Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]

தருமபுரியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அவர். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், நாளொன்றுக்கு 18 மணிநேரம் அதை விளையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. விளைவு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார்.

"என்னையே நான் வெறுக்கிறேன். மொத்தமாக வீணா போயிட்டேன். நான் இருந்து என்ன ஆகப் போகிறது?" என சக நண்பர்களிடம் பேசி வந்தவர், இரண்டு முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

"அந்த மாணவர், உளவியல் ரீதியான முரண்பாடுகளுக்கு (conflict) ஆட்பட்டிருந்தார். மனச்சோர்வு மருந்துகளைக் கொடுத்து உரிய கவுன்சிலிங் கொடுத்த பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்," என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

தற்கொலை முடிவில் இருந்து தருமபுரி மாணவர் பின்வாங்கியது வரவேற்கக்கூடிய நிகழ்வு என்றாலும், நாடு முழுவதும் மாணவர் தற்கொலை தொடர்பாக வெளியான தரவுகள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக உள்ளன.

மாணவர் தற்கொலைகளில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளதாக ஐசி3 என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பிட்டச் சில மாநிலங்களில் மட்டும் மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?

10 ஆண்டுகளில் 57 சதவீதமாக அதிகரிப்பு

‘மாணவர் தற்கொலை: இந்தியாவில் பரவும் தொற்றுநோய்’ (Student Suicides: An Epidemic Sweeping India) என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த ஆய்வறிக்கையை ஐசி3 வெளியிட்டது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக ஐசி3 கூறுகிறது.

அதில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் (2012 முதல் 2021) 97,571 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2002 முதல் 2011 வரையிலான தரவுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 57 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2021-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 4.5% அதிகம். 2020-ஆம் ஆண்டில் 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 21.2% அளவு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், 24 வயதுக்குட்பட்டவர்களின் மக்கள்தொகை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாகக் குறைந்துள்ளது. ஆனால், மாணவர் தற்கொலை என்பது 7,696 முதல் 13,089 ஆக அதிகரித்துள்ளது.

மாணவர் தற்கொலை விகிதம் 4% முதல் 7% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் ஆண்டுதோறும் 2% உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் இது 5% ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.

 
மாணவர் தற்கொலை

பட மூலாதாரம்,MOHANA VENKATACHALAPATHY

படக்குறிப்பு, மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி

207% உயர்ந்த தற்கொலைகள்

இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, மகாராஷ்ட்ராவில் 1,834 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1,308 பேரும், தமிழ்நாட்டில் 1,246 பேரும் கர்நாடகாவில் 855 பேரும் ஒடிஷாவில் 834 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நாட்டில், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த மாநிலங்களில் பதிவானது மட்டும் 46% என ஐசி3 அறிக்கை கூறுகிறது. அதேநேரம், மக்கள்தொகை அதிகம் உள்ள உத்தரபிரதேசத்தில் மிகக் குறைவான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அங்கு 5.3% பதிவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் 207% அளவு மாணவர் தற்கொலைகள் அதிகரிததுள்ளன. ராஜஸ்தானில் 186% அளவு உயர்ந்துள்ளது. ஆனால், இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் 76% அளவுக்கு மாணவர் தற்கொலைகள் குறைந்துள்ளன.

குறிப்பாக, 15 வயது முதல் 24 வயதுள்ளவர்களில் ஏழு பேரில் ஒருவர் மனஅழுத்தம், ஆர்வமின்மை ஆகியவற்றால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41% பேர் மட்டுமே சிகிச்சை எடுப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

தென்னிந்திய மாநிலங்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிகோபார், மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றில் 29% அளவுக்குத் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக ஐசி3 நிறுவனத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 7 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில், 15-29 வயதுடையவர்களின் மரணத்திற்கு 4-வது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது.

 
மாணவர் தற்கொலை

பட மூலாதாரம்,NEDUNCHEZIAN

படக்குறிப்பு, கல்வியாளர் நெடுஞ்செழியன்

காரணம் என்ன?

தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படாமல் இருப்பது, மதிப்பெண் குறைவு, குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் தரும் அழுத்தம், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதில் குழப்பம், கல்வி நிறுவனங்களில் போதிய கவுன்சிலிங் கிடைக்காதது, கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக் குறைபாடு போன்றவை தற்கொலைக்கு காரணங்களாக உள்ளதாக ஐசி3 அமைப்பு தெரிவிக்கிறது.

