Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னை கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 28 ஆகஸ்ட் 2024, 06:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் ஒரு காலகட்டத்தில் சென்னையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சென்னையின் வரலாற்றோடு பிணைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் வரலாறு என்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் யாரும், அந்த ரயில் நிலையத்திற்கும் மாநகராட்சிக் கட்டடமான 'ரிப்பன் பில்டிங்கி'ற்கும் இடையில், இந்தோ - சராசெனிக் பாணியில் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்தோடு நிற்கும் ஒரு கட்டடத்தை பார்க்காமல் செல்ல முடியாது. செங்கல் நிறத்தில் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால். ஒரு காலத்தில் சென்னையின் பரபரப்பான நிகழ்வுகளின் மையமாக இருந்த இடம் அது.

19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'Town Hall' எனப்படும் அரங்கங்களைக் கட்டுவது வழக்கமாக இருந்தது. நகர நிர்வாகத்திற்கென தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இது போன்ற டவுன் ஹால்களில் கூடி, அந்நகரம் குறித்த முடிவுகளை எடுப்பார்கள். அம்மாதிரி கூட்டங்கள் நடக்காத காலகட்டத்தில், நகரின் முக்கிய நிகழ்ச்சிகள், நகருக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களுக்கான வரவேற்பு போன்றவை அந்த அரங்கில் நடக்கும்.

அந்த காலகட்டத்தில், கல்கத்தா, பம்பாய் போன்ற இடங்களில் டவுன் ஹால்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கிய நகரமான மெட்ராஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்கூட அப்படி ஒரு கட்டடம் இல்லை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸிலும் அப்படி ஒரு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் உருவானது. பிற நகரங்களில் இருந்த டவுன் ஹால்களில் நகராட்சிக் கூட்டங்கள் நடந்தாலும், மெட்ராஸ் டவுன் ஹாலின் நோக்கம், நகராட்சிக் கூட்டத்தை நடத்துவதாக இல்லை. காரணம், மெட்ராஸ் மாநகராட்சி அந்தத் தருணத்தில் எர்ரபாலு தெருவில் இருந்த ஒரு கட்டடத்தில் இயங்கிவந்தது. ஆகவே, புதிய கட்டடம், முக்கிய நிகழ்வுகளை நடத்தும் இடமாகவே இருக்கும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது.

நிதியுதவி செய்த அரசர்கள்

1882ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்ஜ் டவுனில் இருக்கும் பச்சையப்பா அரங்கில் ஒரு கூட்டம் நடைபெற்றது. சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மெட்ராஸ் நகருக்கென ஒரு டவுன் ஹாலைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அந்தக் கட்டடத்திற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 30 பேரிடமிருந்து 16,425 ரூபாய் வசூலானது.

 
சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால்
படக்குறிப்பு, ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து பணிகள் விறுவிறுப்படைந்தன. இந்தக் கட்டடத்தைக் கட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண அரசிடம் இதற்கென ஒரு நிலத்தை ஒதுக்கித் தரும்படி கேட்கப்பட்டது. தற்போது நேரு விளையாட்டரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை மாநகராட்சி ஆகியவை இருக்கும் இடத்தில், அந்தக் காலகட்டத்தில் மக்கள் பூங்கா (Peoples Park) என்ற பெயரில் 117 ஏக்கரில் மிகப் பெரிய பூங்கா இருந்தது. அந்த பூங்காவில் 3.14 ஏக்கர் நிலத்தை சென்னை மாகாண அரசு 99 வருட குத்தகைக்கு ஒதுக்கித் தந்தது. வருடத்திற்கு 28 ரூபாய் குத்தகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

விஜயநகர மன்னரான புசபதி ஆனந்த கஜபதி ராஜு, 1883 டிசம்பர் 17ஆம் தேதி கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். திருவனந்தபுர அரசர், மைசூர், ராமநாதபுரம், எட்டயபுர மன்னர்கள் இந்தக் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவியைச் செய்திருந்தனர்.

இருந்த போதும், கட்டடத்தைக் கட்டி முடிக்க அந்த நிதி போதுமானதாக இல்லை. இதையடுத்து இதற்கென ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது.

கட்டடத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள்

அந்தத் தருணத்தில் வங்காளத்தின் பொதுப் பணித் துறையில் செயற்பொறியாளராக ராபர்ட் ஃபெலோவஸ் சிஸோம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், சென்னை மாகாணத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர்தான் இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பாளராகச் செயல்பட்டார்.

கட்டடத்தைக் கட்டும் பொறுப்பு, சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம், சட்டக் கல்லூரி, கன்னிமாரா நூலகம் போன்றவற்றைக் கட்டிய புகழ் பெற்ற கட்டட ஒப்பந்ததாரரான டி. நம்பெருமாள் செட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆயின.

48 மீட்டர் நீளத்துடனும் 24 மீட்டர் அகலத்துடனும் செவ்வக வடிவில் அமைந்திருந்த இந்த கட்டடத்தில் இரண்டு அரங்குகள் உண்டு. ஒன்று, தரைத்தளத்திலும் மற்றொன்று முதல் தளத்திலும் இருந்தது. அதற்கு மேல் ஓடுகள் வேயப்பட்டிருந்தன.

