Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை என்ன?- ஓர் அலசல்

மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தீப் ராய்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுக்கமாக இருந்த இந்தியா - சீனா உறவுகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது இளகியது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர்.

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரு தலைவர்களும், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை வரவேற்றனர்.

'எல்லையில் அமைதியைப் பேணுவதே' முன்னுரிமை என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என மோதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

"இரு நாட்டு மக்களும் மற்றும் உலக மக்களும் நமது சந்திப்பை மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர், பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்" என்று ஷி ஜின்பிங் கூறினார்.

 
 

2020-ஆம் ஆண்டில், கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவுகள் நீடித்து வந்தன.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைப்பதற்காக மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) குறித்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை திங்கட்கிழமை அன்று இந்தியா அறிவித்தது.

சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் எனும் செய்தித்தாள், "இது இந்தியா- சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான முக்கியமான வாய்ப்பு, இதனை வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

இந்தியா- சீனா உறவுகளை நெருக்கமாகக் கவனித்து வரும் ஆய்வாளர்கள், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய படி என்று கருதுகின்றனர்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு எவ்வளவு முக்கியமானது?

கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கசப்பாக இருந்த நிலையில், இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ஒரு வாரத்துக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சந்திப்பு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. லடாக் எல்லையில் ராணுவ விலகல் குறித்து இரு நாடுகளும் அறிவித்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

லடாக் எல்லையில் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்திருந்தால், எல்லையில் வீரர்கள் இரு தரப்பில் நின்று கொண்டிருக்கும் போது சந்திப்பு நடக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கும். இதை வைத்து பார்க்கும்போது இதுவொரு முக்கிய சந்திப்பு” என்றார்.

சில ஆய்வாளர்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தையும், சீனாவை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டுவந்ததையும் இந்தியாவின் 'பெரிய வெற்றியாக' பார்க்கின்றனர்.

புது டெல்லியை தளமாகக் கொண்ட ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி. பண்ட், "இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மிகவும் முக்கியமானது", என்கிறார்.

"இது இந்தியாவின் பெரிய வெற்றி. இந்தியா நான்கு ஆண்டுகளாக ஒரு பெரிய சக்திக்கு எதிராக நின்று, எல்லையில் சூழ்நிலை இயல்பாகும் வரை மற்ற விவகாரங்களில் இயல்பு நிலை இருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறியது. சமீபத்திய ஒப்பந்தத்தில் சீனா இதை ஏற்றுக்கொண்டது" என பிபிசியிடம் கூறினார்

"பரஸ்பர மரியாதை இல்லாவிட்டால் பரஸ்பர உறவுகள் முன்னேற முடியாது என பிரதமர் மோதி கூறியுள்ளார். நிச்சயமாக ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சீனா தனது அணுகுமுறையை ஓரளவு மாற்றிக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இந்தச் சந்திப்பிலிருந்து வெளிப்படும் செய்தி இதுதான் என நான் நினைக்கிறேன்" என்கிறார்

எனினும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், ''இந்தச் சந்திப்பின் மூலம் சில எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும், ஆனால் இதன் மூலம் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று புரிந்துகொள்ளக்கூடாது." என்கிறார்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,X/NARENDRAMODI

படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இரு நாட்டு உறவில் பொருளாதார அழுத்தங்களின் பங்கு

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இது பொருளாதார நலன்களை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என்றாலும், உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதில் இரு தரப்பினருக்கும் பொருளாதார நலன்கள் உள்ளன.

வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கியமான விவகாரமாக இருந்து வருகிறது.

ராஜன் குமார் கூறுகையில், "நாம் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா விரும்புகிறது." என்றார்.

2023ல் இரு நாடுகளுக்கிடையே 136 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இது மட்டுமல்ல, அமெரிக்காவை முந்தி சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது.

ஆனால் கடந்த சில காலமாக சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது. மறுபுறம், பதற்றம் காரணமாக இந்தியாவில் சீனாவின் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு பெருமளவிலான மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "இரு நாடுகளும் பொருளாதார உறவுகள் இயல்பாக இருக்க வேண்டும் என விரும்பின. வர்த்தகம் தொடர்ந்தாலும், சீன முதலீட்டில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கியது. இதனால் சீனாவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாகிவிட்டது."

அவரது கூற்றுப்படி, "முதலீடு குறைந்தது மட்டுமல்லாமல், முக்கியமான உள்கட்டமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்தும் சீனா வெளியேறியது. 2020க்கு முன்பு, சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே இந்தியாவில் 5ஜி விரிவாக்கத்தில் பங்கேற்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் சர்ச்சைக்குப் பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லை"

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம்

தற்போது சீனாவின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை என்றும், இந்தியா போன்ற சந்தைகளில் தொடர்ந்து இடம்பெற அது நிச்சயமாக விரும்பும் என்றும் பேராசிரியர் பண்ட் கூறுகிறார்.

ஆனால் அரசின் நிலைப்பாட்டால் இந்திய தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "அரசாங்கத்தின் நிலைப்பாட்டால், இந்திய தொழில்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. சீனாவுடனான உறவுகள் சற்று இயல்பானால் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்று இந்திய தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது" என்றார்.

