Jump to content

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 03


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 03
 
 
வால்மீகி, நாரதரிடம் எல்லா நல்ல குண நலன்களு டனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமனை கதாபாத்திரமாக அமைத்து ராமாயணம் வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது.
 
வால்மீகி ராமனின் கதாபாத்திரத்தில் வியத்தக்க ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை கண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு சமசுக்கிருத மொழியில் கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயண கதை மிகவும் சாதாரணமானது. அதில் ராமனைக் கடவுளாக்கக் கூடிய எந்த அம்சங்களோ இல்லை. ஆனால், ராமன் கடமை தவறா ஒரு மகன், அவ்வளவுதான்!
 
நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை. அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர் இறந்தனர் …  அவ்வளவே! காதல் ஒருத்தியைக் கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளை எதோ ஒரு வழியில், எப்படியாவது வீழ்த்தி, சீதையை சந்தேகப்பட்டு, தீக்குளிக்க வைத்து, அவளை தன்னம் தனியா காட்டுக்கு அனுப்பி, விலகச்செய்து. இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்து, தனிமரமாக, ராமன் நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறானாம்?
 
வாலியை கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள் அங்கு காணப்படுகின்றன. வால்மீகி ரிஷியின் காவியத்தில் ராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை.
 
சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதாரத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன் வீர புருஷன்; அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம் மட்டே! மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார் என நம்புபவர்களும் உண்டு. அவர்களின் கூற்றின் படி, மகாவிஷ்ணு வழக்கம் போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டிருக்க, தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவர் வணங்கி, அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந்தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ! என்று முறையிட்டார்கள்.
 
அதற்கு, விஷ்ணு, நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன் என்கிறார். அப்படியே மகாவிஷ்ணு ராமனாக அவதரித்தார் என்கின்றனர். ஆனால், ராமன் வழிபட ஏற்புடையவனா? ராமனை கடவுளாக வழிபடுபவர்கள் கொஞ்சம் இந்த உண்மையை அலசி பார்க்கட்டும்.
 
ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் அல்ல, வால்மீகி ராமனுக்கு பல மனைவிமார்கள் இருந்தனர். உதாரணமாக, அயோத்திய காண்டம், அத்தியாயம் 8, சுலோகம் 12 இப்படி கூறுகிறது.
 
"हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमाः स्त्रियः अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये". இதோ அந்த வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்."Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position." ஆகும். இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இந்த சுலோகத்தில் காணப்படும் "இராமனின் மனைவிமார்கள்" என்ற சொல் இதை உறுதி படுத்துகிறது.
 
அப்படியே அவனின் தந்தையும் "अर्ध सप्त शताः ताः तु प्रमदाः ताम्र लोचनाः | कौसल्याम् परिवार्य अथ शनैः जग्मुर् धृत व्रताः ||(2-34-13)"ஆகும். இதில் ராமன் தந்தையின் உண்மையான பிள்ளையாகவே உள்ளான். ஆனால், இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53 வது அத்தியாயம்) ஏன் ராமன் கடவுள் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பதை சுட்டிக் காட்டிட நாம் குறைந்தது மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறலாம் - முதலாவது, வாலி வதை, இரண்டாவது சீதைக்கு நடந்த கதி, இறுதியானது சம்புக (Shambuka) வதம் ஆகும்.
 
தனது மனைவி சீதையை ராவணனிடம் இருந்து மீட்டுக்கொள்ள, ராமன் சுக்கிரீவன், அனுமான் உதவியை நாடினான். ஆனால்,வாலியை வதை செய்தால் மட்டுமே தாம் உதவிசெய்வதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர். போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான். அப்படியே யுத்த தருமத்திற்கு எதிராக, மரத்திற்கு பின் ஒழித்து நின்று, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான். அப்பொழுது, ‘ஒளித்து உயிர் உண்ட நீ’ என்று வாலி, ராமனை சாடினான். "இல் அறம் துறந்த நம்பி, எம்மனோர்க்கு ஆகத் தங்கள்,வில் அறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நூலில்,சொல் அறம் துறந்திலாத, சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது ‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான்." என்கிறான் கம்பன்.
 
இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளையும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான் என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர வாலி நகைத்தானாம்.எப்படி ஒரு கடவுள் என கருதப்படும் ராமன் இப்படியான குற்ற செயல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்வான்? வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார். இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலி யையும் ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும். எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமை ப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ராமனைப் பொதுவாக "மரியாதா புருஷோத்தம்"[Maryada Purushatam] என்று வருணிப்பது வழக்கம். அதாவது, அவர் நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும் மனிதர்களுள் மிகச் சிறந்த மனிதராகவும் இருப்பவரும் என்பது இதன் பொருள். அப்படியானவர் இப்படி செய்யலாமா? மரியாதா என்பது நல்லொழுக்கம் ஆகும்.
 
மேலும் வேறு ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில், மறைந்து இருந்து கொல்கிறான். இது ஒரு கோழைத்தனம்! திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை. இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. ஆகவே வாலி வதையை பார்க்கும் பொழுது, ராமன் "மரியாதா புருஷோத்தம்"(मर्यादा पुरुषोत्तम) என்று அழைப்பதற்கு எந்த தகுதியும் அற்றவனாகவே தெரிகிறது.
 
இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் சாதாரண மனிதனாகவே தோன்றுகிறான். தனது பேரழகியான மனைவி சீதை, மற்றவர்களால் பேராசைப்படுவதை கண்டு சந்தேகம் நிறைந்த கண்ணோடு பார்க்கிறான். என்றாலும் கண்களில் நீர் வழிகிறது. அகலிகை கௌதம முனிவரின் மனைவி. தேவர்களின் தலைவனான இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு, கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அவளை வன்புணர்ச்சி செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். அப்படி கல்லாகிய அகலிகைக்கு ராமன் விடுதலை அளிக்கிறான். ஆனால், தனது மனைவியை அதற்கு எதிர் மாறாக நடத்துகிறான்?
 
மிகவும் பலமாக தட்டி கூறும் ஆதாரம், யுத்த காண்டத்தின் இறுதியில் வருகிறது. அங்கு ராவணனை கொன்று சண்டையை முடிவிற்கு கொண்டு வந்த பின், ராமன் முதலாவதாக செய்தது, அண்ணனை காட்டிக் கொடுத்து ராமனுக்கு ஒத்தாசை கொடுத்த, விபீடணனுக்கு (விபீஷணனுக்கு) இலங்கை அரசனாக முடி சூட்டியது. அதன் பின்பு தான், இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான் தவிர கூட்டிவருமாறு கூறவில்லை. அது மட்டும் அல்ல, 10 மாதத்திற்கு மேல் தனிமையில், தன்னை பிரிந்து சிறையில் வாடிய தன் மனைவியை, ஓடோடி அல்லவே இந்த ராமன் கூட்டி வந்திருக்க வேண்டும்? ராமன் சொல்லி அனுப்பிய செய்தி என்ன தெரியுமா? தான் சுகமாக நலமாக இருக்கிறேன்?ஆனால், சீதையை பற்றி ஒன்றுமே விசாரிக்க வில்லை? என்றாலும் பின் சீதை ராமனிடம் போன பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா? கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து ராமனிடம் சீற்றமே தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், "சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய். அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?" என கோபத்துடன் கேட்டான்.
 
"உன்னை மீட்கவென்று நான் கடலில் அணை கட்டினேன். அரக்கர்களுடன் போராடி னேன். இராவனனைக் கொன்றேன். மனைவி யைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன். அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?" என்று தொடர்ந்து கூறினான். "நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" [கம்ப ராமாயணம் யுத்த காண்டம்.] என்று வெகுண்டு கூறினான்,இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிந்து , நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறி ந்தாள்.
 
இப்படி எந்த சாதாரண மனிதன் கூட தன் மனைவியிடம் கூறமாட்டான்? ஆனால் ராமன் கூறுகிறான். வால்மீகி அதை அப்படியே அத்தாட்சி படுத்துகிறான். ஆனால்,கம்பன் கொஞ்சம் சாந்தமாக கூறுகிறான். கம்பன் பல இடங்களில் உண்மையை அப்படியே கூறாமல் கொஞ்சம் மாற்றி மாற்றி கூறிவிட்டான். எனவே ராமனின் ஐயத்தை நீக்க, சீதை தீக்குளித்தாள் [அக்னி பிரவேசம் செய்தாள்]. அதன் பிறகு தான் ராமன் அவளை அயோத்திக்கு கூட்டிப் போனான். அங்கு "அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச, விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி." என்று கம்பன் கூறியது போல ராமன் திருமுடி சூடினான் [பட்டா பிஷேகம் ].
 
இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். என்றாலும் அரசன் அரசி வாழ்க்கை மிக விரைவாக குழப்பத்தில் முடிந்தது, நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக் கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். எந்த வித முன் ஜோசனையும் இன்றி, இந்த கெடுக்கும் நோக்கம் கொண்ட பொய்த்தகவலில் இருந்து தன்னை விலக்க ,சீதையை கைவிட்டு கானகம் அனுப்பினான். எப்படி, தனது மனைவியை, அதுவும் கர்ப்பவதியை, யாரோ ஒரு துணி வெளுப்பவர் ஒருவர் அவளின் தூய்மையை கேள்வி கேட்டார் என்ப தற்காக, தன்னம் தனியாக காட்டுக்கு அனுப்ப மனம் வந்தது?கணவனுக்கு தெரியாதா அவளின் தூய்மை, கள்ளம் கபடம் அற்ற அவளின் பெண்மை? அவனுக்கு அவளின் வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் தனது பெயரும் தனது புகழும் மட்டுமே. வதந்தியை தடுக்க அல்லது நிறுத்த ஒரு அரசன், ஒரு கணவன் எதை செய்வானோ, அதில் ஒன்றையாவது ராமன் செய்யவில்லை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி : 04 தொடரும்
 
14963266_10207784838361697_6138452083254613131_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=sgNMzF5hmPEQ7kNvgHWw6Yy&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYARloKPmnrpO5H685etkiPMumEdEwV9yHynLz9lsiP74w&oe=67167D2E 14980732_10207784840361747_6099403563098224009_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=jUXNdE9OWroQ7kNvgEOvOfX&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYD2bu2xTerVMqgEI3Y5he4aPL-cKKShpqnBPxILgRBCwA&oe=67168706 15055747_10207784842001788_3940650678778568836_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=idrU5vpSZYcQ7kNvgEYNY7V&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA_aL3hj0C4_m0JSf-UFSxhlTs4zKk_DbdR7AXhUq7mlw&oe=67167C7F
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.