Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சியில் வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்
23 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது. நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்திற்கு என்ன நேரிட்டது? விமானம் வானத்திலேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்தது ஏன்?

புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தல் 140-க்கும் அதிகமானோர் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் மேலே புறப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.

 
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு

பட மூலாதாரம்,HTTPS://WWW.FLIGHTAWARE.COM/LIVE/FLIGHT/AXB613

வானில் வட்டமடித்த விமானம்

சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டதால் உதவுவதற்கு வசதியாக மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக அதில் இருந்த எரிபொருளை காலியாகச் செய்யும் பொருட்டு, வானத்திலேயே விமானம் வட்டமடிக்கத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலே திருச்சி விமான நிலையப் பகுதியில் அந்த விமானம் வானில் வட்டமடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல் முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விமானம் வானில் நீண்ட நேரம் வட்டமடித்ததை பொதுமக்கள் அச்சத்துடன் நோக்கினர். அந்த விமானம் பத்திரமாக தரையிறங்க வேண்டி, புதுக்கோட்டை மாவட்டம் உச்சாணி கிராமத்தில் உள்ள கோவிலில் சிறப்பு ஆராதனை வழிபாடும் நடத்தப்பட்டது.

திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சி விமான நிலையம்

விமான நிலைய இயக்குநர் கூறியது என்ன?

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், "திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, விமானத்தில் உள்ள எரிபொருளை குறைக்க வானத்திலேயே விமானம் வட்டமடிக்கச் செய்யப்படுகிறது. பெரிய அளவில் அசம்பாவிதங்களை தவிர்க்க 20 மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. " என்று கூறியதாக ஏ.என்ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தை 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த திட்டடப்படியே, விமானம் சரியாக 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்லமெல்ல உயரத்தை குறைத்த அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ஓடுபாதையைத் தொட்டது. அதன் சக்கரங்கள் ஓடுபாதையை உரசியபடி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது. இதனால், திருச்சி விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.

திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு

பட மூலாதாரம்,HTTPS://WWW.FLIGHTAWARE.COM

படக்குறிப்பு, திருச்சியில் விமானம் வானில் வட்டமடித்த பாதை

"லேன்டிங் கியர் சரியாக இயங்கியது"

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான போக்குவரத்துத் துறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம் போல் சரியாக இயங்கியது. இதனால், விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விமான நிலையம் முழுவதும் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது." என்று கூறப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

 
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சி விமான நிலையம்

விமானம் வட்டமடித்தது ஏன்?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி ராம், ‘‘விமானம் ‘டேக் ஆஃப்’ ஆக ஆரம்பித்ததும் முதலில் நடப்பது, அதன் சக்கரங்கள் உள்ளே செல்வதுதான். வெறும் நுாறடியில் பறக்கும் போதே சக்கரங்கள் உள்ளே போவதற்கான தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் துவக்கி விடுவோம். இது சில நிமிடங்களில் நடந்து விடும். அதற்கு மேலும் சக்கரங்கள் உள்ளே செல்லாதபட்சத்தில் விமானத்தை இயக்காமல் கீழே மீண்டும் இறக்கி விட வேண்டும். ஆனால் விமானத்தை ‘டேக் ஆஃப்’ செய்யும்போது இருக்கும் விமான எடையுடன் கீழே இறக்க முடியாது. அதனால் எரிபொருள் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு சில பெரிய ரக விமானங்களில் எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான சிறப்பு தொழில் நுட்பம் இருக்கும். ஆனால் இந்த விமானத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் விமானத்தைத் தொடர்ந்து இயக்கி, எரிபொருளைக் குறைக்கும் முயற்சி நடக்கிறது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஷார்ஜாவுக்கு திருச்சியிலிருந்து 1500 ‘நாட்டிக்கல் மைல்’ (2800 கி.மீ.,) இருக்கும் என்பதால், முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அதனால் பெருமளவில் எரிபொருளைத் தீர்த்தபின்பே, விமானத்தை இறக்குவதற்கு முயற்சி செய்வார்கள். இதில் விமானத்தை கீழே இறக்கும்போது, அந்த சக்கரங்கள் மீண்டும் உள்ளே போய் விடக் கூடாது. அதற்கு Down & Lock என்று பச்சை சிக்னல் வரும். அந்த சிக்னல் வந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஷார்ஜாவுக்கு நான்கு மணி நேரம் விமானம் செல்லும். ஆனால் அவ்வளவு நேரம் பறக்கவோ, எரிபொருளைக் குறைக்கவோ தேவையில்லை. கொஞ்சம் எரிபொருளைக் குறைத்து விட்டாலும் போதுமானது.’’ என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.