Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"திருந்தாத மனிதர்கள்"
 
 
அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதலாவது பிள்ளை ஆண், அதன் பிறகு ஒரு பெண், அடுத்து இரு ஆணும் இரு பெண்ணும் இருந்தனர்.
 
அவரின் பிள்ளைகளுக்குள் மூத்த மகள் கொஞ்சம் எல்லோருடனும் கலகலப்பாக பேசக்கூடியவர் , படிப்பிலும் கொஞ்சம் திறமை சாலி, அத்துடன், அந்த கிராமத்தில், விறல் விட்டு எண்ணக்கூடிய அழகிகளில், அவரும் ஒருவர். மற்றும் துடிதுடிப்பானவர் என்பதால், பாடசாலை விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வார். அத்துடன், கிராமத்து ஆலயத்தில், தேவாரம் படிப்பதில் இருந்து, ஆலய தொண்டு வேலைகளில், மிகவும் அக்கறையாக செயல் படுபவர். ஒரு கதாநாயகி இல்லாமல் ஒரு கதையே இல்லை என்பார்கள். இந்த கிராமத்து கதாநாயகி யார் என்று எவரையும், குறிப்பாக இளம் ஆண், பெண், இரு பாலாரிடம் கேட்டால், எல்லோர் கையும் சுட்டிக்காட்டுவது இவளைத்தான்!
 
இவளுக்கு இப்ப பதினாறு முடிந்து, பதினேழு நடக்கிறது. உயர்வகுப்பிற்காக இரண்டு மூன்று மைல் தள்ளி இருக்கும் சிறு நகரத்தின் மையத்தில் இருக்கும் பாடசாலைக்குத் போகவேண்டும். எல்லாம் இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேரில் தங்கி இருக்கிறது. அவள் வீட்டில் எல்லோரும் ஆளை ஆளை பார்த்துக்கொண்டும், எதோ முணுமுணுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்று அவளின் அப்பா தலைமைக் குமாஸ்தா வேலைக்கு போகவில்லை. மணி எட்டு ஆகிற்று. பத்து மணிக்கு முதல், பாடசாலைக்கு போகவேண்டும். ஒரே பரபரப்பு. தலைமைக் குமாஸ்தா, வாயில் சுருட்டுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்கிறார். அவளின் தாய், தன்னை கொஞ்சம் அலங்கரிப்பதில் ஒரு கண்ணாக இருக்கிறார். மூத்தவன் படிப்பை கோட்டை விட்டுவிட்டான் என்று தாய்க்கு ஒரே கவலை, ஆனால் இன்று அந்த வடு நீங்கும் என்ற ஒரே பூரிப்பு அவளுக்கு ஆனால் அங்கு எங்கள் கதாநாயகியை காணவே இல்லை.
 
அவள் அந்த ஆலயத்தில் அமைதியாக எதோ தேவாரம் படித்து, தன் தோட்டத்தில் பறித்து வந்த மல்லிகை, ரோசா, மற்றும் பல விதமான மலர்களை கடவுள் சிலைக்கு முன் படைத்து, எதோ பூசை ஒன்று தானே செய்து கொண்டு இருக்கிறாள். அது இப்போதைக்கு முடிந்த பாடு இல்லை, நாலு ஐந்து விதமான எண்ணெய்கள் விட்ட சிறு தீப விளக்குகள் கொண்டு எண்ணற்ற பூசைகள். தங்கை வந்து அக்கா காணும் என்று சொல்லும் மட்டும் அது முடிந்த பாடில்லை. ஒருவாறு முடித்துக் கொண்டு கதாநாயகி, போலீஸ் திணைக்கள தலைமைக் குமாஸ்தா அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா தங்கையுடன், குறுக்கு வழியான, வயல் வரம்பால் பாடசாலை சென்றாள்.
 
