று என் அப்பா கணபதிப்பிள்ளை கந்தையா ஒரு சுருட்டு தொழிலாளியாகும். என் அம்மா கனகம்மா தன் எட்டு பிள்ளைகளையும், அந்த வருமானத்துக்குள் எப்படியோ நல்ல படிப்பு கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்த்துக்கொண்டு இருந்தார். நான் என் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகும். நான் ஐந்தாம் வகுப்புவரை யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலத்தில் கல்வி கற்றுவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் என் பெற்றோரால் சேர்க்கப் பட்டேன்.
 
முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" .
 
அது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறியது தான் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த துணிவு, தன்னம்பிக்கை தான் எம் அம்மா எமக்கு தந்தது!
 
இலங்கை தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டால், முதல் நாவல் என்று கருதப்படும் "பிரதாப முதலியார் சரித்திரம்" தொடக்கம் இன்று வரை அறவியல் நோக்கில் எழுதப்பட்டவை அனேகம். அத் தகையோரில் ஒருவரே 'இடைக் காடர்' என்னும் புனைபெயரில் நவீனங்களும் வேறு சில நூல்களும் எழுதிய ஆசிரியர் த. நாகமுத்து [1868 - 1932] அவர்கள் ஆகும். இவர் இடைக்காடு, அச்சுவேலி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையாலும், அவருடைய முன்னேர் ஒருவர் அப் பெயரைக் கொண்டிருந்தமையாலும் நூல்கள் வெளியிட முற்பட்ட வேளையில், இடைக்காடர் என்ற புனைபெயரில் 'நீலகண்டன்", சித்தகுமாரன்", *வினுேதக்கதைகள்" ஆகிய புனை கதைகளையும் அம்பலவாண பிள்ளை என்பவருடன் இணையாசிரியராக "இலகுசாதகம்" என்னும் சோதிட சாஸ்திர நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் இந்நூல்களை வெளியிட்டமையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க 'யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை' நிறுவியமையால் அவர் ஈட்டிய புகழே இன்று வரை நிலைத்திருக்கிறது!
 
இது ஏறத்தாழ அன்று 500 மாணவர்களை கொண்ட முதலாம் வகுப்பில் இருந்து உயர் வகுப்பு மட்டும் உள்ள ஒரு கலவன் பாடசாலை ஆகும். ஆகவே முதல் நாள் நான் அங்கு போகும் பொழுது, பெரும்பாலான மாணவர்கள் அங்கு ஏற்கனவே கற்றுக்கொண்டு இருபவர்களாகவே இருந்தனர். நான் என் குடும்ப நிலையின் காரணமாக, காலில் சப்பாத்து ஒன்றும் இல்லாமல், வெறும் காலுடன் மற்றும் கட்டை காக்கி காற்சட்டையுடன் போய் இருந்தேன். என்னை பார்த்த சில சக மாணவ மாணவிகள் கேலி சிரிப்பு செய்தனர். ஏன் முதல் நாள் என் வகுப்பு ஆசிரியை ஒருவர் கூட என்னைக் கடைசி வாங்கில் இருக்கும் படி பணித்தார். எனக்கு என் அம்மா என்றும் தரும் தைரியம் என் இரத்தத்தில் ஓடுவதால், இதை பார்த்து நான் துவண்டு போகவில்லை. எனக்கு பாரதிதாசன் கவிதைதான் நினைவில் நின்றது.
 
"விழுவது இயல்பு வெட்கப் படாதே
வீறுடன் நின்றிடுவாய்!
அழுபவன் கோழை அச்சத் தியல்பு
தாழ்வை அகற்றிடுவாய்!"
 
ஆனால் நான் அங்கு எல்லோரையும் அப்படி குறிப்பிடவில்லை. இதை கவனித்த இன்னும் ஒரு ஆசிரியை என்னை கூப்பிட்டு, “ கிண்டல் செய்யும் பொழுது, நீ தன்னம்ம்பிக்கையை அதிகமாக இழக்கலாம், எனவே தான் அவர்கள் மீண்டும் சிரிக்க தொடங்குகிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அவர்களுக்கு துணிந்து பதில் சொன்னால், அவர்கள் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள். நீ அவர்களுக்கு “நான் இப்படித்தான் வருவேன், நீ யார் கேட்க ? அது என் இஷ்டம்” என்று சொல்லு என உற்சாகப் படுத்தினார், என்றாலும் எனக்கு கடைசி வாங்குதான் நிரந்தரமாக இருந்தது விட்டது!
 
"ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே"
 
எனக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடல் மனதை தொட்டது. ஒரு சிலர் துன்பம் தந்து என்னைக் கவலை படுத்த, வேறு சிலர் தைரியம் தந்து மகிழ்ச்சி படுத்த, இப்படியான ஒரு வாழ்வை வகுத்துத் தந்த படைப்புக் கடவுள் பண்பு இல்லாதவன் என்றுதான் அப்பொழுது எனக்குத்  தோன்றியது. எனினும் இதன் இப்படியான இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் இறுதி வார்த்தை தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது!
 