இதுதவிர, ராகிங், மற்றும் மாணவரின் நன்மதிப்பைக் குலைக்கும் செயல்கள், சாதிரீதியான பாகுபாடு, இனப்பாகுபாடு, பாலினம், மற்றும் வர்க்கம் சார்ந்த பிரச்னைகள், நிதிப் பிரச்னை, கூட்டுக் குடும்பமாக இல்லாததால் போதிய ஆதரவின்மை, வேறுபடுத்திப் பேசுவது, மாணவர்-பெற்றோர்-ஆசிரியர் இடையே தகவல் பரிமாற்றம் குறைவு போன்றவற்றையும் அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், "பிள்ளைகளின் கல்விக்கு பெற்றோர் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிடுகின்றனர். ஆனால், அந்தப் பிள்ளை படிக்காமல் போகும்போது பிரச்னை ஏற்படுகிறது. இதில், பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கூட்டுக் குடும்பங்களில் வசித்தால் தாத்தா, பாட்டியிடம் குறைகளைக் கூற வாய்ப்புகள் அதிகம். தனிக்குடும்பங்களில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன," என்கிறார்.

மேலும் பேசிய அவர், "மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இவை வகுப்பறைகளை விடவும் கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வகுப்பறைகளில் பாடங்களுடன் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் வெளி உலகை பயத்துடன் பார்க்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்,” என்கிறார் அவர்.

மேலும், “சொல்லப்போனால், பெற்றோருக்குத் தெரியாமலேயே குழந்தைகள் பாதிப்படைகின்றனர். பத்தாம் வகுப்புக்குள் நுழைந்துவிட்டாலே தங்கள் குழந்தையைக் குடும்ப நிகழ்ச்சிகளுக்குக்கூடப் பெற்றோர் கூட்டிச் செல்வதில்லை. ஓர் ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் வேறு ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்து அதே தவறைச் செய்கிறார்,” என்கிறார் அவர்.

“அவர் ஏன் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்ற விவரத்தைச் சொல்வதில்லை. இவரால் மாணவிகள் மீண்டும் பாதிக்கப்பட்டாலும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை," என்கிறார்.

 
மாணவர் தற்கொலை

பட மூலாதாரம்,MAALAYAPPAN

படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மையத்தின் இயக்குநர் மீ.மாலையப்பன்

பெண்களைவிட ஆண்கள் தற்கொலை அதிகம்

பெண்கள் அதிகம் பாதிப்படைவதாகக் கல்வியாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டாலும், ஆண் மாணவர்களே அதிகளவு தற்கொலை செய்து கொள்வதாக ஐசி3 வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மாணவர் தற்கொலைகளில் 57% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 113% அதிகரித்துள்ளது. பெண் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 79% அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் திருநங்கைகள் தொடர்பான தரவுகள், ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும் ஐசி3 நிறுவனம் தெரிவித்துள்ளது.

2002 முதல் 2006 வரை 15,568 மாணவர்களும், அதே ஆண்டில் 12,481 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2007 முதல் 2011 வரை 18,777 ஆண் மாணவர்களும் 15,367 பெண் மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2012 முதல் 2016 வரையில் 21,901 ஆண் மாணவர்களும் 19,655 பெண் மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 2017 முதல் 2021 வரையில் 30,488 (39%) ஆண் மாணவர்களும் 25,525 (30%) பெண் மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி, "படிப்பைத் தேர்வு செய்வதில் உள்ள குழப்பம், அவர்கள் விரும்பிய படிப்பு கிடைக்காதபோது, அதில் ஆர்வம் செலுத்த முடிவதில்லை. தவிர, மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதும் முக்கியக் காரணம். இதனால் மனப்பிறழ்வு அல்லது மனச்சோர்வு ஏற்பட்டு திறமையற்ற இளைஞராக மாறிவிடுகிறார். அது தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது. தற்கொலைகளில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்," என்கிறார்.

தொடர்ந்து, தற்கொலை எண்ணத்தில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளை பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.

