Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   03 SEP, 2024 | 03:02 PM

image

தொகுப்பு: ஆர்.ராம்

உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொரு காலனித்துவத்துக்குள் உள்ளாகாத தேசமாக எதியோப்பியா காணப்படுகின்றது.

இது, வரலாற்று ரீதியாகவும், பிராந்திய, பூகோள கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தினைக் கொண்டதொரு தேசமாக காணப்படுகின்றது. 80இற்கும் அதிகமான மொழிகளைக் கொண்டிருக்கின்றமையானது விசேடமானதாகும்.

இப்படியானதொரு தேசத்தில் அரசைக் கட்டியெழுப்பும் செயல்முறை ஒரு முடியாட்சியின் மூலம் இருந்தது. அத்தோடு மத்திய அரசைக் கட்டுப்படுத்துவதற்கு ‘மன்னர்கள்’ அல்லது ‘ராசஸ்’ இடையே கடுமையான போட்டிகள் நிலவியிருந்தன. அதேநேரம், மத்தியிலிருந்து கீழ் மட்டம் வரையில் அணுக முடியாத காரணத்தால் சில பேரரசர்கள் நடைமுறையில் பரவலாக்கப்பட்ட நிர்வாக முறைமையைக் கொண்ட ஆட்சி வடிவத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதியோப்பியா ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாகத்திற்கு உகந்ததாகும். எனினும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன அரசின் வளர்ச்சியுடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பயன்படுத்தி ‘மிகை-மையமயமாக்கல்’ போக்குகள் உள்நாட்டுக்குள் வளர்ந்தன.

திறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அழிப்புக்கொள்கைகள் பேரரசர்களாலும் இராணுவ சர்வாதிகாரத்தாலும் பின்பற்றப்பட்டன. அம்ஹாரிக் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகவும், கிறிஸ்தவம் மாநிலத்தின் மதமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் நவீன அரசின் தோற்றம் குழு ஆதிக்கத்தின் வலுவானதொரு ‘மைய’ அதிகாரக் குவிப்பை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சி 1974இல் கடைசி பேரரசரான ஹைல் செலாசியை ஆட்சியில் இருந்து அகற்றியது. எனினும், ஜனநாயக ஆட்சி உருவாக்கப்படுவதற்கு பதிலாக ஒரு இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டதோடு சில சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான மக்களின் கோரிக்கைகளுக்;கு இராணுவத்தின் ஆட்சியில் பதிலளிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் அந்நிய தேசங்களாக்கப்பட்ட பகுதிகளும், உரிமைகள் மறுதலிக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின. இது 17வருடங்கள் நீடித்திருந்தன.

இதேநேரம், 1950ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 390(வி)ஏ இற்கு அமைவாக, 1952முதல் 1962வரை நீடித்த எதியோப்பியாவுடன் எரித்திரியா இணைக்கப்பட்டது. எனினும், 1962ஆம் ஆண்டில் எதியோப்பியா-எரித்தியா கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டது.

இதனால், 1961இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அது 1991 வரை தொடர்ந்தது.1991-1993வரையான காலப்பகுதியில் பதவியில் இடைக்கால அரசாங்கம் நீடித்திருந்தது. 1993இல் எரித்திரியா ஒரு மேலாதிக்கக் கட்சியான விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து அதன் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்போதைய எதியோப்பியாவின் இடைக்கால அரசாங்கம் எரித்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அத்துடன் எரித்திரியா ஐ.நா.வின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொண்டது. எனினும், 1998-2000 வரையிலான காலத்தில் எரித்திரியா எதியோப்பியாவுடன் போரை முன்னெடுத்தது. இதன் விளைவால் எரித்திரியா 1991 இல் நிறுவப்பட்ட இடைக்கால அரசாங்கத்தால் இன்னும் ஆளப்படும் நிலைமையே நீடிக்கின்றது.

பேரரசர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கைகள், தேசிய இனங்கள் அல்லது இனக்குழுக்களின்; சுயாட்சிக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன்விளைவால்; மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. நீண்ட உள்நாட்டுப் போர் ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்தது.

நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஒருவாறு, 1991இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும் ஒருகுழு ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சிகளின் தீவிர அடக்குமுறை இயல்புகளுக்கு எதிர்வினையாக நாட்டில் பல்வேறு குழுக்கள் வலுவான இனவாத உணர்வை வளர்த்தன.

இதனால், 1991இல் உள்நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவானது. மத்திய அரசைக் கட்டுப்படுத்தியவர்களை முழுமையாகத் தோற்கடித்து நாட்டைக் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்படுத்தின. சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான மற்றொரு நம்பிக்கை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.