இரண்டு மூன்று மாதத்தில் தவணைப் பரீட்சை வந்தது. என் எண்ணம் எல்லாம் இதில் நான் யார் என்று கட்டவேண்டும். ஒருவனின் அறிவுக்கும் உடைக்கு ஒரு தொடர்பும் இல்லை என்பதை அந்த சிலருக்கு தெரியப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தவர்கள் தலை குனிந்து போகவேண்டும். எனக்கு என் அம்மா, அந்த ஆசிரியை, தமிழ் இலக்கியம் தந்த தன்னம்பிக்கை இப்ப நிறைய உண்டு, அதைவிட எனக்கு என்னில் கூடுதலான நம்பிக்கை உண்டு! “இளம்பிறையே! உனது ஏழைமையை நினைத்து வருந்தாதே! ஏனென்றால் உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது! ஆமாம் நான் புது மாணவன் தான் ஆனால் விரைவில் என் முழுமை வெளியே வரும். எனக்குள் ஒரு சிரிப்பும் வந்தது!
 
சோதனை நடந்து ஒரு கிழமையால், பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. சக மாணவ மாணவிகளின் ஆச்சரியத்துக்கு இடையில் பெரும் புள்ளிகளுடன் நான் முதல் இடத்தில் நின்றேன், ஆனால் அது எனக்கு மகிழ்வு தரவில்லை, அது எனக்கு முதலே தெரியும், ஆனால் மகிழ்வு தந்தது அந்த சிலர் வாயடைத்து நின்றதும், என்னுடன் நண்பராக முந்தி வந்ததுமே! இதில் என்ன வேடிக்கை என்றால், என்னை கடைசி வாங்குக்கு அனுப்பிய அந்த ஆசிரியை என்னை முதல் வாங்கில் அமர கூப்பிட்டதுவே! என்றாலும் நான் அதை ஏற்கவில்லை, மிக பணிவாக 'பின் வாங்கில் ஒரு பிரச்சனையும் இல்லை டீச்சர், இரண்டும் ஒரே வாங்குதான், பார்க்கும் பார்வைகள் தான் வித்தியாசம்' என்று கூறி பின் வாங்கிலேயே அமர்ந்து விட்டேன்!
 
அதன் பிறகு தொடர்ந்து முதலாம் இடத்தில் இருந்ததுடன், எல்லோரும் என்னுடன் அன்பாக நட்பாக பழகினார்கள். அதுமட்டும் அல்ல அந்த ஆசிரியை உட்பட அந்த சில சக மாணவர்களும் என்னை மதிக்க தொடங்கினார்கள். இப்ப அவர்களுக்கு உடை பெரிதாக தெரியவில்லை. இன்னும் நான் வெறும் காலுடன் கட்டை காக்கி காற்சட்டையுடன் தான் பாடசாலை போகிறேன், பின் வாங்கில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால் இப்ப நான் வேண்டும் என்றே அப்படி போகிறேன், அப்படி இருக்கிறேன். அது தான் வித்தியாசம்!!
 
அது நான் பல்கலைக்கழகம் போகும் மட்டும் தொடர்ந்தது. ஆனால் நான் யாழ் மத்திய கல்லூரிக்கு போய்விட்டேன். இப்ப நினைத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்! கொஞ்சம் நானும் விட்டுக்கொடுத்து போய் இருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஆனால், மனதில் முதல் நாள் ஏற்பட்ட அந்த கோபம் வைராக்கியம் உண்மையாக மாற பல ஆண்டுகள் எடுத்துவிட்டது!
 
"குழந்தை பருவம் சுமாராய் போச்சு
வாலிப பருவம் முரடாய் போச்சு
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு
பழக்க வழக்கம் கரடாய் போச்சு"
என்பதே உண்மையாக போச்சு!!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
334061200_5971760496236229_9100145388021637722_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=KNn7SsYL0FEQ7kNvgGzg1qB&_nc_ht=scontent-lhr6-1.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYAJcX6c1zYU9HXmdavZ-AuXW_0VT5ctc76eni2uB7Ig5A&oe=668D843B  334053114_2378662855648413_7825051933484317043_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Q4TP4kZj-a0Q7kNvgEkT03o&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYBNysrGlPnPaWat5CBZDzHbFLNIF0Jo7nHhlXtsQgZ8yw&oe=668DA1FC  334051074_905186607483629_526304720589994325_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qGcgqvg23GcQ7kNvgHzylHo&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYBmX6FrAAdFU1DKopAjzw06b3H3rjMNoPr9_iOoJ-OvOg&oe=668DB559
 
 
 
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, kandiah Thillaivinayagalingam said:

முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" .

நல்லதொரு பரம்பரையிலிருந்து வந்திருக்கிறீர்கள்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.