Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அருந்தவபாலன் 

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கையிலும் காணப்படுகிறது.


குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று கருதுவதைவிடத் தமிழர்கள் என்று வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இலங்கையர் என்ற அடையாளம் தமிழர்க்கு இருந்தாலும் இலங்கையர் என்ற உணர்வு அவர்களிடத்து இயல்பாக ஏற்படவில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தலைவர்களிடத்தும் படித்தவர்களிடத்தும் இலங்கையர் என்ற உணர்வு ஓரளவு மேலோங்கிக் காணப்பட்டாலும் அவ்வாட்சிக்காலத்தின் இறுதிக்கூறிலிருந்து தமிழர்களிடம் காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு மங்கத் தொடங்கிவிட்டது. அரசாட்சியில் இலங்கையர் பங்கெடுப்பதற்காகப் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கையரின் பங்கு படிப்படியாக வளர்ச்சியடைய, தமிழர்களின் இலங்கையரென்ற உணர்வு படிப்படியாக வீழ்ச்சியடைந்தமை வரலாறு.


இனபேதம் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரஸ்  (Ceylon National Congress) இலிருந்து சேர்.பொன்.அருணாசலத்தின் வெளியேற்றத்துடன் படித்தோரிடையே காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு ம் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டது. இதன் உச்ச நிலைதான் தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கையும் அதற்கான ஆயுதப் போராட்டமும்.  ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றாலும் தமிழர்கள் தம்மை இலங்கையராகவன்றி தமிழராகவே எண்ணும் உணர்வு முற்றுப்பெறவில்லை. ஏனெனில் அதற்கான எந்தவொரு அரசியல் மாற்றமும் இன்னும் இலங்கையில் நிகழவில்லை. இலங்கையரெனும் வெறும் அடையாளத்துடனும் தமிழர் என்ற உணர்வுடனுமே இதுவரையில் நடந்த எல்லாத் தேர்தல்களுக்கும் தமிழர்கள் முகம் கொடுத்துள்ளனர். இந்த ஒரு பின்புலத்திலிருந்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள், தமிழர்கள் எவ்வாறு முகம் கொடுப்பார்கள்  என்று சிந்திக்கவேண்டும்.
 

1978 இல் ஆக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கிணங்க இதுவரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எட்டுத் தேர்தல்களிலும் தென்னிலங்கைச் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அத்தேர்தல்களில் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளதைக் காணமுடியும். அதாவது வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தம்மினத்துக்கு எதிராகச் செயற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளனர். இவற்றுள் ஈழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்த பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற ஆறு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளமை தெளிவாகவே புலப்படும். 1982 இல்  நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்கூட பொதுவேட்பாளராக அன்றித் தனித்துப்  போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய வாக்குகளுக்கு சம அளவிலான வாக்குகளை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை எதிர்த்துப் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கும்  (SLFP) தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசவுக்கு எதிராக 1988  இலும் பின்னர் சமாதானப்புறாவாக தன்னை வெளிப்படுத்திய சந்திரிகாவுக்கு 1994, 1999 களிலும் 2004இல் விடுதலைப்புலிகளின் கோரிக்கையை ஏற்று புறக்கணிப்பிலும்  2010, 2015, 2019 களில் தமிழினப் படுகொலையாளிகளாக தமிழ் மக்களால் கருதப்படும் ராஜபக்க்ஷக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களும் தம்மைப் போலவே இலங்கையராகச் சிந்தித்துச் செயற்படவேண்டும் என்பதே சிங்களத் தலைவர்களதும் சிங்கள மக்களதும் விருப்பமாகும். ஆனால் அவர்கள் அதற்காகத் தமிழர்களுடன் விட்டுக்கொடுக்கவும் இணக்கத்தை ஏற்படுத்தவும் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. இந்த நாட்டில் தன்னாட்சி உரிமை கொண்ட மூத்த குடிகளான தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்க அவர்கள் தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து சமத்துவமான முறையில் கூட்டாட்சி செய்வதன் மூலம் இலங்கையர் என்ற எண்ணத்தை உருவாக்க அவர்கள் ஒருபோதும் முயன்றதில்லை. உண்மையில் அவர்கள் எதிர்பார்க்கும் இலங்கையராக சிந்திப்பது என்பது இங்குள்ள ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சிங்களவராகச் சிந்திக்கச் சொல்வதாகும்.


