Jump to content

சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கலை மேம்படுத்த ஜப்பானின் ஒத்துழைப்புடன் குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 JUL, 2024 | 01:17 PM
image
 

இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. 

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்கல் செயற்றிட்டத்தினை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த ஒத்துழைப்பினை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறி, இது தடுப்பூசிகளை பாதுகாப்பாக உரிய நேரத்திற்கே கொண்டு செல்வதற்கு சுகாதார அமைச்சிற்கு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் காலத்துக்குக் காலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குளிர்ச் சங்கிலி உபகரணத் தொகுதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு வழங்கி வந்துள்ளன. 

தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் என்பன ஏற்கனவே கையளிக்கப்பட்ட குளிர்ச் சங்கிலி உபகரணங்களாகும். அதன் தொடராகவே இன்று குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்படுகின்றன.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. மிசுகோஷி ஹிடேகி, “இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளிப்பதில் நான் பெருமிதம்கொள்கிறேன். இது இலங்கையின் பொதுச் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அர்ப்பணிப்பினை பறைசாட்டுமென உறுதியாக நம்புகிறேன். 

நாடு முழுவதும் தடுப்பூசிகளை தடையின்றி கொண்டு செல்வதற்கான முக்கியமான போக்குவரத்துச் சாதனமாக இந்த ட்ரக் வண்டிகள் விளங்குமென்பதோடு, ஒவ்வொரு சமூகமும் தடுக்கக்கூடிய நோய்களுக்கெதிராக அவசியமான பாதுகாப்பினைப் பெறுவதை உறுதி செய்யும்” என்றும் குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை மத்திய களஞ்சிய அறையிலிருந்து பிராந்திய களஞ்சிய அறைகளுக்கும் அங்கிருந்து சுகாதார வசதிகளை வழங்கும்  நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும். தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் குளிர் பெட்டிகள் ஏற்கனவே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

“தடுப்பூசியேற்றல் சிறுவர்களை தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு துணைநிற்கின்றது. தடுப்பூசிகள் வெப்பநிலை உணர்திறன் கொண்டவை என்பதால் அவற்றை பொருத்தமான நிலைமைகளில் கொண்டு செல்வது அவசியம். 

எனவே, இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான தடுப்பூசி சரியான நேரத்தில் சென்றடைவதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும் என்பதில் ஐயமில்லை. 

நாட்டின் சிறுவர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவையும் சுகாதார அமைச்சின் கூட்டு ஒத்துழைப்பினையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பெரிதும் மதிக்கின்றது” என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ இந்நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறுவர்களின் குறுகிய மற்றும் நீண்டகால தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பல ஆண்டுகளாக பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகிறது.

https://www.virakesari.lk/article/189076

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.