"ஒரு மாணவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தால், 'நான் எதற்காக வாழ வேண்டும்?' என நண்பர்களிடம் கூறுவார். எஸ்.எஸ்.எஸ் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக இதைப் பற்றி தகவல் அனுப்புவார். தூக்க மாத்திரைகளை அருகில் வைத்துக் கொள்வது அல்லது தற்கொலை தொடர்பான வீடியோக்களை பார்ப்பது என செயல்படுவார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்போதே அவரை முழு உளவியல் பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும்,” என்க்கிறார் அவர்.

மேலும், “தற்கொலை தொடர்பாக அவர்கள் சொல்லும் சிறிய சமிக்ஞைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை தடுப்பு மையங்களை நாட வேண்டும். ஒரு பிரச்னையைத் தெளிவாக ஆராய்ந்து தீர்வு சொன்னாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும் என மனநல மருத்துவம் கூறுகிறது. இது ஒரு பிரச்னையே அல்ல என அவர்களுக்குப் புரிய வைப்பது தற்கொலைகளை தடுக்கும்," என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி.

இதே தீர்வுகளை ஐசி3 தொண்டு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையும் முன்வைக்கிறது. அவை:

பள்ளிகளிலேயே மாணவர்களின் தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் வகையில் செயல்படுவது

பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது முதல் பல்வேறு நிலைகளில் மாணவர்களின் விருப்பத்தை அறிவது

மாணவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது

பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து சரியான நேரத்தில் தீர்வு சொல்வது

பள்ளிகளில் மாணவர் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் உரிய பயிற்சி கொடுப்பது

அதேநேரம், இந்த விவகாரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மையத்தின் இயக்குநர் மீ.மாலையப்பனின் கருத்து வேறாக உள்ளது.

"கல்வியின் மூலம் மனஅழுத்தம் வருவது என்பது இந்தியா முழுவதும் உள்ள பிரச்னைகள் தான். சில மாநிலங்களில் மட்டும் தற்கொலைகள் அதிகமாக வேறு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதை ஆராய வேண்டும்," என்கிறார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, "பொதுவாக, தமிழ்நாட்டு மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் சற்று அதிகமாகவே உள்ளது. அதற்கு படிப்பு மட்டும் காரணம் அல்ல. இங்குள்ள மக்களிடம் தற்கொலை எண்ணம் அதிகமாக வேரூன்ற கலாசாரம் முக்கிய காரணமாக உள்ளது,” என்கிறார்.

உதாரணமாக, வீட்டில் சாதாரண சண்டை வந்தாலே, 'செத்துப் போ' எனக் கூறுவது இயல்பாக உள்ளது. எதாவது ஒரு பிரச்னை வரும்போது அதற்கான தீர்வாக தற்கொலையை பார்ப்பது தான் காரணம். பிற சமூகங்களில் இது பெரிதாக இல்லை," என்கிறார் மீ.மாலையப்பன்.

 
மாணவர் தற்கொலை

பட மூலாதாரம்,MADHUMATHI IAS

படக்குறிப்பு, பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ்.

'மனம்' திட்டம், மனநலத் தூதுவர்

இதுகுறித்து தொடர்ந்து பேசினார் மாலையப்பன்.

"இதைப் போக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மாதம்தோறும் மூன்று வகையான மனநல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட மனநல மருத்துவர்கள் இதற்கான பணிகளில் ஈடுபடுகின்றனர். மாணவர் தற்கொலையைத் தடுக்க ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுப்பது முக்கியமான பணியாக உள்ளது,” என்கிறார்.

“ 'மனம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். அவர்கள், சக மாணவர்களில் யாராவது மனநல பிரச்னையில் இருப்பதைக் கண்டறிந்து அவர்களை கவுன்சலிங்குக்கு கொண்டு வருவார்கள்.

“இதற்குப் பாலமாக அதே மாணவர்களில் ஒருவர் மனநல தூதுவராக (Fear Ambassador) நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களிடம் கூறுவதைவிட சக மாணவர் என்றால் மனம் திறந்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் அவர்.

"பாடத்திட்டச் சுமை உள்பட மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு 'மனம்' போன்ற திட்டங்கள் முக்கியமானதாக உள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது தற்கொலைகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும்," என்கிறார்.

"மாணவர்களிடையே ஏற்படும் தற்கொலை எண்ணத்தைப் போக்கும் வகையில் பள்ளிகளில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கென ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார், பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ்.

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.