அதாவது எனக்குச் சமமாக அன்றி கீழாக இருக்கவேண்டும். ஆனால் என்னைப்போல இலங்கையனாகச் சிந்திக்க வேண்டுமென்பதாகும். இது மஹாவம்ச புனைகதைகளை அடித்தளமாகக் கொண்டு  சிங்கள மக்களிடையே கட்டியெழுப்பப்பட்ட பௌத்த – சிங்கள பேரினவாத சிந்தனையின் விளைவாகும். பெரும்பான்மையான சிங்கள மக்களைப் பொறுத்தவரை தேசியம் என்பதைக் குறிக்கும் ‘ஜாதிக’ என்பது ‘ஜாதிய’என்ற  இனத்தைக் குறிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த ஜாதிய என்பது சிங்களச் சாதி அல்லது இனமாகும். தேசிய நல்லிணக்கம் என்பது கூட சிங்கள மக்களின்  அல்லது சிங்களக் கட்சிகளின் ஒற்றுமையாகக் கருதப்படுகிறதே அன்றி இங்கிருக்கும் தேசிய இனங்களின் ஒற்றுமையாகக் கருதப்படுவதில்லை. சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என 1956 இல் தொடங்கிய அதிகாரக் குரல்கள் ஒரே தேசம் ஒரே குரல், ஒரே நாடு ஒரே சட்டம்,  One Nation One Country என இன்று வரை தமது  காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதை தமிழர்கள் எப்படி மறக்கமுடியும்? நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா கூறியதுபோல, இந்நாட்டில் தமிழர்கள், சிங்களவர் எனும் மரத்தைச் சுற்றிப்படரும் கொடிகளாக அல்லது முன்னாள் இந்நாள் ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியது போல, இங்கு தமிழர்கள் விரும்பினால் இருந்துவிட்டுப் போகலாம் உரிமைகள் பற்றிக் கதைக்கக் கூடாது என்ற மனநிலையில் சிங்களத் தலைவர்கள் இருந்துகொண்டு தமிழர்களையும் தம்மைப்போல இலங்கையராக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையே இங்கு காணப்படுகிறது.
 

நாம் தமிழர்களாக மட்டுமன்றி இலங்கையராகவும் சிந்திக்க விரும்புகிறோம் என கடந்த காலங்களில் தமிழ் மக்களாலும் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு இறுதியில் என்ன நடந்தது? பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி இடையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை, இறுதியாக நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு போன்ற எல்லாவற்றுக்கும் நடந்தது என்ன என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.  அன்று சொந்த முகத்தில் தமிழ் மக்களுக்குத் துரோகஞ் செய்தவர்கள் இன்று ஜனாதிபதி வேட்பாளர் என்ற முகமூடியுடன் தமிழ் மக்களுக்கு அதைத் தருவோம் இதைத் தருவோம் என ஆசை காட்டுவதைப் பார்க்கிறோம். புல்லைக்காட்டி மாட்டை அழைப்பது போல தேர்தல் விஞ்ஞாபன சொல்லைக்காட்டி தமிழர்களை வளைக்க எண்ணும் இத்தலைவர்களின் கடந்த கால  தமிழர் விரோதச் செயற்பாடுகளை மறக்காத தமிழ் மக்கள் தாங்கள் மாடல்லர்  மீண்டும் அடுப்பங்கரையை நாடாத சூடுகண்ட பூனைகள் என்று சொல்லாமல் விடுவார்கள் என்று எவ்வாறு அவர்கள் எதிர்பார்க்க முடியும்? இன்றும் கூடப் பிச்சையிடுவது போல தருவோம் என்று கூறுகிறார்களே அன்றிப் பகிர்வோம் என்று கூறவில்லை. யார் வந்தாலும் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற ஒத்துழைப்போம் என்று கூறாது நான் வந்தால் தருவேன் என்றுதான் கூறுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது?

1978 ஆம் ஆண்டில் மாமனார் ஜே. ஆரின் காலத்திலிருந்து இன்றுவரை ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஜனாதிபதியாக இருந்துள்ளார். இதுவரை தமிழ் மக்களுக்கு ரணில் செய்த நன்மைகள் எவை? சந்திரிகா முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் எரித்த கூட்டத்தினர்க்கு தலைமை வகித்தார், கருணாவைப் புலிகளிடமிருந்து தானே பிரித்தார் என்றும் அதனால் தன்னாலேதான் யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என மார் தட்டினார், நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற எலும்பைக்கொடுத்து  ஆளுங்கட்சியாகச் செயற்படவைத்ததுடன், புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தையும் வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார், ஜனாதிபதியாக வந்தவுடன் 13 ஐப் பற்றி வாயெடுக்க, பௌத்த துறவிகள் முறைத்துப் பார்த்தவுடன் அப்படியே தன்வாயை மூடிவிட்டார். இப்போது தமிழ் வாக்குகளுக்காக மீண்டும் பழைய பல்லவி பாடத் தொடங்கிவிட்டார்.