நான் இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இந்த கிராமத்துக்கு நல்லிணக்க கிராமம் என்ற விசித்திரமான பெயரும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் திருத்த முடியாததாகக் கருதப்பட்ட மக்கள் ஒரு சிலரும் அங்கு வாழ்ந்தாலும், அந்த ஒவ்வொருவரும் எதோ ஒன்றில் கட்டுப்படுத்த முடியாத நாட்டம் கொண்டு இருந்தாலும், அவர்களையும் அணைத்து அந்த கிராமம் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, அவர்களை ஒதுக்கிவிடாமல் வாழ்ந்து கொண்டு இருந்தது தான் அதற்கு காரணம். அப்படியானவர்களில் முதன்மையாக இருந்தவன், அந்த கிராமத்து தலைவனின் மகன். இவன் பொய் சொல்வதில் மட்டும் அல்ல, நன்றாக நடிக்கவும் தெரிந்தவன். அழகிய பெண்களிடம் எப்படியும் நண்பனாகி, நம்பவைத்து, உறுதிவழங்கி, தன் வலையில் வீழ்த்தி, தன் காம பசியை தீர்ப்பதில் வல்லவன். இவனால் தன் பதவிக்கும், தனக்கும் அவமானம் என்று, உயர் வகுப்பில் மூன்று தரமும் பரீட்சையில் கோட்டை விட்டதும், மத்திய கிழக்கில் வேலைக்கு அனுப்பி விட்டார். என்றாலும் மத்திய கிழக்கின் கட்டுப்பாடு அவனுக்கு ஒத்துவராததால், எதோ பல பொய்கள் சொல்லி, மீண்டும் கிராமத்துக்கு நேற்று வந்துவிட்டான்.
 
அவனுக்கு இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேறு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தலைவனின் மகன், பழைய மாணவன் இரண்டும் காணும், அங்கு தானும் போய், நல்ல பெறுபேறு பெற்றவர்களை வாழ்த்தவும், மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், மற்றும் அதை சாட்டாக வைத்து, தன் கைவந்த கலையை நாசுக்காக மீண்டும் தொடங்கவும் ஏதுவாக இருந்தது.
 
அவன் கண் இம்முறை எங்கள் கதாநாயகி மேலேயே! அவளின் பெயர் 'திலோத்தமை' கூட கவர்ச்சியானதே. திலம் என்றால் எள் . எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால் அவனின் பெயர் ஆண்ட்ரூஸ். நேரம் ஒன்பது அரை. இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு. ஆண்ட்ரூஸ் ஒரு ஓரத்தில் நின்று, ஒரு நல்ல பையனாக பெற்றோர்களை வரவேற்று வரவேற்று எதோ எதோ கதைத்துக்கொண்டு இருக்கிறான். ஆனால் அவன் கண் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறது. அப்பொழுதுதான் திலோத்தமை தன் பெற்றோர், தங்கையுடன் பாடசாலை வாசலுக்கு வந்தாள். ஆண்ட்ரூஸ் கண்கள் மட்டும் அல்ல, மற்றவர்களின் கண்களும் வாசலை நோக்கின!
 
ஒயிலாக முல்லைக் கொடிபோல் திலோத்தமை வாசலில் நின்றாள். இரு குறுவாள்கள் கொண்ட கண்களையும் , நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு மாங்கனித் துண்டுகளை இரு கன்னங்களாகவும். நெற்றியில் கற்றையாய் விழுந்து புரளும் கரும்கூந்தலையும் கொண்ட அவள் முகம் யாரையும் அங்கு பார்க்கும் நிலையில் இல்லை. அவள் கண் மேடையில் இருந்த மணிக்கூட்டை மட்டுமே பார்த்தது. மனதில் இன்னும் முடியாத பூசையின் வசனங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அவள் அழகு, வாய் மூட மறந்து நிற்கும் பலரின் நரம்புகளையும் மீட்டிக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் அழகை முழுமையாய் பார்த்தவர் ஒருவர் கூட இல்லை என்றே சொல்லலாம். நெற்றியைப் பார்த்தவர் அங்கேயே நிற்கிறார். நீண்ட கைவிரல் நகத்தைப் பார்த்தவர் அதையே பார்க்கிறார். இதைவிட மேலான ஒன்றைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்  யாருக்குமே இல்லை. என்றாலும் ஆண்ட்ரூஸ் கண்கள் மாறுபட்டவையாக இருந்தன.
 
வீதியில் நடந்து செல்லும் கணிகையின் கண்களைப் போல் அலைகிற காற்று திலோத்தமையின் மேனியை தழுவிக் கிடந்த தாவணியை கொஞ்சம் கலைக்கிறது. ஆண்ட்ரூஸ்க்கு இந்த வகையில் கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். நெஞ்சில் காமத்தீயுடன், வெளியே முகத்தில் அப்பாவியாக இருக்கும் அவனுக்கு அந்தப் பொழுதே ஆசை தீர தழுவிக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றினாலும், அவன் அதை வெளியே காட்டாமல் சமாளித்தபடி அங்கே நின்றான். என்றாலும் அவன் வாய் முணுமுணுக்க தவறவில்லை.
 
"ஆடை மறைவில் ஆசைகள் பிறக்க
மேடை மார்பில் கண்கள் மேயுதே!
கயல் விழியில் இமைகள் ஆட
கைகள் இரண்டும் அணைக்க துடிக்குதே!"
 
