Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   03 OCT, 2024 | 08:30 PM

image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி 

  • தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்.  அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது

புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது. ஐக்கிய இலங்கைக்குள் தென்பகுதி மக்களுடன், முஸ்லிம் மக்களுடன், மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது  என்பது இங்கு முக்கியமாகும் என்று யாழ். பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி இலங்கையின் வரலாற்றில்  பாரம்பரிய கட்சிகளிலிருந்து விலகி  மாற்று அணிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். புதிய ஜனாதிபதி  தெரிவை எப்படி பார்க்கின்றீர்கள்? 

பதில் இதனை ஒரு வரலாற்று ரீதியான மாற்றமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.  அதாவது இலங்கையில்  பிரதான இரண்டு கட்சிகள் அல்லது அதிலிருந்து பிரிந்து வந்த கட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கவில்லை.  இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு  கட்சி தற்போது ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கின்றது.  நாம் 2022 ஆம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறோம். 

இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போது ஏற்பட்டு இருக்கின்ற இந்த மாற்றம் இரண்டும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றன.  எனவே இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி, இந்த பாரிய பொருளாதர நெருக்கடியில் இருந்து இந்த அரசாங்கம் எங்களை மீட்டெடுக்குமா என்பதாகும்.  

கேள்வி அந்த சவாலை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எப்படி சமாளிக்கும் ?

பதில் உண்மையில் பாரிய சவாலாக தான் இருக்கப் போகிறது.  யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுபோன்ற ஒரு ஆழமான பொருளாதார  நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு பல வருடங்கள் போகலாம். ஆனால் அவர்கள் உடனடியாக என்ன செய்வார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.  கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும்   பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக வறுமை இரட்டிப்பாகியிருக்கிறது.   

போஷாக்கின்மை ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  வேலையின்மையும் காணப்படுகிறது. இதுபோன்று பல நெருக்கடிகள் நாட்டில் காணப்படுகின்றன.  வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.  எப்போதும் இல்லாதவாறு தற்போது நாட்டின் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது. எனவே பொருளாதார ரீதியாக மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்க வேண்டும்.  அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரித்து படிப்படியாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடன்களை மீள் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு சென்றது. அதனுடன் தொடர்புபட்டதாகவே நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். 

அவர்களின் இறுக்கமான நிபந்தனைகளும்  காணப்படுகின்றன.  அவற்றைப் பார்க்கும்போது அரசாங்கம் சிக்கன கொள்கைகளை முன் கொண்டு செல்ல வேண்டும்.  எனவே சிக்கன கொள்கையை கடைப்பிடித்தல் மறுபுறம் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பது இருவேறுபட்ட விடயங்கள். 

அந்தவிடயத்தை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய விடயமாகும்.  மறைமுக வரியை கொண்டு செல்வதும் கடினமாக இருக்கும்.  காரணம் மக்களின் வருமானம் குறைவாக இருக்கின்றது.  இவ்வாறான சூழலில்  சொத்து வரியை அறிமுகப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. மீள்விநியோகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை கொண்டு வரலாமா என்று பார்க்கப்படலாம்.  ஆனால் அதற்கு பாரியதொரு அரசியல் விருப்பு தேவையாகும்.  ஒருசில தரப்பினர் அதனை விரும்பமாட்டார்கள். 

கேள்வி  சர்வதேச நாணயத்துடனான  பயணம் தொடரும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாரே? 

பதில் தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கின்ற முக்கியமான சவால் என்னவென்றால் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  தற்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  எனவே அவர்களின் கவனம் தற்போது பாராளுமன்ற தேர்தலில் இருக்கின்றது.  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றால் மட்டுமே மாற்றங்களை செய்ய முடியும்.  அதனால் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவர்கள் பாரிய மாற்றங்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

கேள்வி தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிமுகத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு மற்றும் மக்களின் தேவைகள் நிறைவேற்றுவதற்கு ஒரு புத்திஜீவி என்ற வகையில் உங்களது ஆலோசனைகள் எப்படி இருக்கும்?

பதில் தற்போது ஜனாதிபதி தலைமையிலான   அரசாங்கத்திற்கு மூன்று சவால்கள் காணப்படுகின்றன.  முதலாவது மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதேபோன்று புதிய அரசாங்கம் என்று வரும்போது முதலாளித்துவ சமூகத்தின்  எதிர்ப்பும் காணப்படும்.  அதற்கு முகம் கொடுப்பது அவசியம்.   