வர்த்தகப் பொருளாதாரத்தையே தேரவாத வர்த்தகப் பொருளாதாரமெனப் பெயர் சூட்டி பிக்குகளை மகிழ்விக்க எண்ணும் ரணில் அப்பிக்குகளை மீறி தமிழருக்குத் தீர்வு தருவார் என நம்பலாமா? கூரையைறி கோழிபிடிக்க முடியாதவர் வானமேறி வைகுண்டத்துக்குத் தமிழர்களைக் கூட்டிச் செல்லப் போவதாகக் கூறுகிறார். மஹிந்த தன்னை விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்ட வீரன் என்று கூறி மக்களிடம் வாக்குக் கேட்டது போல, மற்றவர்கள் எல்லாரும் ஓடியொழிந்தபோது முன்வந்து பொருளாதார அழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவந்தவர் தானே எனக்கூறி மக்களிடம் ரணில் வாக்குக் கேட்கிறார். அது ஓரளவு உண்மையென்றாலும் தமிழ் மக்களுக்கு அது பழகிப்போனதொன்றாகும். விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என பல ஆண்டுகளாக தங்கள் மீது ஏவப்பட்ட வெடிகுண்டுகளை மட்டுமன்றி மிக மோசமான பொருளாதாரக் குண்டுகளையும் தாங்கி வாழ்ந்து மீண்ட தமிழ் மக்களுக்கு எரிவாயுவுக்கும் பெற்றோலுக்குமான காத்திருப்பு வரிசைகள் கால் தூசுக்குச் சமானம். அதனால் இந்த விடயத்தில்கூட தமிழ் மக்கள் இலங்கையராக எண்ணுவதைவிட தமிழராக எண்ணுவதற்கே முக்கியத்துவமளிப்பர்.
 

ரணில், அனுர என்பவர்களுடன் ஒப்பிடும்போது சஜித் பலவீனமான ஒரு தலைவர் என்பதை அவரது கடந்த கால அரசியல் செயற்பாடுகளிலிருந்து மதிப்பிட முடியும்.  கிழட்டு நரி எனப்படும் ஜே. ஆரின் அரசியல் வாரிசு ரணில் போல, தமிழ் மக்களுக்கெதிராக மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ரணசிங்க பிரேமதாசவின் நேரடி வாரிசு  சஜித். தொடக்கத்திலிருந்தே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தையும் மாகாணசபை முறைமையையும் எதிர்த்து வந்ததுடன், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் கையகப்படுத்தும் கைங்கரியங்களைத் தொடக்கி வைத்த பெருமைக்குரிய பிரேமதாசவின் கொள்கைகளைக் பின்பற்றப் போவதாக அவர் மகன் சஜித் இப்போது பரப்புரை செய்கிறார்.

அடித்தட்டு மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான பிரேமதாசவின் பல திட்டங்கள் சிறப்பானவை என்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அவரது திட்டங்களையும் சஜித் நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகளை புனரமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியவர் சஜித் என்பதை தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறு குருந்தூர் மலையும் மயிலிட்டியும் நிலாவெளியும் நாளாந்தம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பௌத்த மதத்திற்கோ அதன் சின்னமான விகாரைகளுக்கோ எதிரானவர்களல்லர். ஆனால் அவை அடக்கு முறைக்கும் ஆக்கிரமிப்புக்குமான சின்னங்களாக மாறுவதற்கு எதிரானவர்கள். இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் இலங்கையராக அன்றித்  தமிழராகவே எப்போதும் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான சலசலப்புத் தோன்றியபோது தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு மேல் அனுமதிக்க முடியாது எனக்கூறிய சஜித், தற்போது வாக்குகளுக்காக 13 ஐ முழுமையாகத் தருவதாகவும் அதில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கையகப்படுத்தாது இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறுகிறார்.  காணி, காவல்துறை அதிகாரத்தைத் தருவதாகக் காலையில் யாழ்ப்பாணத்தில் இவர் கூற,  மாலையில் அது ‘பொலிஸ்’ அல்ல ‘செக்குரிட்டிக் காட்’ என கொழும்பில் அவரது பேச்சாளரைக் கூறச்செய்வார். அத்துடன் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகவும் உறுதியளிக்கிறார். மாகாணசபைத் தேர்தல்களைத் தள்ளிவைப்பதற்கான கபடவேலையைச் செய்த நல்லாட்சியில் பிரதமருக்கு அடுத்த நிலை அதிகாரத்திலிருந்தபோது அது தொடர்பாக வாயே திறக்காத சஜித், ஆறு மாதத்தில் தேர்தலை நடத்துவேன் எனக் கூறுவதை தமிழ்மக்கள் எவ்வாறு நம்ப முடியும்?