"நீல வானம் முகிலில் புதைய
கரும் கூந்தலில் நானும் புதைக்கிறேனே!
காதல் ஊடல்கள் தனிமை தேட
கனவு கூடல்கள் இடையை தேடுதே!"
 
திலோத்தமை அந்த பாடசாலையிலேயே அதிகூடிய திறமை சித்தியை பெற்றாள். அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவளுக்கும் அவளின் பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தை நாசுக்காக பாவித்து ஆண்ட்ரூஸும் அங்கு போய் அவளுக்கு வாழ்த்து கூறியதுடன், தனது சிறப்பு பரிசாக பூச்செண்டும் கொடுத்தான். ஆனால் அவள் அதை வாங்க தயங்கினாள். என்றாலும் பெற்றோர் வாங்கு பிள்ளை என்று கூற அவள் அதை அவனிடம் இருந்து வாங்கினாள்.
 
அந்த சாட்டில் அவன் கை, அவளின் கையை, தெரிந்தும் தெரியாமலோ கொஞ்சம் வருடியது. ' என் தந்தையார் கண்ணகி. சீதை.... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு' என்று அடிக்கடி தன் தோழிகளிடம் கூறும் அவள், அவனுடைய வலிமை பொருந்திய திருக்கரங்களால் வருடி, பட்டும் படாமலும் தொட்ட தொடுகை , அவளின் இதயம் களிப்பின் எல்லையை இழந்து உரைக்க இயலா கவிதையாகி விட்டது! அவள் பிரேமை சிறகை விரித்து கடல் மேல் பறக்கும் பறவையானது!
 
சமாத்தியமான அவன் தன் வலையில் மான் விழுகிறது என்பதை எளிதாக உணர்ந்துகொண்டான்.
 
சிலநாட்கள் கழித்து, திலோத்தமை ஒரு வார இறுதியில் வயல் வெளியால் நடந்து போகும் பொழுது, இதற்கென்றே காத்து இருந்த ஆண்ட்ரூஸ், தற்செயலாக சந்தித்தது போல ஹலோ என்றான். அவனைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாத அவளும் தன் புன்சிரிப்பால் அவனை வரவேற்றாள். அது போதும் அவனுக்கு. அங்கு அந்த நேரம் யாரும் இல்லை. குளத்துக்கு அருகில் இருந்த மரநிழலை காட்டி, அதன் அருகில் சிறு பொழுது அமர்ந்து கதைக்கலாமே என்றான். அங்கு காணப்பட்ட சிறிய மலரை, தாமதமின்றி பறித்து, அவளுக்கு கொடுத்து, அதை முடியில் சூட சொன்னான். இல்லையேல், அது வளைந்து, புழுதியில் விழுந்து வீணாகிவிடும் என்று தமாஷாக கதைத்தான். அது அவளுக்கும் பிடித்தது.
 
தேனிகள் தங்கள் குழுவின் இசையை அங்கே ஒலிபரப்பிக்கொண்டு இருந்தன. அந்த சூழலை பயன்படுத்தி, மெல்லிய குரலில் ' உன் வதனம் காணா விட்டால், என் இதயத்துக்கு ஓய்வோ நிம்மதியோ இல்லை' என கொஞ்சம் நெருக்கமாக கதையை தொடங்கினான். அதை அவள் சம்மதித்து போல, தன் கால் விரலால் நிலத்தில் எதோ சித்திரம் வரைந்தாள். அவளின் அலங்கார ஆடையும் கழுத்து சுற்றி வைடூரிய சங்கிலியும், அவளின் கால் விறல் கீறலுடன் சேர்ந்து ஆடின. அவள் தன்னை அறியாமலே நாளை தங்கையுடன் விறகு பொறுக்க போகிறேன் என பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினாள். அவள் அவன் முகத்தை, அதன் வதனத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை; அவன் குரலை செவி மடுக்கவில்லை; குளத்தின் முன்னால் உள்ள சாலையில் அவனின் மென்மையான காலடிகள் மட்டும் அவள் செவியில் விழுந்து, அவனும் போகிறான் என்று உணர்த்தியது.
 
அடுத்தநாள் விறகு பொறுக்க தங்கையுடன் போன அவள், தங்கையை வேறுபக்கமாகவும் தான் வேறுபக்கமாகவும் என தன்னை தனிமை படுத்துக்கொண்டாள். அவளின் எண்ணம் எல்லாம் ஆண்ட்ரூஸ் வருவான் என்ற எண்ணம் தான். முறுக்கிய மீசையும், திமிறிய தோள்களும் அவனின் கூரிய கண்களும் தான் இப்ப அவள் நினைவில். அவள் விறகு பொறுக்காமல், பக்கத்தில் இருந்த பத்தைகளில் பல்வகை மலர்களும் பூத்துக் கிடப்பதை காண்கிறாள். அதன் வாசனை திலோத்தமையை கவர்ந்திழுக்க, அந்தப் பூக்கள் ‘என்னைக் கிள்ளி உன் கூந்தலில் சூடிக்கொள்ளேன்' என்று சொல்லுவது போல ஒரு சத்தம் அவளுக்கு கேட்டது.
 
