20 Mar, 2026 | 05:35 PM
( இணையத்தள செய்திப் பிரிவு )
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 53 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்புகளின் போது, 13 சிறிய ரக விசைப்படகுகள் (டிங்கி) மற்றும் 4 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், அதிசக்தி வாய்ந்த மின்விளக்குகளைப் பயன்படுத்தல், அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரங்களில் கடலில் சுழியோடி மீன்பிடித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் விஞ்சுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களுக்கு உட்பட்ட பின்வரும் பகுதிகளில் இச்சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. விடத்தல்தீவு, சவுத்பார், வங்காலை, புத்தளம், உடப்பு, உடையூர்பதி, வாகரை, கண்டலடி, களுவான்கேணி, பாலாச்சேனை, சவுக்கடி, யாழ்ப்பாணம் மண்டைதீவு, திருகோணமலை, கிண்ணியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை கடற்பகுதிகள்.
கைது செய்யப்பட்ட 53 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை, மன்னார், புத்தளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு, மண்டைதீவு, நானாட்டான், கின்னியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகங்களிலும், காலி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்! | Virakesari.lk
By
பிழம்பு ·