தமிழர்கள் இலங்கையராகச் சிந்தித்து தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரும் இன்னொரு முதன்மை வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க. தற்போதைய தேசிய மக்கள் சக்தியினதும் முன்னைய ஜே.வி.பி யினதும் தலைவர் அவர். செஞ்சட்டை அணிந்து பேரணி நடத்தி தம்மை இடசாரிகளாகக் காட்ட முனையும் இவர்கள் உண்மையில் இடசாரிச் சித்தாந்தங்களை கடைப்பிடிப்பவர்களா? தேசிய இனமொன்று பிரிந்து செல்வதற்கான உச்சமட்ட உரிமையைக் கொண்டிருக்கும் என அச்சித்தாந்தம் கூறும்போது  தமிழரின் தேசியப் பிரச்சினையை பொருளாதாரச் சமூகப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கும் இவர்களை, மதத்தலைவர்களிடம் சென்று அரசியல் ஆசீர்வாதம் வாங்கும் இவர்களை உண்மையான இடதுசாரிகளென தமிழர்கள் எவ்வாறு நம்ப முடியும்?
உண்மையில் இடதுசாரிகள் என்ற பெயரில் கூடியளவு இனவாதத்தைக் கடந்த காலத்தில் விதைத்தவர்கள் இவர்களே. தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றம் சென்று நிரந்தரமாகத் தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டவர்கள் இவர்களே.

அரசியலமைப்பில் உள்ளதை நடைமுறைப்படுத்துவதற்காக இதை மேற்கொண்டதாக கூறும் அனுர அதே அரசியலமைப்பில் அதே பிரிவில் இருக்கும் மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களை ஏன் நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லவில்லை? குறைந்தது அதற்கான குரலைக்கூடக் கொடுக்கவில்லையே. அந்த அரசியலமைப்பின்படி ஏலவே  வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாகப் பறித்தபோது அதற்கெதிராக ஏன் இவர் குரல் கொடுக்கவில்லை? இப்போது இவர் தமிழர்க்கான நீதியையும் உரிமைகளையும் தான் வழங்கப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகிறார். அதேவேளை யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளோ, தண்டனைகளோ இல்லை எனவும் கூறுகிறார். தமிழ் மக்கள் கோருவது விடுதலைப் புலிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கான நீதியை அல்ல. அப்பாவித் தமிழர்கள் மீதும் பொதுமன்னிப்பின் பேரில் கையளிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான நீதியையே அவர்கள் கோருகின்றனர். இதனை வழங்க மறுப்பவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்குப் பாதகமான சட்டங்களும் நீதி நடவடிக்கைகளும் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?


முதன்மை வேட்பாளர்கள் மூவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று கூறுகின்றனர். இலங்கையில் இதுவரை இரண்டு புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ன. இருபதுக்கு மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 1972 இல் சிறிமா அம்மையாரின் ஆட்சியிலும் 1978 இல் ஜே. ஆரின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புகளினூடாக தமிழர்க்கு எதை வழங்கினார்கள்?  ஏலவே டொனமூர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கான கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் இல்லாமலாக்கி மேலும் தமிழ் மக்களுக்குப் பாதகமான உறுப்புரைகளை அரசியலமைப்பில் உள்ளடக்கியதுதானே வரலாறு. இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதனை இலங்கையராக எண்ணி ஆதரிக்காது தமிழராக நின்று எதிர்த்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நீங்கள் கோட்டைக்குச் செல்லுங்கள் நாங்கள் நல்லூருக்குச் செல்கிறோம் என அவையிலிருந்து வெளியேறியதும் வரலாறு. இருபதுக்கு மேற்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுள் இந்தியாவின் அழுத்தத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட 13 ஐ விட ஏனைய திருத் தங்களுள் தமிழர் சார்பாக எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையே. பதிலாக ஏலவே குறையாக வழங்கப்பட்ட 13 ஐயும் வெட்டிக் குறைத்து கோதாக்குவதற்கான தீர்மானங்கள்தானே மேற்கொள்ளப்பட்டன. இந்த இலட்சணத்தில் இவர்கள் கூறும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என அவர்களை நம்பவைக்க முடியுமா?
 

இந்த வகையில் தமிழர்  இலங்கையராகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து தமிழர்களாகச் சிந்திப்பதற்கான தூண்டுதல்களைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் சிங்களத் தலைவர்கள். அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் தமக்குத் தேவைப்படும்போது மட்டும் தமிழர்கள் இலங்கையராகச் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக தமிழர்கள் இலங்கையராகச் சிந்திப்பதற்கான அங்கீகாரத்தை முதலில் வழங்குவதற்கு முயலவேண்டும். அதுகூட அவர்கள்  கூறுவது போல நான் செய்வேன், நான் செய்வேன் என தனித்துச் செய்ய முடியாது. நாங்கள் செய்வோம் என அவர்கள் அனைவரும் இணைவதன் மூலமே அது சாத்தியமாகும். அதுவரை தமிழர்கள் தமது அடையாளமாக இலங்கையராகவும் உணர்வில் தமிழர்களாகவுமே இருப்பர். அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

https://thinakkural.lk/article/308963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.