மூன்றாவதாக சர்வதேச ரீதியான அழுத்தங்களும் ஏற்படலாம்.  எனவே இந்த மூன்று தரப்பையும் சமாளித்துக் கொண்டு படிப்படியாக அரசாங்கம் பயணிக்க வேண்டியுள்ளது.     அதேநேரம் ஒரு புது திசையிலும் நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.  எமது நாட்டின் வரலாற்றில் அரசியல் பொருளாதாரப் பார்வையில் இது உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாகும்.  அந்த திசைமாற்றத்தை அவர்கள் படிப்படியாக எப்படி செய்யப் போகிறார்கள்?  அந்த திசை மாற்றத்திற்கான அரசியல் விருப்பு மற்றும்   தேசிய இணக்கப்பாடு என்பவற்றினூடாக அதனை செய்ய முடியும். 

கேள்வி  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை இடதுசாரி ஆட்சி என்றும் ஒருபுறத்தில் சிலர் விழிப்பதை காண்கிறோம்.  அந்த பின்னணியில் மேற்குலகம் இந்த வெற்றியை எப்படி பார்க்கும்?

பதில் அந்த தரப்புக்கள் இதனை ஒரு சந்தேகத்துடன்தான் பார்க்கும்.  காலம் காலமாக காலணித்துவத்தில் இருந்து அவர்களுடன் இணங்கி போகின்ற ஒரு அரசாங்கத்தை தான் எப்போதும் மேற்கு நாடுகள் விரும்பும்.   அதேநேரம் ஜே.வி.பி.யின் வரலாற்றை எடுத்தும்  பார்க்கும்போது கடந்த 20 வருடங்களில் பாரிய மாற்றங்கள் வந்திருக்கின்றன.  அவர்கள் தமது அந்த தீவிர இடதுசாரி கொள்கைகளிலிருந்து தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் இருந்து  நகரங்களை நோக்கி தமது தளங்களை அமைத்திருக்கின்றார்கள்.  கடந்த சில வருடங்களில் முழுமையாக நடுத்தர வர்க்கத்தை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக ஊழலுக்கு எதிரான அவர்களது பிரச்சாரத்தை பார்க்கும்போது அது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் நடுத்தர வர்க்கத்துடன் தாக்கம் செலுத்துவதாகவே இருக்கும்.  அந்தவகையில் அவர்கள் தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். 

அப்படியிருந்தும் சர்வதேச மட்டத்தில் சில அழுத்தங்கள் வரும்.    அதற்கு முகம் கொடுப்பதற்கு அவர்களுக்கு இலங்கை மக்களிடமிருந்து பாரிய ஆதரவு இருந்தால்தான் முடியும்.  மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் ஊடாகத்தான் இதனை செய்யக் கூடியதாக இருக்கும். 

கேள்வி வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலமாக தமக்கான ஒரு அரசியல் தீர்வை கோரி வருகின்றனர்.  தற்போதைய இந்த புதிய அரசாங்கத்தில் வடக்கு,  கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் எப்படி அணுகப்படும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

பதில் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் பாரபட்சம் ஒடுக்குமுறைகள் நீண்டகால பிரச்சினையாக வந்திருக்கின்றன.  அதற்கான தீர்வாகத்தான் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பன முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் ஜே.வி.பி.யின் வரலாற்று ரீதியான  பார்வைகளை பார்க்கும்போது அவர்கள் அதற்கான சரியான தீர்வை முன்வைக்கவில்லை.  ஆனால் அவர்கள்   கடந்த தேர்தலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார்கள்.

 அந்த மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவார்களா என்ற கேள்வி உள்ளது.  தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்.  அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணமாக  பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.  உணவு பாதுகாப்பு மிகப் பிரச்சினையாகியுள்ளது. அதனால் கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். 

கிராமப்புற பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது எனும்போது அங்கு அதிகார பரவலாக்கம் முக்கியமாகின்றது.  அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்குத் தான் தங்களுடைய தேவைகள் தெரியும்.  அவர்களாகவே அந்த தீர்வுகளை கொண்டுவரும் போதுதான் அவை வெற்றியளிக்கும்.  இந்த விடயங்களை விளங்கி தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமது கொள்கைகளை மாற்றி  அமைப்பார்களா என்பது கேள்வியாகும். 

கேள்வி இலங்கை பொறுத்தவரையில் இந்தியா சீனா என்ற இரண்டு பெரிய நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இருப்பதாக விமர்சர்கள் கூறுகின்றனர்.  இரண்டு நாடுகளுமே இங்கு பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகின்றன.  இந்தியா மிக நெருங்கிய நாடாக இருக்கின்றது.  இந்த நிலைமையை புதிய ஜனாதிபதி எவ்வாறு சமாளிப்பார்?