 
சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால்
படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹாலின் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த சன்னல்

1837ல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசியாகியிருந்த விக்டோரியா மகாராணி ஆட்சியின் பொன் விழா 1887ல் நடந்து முடிந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதிதாக மெட்ராஸில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு மகாராணியின் பெயரைச் சூட்ட விரும்பியது பிரிட்டிஷ் அரசு. அதன்படி, அவரது பெயரே அந்தக் கட்டடத்திற்குச் சூட்டப்பட்டது.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தது யார் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஆனால், சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான எஸ். முத்தையா சென்னை மாகாண ஆளுநராக இருந்த லார்ட் கன்னிமாராதான் இதனைத் திறந்துவைத்ததாகக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த அரங்கில் பேசினர். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் ஆகியோர் இங்கே பேசியிருக்கின்றனர்.

திரையிடப்பட்ட படங்கள்

"சிகாகோவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் பேசுவதைக் கேட்க பெரும் கூட்டம் அரங்கத்திற்குள் நிரம்பிவிட்டதால், அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. இதனால், வெளியில் இருந்தபடியே பேசினார். அதேபோல, மகாத்மா காந்தி 1915ல் பம்மல் சம்பந்த முதலியாரின் ஹரிச்சந்திரா நாடகத்தை இங்கேதான் பார்த்தார். பாரதியார் இங்கே Cult of the Eternal (நித்தியத்தின் வழிபாடு) என்ற தலைப்பில் பேசியபோது, அவரது பேச்சைக் கேட்க ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது" என்கிறார் சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் இங்கே பேசினார்.

அந்த காலகட்டத்தில் தமிழ் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் இங்கு தங்கள் நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றினர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இங்கு தமிழில் மேடையேறின. சென்னையில் முதன் முதலில் கட்டப்பட்ட சினிமா அரங்கம் வேறு என்றாலும், முதன் முதலில் சினிமா இங்குதான் காட்டப்பட்டது. 1896 டிசம்பரில் மெட்ராஸ் ஃபோடோகிராஃபிக் ஸ்டோர் என்ற கடையை நடத்திவந்த டி. ஸ்டீவன்சன் சில சிறு படங்களைத் திரையிட்டார். அந்த நாட்களில் பெரும் மழை பெய்துகொண்டிருந்ததால், அதைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.

சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால்
படக்குறிப்பு, நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது.

இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இங்கே நடந்தது. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, நகரின் பிராமணரல்லாத தலைவர்கள் இங்கே ஒன்றுகூடி, South Indian Liberation Federation அமைப்பை உருவாக்கினர். இதுவே பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட திராவிட இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது.

இதற்குப் பிறகு, சுகுண விலாஸ் சபா, சென்னபுரி ஆந்திர மஹாசபா, தென்னிந்திய தடகள வீரர்கள் சங்கம் போன்றவை இங்கு சிலகாலம் செயல்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டடத்தின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் இருந்தது.

"நாட்கள் செல்லச்செல்ல மெட்ராஸ் நகரம் தெற்கு நோக்கி வளர ஆரம்பித்தது. முக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள், நாடகங்கள் ஆகியவே நிகழ்ச்சிகள் நகரின் தெற்கில் புதிதாக உருவான அரங்கங்களுக்கு மாற ஆரம்பித்தன. இதனால், இந்த அரங்கின் மவுசு குறைய ஆரம்பித்தது" என்கிறார் வெங்கடேஷ். நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது.

பராமரிப்புப் பணிகள்

1967ல் சி.என். அண்ணாதுரை முதலமைச்சராகப் பதவியேற்ற போது, கட்டடத்தைப் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது நடக்கவில்லை.

இதற்குப் பிறகு, ஒரு உணவகம், சில கடைகள் ஆகியவை இங்கே செயல்பட்டுவந்தன. இந்தக் காலகட்டத்தில் கட்டடம் பாழடைய ஆரம்பித்தது.

கட்டடம் துவங்கப்பட்டதிலிருந்து சென்னை நகர ஷெரீஃப் தலைமையிலான ஒரு அறக்கட்டளை இந்தக் கட்டடத்தை நிர்வகித்து வந்தது. அந்த அறக்கட்டளையில் விஜயநகர ஜமீன் குடும்பத்திற்கும் சென்னை மாநகராட்சிக்கும் பெரும் பங்கு இருந்தது. ஷெரீஃப் பதவி ஒழிக்கப்பட்ட பிறகு, கட்டடம் மாநகராட்சியின் பொறுப்பிற்கு வந்தது. ஆனால், அந்தத் தருணத்தில் கட்டடம் மிக மோசமான நிலையில் இருந்தது.

பிறகு, கட்டடத்தைப் புதுப்பிக்கும் நோக்கில், அதிலிருந்த கடைகள் போன்றவை அகற்றப்பட்டன. சிறிய அளவில் பராமரிப்புப் பணிகளும் நடந்தன. ஆனால், அந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கியதும், மீண்டும் பொதுமக்களின் பார்வையிலிருந்து இந்தக் கட்டடம் மறைந்தது.

இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 32 கோடி ரூபாய் செலவில் முழுமையாக இந்தக் கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 2025ல் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து கட்டம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.