இராணுவ ஆட்சியைத் தோற்கடித்த எதிரோப்பிய கிளர்ச்சியாளர்கள் பல்வேறு குழுக்களின் சுயநிர்ணயக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொதுவான மத்திய அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பராமரிக்க முடிவு செய்தனர்.

பலதரப்பட்ட குழுக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். எனவே நிறுவனமயமாக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதற்கான தேவை உணரப்பட்டது. எதியோப்பியாவை 14சுயாட்சிப் பகுதிகளாகப் பிரித்து, அரசியலமைப்பு ஆணையகத்தால் சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் 1994இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு தாமதமின்றி 1995இல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

‘எங்களது தேசம் எதியோப்பிய நாடு, நாங்கள் தேசிய இனங்கள் மற்றும் பூர்வீகமான மக்கள்’ என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 46ஆவது சரத்தில் குடியேற்ற முறைகள், மொழி, அடையாளம் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்பது தெளிவாக குறித்துரைக்கப்பட்டது.

எனவே, எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுக்களும் ஒரு சமஷ்டி மாநிலமாக இருக்கலாம். அத்துடன் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்தவொரு தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு தனது சொந்த மாநிலத்தை உருவாக்குவதற்கான உரிமையானது பின்வரும் அடிப்படையில் உறுதி செய்யப்படுகின்றது. அவையாவன,

(அ) தேசம், தேசியம் அல்லது சம்பந்தப்பட்ட மக்கள் குழு அரசியலமைப்பு கவுன்சிலின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் மாநில உரிமைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு, கோரிக்கை மாநில கவுன்சிலுக்கு எழுத்துபூர்வமாக முன்வைக்கப்படும் போது

(ஆ)கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுன்சில் ஒரு வருடத்திற்குள் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்து, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு மத்தியில் நடத்தப்படும் போது

(இ)வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் மாநில உரிமைக்கான கோரிக்கை ஆதரிக்கப்படும் போது

(ஈ)மாநில கவுன்சில் தனது அதிகாரங்களை, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது 

(உ)விண்ணப்பமின்றி வாக்கெடுப்பு மூலம் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டால், நேரடியாக எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசில் உறுப்பினராகிறது.

(ஊ)எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் உறுப்பினர்கள் சம உரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் எதியோப்பிய நாடானது, தற்போது மத்திய எதியோப்பியா பிராந்திய மாநிலம், சிடாமா பிராந்திய மாநிலம், தெற்கு எதியோப்பிய பிராந்திய மாநிலம், தென்மேற்கு எதியோப்பியா மக்கள் பிராந்திய மாநிலம் ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்திற்காக அரசியல்சாசனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் சிறு மக்கள் குழுக்களின் சிறப்புப் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 20ஆக இருப்பதோடு மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 550க்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்; என்பதும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் சபையானது சமஷ்டி அதிகார வரம்பிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் சட்டம் இயற்றவும், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய்களைப் பெறவும், வரிகளை விதிக்கவும், மத்திய வரவு,செலவுத்திட்டத்தினை அங்கீகரிக்கவும், சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் ஒரு தேசிய பொலிஸ் படை ஆகியவற்றின் அமைப்பை தீர்மானிக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், இச்சபையானது சுயநிர்ணய உரிமை தொடர்பான பிரச்சினைகளை முடிவு செய்வதற்கும், மத்திய மற்றும் மாநில வரிகளின் மூலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயின் விகிதங்களைத் தீர்மானிக்கவும், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை முடிவு செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருகின்றது.

மாநில மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இடையிலான பகிரப்பட்ட ஒத்திசைவுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், ஒரு மாநிலம் அரசியலமைப்பு ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் தலையீட்டை ஆணையிடுவதற்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், தொகுதிகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கும், அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவை தீர்மானிக்கவும், அரசியலமைப்பு திருத்தம் குறித்து முடிவு செய்யவும் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது.

மேலும், நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான அங்கீகாரத்தினை வழங்குதல், அரசியலமைப்பில் வழங்கப்படாத வரிவிதிப்பு அதிகாரத்தின் மீதான முடிவுகளை எடுத்தல், மாநில அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் மனித உரிமை மீறல்களை செய்கின்றபோது கைது செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை தீர்மானித்தல் உள்ளிட்ட அதிகாரங்களும் மக்கள் பிரதிநிதிகள் சபையிடத்தில் உள்ளன.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனையற்ற உரிமை உள்ளது. எதிரோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் அதன் சொந்த மொழியைப் பேசவும், எழுதவும், வளர்க்கவும், கலாசாரத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் அதன் வரலாற்றைப் பாதுகாக்கவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன.