 பதில் அ  என்னை பொறுத்தவரை மிகப் பெரிய சவாலாக தான் இருக்க போகிறது.  காரணம் பூகோள அரசியலில் காணப்படும் போட்டி,  ஒருபக்கம் இந்தியா,  மறுபக்கம் சீனா,  இன்னொரு பக்கம் மேற்கு நாடுகள் என உள்ளன.  அந்தப்போட்டி எமக்கு நலனை கொண்டுவரப் போவதில்லை.  அதனை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி.  1960 மற்றும் 70களில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை அணிசாரா கொள்கையாக இருந்தது. 

அப்போது  அணிசேரா  இயக்கமும் இருந்தது.  அதனுடன் இருந்து நாங்கள் பயணித்தோம்.  அந்தக் கொள்கைக்குத்தான் நாங்கள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  இலங்கை அபிவிருத்தி அடையாத மற்றும் மூன்றாம் உலக நாடுகளுடன் பலமான உறவை பேண வேண்டிய தேவை காணப்படுகிறது.

இலங்கை போன்ற கிட்டத்தட்ட 70 நாடுகள் உலகத்தில் கடன் பிரச்சனையில் சிக்கி காணப்படுகின்றன.  அந்த நாடுகளுடன் ஒரு கூட்டை உருவாக்கி இலங்கை  போன்ற நாடுகளின் நலனை முன்னுருத்திய தேவைகளை கொண்டு செல்லும் கொள்கைகளை உருவாக்கவேண்டும்.   அணிசேரா கொள்கைகளின் அடிப்படையில்தான் இந்த பயணம் அமையவேண்டும்.   

கேள்வி இதற்கு முன்னர் நீங்கள் வடக்கு கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டமையை முட்டாள்தனமான முடிவு என்று கூறினீர்கள். அவர் 2,14,000 வாக்குகளை பெற்றிருக்கின்றார்.  இப்பொழுது உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்  இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றேன்.  தமிழ் அரசியலில் ஒரு பாரிய மாற்றம் தேவைப்படுகிறது.  பொது வேட்பாளருக்காக  நின்றவர்கள் தற்போது மீண்டும் ஒரு கூட்டை உருவாக்கத்தான் முயற்சிக்கிறார்கள்.  புதிய அரசியலைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. 

கேள்வி புதிய அரசியல் என்று நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள் 

பதில் புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது.  ஐக்கிய இலங்கைக்குள்   தென்பகுதி மக்களுடன்,  முஸ்லிம் மக்களுடன்,  மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது  என்பது இங்கு முக்கியமாகும்.  அதற்கேற்ற வகையில் ஒரு அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதும் இங்கு  முக்கியமாகும். 

அதற்கு நாங்கள் தென்பகுதியில் இருக்கின்ற அரசியலுடன் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது.  இந்த பொது வேட்பாளர் மற்றும் தற்போது யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியலானது பொதுவாக புலம்பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகிறது.  இதுவும் ஒரு அபாயமான நிலைமையாகும். 

இங்குள்ள மக்கள் தான் இங்குள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.   புலம்பெயர் மக்கள் தமது நிதி   பலத்தை பயன்படுத்தி செய்யப்படுகின்ற விடயங்கள்   கற்பனை அரசியலாகத்தான் இருக்கும்.  அது எமது மக்களுக்கு ஒரு பாதகமான நிலையை தான் ஏற்படுத்தும்.

https://www.virakesari.lk/article/195426

  • கருத்துக்கள உறவுகள்

ம்...... வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் நாட்டை ஆண்டார்கள், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக , கட்டளைத்தளபதியாக இருந்தார்கள், நாட்டின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், நாட்டை  சுரண்டி  வெளிநாடுகளில் பதுக்கினார்கள். அவர்களிடம் சிங்கள மக்கள் நாட்டையாளும் பொறுப்பை கொடுத்தனர், உயர் பதவிகளை கொடுத்தனர். இவர்களெல்லாம் சந்தர்ப்பவசத்தால் இடம் பெயர்ந்தவர்கள் கிடையாது. இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும்போது இந்த நாட்டு மக்களுக்கோ, நாட்டுக்கோ நன்மையேதும் செய்ததில்லை. ஆனால் பதவிகளுக்காக வந்தவர்கள். நம்மவரோ நாட்டின் இயல்பற்ற தன்மையால் விரட்டப்பட்டவர்கள், இன்னும் தாயக கனவோடு தாகத்தோடு வாழ்பவர்கள். சிலர் பதவிகளுக்காக சிங்களத்துக்கு முண்டு கொடுப்பவர்களும் உண்டு. அதற்காக எல்லோரையும் தள்ளி வைப்பது நல்லதல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.