அதாவது, உறவுகள் இயல்பானால் இரு தரப்பினரின் வணிகமும் மீண்டும் சீராகும் என்ற விருப்பம் இரு தரப்பிலும் இருந்து வருகிறது.

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராகியுள்ளது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப மற்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தடுப்பை உருவாக்க விரும்புகிறது என்றும் கூறுகிறார்.

ஷி ஜின்பிங் மற்றும் மோதி இடையேயான சந்திப்புக்குப் பிறகு, சீனா தனது அறிக்கையில், "பல சக்திவாய்ந்த நாடுகளை கொண்ட பலதுருவ உலகம்" பற்றி பேசியுள்ளது என்றாலும், எந்தவொரு ராணுவக் குழுவிலும் சேராது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

பேராசிரியர் பண்ட் கூறுகிறார், "பல துருவ உலகம் என்றுதான் சீனா பேசுகிறது. ஏனென்றால் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. ஆனால் சீனா பல துருவ ஆசியா பற்றி பேசவில்லை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவை இரண்டாம் சக்தியாக மாற்ற அது தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளது."

"சீனாவின் அணுகுமுறை மூர்க்கதனமாக இருந்தால், அது இந்தியாவுடனான உறவுகளை மதிக்கவில்லை என்றால், இந்தியா மற்ற நாடுகளுடன் உறவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். இந்தியாவுடன் எத்தகைய உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது சீனாவைப் பொறுத்தது" என்றும் அவர் கூறினார்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் மோதி மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்துகொண்டனர்.

மற்ற பிரச்னைகளில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள சர்ச்சை மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பற்றியது மட்டுமில்லை.

“இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் பேராசிரியர் பண்ட்.

உண்மையில், சீனா இந்தியப் பகுதிக்கும், அருணாச்சல பிரதேசத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாகப் பார்க்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. பாகிஸ்தானை பயன்படுத்தி அல்லது இந்தியப் பெருங்கடலில் இருதரப்பு சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அல்லது இந்தியாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சேர அனுமதிக்காமல் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சீனா இந்தியாவை இரண்டாம் நிலையில் உள்ள நாடாக முன்னிறுத்த முயன்றது” என்றார்.

மேற்கொண்டு பேசிய அவர், “இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது என்றோ அல்லது சீனாவின் தரப்பில் ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவோ இந்தியா எந்த மாயையையும் கொண்டிருக்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.

அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துவது குறித்து ராஜன் குமார் எச்சரிக்கிறார். அவர், “அருணாச்சல பிரதேசத்திற்கும் பூட்டானுக்கும் இடையே நடக்கும் ரோந்து எப்போதும் மோதலாகவே இருக்கும் என்பதால், எல்லைப் பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனா தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் உள்கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது,” என்று கூறினார்.

“தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது, அது நீண்டதூரம் செல்லக்கூடும்,” என்றும் முனைவர் ராஜன் குமார் கூறுகிறார்.

மேலும் பேராசிரியர் பண்ட் கூறுவது போல், “மெய்யான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் குறைந்ததால், இரு நாடுகளுக்கும் தேவைப்படும் வர்த்தகத்திலும் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்”.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஆட்சி வந்த பின்னர் இந்திய அரசு பெருமளவில் military logistic முதலீடு செய்வதுடன் அதன் படைப்பலத்தினை அதிகரித்து வருகின்றது, ஆயினும் போர் என வந்தால் இந்தியா தோல்வியினை சந்திக்கும் நிலைதான் காணப்படுகிறது (படை வலுச்சமனிலையற்ற நிலையில் உள்ளது), இதனாலேயே பல சீண்டும் சீன செயல்களுக்கு இந்தியா அமைதியாக உள்ளது, சீனா வலிந்து ஓர் போர் ஒன்றினை நடத்தினால் இந்தியா வேறு வழியின்றி போருக்கு செல்ல வேண்டிய நிலை கருதியே பாதுகாப்பு செலவினை இந்தியா அதிகரித்து, போரினால் ஏற்படும் பெருமளவிலான நில இழப்பினை தவிர்க்க முற்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறான அமைதி பேச்சுவார்த்தை முயற்சி என்பது இந்தியாவிற்கு மாபெரும் வெற்றியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா – சீனா

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா கடந்த அக். 22-ம் தேதி அறிவித்தது. இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் (அக். 23) நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் உறுதிபூண்டனர். தற்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/311153

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு

image

லோகன் பரமசாமி

மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர்.

பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன. 

அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. 

இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும்  கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள். 

இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது.

ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும்  முறுகல் நிலையிலேயே இருந்தன.

இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன.  கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும்  இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார். 

இதனைத்தொடர்ந்து  இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன்  நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும்  தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது.

இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர். 

அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார். 

இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது. 

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார்.

அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும்  தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர். 

அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி  கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு  ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது. 

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட  நாடுகளில் சீனா உள்ளது.

சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து  இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது. 

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது. 

ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில்  இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும்  மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.  

https://www.virakesari.lk/article/197258

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.