எத்தியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களுக்கும், தேசியங்களுக்கும் மற்றும் மக்கள் குழுக்களுக்கும் முழு அளவிலான சுய-அரசு உரிமை உள்ளது, இதில் தான் வசிக்கும் பிரதேசத்தில் அரசாங்க நிறுவனங்களை நிறுவுவதற்கான உரிமையும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில் சமமான பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றது.

இத்தகைய உச்சபட்சமான அதிகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்  முன்னர் ஒடுக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் உறுதியானவர்களாக மாறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளதோடு பிராந்தியத்தில் எதியோப்பியாவின் அதிகாரம் அதிகரித்துள்ளது. அதேநேரம் சர்வதேச சமாதான முயற்சிகளில் எதியோப்பியாவின் வகிபாகமும் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், எதியோப்பியாவில் மக்கள் குழு அடையாளங்களின் ஆதிக்கம், வலிமையான ஒருங்கிணைப்பு செயல்முறை, என்பன மக்கள் குழுக்களுக்கு இடையில் அவநம்பிக்கைகள் நிலவுவதற்கு வழிசமைக்கிறது. அதுமட்டுமன்றி தற்போதுள்ள பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் சமஷ்டி அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றபோதும் யதார்த்தத்தில் பார்க்கும்போது, அந்த வடிவமைப்பில் காணப்படும் சில சிக்கல்களால் கடுமையான நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

மக்கள் சபைக்கான பிரதிநிதித்துவம் தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாக ஒற்றை உறுப்பினர் முறைமை காணப்படுகின்றது. இது பல்வேறு குழுக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காதுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு சிறு குழுக்களுக்கு கணிசமான பங்கேற்பு இல்லாத சூழல் நீடிக்கின்றது. இதன்விளைவாக,  பெரும்பான்மை அமைப்பானது, அதிக மக்கள்தொகை அதிக பிரதிநிதிகள், அதிக அதிகாரம் போன்ற கோரிக்கைகளை தொடரச் செய்கிறது.

சட்டத்தை உருவாக்கும் செயல்முறைகளில் மக்கள் பிரதிநிதித்துவ சபையின் நிர்வாகியின் உருவாக்கம் சிக்கலுக்குள்ளானதாக காணப்படுகின்றது. அரசியலமைப்பு விளக்கம், மற்றும் நிதி இடமாற்றங்கள், இனங்களுக்கிடையிலான மோதல்களைத் தீர்த்தல் என்பன மையத்தில் இருப்பதால் தேசிய இனங்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காத நிலைமை காணப்படுகின்றது.

முடிவெடுக்கும் நடைமுறை எளிய பெரும்பான்மை அடிப்படையில் இருப்பதால், சட்டத்தை உருவாக்கும் அமைப்பு போலவே, அதிக மக்கள் தொகை கொண்ட குழுக்கள் அதிக பிரதிநிதிகள் மற்றும் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கலாம் என்பது இயல்பாகின்றது.

எதியோப்பியாவில் சமஷ்டி அமுலாக்கம் தொடர்ச்சியான சவால்களை சந்திக்கின்றது. குறிப்பாக, சட்டப்பூர்வ பிரச்சினையை தோற்றுவிப்பதாக உள்ளது.  ஆரம்பத்தில், எதியோப்பிய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமஷ்டி முறையை நல்ல நிர்வாக அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

முன்னர் சலுகை பெற்ற மக்கள் குழுக்கள் அல்லது உயரடுக்கினர் அதை முற்றிலுமாக நிராகரித்தனர். பல தசாப்தங்களாக அதற்கு எதிராக வேலை செய்தனர். பின்னர் சமஷ்டி, கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. 

பழைய ஆட்சியை எதிர்த்துப் போராட, அரசியல் கட்சிகள், மக்கள் குழுக்கள் இன அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டன, இன்னும் அவை தொடர்ச்சியான அவநம்பிக்கையின் காரணமாக அவ்வாறான கூட்டிலேயே இருக்கின்றது. அந்நிலையானது இப்போது நடந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது.

முந்தைய ஆட்சியை இராணுவ ரீதியாக தோற்கடித்த எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற இனக் கட்சிகளின் கூட்டணி, அதீத மத்தியத்துவத்துடன் நாட்டை 27 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு இடமளித்தது. இது ஜனநாயக புறக்கணிப்பையும், மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சி, பிராந்தியங்களில் தலையீடு ஆகியவற்றுக்கும் வழிசமைப்பதற்கு வித்திட்டுள்ளது. 