அவள் தன்னையறியாமல் கண்ணை மூடினாள். அந்த பூக்கள் தன் கூந்தலில் வந்து இணைவதை உணர்ந்து, திடுக்கிட்டு கண்ணை திறந்தாள். ஆண்ட்ரூஸ் அவள் கூந்தலில் அலங்காரம் செய்துகொண்டு இருந்தான், ஆடவன் ஒருவன் தன் கையை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ, விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடாய் முடிவு எடுத்த அவளுக்கு, இப்ப அவன் அருகில் நெருங்கி நிற்பது, இன்னும் நம்பிக்கையை கொடுத்தது. அவள் தன்னையறியாமலே அவன் மார்பில் சாய்ந்தாள். கை படாத ரோசாவாக இருந்த அவள், ஒவ்வொரு இதழாக அவன் முழுமையாக சரியாய் நுகர்ந்து அனுபவிப்பதை அவள் பொறுப்படுத்தவில்லை. அவன் தனக்கே சொந்தம் என்று, அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் விட்டுக்கொடுத்தாள்.
 
அவளும் ஆரத்தழுவி ஆனந்தமாய் மகிழ்ந்தாள். தங்கையின் 'அக்கா, எங்கே?'' என்ற குரல் கேட்க, அவள் தன்னை சரிபடுத்திக்கொண்டு, எதோ அங்கும் இங்கும் விழுந்து இருந்த சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டு தங்கையுடன், வேண்டா வெறுப்பாக புறப்பட்டாள்.
 
ஆனால் அதன் பின் ஆண்ட்ரூஸ், திலோத்தமையை சந்திக்கவில்லை. அவன் மலர் தாவும் வண்டுதானே. தேனை குடித்தபின் வேறு மலர் தேடி எங்கேயோ போய்விட்டான். ஆனால் திலோத்தமைபாடு திரிசங்கு நிலை ஆகிவிட்டது. அவனை நம்பி, தன்னை இழந்து, கன்னி பெண்ணாகவும் இல்லாமல் மனைவி என்ற நிலையும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலையானாள்.
 
காதலித்துப்பார் உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்பார்கள். ஆனால் அவள் உண்மையில் உணர்வுபூர்வமாக காதலித்தாள், ஆனால் தோன்றியது இருள் வட்டம் தான்!
 
அது அவளின் காதலின் தவறா அல்லது அவள் மீது கொண்ட காதலின் தவறா? இப்ப அவள் தனிமையை உணர்கிறாள், அந்த வஞ்சித்த ஞாபகம் மனதில் வருவதால். செடிகளின் அசைவின் ஒலியில் கலவரமடைகிறாள், தன் வயிற்றை தடவி பார்க்கிறாள். நீல வானம். ஓடும் முகிலை தேடிப்பிடித்து முகத்தை மூடுவது போல, அவனை எப்படியும் தேடிப்பிடித்து, தன் வயிறு, தன்னை காட்டிக்கொடுக்கும் முன், அவனுடன் சேரவேண்டும் என்று துடித்தாள்.
 
"திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில்
தீமைபல புரிகின்றார், எனவே அன்பே
உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி
உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"
 
என்ற பாடல் அடிகள் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. 'என்னை உன் இன்பத்தால் அந்தம் இல்லாமல் ஆக்கி விட்டாய். நிறைவேற்றி அதை முழுமையாக, உலகம் தெரிய முடிக்கமுன்பு வெறுமை தந்து ஓடி மறைந்துவிட்டாய். இதயத்தை புத்துயிரால் புனர் ஜென்மம் தந்த நீ, அதன் எதிரொளியாய் உன் வாரிசு வளருவதை நீ அறியாயோ' அவள் வாய் வெளியே கதறி சொல்லமுடியாமல் தவித்தது.
 
