Jump to content

சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்

spacer.png

 

இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா?

முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத்  தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார்.

ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது.

இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய  மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது.

அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார்.

மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு.

தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான்.  தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம்.  அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது.

அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை.  கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா?

கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம்.

ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை.

பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு  அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக்  காத்திருப்பது  தலைமைத்துவப் பலவீனம்தான்.

கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா?

அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா?

கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த்  தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா?

இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா?

அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும்.

https://www.nillanthan.com/6860/

  • Like 1
Link to comment
Share on other sites

49 minutes ago, கிருபன் said:

 

 ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும்.

https://www.nillanthan.com/6860/

முட்டாள்தனமான ஒப்பீடு.

அன்று, ஈரோஸ் வென்றதன் காரணம், இந்திய இராணுவம் புலிகளை அழித்தொழிக்க போரை ஆரம்பித்து அவர்களை நகர்புறங்களில் இருந்து பின்வாங்க செய்து காடுகளுக்குள் அனுப்பிய பின்னும், தமக்கான  மக்களின் பேராதரவை நிரூபிக்க ஈரோஸ் இன் பின்னால் இருந்து அவர்களை புலிகள் இயக்கியமையே.

ஈரோஸின் வெற்றி= புலிகளுக்கான மக்கள் ஆதரவு எனும் சமன்பாட்டில் விளைந்த வெற்றி.

வெறும் 14 வயதில் இருந்த என்னைப் போன்றவர்களையே, இந்திய இராணுவத்தின் அழுத்தங்களுக்கும் மத்தியில் கையெழுத்தில் எழுதி சுவரொட்டி களை ஒட்ட வைக்கும் அளவுக்கு அன்று கூட்டுணர்வு இருந்தது.

ஆனால் இந்த பொது வேட்பாளர் தெரிவு அவ்வாறு இல்லை. எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கிச் சொல்லும் ஒரு நடைமுறை.  தமிழ் கூட்டுணர்வு என்பது இந்த விடயத்தில் இல்லை என்பதைக் காட்டும் முயற்சி இது.

 

Edited by நிழலி
வரி சேர்க்க
  • Like 3
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.