பன்முகத்தன்மை சார்ந்த சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வது என்பது பல்வேறு வகைகளில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும். எவ்வாறாயினும், இனக்குழுக்களின் உரிமைகளுக்கும், குறிப்பிட்ட இனக்குழுக்கள் வாழும் பிரதேசத்தில் குடியேறும் தனிநபர்களின் உரிமைக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியுள்ளன.

அடக்குமுறை மற்றும் ஒருமைப்படுத்தல் செயல்முறைகளின் மரபு காரணமாக, அரசியலமைப்பு உரிமைக்கும் நடைமுறைக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுவின் உரிமையாக அதன் மொழியை பயன்படுத்த, அதன் கலாசாரம் மற்றும் வரலாற்றை வளர்க்க, சுயராச்சிய அதிகாரத்தைப் பயன்படுத்த, மாநில மற்றும் மத்திய அரசுகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவவதற்கு இடமளிக்கின்ற போதும் நடைமுறையில் சாத்தியமற்ற நிலைமையே உள்ளது.

எதியோப்பியாவின் தேசங்கள், தேசியங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை,  அரசியலமைப்பு தேசம், தேசியம் மற்றும் மக்கள் குழு என்ற சொற்களில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள மக்கள் குழுக்கள் அனைத்திற்கும் ஒரே வரையறைகளே பயன்படுத்தப்படுகிறது

ஒரு பொதுவான கலாசாரம் அல்லது ஒத்த பழக்கவழக்கங்கள், மொழியின் பரஸ்பர நுண்ணறிவு, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் அமைப்பு மற்றும் அடையாளம் காணக்கூடிய, முக்கியமாக தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குழு உள்ளிட்டவற்றுக்கான விசேட அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இதனால், 2018 இல், ஒரு புதிய குழு வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியபோது, முந்தைய அனைத்து முன்னேற்றங்களும் மீண்டும் தலைகீழாக மாறியது.

புதிய பிராந்திய மாநிலங்களை உருவாக்க அதிக ஆர்வம் கொண்ட நிலைமையும், வெளிநாட்டு உதவி, புதிய அரசியல் கூட்டணி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பியிருக்கும் நிலைமையும் புதிய வடிவம் பெற்றது.

2020 நவம்பரில் இருந்து, மத்திய அரசு வெளிநாட்டுப் படைகளுடன் இணைந்து தனது சொந்த மக்கள் மீது இனப்படுகொலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையானது சமஷ்டி ஆட்சி அமைப்பின் தோல்வியாகும். இத்தோல்வி என்பது அரசின் தோல்வி என்பதே பொருளாகும். 

எதிரோப்பியாவைப் பொறுத்தவரையில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான கடைசித் தெரிவாக சமஷ்டி முறையே சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டின் பலதரப்பட்ட குழுக்களுக்கு இடமளிக்கும் ஒருநல்ல பொறிமுறையாக இருக்க முடியும். 

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் புதிய முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன, அதாவது அரசியலமைப்பின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

எதியோப்பிய சமஷ்டி அமைப்பு முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. எதியோப்பியா தன்னை சீர்திருத்துவதில் தோல்வியடைந்தது அல்லது சீர்திருத்தம் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க மிகவும் தாமதமானது.

இதனால், அரசின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மத்தியையும், மாநிலத்தையும் பராமரிப்பதற்கான ஒரேவழி, முற்றிலும் சீர்திருத்துவதும் ஒரு புதிய ஒப்பந்தத்தை கொண்டு வருவதுதான்.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு குழு மக்களும், குறிப்பாக மத்திய அரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ‘சரிபார்ப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள்’ வழிமுறையை அமைப்பது முக்கியமானதாக உள்ளது. சமஷ்டி அதிகார முறைமையை இழந்த பிராந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மீள வழங்குவது உறுதியாக வேண்டியுள்ளது.

இதேநேரம் மத்திய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற முடியாது விட்டாலோ அல்லது அச்செயற்பாட்டை எதிர்காலத்திலும் மாற்றுவதற்கு முடியாவிட்டால், மாநிலத்தின் சுய இடையூறுக்கு வழிவகுக்கக் கூடாது. விவாகரத்து முறையே சிறந்தது. அந்த விவாகரத்து முறையானது வன்முறையாக இருக்க வேண்டியதில்லை, அது அமைதியாகவும் இருக்கலாம்.

https://www.virakesari.lk/article/192707

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.