நாட்கள் போக, அவளின் போக்கை / நிலையை உணர்ந்த பெற்றோர், அவளை விசாரித்து, பின் ஆண்ட்ரூஸ் பற்றி முழுமையாக அறிந்து, அவன் சரி இல்லாதவன் என எடுத்துக்கூறி, அவளை கருக்கலைப்பு செய்ய தூண்டினார்கள். அவர்களுக்கு அதை மூடிமறைக்க வேறுவழி தெரியவில்லை. ஆனால் இவள் எனோ அதை மறுத்துவிட்டாள். இவன் இனி என் கணவன் என பட்டிக்காட்டாய் முடிவெடுத்தாள். இவனை, இவன் உள்ளத்தை தன்னால், தன் உண்மையான அன்பால், தன் இளமை அழகால், கவர்ச்சியால், திருத்த முடியுமென வாதாடினாள். செய்வதறியாத தந்தை இவளையும் கூட்டிக்கொண்டு, ஆண்ட்ரூஷின் பெற்றோரிடம் சென்றார்.
 
ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் நவீன சோபா ஒன்றில் அமர்ந்து இருந்தனர். சிவத்த பொட்டுடன், சால்வை தோளில் இருக்க மஞ்சள் மேல் சட்டையுடனும், பருத்தி வேட்டியுடனும் , திலோத்தமையுடன் சென்ற திலோத்தமையின் தந்தை, நடந்தவற்றை எடுத்துக் கூறினார். அவர்கள் இருந்து கதைக்கும் படி கூறியும், அவர் இருக்கவில்லை. அவரின் கோபம், ஏக்கம் முகத்தில் பிரதிபலித்தது. ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் தங்களுக்குள் கதைத்தபின், ஆண்ட்ரூஷின் குழப்படிகளை மூடி மறைக்காமல், இப்ப யயந்தி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லி, தாங்கள் எப்படியும் இருவரையும் ஒன்றாக சேர்ப்பதாகவும், திலோத்தமையை ஏற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர்.
 
அதன் பின் ஆண்ட்ரூஷின் பெற்றோர்களின் ஆலேசனையும் வற்புறுத்தலும், அவளின் அழுகையும் வேண்டுகோளும் சேர, கடுமையான சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகளை ஆண்ட்ரூஸ் திலோத்தமைக்கு ஏற்படுத்தி, அதற்கு அவள் சம்மதித்ததும் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் நடந்தது. மேலும் இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் ஆண்ட்ரூஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வைப் பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் அவர்களின் கிராமத்திற்கு வெளியே இருந்ததால், அது, அந்த செய்திகள் அவர்களின் கிராம சமூகத்துக்குள் பரவவும் இல்லை. அதுமட்டும் இல்லை, திருமணத்திற்கு முன்பு அவன் போட்ட கட்டுப்பாடும் மற்றும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் அவள் இருந்ததும் ஓரளவு பிரச்சனைகள் இல்லாமல் குடும்பம் நகர உதவியது. மற்றும் படி அவன் இன்னும் திருந்தாத மனிதனாகவே இருந்தான்!
 
ஆனால், ஆண்ட்ரூஸ், திலோத்தமை குடும்பம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்ததும், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினான் .
 
இது அவனுக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு இலகுவாக வழிவகுத்தது. அதுமட்டும் அல்ல வெளிநாட்டில் காணப்படும் தாராளமான சுதந்திரமும், திருமணம் செய்யாமலே ஒன்றாக இணைந்து வாழக்கூடிய சூழ்நிலையும், அவன் அந்த நாட்டு மொழியை விரைவாக கற்று தேர்ச்சி பெற்றதும், அவனின் பேச்சு திறனும், அழகான பொய்களும் அவனுக்கு சாதகமாகப் அமைந்தது. அவன் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், திலோத்தமை விடாமல் அவனை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக இன்றும் தொடர்கிறது.
 
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்!
 
இவர் போல யார் என்று ஊர்
சொல்ல வேண்டும்!
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 462528930_10226499916346950_928905963663648994_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=7lfgT_3-cC4Q7kNvgFafH7v&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AgLB5y10MgK0mPrO6k4e5PH&oh=00_AYDUTaTE-EPFP1iWra6Pc0sA42uUTMuWYoL2t2_beKTmqw&oe=670D8834  369505037_10223785080437749_1157597209380502143_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=a6AEesosrs4Q7kNvgH46xK3&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AFA3qUjtHQlN6EwRwt2xmMs&oh=00_AYA47H_NMoGAd0MAp2PasS0DQtkL-0Id1FD4LVhI9RZHmg&oe=670D770D 369474373_10223785079597728_4158311504290300134_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=n9k5GUdZjIoQ7kNvgEGIqTr&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AFA3qUjtHQlN6EwRwt2xmMs&oh=00_AYCdouYldlj6j7MPr3_hfZ5YOFsabaElb3qfBBIEbxrt_A&oe=670D79E7
 
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.